என் இளைய மகளின் திருமண ஏற்பாடுகளில் மூழ்கியுள்ள நான் கடந்த சில வாரங்களில் எந்த நூலையும் வாசிக்கவில்லை.
ஆயினும் இருநாள்களுக்கு முன் கரூர் வள்ளுவர் கல்லூரியின் செயலர் திருமதி ஹேமலதா செங்குட்டுவன்
கொடுத்தனுப்பிய நூலை இரண்டே நாள்களில் படித்து முடித்துவிட்டேன்.
மூன்றாம் பதிப்பைக் கண்டுள்ள அந்த நூல் இதுவரை
என் கண்ணில் படாமல் போனதற்குக் காரணம் என் நல்லூழ் இன்மையே. சிறந்த நூல்களைப் படிப்பதற்கும்
கொடுத்து வைத்திருக்க வேண்டும் போலும்!
‘அருந்தவப்பன்றி’
சுப்பிரமணிய பாரதி – இதுதான்
நூலின் தலைப்பு. ‘என்ன கொடுமையான தலைப்பு!’ என்ற எண்ணத்துடன் நூலை வாசிக்கத் தொடங்கினேன்.
முதல் இரண்டு பக்கங்களைப் படித்ததும் ஆழ்ந்து நுணுகிப் படிக்க வேண்டிய நூல் என்பதை
நொடியில் உணர்ந்து கொண்டேன்.
நூலைப் படித்து முடித்ததும் ஒருவிதமான குற்ற
உணர்வுக்கு ஆளானேன். கடந்த அரை நூற்றாண்டு காலத்தில், பாரதியின் கவிதைகளில் இழையோடும்
இலக்கிய நயங்களை மட்டும் பார்த்துப் படித்துப் பட்டிமன்றங்களில் பேசுவதற்குப் பயன்படுத்திய
என் முட்டாள் தனத்தை என்னவென்று சொல்லுவேன்!
இந்த நூலைப் படித்தபின் எனக்கு ஒரு ஞானோதயம்
தோன்றியது. வணிக நோக்கமின்றியும், விளம்பர நோக்கமின்றியும் எழுதும் படைப்பாளி
தன்னைத் தன் படைப்பில் இனங்காட்டியிருப்பான். அதைக் கண்டுபிடிக்கும் ஆர்வத்துடன் படைப்புகளை
ஆழ்ந்து வாசிக்க வேண்டும் என்பதை அறிந்து கொண்டேன். ஆங்கிலத்தில் Reading
between the lines என்று ஒரு
மரபுத்தொடர் உண்டு. கூர்ந்து படித்துப் படைப்பாளி சொல்ல வருவதை உய்த்துணர்தல் என்பது
அதன் பொருள். இனி அப்படி வாசிக்க வேண்டும் என்னும் வழிகாட்டுதலை வழங்கியுள்ள நூலாசிரியர்
பாரதி கிருஷ்ணகுமார் என் நன்றிக்கு உரியவர்.
பாரதி கிருஷ்ணகுமார் ஒரு சிறந்த சிறுகதை
எழுத்தாளர்; ஆற்றொழுக்காய்ப் பேச வல்லவர்; ‘எனக்கு இல்லையா கல்வி?’, ‘என்று தணியும்?’
போன்ற விழிப்புணர்வுப் படங்களை வெளியிட்ட ஆவணப்படத் தயாரிப்பாளரும் ஆவார்.
பாரதி கிருஷ்ணகுமார் பாரதிக்கும் அவரது கவிதைக்
காதலிக்கும் நேர்ந்த பிரிவையும், பிரிவுக்கான காரணங்களையும் பாரதியின் பாடல்களில் பொதிந்துள்ள
அகச் சான்றுகள் மூலம் நிறுவியுள்ளார். “பொதுவாக
பாரதியின் வாழ்வை, வரலாற்று ஆசிரியர் பலரும் பாரதியின் பாடல்களுக்கு வெளியிலேயே தேடித்
தொகுத்து விட்டனர். பாரதிக்கும் தொலைந்துபோன வாழ்க்கை ஒன்று உண்டு என்பதையும், அவனே
தன் பாடல் வரிகளுக்குள் புதைத்தும் வைத்துள்ளான் என்பதையும் பாரதி கிருஷ்ணகுமார் கண்டுபிடித்துவிட்டார்”
என்று நீதியரசர் வெ.இராமசுப்பிரமணியன் அவர்கள் நூலுக்கு அணி சேர்க்கும் நூல் மதிப்புரையில்
குறிப்பிடுவது முற்றிலும் உண்மையே.
பாரதியார் எழுதிய கதைகள் தனி நூலாக வந்துள்ளது.
எனினும் ‘கவிதாதேவி
அருள் வேண்டல்’ என்னும் நீண்ட கவிதையின் ஊடே சுட்டிக்காட்டும் அருந்தவ முனிவர்
ஒருவர் சாபத்தால் பன்றியாக மாறிய கதைதான் இந் நூலுக்குக் கருவாக அமைந்துள்ளது. நூலை
வாங்கிப் படிக்கும் வாசகருக்குச் சுவை குன்றாமல் இருக்க, அக்கதையை இங்கே நான் தொட்டுக்காட்டாமல்
செல்கின்றேன்.
மேலும் பொதுவெளியில் பலராலும் அறியப்படுகிற
மாமனிதர்களின் வாழ்க்கையை ஒளிவுமறைவின்றி ஆவணப்படுத்த வேண்டும் என்னும் கோட்பாட்டுடன்
நூலாசிரியர் முனைப்புடன் செயல்பட்டுள்ளார். இதன் காரணமாக பாரதியாரின் வாழ்க்கைத் தொடர்பாக
இவர் தரும் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறும் சில செய்திகள் நம்மை அதிர்ச்சியடையச்
செய்கின்றன.
இந்த நூலின் தனிச்சிறப்பே அறுபத்து நான்கு
பக்கங்களில் அமையும் பின் இணைப்புதான். இது குறித்தும் நான் சொல்லாமல் விடுவது ஏன்
தெரியுமா? வாசகர்களே கண்டு வியக்க வேண்டும் என்பதால்தான்.
சுருங்கச் சொன்னால் இது சிந்திக்கத் தூண்டும்
சிறந்த நூல். எது எப்படியோ மகள் திருமணம் முடிந்ததும் பாரதியின் படைப்புகள் எனது மறு
வாசிப்புக்கு உட்படும் என்பது மட்டும் உறுதி.
…………………………………………………………..
நூல்
விவரம்:
நூலின்
பெயர்: “அருந்தவப்பன்றி” சுப்பிரமணிய பாரதி
வெளியீடு:
சப்னா புக் ஹவுஸ், 1,கிழக்குப் பெரியசாமி சாலை,
கோவை-641002. தொடர்புக்கு:0422-4629999 விலை ரூ.140
பக்கங்கள்
157.
வாசிக்க வேண்டும் எனும் ஆவலாக உள்ளது ஐயா...
ReplyDeleteவணக்கம்.
ReplyDeleteமனமார்ந்த நனறி.
என்றும் மாறாத அன்புடன்
பாரதி கிருஷ்ணகுமார்.
நூலை எவ்வாறு வாசிக்கவேண்டும் என்று கூறிய விதம் அருமை ஐயா.
ReplyDeleteReading between the lines என்ற சொற்றொடரை பல நிலைகளில் நான் ரசித்துப் பார்த்து வந்துள்ளேன்.
தலைப்பைப் பார்த்ததும், என்னை என் நண்பர்கள் (கல்லுரிக்காலம் முதல் பாலசந்தர் படத்தை விரும்பிப் பார்த்து வந்தபோது) பாலசந்தர் பைத்தியம் என்று கூறியது நினைவிற்கு வந்தது.
"உய்த்துணர்தல்" போன்ற சொல்லாடல்கள் இனியன் அண்ணாவின் முத்திரைகள். கிட்டத்தட்ட ஓர் அணிந்துரையே எழுதி விட்டீர்கள் அண்ணா. குடும்ப நிகழ்வுக்காய் ஓயாது பயணிக்கும் போதும் தமிழுக்காய் நேரம் ஒதுக்கி இவ்வலைப்பூ பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteReading between the lines//
ReplyDeleteஆமாம் ஐயா இது மிகவும் அவசியம்.
அருமையான விமர்சனம். படிக்கத் தூண்டும் விமர்சனம்.
துளசிதரன், கீதா