இன்று தீபாவளி.
எனக்கு நேற்று
இருந்த மகிழ்ச்சி இன்று இல்லை. அறுபதைச் சில ஆண்டுகளில் எட்டிப்பிடிக்க உள்ள
வயதிலும், என் மனைவி அதிகாலையில் எழுந்து இனிப்பு, காரங்களை வகை வகையாய்ச் செய்ததை
வக்கணையாய்த் தின்ற பின்னும் மகிழ்ச்சி இல்லை.
மகிழ்ச்சி இல்லாவிட்டால் போகட்டும். ஏரி குளத்து நீரை ஆகாயத் தாமரை
ஆக்கிரமத்துக் கொள்வதுபோல, என் மனமெல்லாம் சோகமே படர்ந்துள்ளது.
தினமும்
காலையில் வாசல் பெருக்கித் தண்ணீர் தெளித்து முடித்தவுடன், எங்கள் வீட்டுச்
சுற்றுச் சுவரின்மேல் வைக்கப்பட்டுள்ள எவர்சில்வர் தட்டில் நீரை நிறைத்து
வைப்பேன். நாள் முழுவதும் வித விதமான குருவிகள் இணை இணையாக வந்து அத் தண்ணீரைக்
குடிக்கும்; அதில் குளிக்கும். அதைப் பார்த்துக் கொள்ளை மகிழ்ச்சியடைவேன். ஆனால்
இன்று வைத்த தண்ணீர் வைத்தபடி உள்ளது. ஒரு குருவியும் எட்டிப்பார்க்கவில்லை.
பறவைகளுக்குப்
பிடிக்காதது இந்த வெடிச் சத்தம். அதிகாலையில் ஒருமணிநேரம் இரவில் ஒருமணி நேரம் வெடிக்கலாம் என்னும்
விதியை யார் மதிக்கிறார்கள்?. காதைப் பிளக்கும் ஒலியுடன் பொழுதுக்கும்
வெடிக்கிறார்கள். பறவைகளெல்லாம் இரை தேட வெளியில் செல்ல முடிவதில்லை. கூட்டில் இருக்கும்
குஞ்சுகள் பசியால் வாடிக்கிடக்கின்றன.
மரக்கிளையில் தான் கட்டிய
கூட்டில் இட்ட முட்டைகளின் மேல் அமர்ந்து
அடைகாத்துக் கொண்டிருந்த பெட்டைக் குருவி வெடிச்சத்தம் கேட்டு எங்கோ பறந்து
சென்றுவிட்டது. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரம் தாய்ப்பறவை அடை காக்காமல் போனால்
குஞ்சு பொறிக்காது. இட்ட முட்டையிலிருந்து குஞ்சு வெளி வராதது கண்டு அத்
தாய்ப்பறவை சோகத்தில் கத்திக் கூச்சலிடும். அப் பறவையின் வலிக்கு யார் காரணம்?
இந்த உலகில் மகிழ்ச்சியாய் வாழும் தகுதி தமக்கே உண்டு என எண்ணும் மனித இனமே காரணம்.
எங்கள் வீட்டு வேலைக்கார அம்மாவுக்கு
இன்று மகிழ்ச்சியான தீபாவளி. ஏன் தெரியுமா? அவர் வளர்த்த ஆட்டுக் கிடா இரண்டை நல்ல
இலாபத்தில் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றுத்
தீபாவளியை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றார்.
பாவம் அந்த ஆடுகள் இந்நேரம் எத்தனை மனித இரைப்பைக்குள் சென்றனவோ? பெற்றக்
குழந்தைகளைப் போல அந்த ஆடுகள் அந்த அம்மாவைச் சுற்றிச் சுற்றி வந்ததும், பணத்தைக் கொடுத்துவிட்டுக்
கறிக்கடைக்காரர் இழுத்துச் செல்ல முற்பட்டபோது அந்த ஆடுகள் அந்த அம்மாவைப்
பார்த்து கதறிக் கத்தியதும், அதைப்பார்த்து அவர் இருதுளிகள் கண்ணீர் வடித்ததும்
திரைப்படம்போல் என் மனத்திரையில் ஓடுகிறது. அந்த அப்பாவி விலங்குகளின் வலிக்கு
யார் காரணம்? இந்த உலகில் மகிழ்ச்சியாய் வாழும் தகுதி தமக்கே உண்டு என எண்ணும்
மனித இனமே காரணம்.
இந்த மண்ணுலகில் தோன்றிய உயிரினங்களில்
கடைசியாகத் தோன்றியவன் மனிதன். உண்மையைச் சொன்னால் மனிதனை விட மற்ற உயிரினங்களுக்கே
வாழும் உரிமை அதிகம்.
புறாவின் உயிரைக் காப்பதற்காகத் தன்
தசையை அறுத்துக்கொடுத்த சிபி வாழ்ந்த இந்தப் பூமியில்தான் மதம், சடங்குகள்
பெயரால் மற்ற உயிரினங்கள் வதைக்கப்படுகின்றன.
வேளாண் தொழில் தெரியாத காலத்தில்,
காட்டு மிராண்டியாக வாழ்ந்த காலத்தில் மனிதன் பிற உயிரினங்களை அடித்து உண்டது சரி.
இக் காலத்திலும் அது தொடர வேண்டுமா?
தன்னுடன் வாழும் சக மனிதனின்
உரிமைகளையே மதிக்கத் தெரியாதவன் பிற உயிர்களின் உரிமைகளையா மதிக்கப் போகிறான்?
யோசித்துப் பார்த்தால், மனிதனுக்குத் தீபாவளி, மற்ற உயிர்களுக்குத் தீபாவலி.
அந்த ஆடுகள் இந்நேரம் எத்தனை மனித இரைப்பைக்குள் சென்றனவோ? பெற்றக் குழந்தைகளைப் போல அந்த ஆடுகள் அந்த அம்மாவைச் சுற்றிச் சுற்றி வந்ததும், பணத்தைக் கொடுத்துவிட்டுக் கறிக்கடைக்காரர் இழுத்துச் செல்ல முற்பட்டபோது அந்த ஆடுகள் அந்த அம்மாவைப் பார்த்து கதறிக் கத்தியதும், அதைப்பார்த்து அவர் இருதுளிகள் கண்ணீர் வடித்ததும் திரைப்படம்போல் என் மனத்திரையில் ஓடுகிறது. அந்த அப்பாவி விலங்குகளின் வலிக்கு யார் காரணம்? இந்த உலகில் மகிழ்ச்சியாய் வாழும் தகுதி தமக்கே உண்டு என எண்ணும் மனித இனமே காரணம்./
ReplyDeleteஆமாம் ஆமாம் ஐயா...எனக்கு இவ்வரிகளைப் படித்ததும் காட்சி மனத்திரையில் விரிந்திட மனம் என்னவோ செய்துவிட்டது ஐயா. நான் வெளியில் அருகில் இருக்கும் கடைக்குச் சென்று வந்தாலே ஒரு வித பயத்துடன் நான் வளர்க்கும் செல்லம் என்னைப் பார்க்கும். அதுவே மனதை என்னவோ செய்யும். அவளிடம் பேசிவிட்டுச் செல்வேன். பயப்படாதே நான் கடைக்குத்தான் போகிறேன் வந்துவிடுவேன் என்று. நாங்கள் வெளியில் செல்லும் போதெல்லாம் அவளிடம் பேசி கொஞ்சி விட்டுத்தான் செல்வோம். சென்னையிலிருந்து பங்களூர் வந்த போது செல்லத்தையும் எங்களுடன் கொண்டு வந்த போது அவள் மிகவும் சமர்த்தாகப் பயணம் செய்தாள்...என் பைரவி...
//இந்த மண்ணுலகில் தோன்றிய உயிரினங்களில் கடைசியாகத் தோன்றியவன் மனிதன். உண்மையைச் சொன்னால் மனிதனை விட மற்ற உயிரினங்களுக்கே வாழும் உரிமை அதிகம்.//
உண்மை உண்மைதான் ஐயா.
நாங்கள் பட்டாசு வெடிப்பதில்லை. பாவம் பிற உயிரினங்கள். உங்கள் பதிவு அருமை ஐயா..தலைப்பும் அருமை
கீதா
சீனி.வேங்கடசாமியின் ஆய்வுக் களஞ்சியத்தில் ஒரு குறிப்பு வருகிறது. அந்தக் குறிப்பின்படி சமண சமயத்தின் மகாவீரர் அந்தக் காலத்தில் ஒரு நாட்டின் அரண்மனையில் அமர்ந்து பிரசங்கம் செய்கிறார். விடிய விடியப் பேசிக் கொண்டிருக்கிறார். அதனை அந்த ஊர்க்காரர்கள் சிரத்தையாகக் கேட்டுவிட்டு ‘இனி இங்கேயே தூங்கிக்கலாம்...விடிந்து வீட்டுக்குச் செல்லலாம்’ என்று உறங்கிவிடுகிறார்கள். விடிந்து பார்த்தால் மகாவீரர் அந்த இடத்திலேயே வீடு பேற்றை அடைந்துவிடுகிறார். அதனைத் தெரிந்து கொண்ட அரசன் மகாவீரர் வீடுப் பேற்றை அடைந்ததன் நினைவாக இன்றைய தினத்தை ‘தீப வரிசை’ வைத்து நினைவில் நிறுத்தியிருப்போம் என்கிறார். அதுதான் தீபாவலி. (ஆவலி என்றால் வரிசை). //
ReplyDeleteதீபாவலி - உங்கள் தலைப்பில் உள்ள வார்த்தையை வா மணிகண்டன் அவர்களின் தளத்தில் பதிவிலும் பார்த்தேன். அதற்கு இப்படியும் ஒரு அர்த்தம் இருக்கிறது என்று அவரின் பதிவில் வாசித்ததைத்தான் இங்கு தந்துள்ளேன் ஐயா...
கீதா
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
ReplyDeleteபதிவு அருமை ஐயா.
துளசிதரன்
100% உண்மை...
ReplyDeleteதீபாவலி.....
ReplyDeleteஇறைப்பைக்குள் போன ஆடு.... பாவம்.
வெடிச்சப்தம் கேட்டு நடுங்கி இருக்கும் விலங்கினங்கள் - நினைத்தாலே கஷ்டம். தான். இங்கே ஏற்கனவே மாசு அதிகம் இருக்க, இந்த வெடிகள் மூலமும் நச்சுக் காற்று நிறையவே பரவி விலங்குகளை மட்டுமல்ல, மனிதர்களையும் படுத்திக் கொண்டிருக்கிறது!
உண்மை ஐயா
ReplyDeleteஉண்மை
நூற்றுக்கு நூறு உண்மை.
ReplyDeleteவணக்கம் இயற்கை மனிதனின் பலம் என்பதை மனிதன் மறந்து நூற்றாண்டைக் கடந்துவிட்டது. களப்பிரர்கள் காலம் இருண்ட காலம். அத்தகைய காலத்தில் தான் நாம் வாழ்கிறோம். பறவைகள் கண்டான் விமானம் படைத்தோம். இனி பறவைகள் தேவையில்லை. இது தான் மனிதன். இவனிடம் எப்படி மனிதநேயத்தை எதிர்பார்ப்பது. வெடி வெடித்தால் மாசு இதை நீதிமன்றம் தெரிவிக்க வேண்டியதில்லை. மனிதனுக்கு அறிவில்லை. நான் கடந்த 30ஆண்டுகளாக வெடி வைப்பதில்லை. இருப்பதை அழித்துவிட்டு வாழ மனிதன் என்ன இயந்திர வடிவமைப்பா? இன்று காற்றின் மாசு மிகஅதிகம் என செய்தி. மனிதன் வேற்று கிரகம் செல்ல இயலுமா? தீபாவளிக்குச் சரக்கு(சீமைச்சாராயம்) 160கோடிக்கும் அதிகமாக விற்பனை. இத்தகைய குடிமகன்கள் வாழும் சமுதாயத்தில் தான் வாழ்கிறோம். ஆகவே மற்றவற்றைப் புறந்தள்ளி வாழக் கற்றுக் கொள்வோம்.
ReplyDeleteமுனைவர் ரா. லட்சுமணசிங்
கரூர்