எழுபதுகளின் தொடக்கத்தில்தான்
சுற்றுச் சூழல் குறித்த சிந்தனை எழுந்தது. பன்னாட்டு மன்றத்தின் (United Nations Organisation) கவனமும்
சுற்றுச் சூழல் பற்றியதாக இருந்தது.
அதன் உறுப்பு நாடுகள் சுற்றுச் சூழல்
கேட்டின் தாக்கத்தை உணரத் தொடங்கியதன் விளைவாக பன்னாட்டு மன்றத்தின் ஓர் அங்கமாக
சுற்றுச் சூழல் பாதுகாப்பு முகமை(UN Environment Protection Agency) உதயமானது.
உலக
அளவில் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பிய பன்னாட்டு மன்றம்
ஜூன் ஐந்தாம் தேதியை உலக சுற்றுச் சூழல் தினமாக அறிவித்தது. முதன் முதலில் 1974
ஆம் ஆண்டு ஜூன் ஐந்தாம் தேதி அன்று உலக நாடுகள் கொண்டாடின.
ஒலிம்பிக்
போட்டிகளை ஒவ்வொரு நாடும் ஏற்று நடத்துவது போல, உலக சுற்றுச் சூழல் தின
கொண்டாட்டங்களையும் ஒவ்வோர் ஆண்டும் விரும்பும் நாடு ஏற்று நடத்தும் ஏற்பாடு
ஏற்பட்டது. அந்த வகையில் 1974 ஆம் ஆண்டு முதன் முதலில் அமெரிக்கா ஏற்று நடத்தியது.
நமது பங்களிப்பாக நம் நாடும் 2011 ஆம் ஆண்டு புது தில்லியில் மிகச் சிறப்பாகக்
கொண்டாடியது. இவ்வாண்டு அங்கோலாவில் விழா நடைபெறுகிறது.
இந்தச்
சுற்றுச் சூழல் தினம் ஒவ்வோர் ஆண்டும் ஒரு மையக் கருத்தை முன் வைத்துக்
கொண்டாடப்படுகிறது. நமக்கு இருப்பது ஒரே ஒரு பூமிதான்; அதனைக் காப்போம் என்னும்
மையக் கருத்துடன் 1974 இல் முதலாம் சுற்றுச் சூழல் தின விழா உலகெங்கும்
கொண்டாடப்பட்டது. சட்ட விரோதமான வன வள வணிகத்துக்கு
எதிராகக் குரல் கொடுப்போம் (Zero tolerance against illegal wild life trade) என்பதுதான் இவ்வாண்டின் சுற்றுச் சூழல்தின
மையக் கருத்தாகும்.
முன்பு
எப்பொழுதும் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்த தந்தங்களுக்காகவும் கொம்புகளுக்காகவும்
முறையே யானைகளும் ஒற்றைக் கொம்பன்களும் பெருமளவில் வேட்டையாடப் படுகின்றன. வலுவான
சட்டங்கள் இல்லாமைதான் இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகின்றன. அதேபோல்
ஈட்டி, சந்தனம், தேக்கு,செம்மரம் போன்ற
மரங்களும் பெரும் அளவில் வெட்டிக் கடத்தப்படுவதும் அன்றாட நிகழ்வாக ஆகிவிட்டது.
எனவே இவ்வாண்டின் சுற்றுச்சூழல் தின மையக் கருத்து மிகப் பொருத்தமாக
அமைந்துவிட்டது.
இந்த
முக்கியமான நாளையொட்டி நாம் என்ன செய்யலாம்? இந்த நாளை ஒரு வாய்ப்பாகக் கருதி, ஊருக்கு ஊர் இளைஞர்கள் குழுவாக சேர்ந்து
மரக்கன்றுகளை நடலாம். சுற்றுச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல்
துறை அனுமதியுடன் மினி மராத்தான் ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்யலாம்.
முச்சந்திகளிலும் நாற்சந்திகளிலும் வீதி நாடகங்களை நடத்திக் காட்டலாம்.
உள்ளூரில்
உள்ள பூங்காக்களுக்குச் சென்று பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றலாம். சுற்றுலாத்
தலங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளலாம். இப்பணியில் சுற்றுலாப் பயணிகளையும்
இயன்ற வரையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
நம்
தமிழகத்தில் இரசிகர் மன்றங்களுக்குப் பஞ்சமில்லை. அவர்கள் ஒன்றிணைந்து உள்ளூர்
மாணவர்களுக்காக சுற்றுச் சூழல் விழிப்புணர்வு வாசகம் எழுதுதல், கவிதை, கட்டுரை
எழுதுதல், ஓவியம் வரைதல் போன்ற போட்டிகளை நடத்திப் பரிசுகள் வழங்கலாம்.
அந்தந்தப் பகுதியில் இயங்கும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் இளைஞர்களுக்கான
வனநடைப் பயணத்திற்கு ஏற்பாடு செய்யலாம். விவசாயிகளை அழைத்து அவர்களை இயற்கை
வேளாண்மைக்கு ஆற்றுப்படுத்தும் வகையில் ஆர்வமூட்டலாம். நல்ல உடல்வலுவும் நீச்சல்
பயிற்சியும் உள்ள பொதுமக்கள் துணையுடன் ஆறு குளங்களை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்
தாமரையை அகற்றும் பணியில் ஈடுபடலாம்.
சுற்றுச்சூழல் சிந்தனையை முன்வைத்த முதல்
சுற்றுச் சூழல் விஞ்ஞானி யார் தெரியுமா? நம் பூட்டாதி பூட்டன் தொல்காப்பியர்தான்.
ஐந்து விதமாக நிலத்தை வகைப்படுத்தி, அவற்றுக்கு உரிய உரிப்பொருளையும் கருப்பொருளையும் சுட்டிக்
காட்டியவர் அவர்தான். அவருக்கு அடுத்து வந்த சங்கப்புலவர்கள் இயற்கையோடு இயைந்த
வாழ்வை நடத்தியதோடு தாம் இயற்றிய பாடல்களில் பதிவும் செய்தார்கள். மரங்களை
உறவுகளாகக் கொண்டாடியதை அவர்தம் பாடல்வழி அறிகிறோம். அடுத்த நிலையில்
சுற்றுச்சூழல் மீது தன் அறிவியல் பார்வையைத் திருப்பியவர் திருவள்ளுவர் என
அறிகிறோம். அருவிகளும் ஆறுகளும், காடுகளும் மலைகளும் ஒரு நாட்டின் உறுப்புகள், அவை
சமூக அரண்கள்(social securities) எனப் பதிவு செய்த முதல்
சுற்றுச் சூழல் விஞ்ஞானி அவரேதான்.
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்
என்னும் இரண்டு குறட்பாக்களே அதற்குச் சான்றாகும்.
இத்தகைய
சிந்தனைகள் முகிழ்த்த மண்ணில் பிறந்த நாம்
ஆற்று மணலை அளவு மீறி அப்புறப்படுத்துகிறோம். கண்ணை விற்று ஓவியம் வாங்கிய கதையாக,
மலைகளை வெட்டி கிரானைட் பலகைகளாக மாற்றி, ஏற்றுமதி செய்து அன்னிய செலாவணியை
ஈட்டுகிறோம்.
நம்
தேவைக்கு மட்டும் இயற்கை வழங்கும்;
பேராசைக்கு வழங்காது என்னும் காந்தியடிகளின் கருத்தைச் சிந்தித்துப் பார்த்தோமா?
இல்லையே. பொன் முட்டை இட்ட வாத்தை அறுத்துப் பார்த்த முட்டாளைப் போல்தான் நாம் பல
சமயங்களில் நடந்து கொள்கிறோம். நுனிமரத்தில் அமர்ந்து அடிமரத்தை வெட்டும் அறியாமை
எப்போது நம்மைவிட்டு அகலப்போகிறது?
சுற்றுச்
சூழல் குறித்த அணுகுமுறையில் ஒரு மாற்றம் (Attitudinal change) வந்தாக வேண்டும். கண்கெட்டபின் சூரிய வழிபாடு பயன்தராது. எனவே இந்த மாற்றம்
உடனடியாக வரவேண்டும். சுற்றுச் சூழலைப் பேணிப் பாதுகாக்கும் பண்புதான் தலையாய
மனிதப் பண்பாகும். இந்தப் பண்புடையவர்களால் மட்டுமே இப் பூவுலகு வாழும்; இல்லையேல்
மண்ணோடு மண்ணாக வீழும் என எச்சரிக்கிறார் திருவள்ளுவர்.
சிந்திப்போம்; செயல்படுவோம்.
குறிப்பு: இன்று காலை ஏழு
மணி அளவில் நானும் என் துணைவியாரும் எங்கள் இல்லத்துக்கு அருகில் தெரு ஓரத்தில்
ஒரு பூவரசன் கன்றை நட்டோம்.
நல்ல நாளில் நல்ல செயல். அனைவரும் கடைபிடிக்கவேண்டிய (கன்று நடும்) நிகழ்வினைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteநன்று.. உங்கள் தமிழ் தொண்டு தொடரட்டும்..
ReplyDelete