'தமிழ்த் தேனீ' என எல்லோராலும் அறியப்பெற்ற மதுரைப்
பேராசிரியர் டாக்டர் இரா.மோகன் அவர்கள் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் தீவிர மாரடைப்பின்
காரணமாக அமரரானார் என்னும் செய்தியை என்னால் கொஞ்சம்கூட நம்ப இயலவில்லை.
தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழச் செய்பவர்;
தானும் சிரித்து மற்றவரையும் சிரிக்கச் செய்பவர்; தானும் எழுதிப் பிறரையும் எழுதச்
செய்பவர்; பிறர் துன்பத்தைத் தன் துன்பமெனக் கருதி ஓடிச்சென்று உதவும் பான்மையர். இப்படி
வையத்தில் வாழ வேண்டிய முறைப்படி வாழ்ந்தவரை ‘வாழ்ந்தது போதும் வருக’ என அழைத்துக்
கொண்டானே இறைவன். அவனது கணக்கு யாருக்குப் புரிகிறது?
இனி வருமா இந்தக் கணம்? |
நேற்று மாலையில் இருந்தார்; இன்று காலையில் இறந்தார்.
என்ன கொடுமையிது! நிலையாமை என்பதுதான் நிலைத்தது போலும்!. இதை உணர்ந்துதான் வள்ளுவர்
சொல்கிறார்:
நெருநல் உளன் ஒருவன்
இன்றில்லை
என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு
இலக்கிய
இணையர் என்னும் பெருமையுடன் இவ் உலகை வலம் வந்த இணையரில் ஒருவர் இன்று இப்பொழுது நம்மிடையே
இல்லை. ஒரு மலர் உறங்குவது போல உறைகுளிர் பெட்டியில் உறங்கிக்கொண்டிருக்கிறார். ஆருயிர்
மனைவி நிர்மலா மோகன் அருகில் ஆற்றாது அழுது நிற்கின்றார். உறவினர்கள் அதிர்ச்சியில்
உறைந்து கிடக்க, அவரது நண்பர்கள் நடுங்கு துயரெய்தி நாவறண்டு மவுனமாய் நிற்கின்றனர்.
அவருடைய ஒரே மகள் அரசி அமெரிக்காவிலிருந்து அழுதழுது கண்ணீரும் வற்றிக் கலங்கிக் கையற்ற
நிலையில் பறந்து வந்து கொண்டிருக்கிறார். யாருக்கு யார் ஆறுதல் சொல்வது?
செல்லாக் காசெனக் கிடந்த என்னை ஒரு செல்லும் காசென
மாற்றியவர் பேராசிரியர் மோகன் என்று ஆயிரம் கோவில்களில் அடித்துச் சத்தியம் செய்வேன்.
இனி யாருள்ளார் எனக்கு என்று என் நெஞ்சு நெக்குருகி கேட்கிறது.
‘தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்னும் குறள் மொழிக்கேற்ப
வாழ்ந்து மறைந்தவர் மாமனிதர் மோகன் அவர்கள். புகழ்த் தடயங்களை நிறையவே விட்டுச் சென்றுள்ளார்.
அவர் எழுதியுள்ள நூற்றைம்பது நூல்களும் தமிழ் கூறும் நல் உலகம் உள்ளவரை அவரது புகழ்
பாடும். அவர் ஓர் ஒப்பற்ற ஆசிரியர், என்னைப்
போன்று அவரிடம் பயின்ற பல்லாயிரம் மாணவர்களின் மனங்களில் அவர் நடுகல்லாய் என்றென்றும்
நிற்பார். இனி அவருடைய பெருமையைப் பறைசாற்றுவதே எங்களுடைய முதன்மைப் பணியாய் இருக்கும்.
‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத்
தமிழ்ச் செய்யுமாறே’ என்னும் திருமூலரின் வாக்கிற்கொப்ப வாழ்ந்து மறைந்தவர் பேராசிரியர்
இரா.மோகன் அவர்கள்,
அவரது ஆன்மா ஆழ்ந்த அமைதியில் திளைக்கட்டும்; அவரது
புகழ் இன்னும் பன்மடங்காய் வளர்ந்து நிலைக்கட்டும்.
மிகவும் வருந்துகிறேன் ஐயா...
ReplyDeleteஇலக்கிய உலகிற்கு பேரிழப்பு. ஆழ்ந்த அனுதாபங்கள்.
ReplyDeleteமிகுந்த வருத்ததுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ்ஐயா
ReplyDeleteஆழ்ந்த இரங்கல் ஐயா
ReplyDeleteஆழ்ந்த இரங்கல். தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது அலுவல் பணிகளின்போது ஐயாவை அறியும் வாய்ப்பினைப் பெற்றேன். சிறந்த பண்பாளர்.
ReplyDeleteஒரு முறை தான் அவர்தம் தமிழ் கேட்டோம். எம் கல்லூரியில் சிறப்புப் பொழிவு நிகழ்த்திய அந்தப் பெருந்தகை இன்றில்லை என்பது இயற்கை நிகழ்த்திக் காட்டிய பெருவிளையாட்டு!
ReplyDelete"சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து" என்னும் குறளுக் கேற்ப மிகச்சரியான சொற்கள் கொண்டு உரையாற்றுவதில் வல்லவர்!
வாழ்க அவர்தம் புகழ்!
Shocked to come to know the demise of Professor.Mohan.Deepest condolences to his family members.
ReplyDeleteVery shocking news. May he rest in peace
ReplyDeleteஆழ்ந்த இரங்கல்கள் ஐயா.
ReplyDeleteதுளசிதரன், கீதா