Monday, 4 September 2017

அழகு அழகாய் ஆயிரம் தீவுகள்

   "ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே குற்றால அழகை நாம் காண்பதற்கு" என்று சிதம்பரம் ஜெயராமன் பாடினார். ஆயிரம் தீவுகளுக்குச் சென்றுவந்ததற்குப் பிறகு ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே ஆயிரம் தீவுகள்  அழகை நாம் காண்பதற்கு என்று குளிக்கும்போது பாடத் தொடங்கிவிட்டேன்.

   


   ஓர் ஆற்றில் ஆயிரம் தீவுகள் இருக்கும் என்பதை உங்களைப் போலவே என்னாலும் நம்ப முடியாமல்தான் இருந்தது. ஆனால் அவற்றை நேரில் பார்த்தபின் நம்ப வேண்டியதாயிற்று. ஒரு பேச்சுக்கு ஆயிரம் தீவுகள் என்று சொல்கிறார்கள். உண்மையில் 1864 தீவுகள் அந்த ஆற்றில் உள்ளன. தீவு என்பதற்கான இலக்கணத்தை வரையறை செய்துள்ளனர். ஆண்டு முழுவதும் நீரின் மேற்பரப்பில் தெரிய வேண்டும். அடுத்து ஒரு மரமாவது அதில் இருக்க வேண்டும்.

     



  அந்த ஆறு கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் நடுவில் ஓடுகிறது.  அதில் உள்ள தீவுகளில் சில அமெரிக்காவுக்கும் சில  கனடாவுக்கும் சொந்தமாக உள்ளன. ஒரு குறிப்பிட்ட தீவில் பாதி அமெரிக்காவுக்கும் பாதி கனடாவுக்கும் என்று அமையவில்லை. எல்லைக் கோட்டை அப்படி வளைத்து நெளித்து வரைந்திருக்கிறார்கள். இத் தீவுகளில் சில தனியாருக்குச் சொந்தமானவை என்பது கூடுதல் தகவலாகும். டாம் தம்ப் எனனும் தீவு ஒரு சென்ட் பரப்பும் ஒரு மரமும் உள்ள மிகச்சிறிய தீவாகும். உல்ஃப் தீவுதான் ஐம்பது சதுர மைல் பரப்பளவுள்ள மிகப்பெரிய தீவாகும்.

    இத் தீவுகள் குறித்து ஒரு வரலாற்றுக் குறுந்தகவலும் உண்டு. நூறாண்டுகளுக்கு முன் இத் தீவுகள் சமூக விரோதிகளின் கூடாரமாக இருந்தன. பாய்மரப் படகுகளில் கடற்கொள்ளையர்கள் திரிந்தனர். நீர்வாழ் உயிரினங்களை அழிக்கத் தொடங்கினர். இரு நாட்டு அரசுகளும் நமக்கென்ன என்று இருந்தபோது யுனெஸ்கோ அமைப்பு களத்தில் இறங்கியது. இராணுவத்தின் உதவியுடன் சமூக விரோதிகளை அகற்றி பல மில்லியன் டாலர் செலவில் திட்டப்பணிகளை மேற்கொண்டது. பத்துலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்புடைய இப் பகுதியை பாதுகாக்கப்படும் உயிரினக் காப்புமையம் என அறிவித்து சுற்றுலாப் பயணிகளுக்கு வாயில்களைத் திறந்துவிட்டது. இப்போது இரு நாடுகளின் ‘இயக்கலும் பேணலும் காத்தலும் சிறப்பாக உள்ளன.

     நேற்று செப்டம்பர் இரண்டாம் தேதி சனிக்கிழமை காலை எட்டு மணிக்கு ஒரு மகிழுந்தில் புறப்பட்டோம். நாங்கள் வசிக்கும் ஒட்டாவா நகரிலிருந்து 160 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கனநோக்குவே என்னும் நகரிலுள்ள ஆற்றங்கரைத் துறைமுகத்தில் ஒரு சிறு கப்பலைப் பிடித்து ஆயிரம் தீவுகளைப் பார்ப்பதுதான் எங்கள் திட்டம்.

     இங்குள்ள நெடுஞ்சாலைகளில் 120 கிலோமீட்டருக்குக் குறையாமலும் மிகாமலும் செல்ல வேண்டும் என்பதால் ஒன்றரை மணி நேரத்தில் கனநோக்குவே சென்றடைந்தோம். உரிய இடத்தில் மகிழுந்தை நிறுத்திவிட்டு ஆற்றங்கரையில் நடந்தோம்.

     அங்கே உள்ள இரண்டு அருங்காட்சியகங்களைப் பார்த்தோம். நுழைவுக் கட்டணம் எதுவுமில்லை. ஒன்று ஆர்த்தர் சைல்டு ஹெரிட்டேஜ் மியூசியம்; இன்னொன்று போட் மியூசியம். ஆயிரம் தீவுகளின் பத்தாயிரம் ஆண்டுகால வரலாற்றைக் . காட்சிப்படுத்தி இருந்தார்கள். மேலும் அழகான ஆங்கிலத்தில் இலக்கணப் பிழையின்றி ஆவணப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். கரூர் அரசு அருங்காட்சியகத்தில் நான் கண்ட பிழைமலிந்த ஆவணக் குறிப்புகள் ஒருகணம் என் மனத்தில் தோன்றி மறைந்தன.

  விதவிதமான பறவைகள், விலங்குகள், படகுகள் முதலியவை மிக நேர்த்தியாகவும் துல்லியமாகவும் காணப்பட்டன. உள்ளேயே  மிகத் தூய்மையான கழிவறைகள் இருந்தன.

    நுழை வாயிலில் ஒரு பெரிய உலகப்படமும் அருகில் குண்டூசிகளும் இருந்தன. ஒரு குண்டூசியை எடுத்து நீங்கள் வசிக்கும் ஊரின்மேல் குத்துங்கள் என ஒரு குறிப்பும் இருந்தது. ஆகா இது அருமையாக உள்ளதே என நினைத்தபடி ஒரு குண்டூசியை எடுத்து உலக வரைபடத்தில் இந்தியாவைத் தேடி, அதில் சென்னையைக் கண்டுபிடித்துக் குத்தினேன்.

 ஆக, ஒரு அருங்காட்சியகம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தது. நம் ஊர் அருங்காட்சியகக் காப்பாளர்களைக் கூட்டிவந்து காட்ட வேண்டும் என எண்ணினேன்.

   நிறைந்த மனதுடன் வெளியே வந்து அழகான மரத்தடியில் இருந்த மர இருக்கைகளில் அமர்ந்து கொண்டு வந்திருந்த சுவையான மதிய உணவை உண்டு முடிக்கவும் எங்களுக்கான படகு வரவும் சரியாக இருந்தது.

  
water bike
அதைப் படகு எனச் சொல்வது பொருந்தாது. அது மூன்று தளங்களைக் கொண்ட சிறிய கப்பலாகும். அதில் ஐந்நூறு பேர்கள் வசதியாக அமர்ந்து பயணிக்க முடியும்.     விட்டுவிட்டு இரண்டு முறை சங்கு ஒலித்தவாறு கப்பல் புறப்பட்டது. பல ஆண்டுகளுக்குமுன் இலட்சத் தீவுகளுக்குப் பெரிய கப்பலில் சென்று பயணப்பட்ட  எனக்கு இச் சிறிய கப்பல் புதுமையாகத் தோன்றவில்லை. ஆனால் கண்ட காட்சிகள் புதுமையாக இருந்தன.


   அதிவேகப் படகுகள் நீரைக் கிழித்துக்கொண்டு பாய்ந்து செல்வதையும், வாட்டர் பைக் எனச் சொல்லப்படும் குறும்படகில் நூறு கிலோமீட்டர் வேகத்தில் செல்வதையும் பார்த்து வியந்தோம்.

    எந்தத் திசையில் பார்த்தாலும் கிலோமீட்டர் கணக்கில் தண்ணீர் பரந்து விரிந்து காணப்படுகிறது. “இந்தக் கடலின் பெயர் என்ன?” என்று என் மனைவி கேட்டாள். “இது கடல் அன்று. செயின்ட் லாரன்ஸ் நதி” என்று சொன்னதும் வியப்பில் வாய்திறந்தாள். நான் கேமராவின் கண்களைத் திறந்தேன்.

  ஆங்காங்கே தீவுகள் சிறிதும் பெரிதுமாய்ச் சிதறிக் கிடக்கின்றன. பலவற்றில் மனிதர்கள் வாழும் அழகான வீடுகள் காணப்படுகின்றன. சில தீவுகளில் பறவைகள் மட்டுமே வாழ்கின்றன.

    
அதோ தெரிகிறதே அத் தீவு சிங்கர் ஐலண்ட் என்று அறியப்படுகிறது. அத் தீவு அமெரிக்கா பகுதியில் உள்ளது. அதில் கட்டப்பட்டுள்ள அந்தச் சிவப்பு மாளிகைக்கு சிங்கர் மாளிகை என்று பெயர். சிங்கர் தையல் மெஷின் தெரியுமல்லவா? அவருக்கு உரிமையானதாக ஒரு காலத்தில் இருந்தது இருபத்தெட்டு அறைகளைக்கொண்ட அந்த மாளிகை. இப்போது  பயணியர் விடுதியாக உள்ளது.

  

அதோ..... தூரத்தில் தெரிவது உலகிலேயே மிகச் சிறிய பன்னாட்டுப் பாலமாகும். அமெரிக்காவையும் கனடாவையும் இணைக்கும் பாலமாகும். ஆயிரம் தீவுகள் பாலம் என்று பெயர். 1938இல் கட்டப்பட்டது.

    இப்போது அந்தப் பாலத்தின் அடியில்தான் எங்கள் கப்பல் செல்கிறது.

        
இதோ தெரிகிறதே ஓர் அழகான கட்டடம். அது ஜார்ஜ் போல்ட் என்ற பணக்காரர்  தன் அன்பு மனைவிக்காக எழுப்பிய காதல் கோட்டை. திடீரென்று மனைவி இறந்துவிடவே அதைப் பொதுச்சொத்தாக அறிவித்துவிட்டார்!  ஒவ்வொரு நாட்டிலும் ஒரு தாஜ்மகால் இருக்கத்தான் செய்கிறது! இங்கே சிறிது நேரம் கப்பல் நிற்கும். ஆனால் அமெரிக்க விசா உள்ளவர்கள் மட்டுமே இறங்கிச் சென்று பார்க்கமுடியும்.

இரண்டரை மணிநேர கப்பல் பயணம் இரண்டு நிமிடமாகக் கழிந்தது.



  பல்லாயிரம் மைல்களைக் கடந்துவந்து என் இளைய மகளின் புண்ணியத்தில் ஆயிரம் தீவுகளைக் கண்டு மகிழ்ந்தோம். இது எல்லோருக்கும் கிடைத்திடாத அரிய வாய்ப்பு என்று வள்ளுவர் சொல்கிறார்.
    வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
    தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.
.......................................................................
முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.
      
  
  
  


9 comments:

  1. ஐயா, நாம் கப்பலில் பணிக்கும் போது ஏற்படும் உணர்வு மிகவும் பரவசத்தை ஏற்படுத்தும். கடந்த இரண்டு திங்களில் கனடா எப்படி இருக்கும் என்பதைத் தெளிவு படுத்திவிட்டீர்கள். நான் கனடா செல்லும் வாய்ப்பு கிடைத்தால் உங்கள் அனுபவத்தை நினைவு கூர்ந்தாலே எனக்கு தெளிவு கிடைக்கும். மகளைப் பெற்றால் மகராசனாக வாழலாம் என்பர். அது போல நானும் எனது மகள்களால் பேருபெறும் நம்பிக்கை பெற்றுள்ளேன்.நன்றி ஐயா.

    ReplyDelete
  2. ஆயிரம் தீவிற்கு உங்களுடன் வந்ததுபோல உள்ளது. பகிர்விற்கு நன்றி, உங்களுடைய மகளுக்கும் சேர்த்து.

    ReplyDelete
  3. சொன்னதும் வியப்பில் வாய்திறந்தாள். நான் கேமராவின் கண்களைத் திறந்தேன்.// இந்த வரிகளையும் ஆயிரம் தீவுகள் படங்களையும் ரசித்தோம்...ரொம்பவே அழகு. கனடா நாட்டிற்குள் இருக்கும் தீவுக்குள் செல்ல முடியாதோ? மிகச் சிறியது இல்லையா? படகில் செல்லும் அத்தனைபேரையும் கொள்ளும் அளவு கிடையாதோ. நம் நாட்டு அருங்காட்சியகத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்...மிகவும் மோசமான பராமரிப்பு...

    கனடா செல்லும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக இது லிஸ்டில் உண்டு. மிக்க நன்றி ஐயா பகிர்விற்கு

    ReplyDelete
  4. படிக்கப் படிக்க வியப்புதான் மிஞ்சுகிறது ஐயா

    ReplyDelete
  5. அன்று மணியன், இன்று நீங்கள்,,,அருமை

    ReplyDelete
  6. ஆயிரம்தீவிற்கு இலவச பயணம் உங்களின் செலவில்?
    கேமராவின் கைவண்ணம் சூப்பர் சார்!

    ReplyDelete
  7. Really interesting. I think we are fortunate to have the preview of the material for the book Kavinmihu canada as suggested by bhuvana. The description is very much appreciated as it gives the readers a good feeling as though we visited the place in person. It also gives an idea about how one should observe and record our visit to a place. Thank you Sambanthi for sharing your experiences for us

    ReplyDelete
  8. படகுப் பயணம் - ஆயிரம் தீவுகள் மிகச் சிறப்பான பயணம் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

    படங்களும் அழகு.

    ReplyDelete
  9. உங்கள் கனடா பயணம் தமிழர்களின் புண்ணியம். ஒரு புவியியல் வல்லுனரையும் மிஞ்சும் வண்ணம் உங்கள் செயல்பாடுள்ளது.நீங்கள் சொல்வதுபோல் எவருக்கும் கிடைத்தற்கரிய வாய்ப்பே. எனினும் உங்கள் அழகான கட்டுரைகளும் வண்ணப் படங்களும் பார்ப்போர் மனத்தைக் குளிர்விக்கும். எனக்கு ஒரு வருத்தம்தோன்றுகிறது.
    தண்ணீருக்குத் தாளம் போடும் நம் அவலம் எங்கே? நீர் கொழிக்கும் தாங்கள் காணும் நதி எங்கே? இங்கே ஒரு மாகாணம் இரு மாகாணங்களுக்கு இடையே ஓடும் காவிரியை முடக்கிக்கொண்டு சுயநலம் கொள்ளுகின்ற போது அங்கே இரு பெரும் நாடுகள் ஒரு ஆற்றை மிக அழகாக இணக்கத்தோடு அனுபவிக்கின்ற பெருந்தன்மை
    மெய்சிலிர்க்க வைக்கின்றது. இது எத்தகைய உயர்ந்த மனப்பான்மையைக் காட்டுகின்றது பாருங்கள்!
    நீதிபதி மூ.புகழேந்தி.

    ReplyDelete