Monday, 19 November 2018

காலமாகிப் போன கடிதம் எழுதும் கலை

     கைபேசி கைக்கு வந்ததும் கடிதம் எழுதும் வழக்கம் கடிதில் மறைந்து வருகிறது. கடிதம் எழுதுவது என்பது ஒரு கலை. நகைச்சுவை, வருத்தம், வியப்பு, அச்சம், பெருமிதம், சினம், மகிழ்ச்சி அழுகை என்னும் எண்வகை மெய்ப்பாடுகளையும் சரியான விகிதத்தில் வெளிப்படுத்துவன கலைகள். அப்படியே கடிதம் எழுதும்போதும் நாம் நம் அன்பை, பாசத்தை, மகிழ்ச்சியை, மனக்கவலையை, விருப்பை, வெறுப்பைத் தெரிவிக்கும் வகையில் சொற்களைத் தேர்ந்தெடுத்துத் தகுந்த நிறுத்தல் குறியிட்டு எழுதி அனுப்புகிறோம். கடிதத்தைத் தொடங்கும்போது இடப்படும் விளிச்சொல்லும், மடலை முடித்து எழுதப்படும் முடிப்புச் சொல்லும் மிக முக்கியம். இந்த வரைமுறைகளெல்லாம் இன்றைய இளைஞர்க்குத் தெரியாது.

    
  சில கடிதங்கள் ஒருவரது தலைவிதியைக்கூட மாற்றிவிடும். “தம்பி சரியாகப் படிக்காமல் திரிகின்றான். உடனே அழைத்துச் சென்று உங்களுடன் வைத்துப் படிக்க வைக்கவும்.” என்று என் நடு அண்ணன் கோவையில் பேராசிரியராகப் பணியாற்றிய என் பெரிய அண்ணனுக்கு எழுதிய கடிதம்தான் என் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தியது. மடல் எழுதிய நடு அண்ணனையும். அம்மடலுக்கு மதிப்பளித்து எனது துடுக்கையடக்கும் விதத்தில் தூரத்து ஊர் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்த  என் பெரிய அண்ணனையும் நாளும் நன்றியோடு நினைத்துப் பார்ப்பதுண்டு.

    நானும் எனது அருமை நண்பர் மைசூருவில் வசிக்கும் பொறியாளர் சந்திரமவுலீஸ்வரனும் இளமையில் வெவ்வேறு கல்லூரிகளில் படித்தபோது ஆங்கிலப் புலமையை வளர்த்துக் கொள்வதற்காக ஒரு வழியைக் கண்டுபிடித்தோம். வாரம் தவறாமல் நீண்ட மடல்களை ஒருவருக்கொருவர் எழுதுவது, அதையும் ஆங்கிலத்தில் எழுதுவது என முடிவு செய்து முயற்சியில் இறங்கி முழு வெற்றியடைந்தோம். இப் பயிற்சியானது  பின்னாளில் டாக்டர் செ.சைலேந்திரபாபு எழுதிய ஆங்கில நூல்களை மொழிபெயர்த்து வெளியிட எனக்குப் பெரிதும் கைகொடுத்தது.  

     தனிப்பட்ட ஒருவருக்கு எழுதப்படும் கடிதம் அதில் எழுதப்படும் கருத்து அனைவருக்கும் ஏற்புடையதாகும்போது அல்லது பயன்படும்போது  அது இலக்கியத் தகுதியைப் பெற்றுவிடுகிறது. இப்படித்தான் கடித இலக்கியம் என்னும் தனிப்பிரிவே தமிழில் முகிழ்த்தது.

     பேராசிரியர் மு.வரதராசன் அவர்கள் எழுதி வெளியிட்ட அன்னைக்கு, தம்பிக்கு, தங்கைக்கு, நண்பர்க்கு என்னும் நூல்கள் கடித இலக்கிய வகையைச் சார்ந்தவை. தம் மாணவர்க்கு நீண்ட மடல்கள் எழுதும் வழக்கமுடையவர் மு.வ. எனக்குப் பேராசிரியர் சொ.அரியநாயகம் உள்ளிட்ட என் ஆசிரியர்கள் எழுதிய மடல்கள் என்னை நன்னெறிப்படுத்தின. அவற்றைக் கோப்பில் இட்டு வைத்துள்ளேன்.

    இந்த வகையில் ஜவகர்லால் நேரு அவர்கள் தம் சிறைவாசத்தின்போது ஒன்பது வயதே நிரம்பிய மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் உலகப்புகழ் வாய்ந்தவை. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அக் கடிதங்கள் பின்னாளில் இருபதுக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு நூல் வடிவம் பெற்றன.

    “தந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள்” என்னும் தலைப்பில், கே.ஆர்.வாசுதேவன் அவர்கள் மிக அருமையாகத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ள இந்நூலை, பூரம் பதிப்பகம் 1987 ஆம் ஆண்டு முதற்பதிப்பாக வெளியிட்டது. அதன்பின் பல பதிப்புகளைக் கண்டது அந் நூல்.

   அந்நூலுக்கு இந்திரா காந்தி எழுதியுள்ள அணிந்துரையில்,”என் தந்தையார் எனக்கெழுதிய கடிதங்கள் என்னிடம் புதிய தோற்றங்களை ஏற்படுத்தியதைப் போலவே, எல்லாக் குழந்தைகளிடத்தும் ஏற்படுத்தும்’ என வாக்குமூலம் ஒன்றை வழங்குகின்றார்.

    15.2.94 அன்று கோவை பாரதியார் பல்கலைக்கழகம் என்னை ஆட்சிப்பேரவை உறுப்பினராக நியமித்தது. அதன் நினைவாக இந்நூலை வாங்கி என் புதல்வியர் இருவருக்கும் பரிசிலாக அளித்தேன். (பரிசாக அன்று; போட்டியில் வெற்றிப்பெற்றோருக்கு அளிக்கப்படுவது பரிசு!). 114 பக்கங்கள் கொண்ட இந்நூலின் அன்றைய விலை ரூபாய் இருபத்தைந்து.

    இன்று (நவம்பர் 19) இந்திரா காந்தியின் பிறந்த நாளல்லவா? அதிகாலையில் எழுந்து, இல்ல நூலகத்தில் இருக்கும்  இந் நூலை மறுவாசிப்புச் செய்ததன் விளைவுதான் இப்பதிவு.

      உலகின் வரலாற்றை படம்பிடித்துக்காட்டும் இந்நூலை அனைவரும் படிக்க வேண்டும் என்பது என் விருப்பம்.
    

      

8 comments:

  1. அது ஒரு பொற்காலம்... கடிதங்கள் பொக்கிசங்கள்...

    ReplyDelete
  2. ஐயா.வணக்கம்.
    கைபேசி வந்தது. அதிலேயே இன்றைய இளைஞர்கள் மூழ்கிக் கிடக்கின்றனர்.அதிலும் தமிழை ஆங்கிலத்திலும் ஆங்கில வார்த்தைகளை சுருக்கியும் தகவல் பரிமாற்றம் செய்கின்றனர். கடிதம் எழுதுவது என்பது இன்று அரிதாகிவிட்டது. மின்னஞ்சல் என்பது மற்றும் ஒரு மாற்றாகிவிட்டது. கடிதம் எழுதும் கலையும் காலப்போக்கில் காணமல் மறைந்து போகிறது என்ற தங்களின் வார்த்தை நிதர்சனமான உண்மை ஐயா.

    ReplyDelete
  3. தங்களது விருப்பம் போற்றுதலுக்கு உரியது ஐயா

    ReplyDelete
  4. கடித இலக்கியம் மிக மிக அருமையான இலக்கியம் ஆனால் இப்போது அரிதாகிவிட்டது என்று சொல்லலாம். நல்ல பதிவு...தமிழாக்கம் புத்தகத்தையும் குறித்துக் கொண்டோம் ஐயா...மிக்க நன்றி

    ReplyDelete
  5. இந்நூலைப் படித்துள்ளேன் ஐயா. எனக்கென்னவோ ஆங்கிலத்தில் படிக்கும்போது இருந்த உணர்வு தமிழில் இல்லாததைப் போன்றிருந்தது. நாம் தொலைத்தனவற்றில் ஒன்று கடிதம் எழுதுவது. இருந்தாலும் நான் அவ்வப்போது கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் அஞ்சலட்டைகளில். எழுதும்போது கிடைக்கும் சுகம் தட்டச்சிடுவதில் இல்லை என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  6. அண்ணா அருமை!மடல் இலக்கியம் பற்றிப் பேசும் போது "பரிசு....பரிசில்...!" என்கிற சொல்-பொருள் விளக்கம் தர உங்களை விட்டால் வேறு யாரால் முடியும். அண்ணல் காந்தி பற்றியும் பண்டிதர் நேரு பற்றியும் விவாதிக்கும் போது பிள்ளை வளர்ப்பில் தன் குருவை விஞ்சி நிற்கும் (விஞ்சியா...? மிஞ்சியா...?) மாணவனாக நேருஜி திகழ்வதற்குப் பெரும் பங்கு ஆற்றியவை "தந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள்". அது போலவே தன் தம்பிமார்களுக்கு தவறாது கடிதம் எழுதிய அண்ணாவையும் உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதியே வரலாற்றில் இடம் பிடித்த கலைஞரையும் "தமிழ் மடல் இலக்கிய வரலாறு" தனிச் சிறப்பான இருக்கை தந்து அமர்த்தியிருக்கிறது என்றால் அது மிகையாகாது.

    ReplyDelete
  7. கடித இலக்கியம் நம்மிடையே அரிதாகிவிட்டது. இளைஞர்களுக்கோ இது பற்றித் தெரிந்திருக்குமா? என்பது ஐயத்திற்குரியது. ஆனால் தொலைபேசியில் / கைபேசியில் பேசும் கலை, மின் அஞ்சல் எழுதும் கலை, ஸ்மைலி, போன்ற மென்திறன்களில் நம் இளைஞர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். ஒன்று போய் மற்றொன்று வந்துள்ளது.

    ReplyDelete
  8. இன்றைய தொழில் நுட்ப உலகில் எழுதுவதே மறந்துவிட்டது ஐயா. இதில் கடிதம் எங்கே ஐயா எழுதுவது. ஒருவர் இறந்துவிட்டால் கூட அதற்கு RIP என்று தான் அனுப்புகிறார்கள். அந்த அளவு நமக்கு அவசரம்.உங்கள் கட்டுரை எனக்குள் ஒரு சுடரை ஏற்றி உள்ளது. மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete