ஆவது பெண்ணாலே
அந்த ஒரே பேருந்தைத் தவறவிட்ட இலக்கியா
தனியாகத் தவித்துக் கொண்டிருந்தாள்.
என் காரை நிறுத்தி, “இலக்கியா
வாம்மா... பின்னால் ஏறிக்கொள்” என்றேன்.
“உங்களுக்கு சிரமம்
எதுக்கு சார்?”
இப்படிச் சொன்னபடியே என்
காரின் பின் கதவைத் திறந்து அவளும் அவள் மகனும் ஏறிக்கொண்டனர்.
அவளுக்கு வயது நாற்பது இருக்கலாம்.
அவளுடைய மகன் எல்கேஜி வகுப்புச் சிறுவனாக இருந்தது எனக்கு வியப்பை அளித்தது.
சிக்னலுக்காக காரை
நிறுத்தினேன். கார்களின் குறுக்காக ஓடிவந்த ஒருவனுக்கு வயது நாற்பது இருக்கலாம்;
முகமெல்லாம் தாடியும் மீசையும் மண்டிக் கிடந்தன. வலது கையை ஏந்தியபடி என் காரை
உரசிக்கொண்டு நின்றான். ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தைப் போட்டேன். அப்படியே பின்னால்
நகர்ந்து “அம்மா” என்றான்.
அந்தப் பிச்சைக்காரனைப் பார்த்த வருண் “அம்மா
யாரும்மா இந்த அங்கிள்?” என்று கேட்டான்.
என்ன சொல்வதென்று
அவளுக்குத் தெரியவில்லை. இனம் புரியாத ஒரு வலியை உணர்ந்தாள்.
“அங்கிள் ஓரமா போய் நில்லுங்க இல்லன்னா கார்
உங்க மேல ஏறிடும்” என்று அந்தப் பிச்சைக்காரனிடம் சொன்னான் வருண்.
“வருண்.. இங்க பாரு.. முன்ன பின்ன தெரியாதவங்ககிட்ட
பேசக்கூடாது”
அவசர அவசரமாக கதவின்
கண்ணாடியை ஏற்றினாள்.
முன்னால் பச்சை ஒளி
தெரிந்ததும் அனிச்சையாக என் கால் ஆக்சிலேட்டரை அழுத்தியது.
வழியில் காரை நிறுத்தி சிறுவனைப் பள்ளியில்
இறக்கி விட்டேன். அடுத்த இருபது நிமிடங்களில் என் அலுவலக வளாகத்தில் காரை
நிறுத்திவிட்டு இருவரும் வாயிலை அடைய, கண்ணாடிக் கதவுகள் தானே விலகி வழிவிட்டன.
இலக்கியா ஒரு சிவில் எஞ்சினியர். கனடாவில் படித்து
முதுநிலைப் பட்டம் பெற்றவள். எனது அலுவலகத்தில் கட்டுமானப் பிரிவில் பணி
செய்கிறாள். பணியைக் கண்ணும் கருத்துமாக செய்யக் கூடிய நல்ல பெண்.
*************
இப்போதெல்லாம் பெங்களூரில் காரில் அலுவலகம்
செல்வதைவிட சைக்கிளில் சென்றால் சீக்கிரம் சென்று விடலாம். வாகனப் பெருக்கத்திற்கு
அளவில்லாமல் போய்விட்டது.
“என்னம்மா இலக்கியா பஸ்
போயிடுச்சா?”
சாரி சார் என்று
சொல்லியபடி அம்மாவும் மகனும் என் காரில் ஏறிக்கொண்டனர். பள்ளி வந்ததும் வருணை
இறக்கிவிட்டாள்.
“ஆமாம் உன் வீட்டுக்காரர்
என்ன பண்ட்றார்?”
“அது ஒரு கதைங்க சார்”
“என்னம்மா சொல்ற?”
முன்னால் சென்ற காருக்குப் பத்தடி இடைவெளியில்
காரை நிறுத்தினேன். எட்டிப் பார்த்தபோது முன்னால் ஏகப்பட்ட வாகனங்கள்
நின்றிருந்தன.
இலக்கியா தன் சோகக் கதையைச் சொல்லி முடிக்கவும்
வாகன நெரிசல் சரியாகி எனது காரை நகர்த்தவும் சரியாக இருந்தது.
*****************
“நான் சொல்வதைக் கேள் இலக்கியா. படிப்பு
முடிந்ததும் நாடு திரும்பு. என் தம்பி அதான் உன் மாமன் காத்திருக்கிறான். அவனும்
எம்.பி.ஏ முடிச்சிருக்கான். வந்து அவனை கல்யாணம்
செஞ்சுக்கிட்டு சென்னையில செட்டிலாகு” என்று ஸ்கைப்பில் வந்த அம்மா கூறினாள்.
அப்பாவும் அதை வழிமொழிந்தார்.
ஆனால் இலக்கியா அதை காதில்
போட்டுக்கொள்ளவில்லை. ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் படிப்பு முடிந்ததும் டொரன்டோவில்
வேலை கிடைத்தது. அங்கே தன்னுடன் வேலை பார்த்த ஒருவனைக் காதலித்துக் கரம்
பிடித்தாள். முதல் இரவிலேயே அவன் குடித்துவிட்டுத் தள்ளாடி நின்றபோது கதிகலங்கி நின்றாள்.
ஒவ்வொரு இரவிலும்
குடிப்பது இவளை அடிப்பது என நாள்கள் நகர்ந்தன.
அப்பா அம்மாவிடம் சொல்லி அழவும் அவளால்
முடியவில்லை. அவர்கள் இருந்தால்தானே சொல்லி அழ முடியும்? இவள் சொல்லாமல் கொள்ளாமல்
யாரோ ஒருவனைத் திருமணம் செய்துகொண்டு கனடாவில் செட்டில் ஆகிவிட்டாள் என
அறிந்ததும், தம் ஒரே மகள் இப்படிச் செய்துவிட்டாளே என்று நொந்து நூலாகி, கடைசியில்
ஒரு நாள் இரவில் மெட்ரோ இரயில் முன் பாய்ந்து தம் வாழ்வை முடித்துக் கொண்டனர்.
ஆக இனி நல்லதோ கெட்டதோ கணவனே கதி என்ற
நிலைக்குத் தள்ளப்பட்டாள். ஆனாலும் அவனை எப்படியாவது திருத்தி நல்வழிப்படுத்தி
விடலாம் என்னும் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்ந்தது.
“இலக்கியா கண்ணு ...நமக்கு மேரேஜ் முடிஞ்சு
பத்து.வருஷம் ஆச்சி. இப்படி பக்கத்தில் அண்டவிடாம அடம் பிடிக்கிறியே எப்பதான் நாம ஒரு
குழந்தை குட்டியைப் பெத்துக்கிட்டு குடும்பம் குடின்னு ஆகிறது?’
“அதுதான் குடி என்று
ஆயிட்டிங்களே. அப்புறம் எதுக்குக் குடும்பம் குட்டி? தள்ளிப் படுங்க; வொயின்
நாத்தம் எனக்குப் பிடிக்கல.” இலக்கியாவின் கண்டிப்பு இது.
நாளுக்கு நாள் அவனது குடிப்பழக்கம் தீவிரமானதே
தவிர குறையவில்லை. ஒரு கட்டத்தில் அவனுடைய வேலையும் பறிபோய்விட்டது. மனைவியின்
சம்பளப் பணத்தில் குடிக்கத் தொடங்கினான்.
இலக்கியா சொல்லிப் பார்த்தாள்;
திருந்தியபாடில்லை. கெஞ்சிக் கூத்தாடி
ஒருநாள் தன் கணவனை அழைத்துக்கொண்டு போய் ஒரு மன நலமருத்துவரிடம் காட்டினாள்.
“குடிப்பது தவறில்லை எனச் சொல்லும் நாடு இது.
ஆனால் உங்கள் இந்தியாவில் நிலைமை வேறு. குடிப்பது தவறு என்னும் எண்ணம் இன்னும்
அங்கே வற்றிப் போகவில்லை. மது குடிக்கும் மகனைப் பெற்றவள் கூட மதிக்கமாட்டாள்
என்று உங்கள் நாட்டில் தோன்றிய திருக்குறள் சொல்கிறது. உடனே நாடு திரும்புங்கள்.
சூழல் மாறினால் இவர் குடிப் பழக்கத்திலிருந்து விடுபட வாய்ப்பிருக்கிறது” என்று
ஆலோசனை வழங்கினார் அந்த மருத்துவர்.
இருவரும் அடுத்த மாதமே அவனுடைய சொந்த ஊரான
திண்டுக்கல் சென்று சேர்ந்தனர். திருமணத்தைச் சொல்லாமல் மறைத்தது, குடிகாரனாக
மாறியது என்ற காரணங்களுக்காக அவனுடைய பெற்றோர் இருவரையும் ஏற்றுக்கொள்ள
மறுத்துவிட்டனர்.
வேறு வழியில்லாமல் வேலை தேடி பெங்களூரு
சென்றனர்.
புறநகரில் ஓர் ஒற்றை அறை வாடகை
வீட்டில் குடியேறினார்கள். அவன் வேலை வெட்டி எதுவும் இல்லாமல் இவளுடைய சேமிப்புப்
பணத்தைப் பிடுங்கிக் குடித்தான். அடுத்த சில தினங்களில் இவளுக்கு ஒரு வேலை கிடைக்கவே
நிலைமையைச் சமாளித்தாள்.
இத்தனை ஆண்டுகள் விழிப்போடு இருந்தும், எப்படியோ ஒரு சமயத்தில் அவனிடம் ஏமாந்து போக கருவைச் சுமந்தாள் இலக்கியா. கரு உண்டானதை எண்ணி
அவள் களிப்படையவில்லை; மாறாக கண்ணீர் வடித்தாள். இப்படி ஒரு நிலை பூமியில் எந்தப்
பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது என்றூம் நினைத்தாள்.
காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.
நாள்கள் நகர்ந்தன. ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அதையும் குடியாய்க்
குடித்துக் கொண்டாடினான் கணவன்.
அப்படி இப்படி என்று ஓர் ஆண்டு கழிந்தது. ஒரு
நாள் மாலை நேரம். அலுவலகத்திலிருந்து நேரே குழந்தைகள் காப்பகம் சென்று வருணை
அழைத்துக்கொண்டு அப்போதுதான் வீடு திரும்பியிருந்தாள்.
அந்த நேரம் பார்த்துத் தன்னிடம் இருந்த
சாவியால் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான் அவளுடைய கணவன்.
“அடியே இலக்கு எங்கடி
போன? ஓ...குளிக்கிறியா?”
குளித்து முடித்து தேநீர் போடச் சென்றாள்.
குழந்தை சில பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது.
“ஏண்டி இலக்கு... நீதான் என்னை அண்டவே விடலையே.
அப்புறம் எப்படி இந்தக் குழந்தை உண்டாச்சி... ஒன்னதாண்டி கேக்குறேன்’
குடி போதையில் அவன்
உளறினாலும் அது அவளைத் தீயாய்ச் சுட்டது; ஊசியாய்க் குத்தியது.
“சரி அத்த வுடு. ஒரு
ஆயிரம் ரூவா குடு. சரக்கு அடிக்கணு”.
“நீ தலக்கீழ நிண்ணாலும்
தர மாட்டேன்”
கடைசியில் நூறு ரூபாய்
கேட்டான்.
அவள் ஒரு பைசா கூட தர
மறுத்தாள்.
அடுத்தக் கணம் அவனுக்கு விஷம்
போல கோபம் தலைக்கேறியது. அவன் அரக்கனாக மாறி, குழந்தையைக் கையில் எடுத்துத்
தலைகீழாகப் பிடித்தான். குழந்தை பயத்தில் கத்தியது.
“இப்ப நீ பணம் தரல,
இந்தப் பயல துணி தொவைக்கிற மாதிரி தொவைச்சுப்புடுவேன் தொவச்சி”
“அப்பா சாமி..இந்தா
ரெண்டாயிரமா வச்சுக்க என் குழந்தையை ஒண்ணும் பண்ணிடாதே” என்று அவன் காலில்
விழுந்து கெஞ்சினாள்.
“இந்தப் பயம்
இருக்கட்டும்” என்று சொல்லியபடி பணத்தை எடுத்துக்கொண்டு சென்றவன் மறுநாள் காலையில்தான்
வீட்டுக்கு வந்தான்.
நீண்ட நேரம் கதவைத்
தட்டியும் திறக்காததால், தன்னிடமிருந்த மாற்றுச் சாவியால் கதவைத் திறந்து
பார்த்தான். வீடு காலியாகக் கிடந்தது.
“உன் வீட்டுக்காரி வீட்டைக்
காலி செய்துகொண்டு நேற்று இரவே போயாச்சு” என்று பக்கத்து வீட்டில் வசித்த வீட்டின்
உரிமையாளர் ராஜண்ணா கன்னடத்தில் சொன்னார்.
கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக அவனை வெளியில் அனுப்பினார்.
*************
“இன்னைக்கும் பஸ் போயிடுச்சா. ஏறுமா கார்ல. வருணைக் காணோமே! ஸ்கூலுக்குப் போகலையா?.”
“முதல் வகுப்புக்கு
வந்துட்டான் சார். ஸ்கூல் பஸ்ல போற மாதிரி ஏற்பாடு பண்ணிட்டேன்” என்று
சொல்லிக்கொண்டே காரில் ஏறினாள் இலக்கியா.
“சரி... உணர்ச்சி வேகத்தில உன் வீட்டுக்காரரை விட்டுத் தொலைச்சிட்டு வந்ததா
சொன்ன. இந்த நாலு வருஷத்துல அவர் எங்கே
இருக்கார் எப்படி இருக்கார்னு தகவலே இல்லையா?” என்று அவளைக் கேட்கும்போது
சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தது; வண்டியை நிறுத்தினேன்.
“அப்பப்ப அந்த ஆளை நானும் பார்த்தேன்;
நீங்களும் பார்த்தீங்களே சார்”
“என்ன! நான் பார்த்தேனா?’
அதோ பாருங்க. அந்தச் சிவப்புக் காருக்குப்
பக்கத்தில் நின்னு பிச்சை எடுக்கிறார்
மிஸ்டர் சரவணன் எம்.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ், டொரண்டோ யுனிவர்சிட்டி”
அந்த மனிதனைப் பார்த்ததும் அதிர்ச்சியில்
உறைந்து போனேன்.
பச்சை விளக்கு எரிந்த செய்தி என் மூளைக்கு
எட்டவில்லை. என் காருக்குப் பின்னால் நின்ற வாகன ஓட்டிகள் ஒட்டு மொத்தமாக ஒலி
எழுப்பியபோதுதான் சுய நினைவுக்கு வந்து காரைக் கிளப்பினேன்.
.........................................................
முனைவர் அ.கோவிந்தராஜூ,
கனடாவிலிருந்து.
Ayyo. Sir why tragedic end??
ReplyDeleteமுதல் அறிமுகத்திலேயே அவன்தான் கணவன் என்று நான் தெரிந்துகொண்டேன். இவைபோன்ற வலிகளை எதிர்கொள்ளும்போது மனதில் தைரியம் இருந்தாலும் இவ்வாறான வாழ்க்கை வாழ்பவர்கள் நடைபிணமாகவே இருப்பார்கள். இலக்கியாக்களைப் போல சில நண்பர்களை நான் கொண்டுள்ளேன். வேதனையே.
ReplyDeleteRare type of story:but it also happens rarely.A man who doesn't respect woman's feelings is equal to animal.
ReplyDeleteவாழ்க்கையை அழித்து வாரிசையும் அழிக்க முற்படும் குடியைத்தான் அரசு தத்தெடுத்துக் கொண்டது. தட்டிக் கேட்க வேண்டிய எதிர்க்கட்சிகள் சாராயத் தொழிற்சாலை சம்பாரித்துக் கொடுக்கும் கோடிகளுக்குள் புதைந்து கிடக்கின்றன.
ReplyDeleteமுறைப்படுத்த வேண்டிய மத்திய அரசு கொள்ளைப்புற வாசலை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறது தமிழகத்தில் குடியேற, நீதி வழங்க வேண்டிய நீதித்துறை மக்களின் சமூக நீதிக்கான உரிமைகளைப் பறித்து துவைத்து காயப் போட்டுக் கொண்டிருக்கிறது.
என்னப்பா...! ஒரு நல்ல சிறுகதைக்கு இவ்வளவு விரக்தியான பின்னூட்டமா என்று கேட்பது என் காதில் விழுகிறது. என்ன செய்ய இது போன்ற நிகழ்வுகள் தொடரக் கூடாது என்பது தான் நம் எண்ணம்.
கதைப் போக்கும் பாங்கும் அருமை ஐயா.
ReplyDeleteகுடியால் குடும்ப வாழ்வைத் தொலைத்தான். பிச்சை எடுத்தும் குடிக்கும் குடி நோயாளி ஆனான். அவன் கற்றதனால் ஆன பயன் என்ன.?
குடிப்பது சரி என்று சொல்லும் மேலை நாடுகளில் குடி நோயாளிகள் இல்லை. குடிப்பது தவறு என்று என்று சொல்லும் நம் திருநாட்டில் குடியால் ஈரல் கெட்டுச் சாவும் இளம் விதவைகளும் மிக அதிகம்.
பாலியல் சுதந்திரம் தரும் மேல் நாடுகளில் AIDS கிட்டத்தட்ட இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்று போதிக்கும் நம் தாய்நாட்டில் நிறைய HIV நோயாளிகள்.
நகை முரண். அறிவு அற்றம் காக்கும் கருவி .
கதையானாலும் வேதனையைத் தருகிறது ஐயா
ReplyDeleteஎத்துனைபேர் மதுவின் போதையில் வாழ்வைத் தொலைத்துவிட்டு
அலைகிறார்கள்
நன்றி ஐயா
கதை அருமை ஐயா, முடிவு மதுவினால் சோகம்!
ReplyDeleteமுதலில் ஸிக்னலில் நின்ற போது குழந்தை அங்கிள் என்று சொல்லவும், இலக்கியாவுக்கு மனது சங்கடமானது என்று அந்த வரிகளிலேயே தெரிந்துவிட்டது அவன் தான் இலக்கியாவின் கணவன் என்பது...கதை நன்றாக இருக்கிறது ஸார். குடி குடியைக் கெடுக்கும் என்பது நிதர்சனம்.
ReplyDeleteதுளசிதரன், கீதா