Thursday, 26 December 2019

இனிய திருப்பாவையும் எளிய உரையும்: பாடல் 1-5


   எங்கள் இல்லத்தில் மார்கழி மாதம் முழுவதும் கொண்டாட்டம்தான். காலை நான்கு மணிக்கு எழுந்து நீராடி திருப்பாவை வழிபாட்டுக்கு ஆயத்தமாவோம்.

   என் துணைவியார் ஆண்டாள் அருளிச் செய்த முப்பது பாசுரங்களையும் மனப்பாடமாக முனைமுறியாமல் நாள்தோறும் சொல்லி முடித்துத் தீப தூபம் காட்டுவார். இன்று நேற்றல்ல; கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக இதை ஒரு வேள்வி போலச் செய்து வருவது எனக்கு வியப்பளிக்கும் நிகழ்வாகும். அது மட்டுமா? சுடச்சுட சுவையான பொங்கல், பாயாசம், சுண்டல் தயாரித்துக் கோவிந்தனுக்குப் படைப்பதும், பின்னர் நாங்கள் புசிப்பதும் உண்மையில் சுவையான அனுபவம்தான்.

   இப்படி, பொங்கலை மட்டும் சுவைத்து வந்த நிலையில், இவ்வாண்டு திருப்பாவை பாடல்களைச் சுவைக்க விரும்பினேன். ஒன்றிரண்டு உரைகளைத் தேடிப்பிடித்துப் படித்தால் ஒன்றும் புரியவில்லை; அவ்வளவு கடினமாகவும் அளவில் நீண்டும் இருந்தன. அப்போதுதான் சுருக்கமாக எளிமையாக ஓர் உரை எழுதும் எண்ணம் மனத்தில் உதித்தது. அதற்காகப் பார்வை நூல்கள், அகராதிகள், இணையதள முகவரிகள் என அனைத்தையும் திரட்டினேன். ஒவ்வொரு நாளும் ஒரு பாடலுக்கு மட்டும் உரையெழுதி புலனத்தில் திருப்பாவைக் குழு என்னும் குழுவை உருவாக்கி நாள்தோறும் காலை ஐந்து மணிக்குப் பகிர்ந்து வருகிறேன். வலைப்பூ வாசகர்களும் இந்த எளிய உரையைப் படிக்க வேண்டும் என்னும் ஆசையில் பதிவிடுகிறேன். ஆழ்ந்து படித்து நிறை குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.

முதல் பாடல்
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
  நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்!
  கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
  கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
  பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.


விளக்கவுரை:
  சிறப்புகள் மிகுந்த ஆயர்பாடியில் வசிக்கும் அழகிய அணிகலன் அணிந்த செல்வச் சிறுமியர்களே! நிறைந்த நிலா ஒளி வீசும் இந்த மார்கழி மாதத்து முதல்நாளின் அதிகாலைப் பொழுதிலே எழுந்து நீராட வாருங்கள்.

    பகைவரை வென்றொழிக்கும் கூர்வேல் உடைய நந்தகோபனின் மகனும், அழகான கண்களை உடைய  யசோதையின் இளஞ்சிங்கமும் ஆன, கரிய மேனியும், குளிர்நிலா போன்று இரக்கம் உடைய முகமும், அருள் நோக்குடைய கண்களும் கொண்ட கண்ணன் நாம் விரும்பும் நல்ல கணவனை அடைய அருள் புரிவான். அதற்காக, மற்றவர் புகழும்படி நீராடி பாவை நோன்பு நோற்போம் வாரீர்.

அருஞ்சொற்பொருள்: போதுவீர்- வாருங்கள்; நேரிழையீர்- அழகிய அணிகலன் அணிந்தவர்களே; ஏர்- அழகு; ஆர்ந்த- மிகுந்த; கதிர்மதியம்- குளிர்ந்த கதிர்களைக் கொண்ட நிலா; பறை- விரும்பிய பொருள்; படிதல்- நீராடல். 

இரண்டாம் பாடல்
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
   செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
   நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
   செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
   உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

  இந்த வையத்தில் வாழும் சிறுமியர்களே! இந்த மார்கழி மாத நோன்பு நோற்கும்போது நம் உடலும் மனமும் தூய்மையாக இருக்க வேண்டும். அதற்குச் செய்யத் தக்கவை, செய்யத் தகாதவை எவையெனக் கூறுவேன் கேளுங்கள்.

 செய்யத் தக்கவை: அதிகாலையில் எழுந்து நீராடுங்கள். பின்னர் பராந்தாமனின் திருவடிகளைத் பாடிப் போற்றுங்கள்.இயன்றவரை இயலாதவர்க்குக் கொடுத்து உதவுங்கள். அதுவே நாம் உய்யும் வழி என அறிந்து உற்சாகத்துடன் செய்யுங்கள்.

செய்யத் தகாதவை: பாவை நோன்பின்போது வாய்ச்சுவைக்குக் காரணமான பால், நெய் முதலியவற்றை உண்ணுதலைத் தவிருங்கள். கண்ணுக்கு மையிட்டு அழகு பார்ப்பது தான் என்னும் அகந்தையை உண்டாக்கும். எனவே கண்ணுக்கு மையிட வேண்டா. மார்கழியில் மலரும் மலர்கள் அனைத்தும் மாதவனுக்கு மட்டுமே உரியவை. எனவே அவற்றைச் சூட வேண்டா. மேலும் மன மாசுக்குக் காரணமான பொய்யும், புறமும் பேச வேண்டா. சான்றோர் செய்யற்க என்று சொன்னவற்றை ஒருபோதும் செய்யாதீர்.






மூன்றாம் பாடல்
 ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
    
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
    
ஓங்கு பெருஞ் செந்நொலூடு கயல் உகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
    
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
    
நீங்காத செல்வம் நிறைந்து ஏல் ஓர் எம்பாவாய்.

  பேருருவம் தாங்கி நின்று, உலகளந்த உத்தமன் பெருமாளின் புகழைப் பாடியவாறு நீராடிப் பாவைக்கு மலர் சாற்றிப் பாவை நோன்பை நோற்றால், நாடெல்லாம் மாதம் மூன்று மழை அளவாய்ப் பொழியும்; நீர் நிறைந்த வயல்களில் செந்நெல் பயிர்கள் செழித்து வளர்ந்து நிற்கும்; அவற்றின் ஊடே மீன்கள் துள்ளித் திரியும்; குளத்தில் பூத்துள்ள குவளை மலர்களில் அழகிய புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் உண்டு மயங்கி அப் பூவிதழ்கள் மேல் கிடந்து உறங்கும்; உழவர் வீட்டுப் பெரும் பசுக்கள் வள்ளல்கள் எனப் பால் சுரந்து குடம் நிறைக்கும்; நீங்காத செல்வம்
எங்கும் நிறைந்திருக்கும். 

நான்காம் பாடல்
  ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்;
    
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
    
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
    
தாழாதே சார்ங்கம் தைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய்! நாங்களும்
    
மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.
ஆழி- கடல், சக்கரம்; ஆர்த்து - இடி இடித்து;கரவேல் - மறைக்காதே;  பாழி- வலிமை;ஊழி- உலகம்; சார்ங்கம் - சாரங்க வில்; தாழாது - ஓயாது;

  ஆண்டாள் நாச்சியாருக்குத் தான் காண்பதெல்லாம் கண்ணனின் திருவுருவாகவே தோன்றுகின்றன. உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை, பெய்யும் மழை எல்லாமே கண்ணனின் திருவடிவம்தான்.  ஆழி நீர் அதாவது கடல்நீர் ஆவியாகி, மேகமாகி மழையாகப் பெய்கிறது என்பது அறிவியல் உண்மை. அதனால்தான் ஆழி மழைக் கண்ணா என்று பாடல் தொடங்குகிறது.

  இனி ஆண்டாள்  மழைக் கடவுளுடன் பேசுவதைக் கேட்கலாமா?
“மழையாகிய தெய்வமே! நீ ஒன்றையும் மறைத்து வைக்காமல் வள்ளல் போல கொட்டிக் கொடு. கடல் நீரை முகந்து கொண்டு மேல் எழு. உலக முதல்வனாகிய கண்ணனின் கரிய மேனி போல கார்மேகமாக மாறு.

      வலிமையான தோள்களையுடைய கண்ணனின் கையில் உள்ள சக்கராயுதம் போல மின்னல் மின்னட்டும். அவனது மற்றொரு கையில் உள்ள வலம்புரி சங்கிலிருந்து எழும் ஒலி போல பூமி அதிரும்படியாய் இடி இடிக்கட்டும்.  அவனது சாரங்க வில் ஓயாமல் அம்புகளைப் பொழியுமே அப்படி ஓயா மாரியென மழை பெய்யட்டும். அதனால் உலகம் செழிப்பதுடன் நீர் நிலைகளில் நீர் நிரம்பி நாங்கள் மகிழ்ச்சியுடன் மார்கழி  நீராடவும் வாய்ப்பாக அமையும்.”

ஐந்தாம் பாடல்
   
 மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
    
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
    
தாயைக் குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
    
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
    
தீயினில் தூசாகும் செப்பு ஏல் ஓர் எம்பாவாய்.

   மாயனே! வையத்துள் நிலைத்திருக்கும் வடமதுரையில் பிறந்த மைந்தனே! தூய பெருவெள்ளம் ததும்பும் யமுனை நதியின் தலைவனே! ஆயர் குலத்தில் தோன்றிய அணிவிளக்கே! உன்னைப் பெற்ற வயிற்றுக்குப் பெருமை சேர்த்த தாமோதரா!

    தூய்மையான உடலும் உள்ளமும் உடைய நாங்கள் உன் திருவடிகளில் தூய நறு மலர்களைத் தூவி வழிபடுகிறோம். உன்னை வாயினால் பாடுகிறோம்; மனத்தினால் சிந்திக்கிறோம். அதனால் நாங்கள் முற்பிறவியில் செய்த பாவங்களும், இப்பிறவியில் அறியாமல் செய்யும் பாவங்களும் நெருப்பில் இட்ட தூசியாக அழியும். இது உன் திருப்பெயரைத் தொடர்ந்து சொல்வதால் மட்டுமே சாத்தியமாகும்.
  முனைவர் அ.கோவிந்தராஜூ










3 comments:

  1. சிறப்பான பதிவு... மேலும் இது போல் தொடர்ந்து பதிவிட வேண்டுகிறோம் ஜயா...

    ReplyDelete
  2. Arumaiyana muyarchi. Naan thinasari ungal uraiyai padi thi viduhiren...melum dindigul mvm nagar perumal kovillil anaivarum payanadaiyu maru naam vasithu varuhiren..ellorum mahilchi adaihirarhal..
    (Govidhanunku padayal seihirar santhi.. Athu Govindarajukku poi serhirathu. .Aha. .)

    ReplyDelete