Saturday, 18 April 2020

பார்த்தாலே இனிக்கும் பால் கொழுக்கட்டை



    நான் வீட்டை விட்டு வெளியில் அடி எடுத்து வைத்து ஒரு மாதம் ஆகிவிட்டது. வீட்டைத் தேடிவரும் பால், காய்கறி, வீட்டுத் தோட்டத்தில் கிடைக்கும் கீரைகள் ஆகியவற்றைக் கொண்டு அருமையாகச் சமாளிக்கிறோம். நானும் என் மனைவியும் சேர்ந்தே சமைக்கிறோம்; பாத்திரம் கழுவுகிறோம்; வீட்டைப் பெருக்குகிறோம்.

     ஒருநாள் பாத்திரங்களை எல்லாம் ஒன்று விடாமல் விளக்கி வைத்துவிட்டு, ஓய்வாக அமர்ந்து கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் நினைத்துப் பார்த்தேன். பாரதியின் பாட்டுத் திறத்தை அதாவது பாத்திறத்தை  நாளும் எனது மாணவர்களுக்கு விளக்கினேன் அப்போது; இப்போது நாளும் பாத்திரம் விளக்குகிறேன். எந்த வழியில் விளக்கினால் மாணவர்க்குப் புரியும் என யோசித்து விளக்கினேன் அன்று. ஆனால் இன்றைக்கு விளக்குமாற்றைக் கையில் கொண்டு வீட்டைப் பெருக்குகிறேன். இந்தச் சிந்தனையை ஒரு சிலேடை வெண்பாவாக எழுதினேன்.

பாத்திறம் கண்டு விளக்கினேன் நானன்று
பாத்திரம் கண்டு விளக்குகிறேன் இன்று
விளக்குமாறு கொண்டு விளக்கினேன் அன்று
விளக்குமாறு கைக்கொண்டேன் இன்று.

  மனைவியிடம் இவ் வெண்பாவை விளக்கிக் கூறினேன்; வியந்து போனாள். அவள் வியந்ததை விட அவள் செய்ததைக் கண்டு நான் வியந்தது அதிகம். பல ஆண்டுகளுக்கு முன்னால் வயர் கூடை முடையக் கற்றுக்கொண்டாள். கைப்பிடி பின்னுவது மட்டும் அவளுக்குப் பிடிபடாது. நாங்கள் இன்னொரு மகளாகப் பாவிக்கும் சசிகலா என்னும் பெண்மணி கைப்பிடியைப் பின்னிக் கொடுப்பதுண்டு.

   திடீரென்று ஒருநாள் பரணில் கிடந்த வயர் கட்டுகளை எடுத்துத் தரச்சொன்னாள்; தந்தேன். மூன்றே நாள்களில் ஒரு பெரிய கூடையை முடைந்து சாதனை படைத்தாள். கைப்பிடி போடுவதிலே சிக்கல் வந்தது. சசிகலா தொலைப்பேசி வழியே நடத்திய பாடம் பயன்படவில்லை. “நீங்கள்தான் பிஎச்.டி ஆயிற்றே; சொல்லிக் கொடுங்கள்” என்றாள். நிபந்தனையின்றி தோல்வியை ஒப்புக்கொண்டேன். என்றாலும் அவள் தன் முயற்சியை விடுவதாயில்லை. அது தொடர்பான யூ டியூப் காணொலிகளை மீண்டும் மீண்டும் போட்டுப்பார்த்துக் கற்றுக்கொண்டு மிக நேர்த்தியாக கைப்பிடியைப் போட்டு முடித்தாள். ஒரு செயலை எடுத்தால் எவ்வகையானும் முயன்று முடித்து விடுவது என்பது அவளது குருதிக் குணமாகும்.

   
  அவள் கூடை முடைந்த கதை ஒருபுறம் இருக்க, இன்று பால் கொழுக்கட்டை செய்து அசத்தியது கண்டு எண்ணி எண்ணி வியக்கின்றேன். மூலப் பொருள்களாக அரிசி மாவும் பாலும் அமைய, வெல்லம், ஏலக்காய் போன்றவை துணைப்பொருள்களாக அமைய மிகுந்த கவனத்துடன் செய்யப்படும் இனிப்பு வகையாகும் இது.

   உலகத் தொலைக் காட்சிகளில் முதல் முறையாக என்று சொல்வது போல, திருமணம் ஆகி முப்பத்தைந்து ஆண்டுகளில் முதல் முறையாக இந்த இனிப்பைச் செய்தாள்; பார்த்த மாத்திரத்தில் நாக்கில் எச்சில் பெருக்கெடுத்தது; மூக்கு சற்றே நீண்டு அதன் மணத்தை அனுபவித்தது. அதைச் சுவைத்தபோது, “யாமறிந்த இனிப்புகளில் நீ செய்த பால் கொழுக்கட்டைபோல் இனிதாவது எங்கும் காணோம்” எனச் சொல்லி அசடு வழிந்தேன்.

  நல்ல வேளை அதைப் பார்க்க அவளைத்தவிர வேறு யாரும் இல்லை!



                                                                                                   

9 comments:

  1. உங்கள் வெண்பா சிறப்பு.

    உங்கள் துணைவியாரின் விடாமுயற்சி பாராட்டுக்குரியது ஐயா.

    பால் கொழுக்கட்டை - ஆஹா... சாப்பிடத் தோன்றுகிறது. ஆனால் தில்லியிலிருந்து உங்கள் ஊருக்கு வர இப்போது வழியில்லை! :)

    ReplyDelete
  2. வெண்பா அருமை ஐயா...

    அடுத்த முறை சந்திக்கும் போது, பால் கொழுக்கட்டை கண்டிப்பாக வேண்டும் ஐயா...!

    ReplyDelete
  3. Nice to know that year learnt cleaning the vessel and floor.Both will help in day today life.Keep it up

    ReplyDelete
  4. கொழுக்கட்டை சுவைதான் உணர வழியில்லை. புகைப்படத்தையாவது காட்டி இருக்கலாம்.

    பாத்திற/ர பா'க்கள் அருமை ஐயா.

    இப்படியொரு வாழ்வையும் உணரும் வாய்ப்பு நமக்கு கிட்டியது பேறு என்போமே...

    ReplyDelete
  5. I wish sweets can be shared on WhatsApp 😋

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா.
    அதிகாரத்துடன் உணவை உட்கொண்டிருக்கின்ற ஆண்களுக்கிடையில் தாங்கள் வீட்டுப்பணியையும் ஆர்வமுடன் செய்ததை அறிந்து வியப்புற்றேன்.தாங்கள் மற்றவர்களுக்கெல்லாம் எப்பொழுதுமே வழிகாட்டிதான் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.இன்றைய வானொலி நிகழ்வும் அருமையான பதிவும் கூட. அத்தோடு தாங்களையும் சிலேடைக் கவிஞர் என்றே கூறலாம் வாழ்த்துக்கள் ஐயா.
    அத்துடன் அம்மாவின் உணவுப் பக்குவமும் என்றுமே சிறப்பு தான். செய்யும் தொழிலில் வெற்றி காண்பதை பற்றிக் கொண்டவர். அம்மா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    உங்களின் செயல்கள்
    எங்களின் சிந்தனைக்கு।
    நன்றி

    ReplyDelete
  7. வெண்பா அருமை ஐயா. முதல் வரியில் விளக்குமாறு ஒரு பொருள் என்றால் இரண்டாவது வரியில் அதே போன்று பாத்திறம் பாத்திரம்...அருமை.

    அட! அழகான வயர் கூடை. வண்ணங்கள் அழகாக இருக்கின்றன. விடாமுயற்சிக்கு வாழ்த்துகள். பால் கொழுக்கட்டை வீட்டில் செய்வதுண்டு. மிகவும் பிடித்த பபதார்த்தம்.

    கீதா

    ReplyDelete
  8. பால் கொழுக்கட்டை மிகவும் பிடித்தமானது
    ஒயர் கூடை அழகு

    ReplyDelete
  9. முருகையன்18 May 2020 at 17:43

    வெண்பா மிகவும் அருமை ஐயா.

    ReplyDelete