இந்தப் பிறவியில் ஓர் ஆசிரியனாய்ப்
பணியாற்றக் கிடைத்த அரிய வாய்ப்பு என்பது என் பெற்றோர் செய்த தவப்பயனால் என்பேன்.
என்னிடம் படித்து அணியணியாய் ஆயிரக்கணக்கில் வெளியேறிய மாணாக்கர் பலரும் உலகெங்கும்
பல்வேறு துறைகளில் வெற்றிவாகை சூடி வலம் வருகிறார்கள்.
அந்த மாணாக்கர் அணியில் ஒரு
மாணிக்கமாய்த் திகழ்கிறவர் மருத்துவர் க.குழந்தைசாமி. ஈரோடு மாவட்டத்துக்காரர். மொடக்குறிச்சி
அருகிலுள்ள அய்யகவுண்டன்பாளையம். பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத் துறையின்
இயக்குநராகப் பல்லாண்டுகள் பணியாற்றி கடந்த ஏப்ரல் முப்பதாம் நாள் பணிநிறைவு
பெற்றார்.
படம் உதவி: தி நியூ இண்டியன் எக்ஸ்ப்ரஸ் |
எளிய வேளாண் குடும்பத்தில் பிறந்து,
கடும் முயற்சியால் படித்து முன்னேறியவர். சுகாதாரத்துறைச் செயலரின் அடுத்த
நிலையில் இருக்கும் முக்கியமான பதவியில் இருந்தபோதும், காட்சிக்கு எளியவராக,
கடுஞ்சொல் அற்றவராக, ‘பெருக்கத்து வேண்டும் பணிவு’ என்று வள்ளுவர் கூறுவாரே அந்தப்
பணிவுடன் எளிமையுடன் தன் கடமைகளைச் செவ்வனே செய்தவர். .
இன்றைக்கு கொரோனா நோய்த்தொற்று
குறிப்பிடத் தகுந்த அளவுக்குக் கட்டுப்பாட்டில் உள்ளது என்றால் அதற்கு மருத்துவர்
குழந்தைசாமியின் பங்களிப்பு ஒரு முக்கியக் காரணம் ஆகும். ஆங்கிலத்தில் Road Map எனக் குறிப்பிடப்படும் திட்ட வரைபடத்தைப் போட்டுத்
தந்தவர் இவரே.
என்ன செய்வது ஏது செய்வது என்று
எல்லோரும் திகைத்து நின்றபோது, பதற்றப்படாமல் சிந்தித்துச் சிறப்பானத்
திட்டங்களைத் தீட்டிக்கொடுத்தார்.
எடுத்துக்காட்டாக ஒன்றை இங்கே குறிப்பிடலாம்.
அரசு மருத்துவர் செவிலியர் அனைவரையும்
அகரவரிசைப்படுத்தி அனைவருக்கும் கொரோனா சிகிச்சைப் பணியைப் பகிர்ந்தளிக்கவில்லை.
மாறாக சர்க்கரை நோய், இதயநோய் போன்றவற்றால் அவதியுறும் மருத்துவர் மற்றும்
செவிலியர், ஐம்பது வயதுக்கு மேற்பட்டோர், மகப்பேற்றை எதிர் நோக்கியுள்ள பெண்
மருத்துவர்கள் ஆகியோருக்கு விலக்களித்து இளம் மருத்துவர்களையும் செவிலியர்களையும்
மட்டும் தேர்ந்தெடுத்தார். இதன் காரணமாகக் கொரோனா தடுப்புப்பணி முழுவீச்சில்
தொடங்கியது. மருத்துவப் பணியாளர்களிடையே அதிகத் தொற்றும் இல்லை; தொற்றினால்
ஏற்படும் உயிர் பலியும் இல்லை.
இவர் மருத்துவம் படித்த காலத்தில்
நியாயமான காரணங்களுக்காகப் பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். அத்தகைய
போராட்டங்களில் அணுவளவு வன்முறை கூட இல்லாமல் பார்த்துக்கொள்வார். இந்தப்
போர்க்குணத்தை இவர் உயர்பதவியில் இருந்தபோது ஆக்க வேலைகளைச் செய்வதற்குப்
பயன்படுத்திக்கொண்டார். ஆம் அரசுக் கதவுகளை அடிக்கடித் தட்டி, உரிய முறையில்
எடுத்துச் சொல்லி, ஆயிரக்கணக்கில் மருத்துவர்களையும் செவிலியர்களையும் பணியமர்த்த
ஏற்பாடு செய்தார். ஆரம்ப சுகாதார நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை உலகத்
தரத்துக்கு உயர்த்தினார்.
தடுப்பூசி போடுதல், கர்ப்பிணிகளின் பராமரிப்பு,
இளம்பிள்ளைவாதத் தடுப்பு, டெங்கு ஒழிப்பு போன்ற திட்டங்களை போர்க்கால அடிப்படையில்
செய்தார். இதனால் குழந்தைசாமி டாக்டர் என்றால் குக்கிராமத்து மக்களுக்கும் தெரியத்
தொடங்கியது. ஆய்வுக்காக கிராமங்களுக்குச் செல்லும்போது இயக்குநர் என்ற பந்தா
இவரிடம் அறவே இருக்காது. கிராமத்து மக்கள் குடத்திலிருந்து ஊற்றும் கிணற்று
நீரை கைகளில் பிடித்து மகிழ்ச்சியாகக் குடிப்பார்.
photo courtesy: fb sent by Mr.P.K. |
அவசர காலத்தில் இரவுபகல் பாராமல்
பணியாற்றுவது இவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. நாட்டில் எங்கு பேரிடர்
ஏற்பட்டாலும் இவரது தலைமையில் அரசு ஒரு மருத்துவக்குழுவை அனுப்பிவிடும். 1999 அக்டோபரில் ஒடிசாவைத் தாக்கியது 'சூப்பர் சைக்ளோன்' என்ற கடும்புயல். அப்போது இவர் ஆற்றிய மகத்தானப் பணிகளை அம் மாநில அரசு நன்றியுடன்
பதிவு செய்துள்ளது. அதேபோல் கேரளப் பெருவெள்ளத்தின்போது இவர் அளித்த பங்களிப்பு மகத்தானது. பேரிடர்க் காலங்களில் பல மாநிலத்தவரும் இவரிடம் ஆலோசனை கேட்டுச் செயல்படுவார்கள்.
மருத்துவர் குழந்தைசாமி தான்
வகித்த உயர்பதவிக்குப் பெருமை சேர்த்தார். பதவியைப் பயன்படுத்திக் குறுக்குவழியில்
பொருள் ஈட்ட ஒருபோதும் சிந்தித்ததில்லை. கைசுத்தம் என்றால் அப்படியொரு கைசுத்தம்.
இரயில் பயணம் ஒன்றில் என் முன் இருக்கையில் அமர்ந்திருந்த அரசு மருத்துவரிடம்
பேச்சுக்கொடுத்தபோது ‘குழந்தைசாமி என் மாணவர்’ எனக் குறிப்பிட்டேன். “இடம் மாறுதல்
வேண்டி விண்ணப்பித்தால் போதும். காரணம் சரியாக இருப்பின் உடனே நிறைவேற்றுவார்.
அவர் எங்களுக்கு ஒரு ரோல் மாடல்” என்று அவர் சொன்னபோது, “இப்படி ஒரு மாணாக்கருக்கு
ஆசிரியனாய் அமைய என்ன தவம் செய்தேனோ” என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.
மருத்துவர் குழந்தைசாமி கோபி
வைரவிழா மேனிலைப் பள்ளியில் 1978-79, 79-80 ஆம் கல்வியாண்டுகளில் மேனிலைக்
கல்வியைக் கற்றார். மேனிலைக் கல்வித் திட்டத்தில் முதல் தொகுதியைச் சேர்ந்த மாணாக்கர்
அவர். மேனிலைப் பொதுத்தேர்வில் 1200க்கு 981 மதிப்பெண் பெற்று பள்ளியின் முதல்
மாணாக்கராக வந்தார். நான் அவருக்குத் தமிழ்ப்பாடம் சொல்லிக்கொடுத்தேன். பாடப் பொருளை
ஒருமுறை கேட்டாலே போதும் அதை முழுமையாகப் புரிந்துகொண்டு தன்
வயப்படுத்திக்கொள்ளும் ஆற்றல் அவரிடம் இருந்தது. எந்தப் பாடத்திற்கும் அவர் தனிப்பயிற்சி
வைத்துக்கொண்டதில்லை.
பள்ளி சாதனையாளர் பட்டியலில் முதலாவதாக. |
நானும் என் மாணாக்கர் குழந்தைசாமியும் |
தன்னிடம் இருந்த திறமைகளைத் தானே
இனங்கண்டு முயற்சியாலும் பயிற்சியாலும் மெருகேற்றிக்கொண்டார். மருத்துவம் பயில்வது
தன் கனவாக இருந்தது. என்றாலும் மருத்துவப் படிப்பில் காத்திருப்போர் பட்டியலில்
மட்டுமே அவருடைய பெயர் இடம்பெற்றது. ஆனால் தொடர்ந்து காத்திருக்காமல் பி.எஸ்ஸி
வேளாண் படிப்பில் சேர்ந்தார். அடுத்த ஆண்டிலும் மருத்துவப் படிப்புக்கு முயற்சி
செய்தார். முயற்சி திருவினையாக அவர் கனவு நனவானது.
ஒருமுறை அவரை இயக்குநர்
அலுவலகத்தில் சந்தித்தேன். குழந்தைசாமி பொன்மொழி என்று சொல்லத்தக்க வகையில் அவர்
கூறியது இன்றும் என் நினைவில் நிற்கின்றது. அவர் அன்று சொன்னது:
“மற்றவர் நமக்குச் செய்த
தீமைகளையும், நாம் மற்றவர்க்குச் செய்த நன்மைகளையும் மறந்துவிட வேண்டும்.”
தன்னுடன்
மருத்துவக்கல்லூரியில் பயின்ற தாமரைச்செல்வி என்னும் நற்குண நங்கையைக்
காதலித்துக் கரம்பிடித்தார். அவரும் கூடுதல் இயக்குநராகத் திறம்படப் பணியாற்றி
அண்மையில் பணிநிறைவு பெற்றார். ஒரே மகள் மருத்துவர் ஆதித்யாவின் திருமணத்தை
அண்மையில் அருமையாக நடத்தினார். அவருடைய திருமணத்திலும் அவரது மகளின்
திருமணத்திலும் முன்னிலை வகிக்கும் பேறு பெற்றேன்.
என்னுடைய மாணாக்கர் குழந்தைசாமி
பணிநிறைவு பெற்றார் என்று தெரியவரும்போதுதான் சற்றே எனக்கு வயதாகி விட்டதாக
உணர்கிறேன். அவர் பணி ஓய்வு பெறவில்லை. ஐம்பத்தெட்டு வயதில் ஒரு பணியை நிறைவு செய்துள்ளார். அவ்வளவுதான்.
தொடர்ந்து அவர் பல்வேறு பணிகளைச் சமுதாயம் பயனுறும் வகையில் செய்ய வேண்டும் என வாழ்த்துகிறேன்.
தொடர்ந்து அவர் பல்வேறு பணிகளைச் சமுதாயம் பயனுறும் வகையில் செய்ய வேண்டும் என வாழ்த்துகிறேன்.
போற்றுதலுக்கு உரிய மாணாக்கர்
ReplyDeleteபோற்றுவோம்
வாழ்த்துவோம்
இதில் யார் மிகவும் கொடுத்து வைத்தவர் என்று யோசித்து கொண்டிருக்கிறேன் ஐயா...
ReplyDeleteபாராட்டுகள்... வாழ்த்துகள்...
“மற்றவர் நமக்குச் செய்த தீமைகளையும், நாம் மற்றவர்க்குச் செய்த நன்மைகளையும் மறந்துவிட வேண்டும்.”
ReplyDelete“மாணாக்கர் வளர்ச்சியில் மட்டற்ற மகிழ்ச்சி அடைபவர்கள் ஆசிரியர் மட்டுமே”
ஆனால் ஏதோ ஒரு வகையில் தாய் தந்தை மற்றும் உறவினர்கள் பொறாமை போற்றுவார்கள்
நல்ல பதிவு என் குழந்தைகளுடன் பகிர்ந்துகொண்டேன்
சான்றோனாகி பெருமை சேர்த்த மாணவனைக் கண்டு; ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தாயாக ஆசிரியர்.
ReplyDeleteமக்களின் நல்வாழவே தம் இலட்சியமாகக் கொண்டு அப்பழுக்கற்ற பணியால் உயர்ந்து நிற்கும் மாணவர்;
மாணவர் மதிப்பிற்குரிய அலுவலரானதில், அவருக்கு போதித்த கல்வியை நினைத்து நினைத்து இன்புறும் ஆசிரியர்;
இப்படியாக இருபெரும் பெருமையுடைவர்களின் அருமையுடைய செயல்களால் சமுதாயம் பயனுறுகிறது.
கொள்ளை நோய்களால் குடிகளுக்கு தொல்லை நேராவண்ணம் மருத்துவத்துறையில் உயர்பணியாற்றியவர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய
மருத்துவர் குழந்தைசாமி ஐயா அவர்கள் என்பதை வசிஷ்டரின் திருவாயே வாழ்த்தி மகிழ்கிறது.
வணக்கங்களும்... வாழ்த்துகளும்...
ஐயா,அற்புதமான மனிதர். பல முறை அவரோடு பேசி இருக்கிறேன்.இனியவர்.அந்தப் பதவிக்கு பெருமை சேர்த்தார். வாழ்க பல்லாண்டு!
ReplyDeleteவணங்குகிறேன்.. வாழ்க பல்லாண்டு..
ReplyDeleteவணங்குகிறோம்.
ReplyDelete🙏♥️
ReplyDeleteபெருமைப்படத்தக்க மாணவரைப் பற்றிய அரிய பதிவு. மகிழ்ச்சி ஐயா.
ReplyDeleteIruvarume Peru petrol.
ReplyDeleteDiamond jubilee school is pride of creating many such good persons.
ReplyDeleteஐயா, நீங்கள் மகுடம் அதில் பதிக்கப்பட்ட ஒரு வைரக்கல் அண்ணன் குழந்தைசாமி என்றால் அது மிகையாகாது.
ReplyDeleteநானும் ஓர் ஆசிரியர் என்பதால் உங்கள் மாணவரைப் பற்றிய ம்கிழ்ச்சியையும், பெருமையையும் சொல்லும் பதிவைப் புரிந்து கொள்ள முடிகிறது. பெருமைப்படத்தக்க பாராட்டிற்குரிய மாணவரைப் பற்றிய பதிவு சிறப்பு ஐயா.
ReplyDeleteதுளசிதரன்
போற்றுதலுக்குரிய தங்கள் மாணவரைப் பற்றிய பதிவு அருமை. ஆசிரியராகிய நீங்கள் எத்தனை மகிழ்ந்திருப்பீர்கள் என்று அறிய முடிகிறது.
கீதா
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று செய்து நிரூபித்துள்ளார்.
ReplyDeleteNone can substitute the role of a Teacher in 'Man making'. You are a bit taller than the members of this wonderful species.I often observe that your eyes turn brighter, when you speak about your students ! They deserve to get you as their teacher & it is a boon to them !
ReplyDelete"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்" தாயாக உங்களைப் பார்க்கின்றேன் அண்ணா. இது தான் ஓர் ஆசிரியனு(ரு)க்கு வாய்க்கப் பெற்ற பெரும் பேறு. மருத்துவர் குழந்தைசாமி அவர்களின் "பதவி வரும் போது பணிவு வர வேண்டும்...! துணிவு வர வேண்டும்...!" என்கிற மாண்பும், "இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து...." அதன்படி தனக்கு கீழிருக்கும் மருத்துவப் பெரும்படையை சீரும் சிறப்புமாய் வழிநடத்திய தலைமைப் பண்பும் நிச்சயம் பாராட்டுக்குரியது.
ReplyDeleteபதிவாசிரியர் இனியன் அண்ணா குறிப்பிட்டிருந்ததைப் போல மருத்துவர் குழந்தைசாமி அவர்கள் தன்முனைப்பு கொண்டவர் என்பது உண்மையாயினும், ஆசிரிய ஆளுமைகளின் பயிற்சி கூடுதலான தலைமைத்துவ நற்பண்புகளைக் தகவமைத்துக் கொள்ள பெரும் உதவியாய் இருந்திருக்கும் என்பதும் "உள்ளங்கை நெல்லியங்கனியே!"
மருத்துவப் பெருந்தகையும், அவரை உருவாக்கிய ஆசிரியப் பெருந்தகையும் பெரும் போற்றுதலுக்குரியவர்கள்!
நம் பணிக் காலத்தில் நல்ல பயனுள்ள சேவைகளை செய்தால் மட்டுமே தங்களைப் போல் இது போன்ற பெரும் மகிழ்ச்சிகளைக் கொண்டாட முடியும் போற்றுதலுக்குரிய ஆசிரியர் ஐயா அவர்களுக்கும் தன்னம்பிக்கைக்கும் சீரிய மருத்துவச்சேவைக்கும் உதாரணமாக விளங்கிய மருத்துவர் ஐயா அவர்களுக்கும் என் பணிவான வணக்கங்களும் வாழ்த்துக்களும்...🙏👏🙏
ReplyDeleteபுகைப்படங்கள் மிகவும் அருமை👌🤩
He was like a star in the sky for us
ReplyDeleteHe was like a star in the sky for us
ReplyDelete