மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நான் கனடா நாட்டுக்கு வந்தபோது ஒட்டாவா நகரில் வசிக்கும் என் நண்பர் முருகானந்தமும் நானும் ஒரு சதுப்பு நிலக்காட்டுக்குச் சென்று வந்த அனுபவத்தை வலைப்பூ வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
இப்பொழுது 2020இல் கனடா வந்து என்
இளைய மகளுடன் தங்கியிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் வேறொரு சதுப்புநிலக்
காட்டுக்குச் சென்று வந்த அனுபவத்தைப் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
“மாமா, இன்னும் ஓரிரு வாரங்களில்
கடுங்குளிருடன் கூடிய மழைக்காலம் தொடங்கிவிடும். எனவே வரும் ஞாயிறன்று உங்களை ஒரு
காட்டுக்கு அழைத்துச் செல்கிறேன்” என்றார் என் மாப்பிள்ளை.
இனி கி.மு. மற்றும் கி.பி என்ற
காலவரையறை மறந்து போகும். கொ.மு மற்றும் கொ.பி என்றுதான் குறிக்கப்படும். அந்த
வகையில் இந்த கொ.பி.2020இல் அதாவது கொரோனாவுக்குப் பின் இப்படி அதிக ஆள் நடமாட்டம்
இல்லாத வனங்களுக்குச் செல்வது பாதுகாப்பானது என நான் எண்ணியதால் அவருடைய அந்தத்
திட்டப் பயணத்திற்கு ஒத்துக் கொண்டேன்.
சகல முன்னேற்பாடுகளுடன்
குறிப்பிட்ட நாளில் நானும் என் மாப்பிள்ளையும் புறப்பட்டோம். முக்கால் மணிநேர
மகிழுந்துப் பயணத்திற்குப்பின் Jack pine Trail என்ற இடத்திற்குச் சென்று சேர்ந்தோம். வானம்
கருக்கிக்கொண்டு மழைமூட்டமாக இருந்தது. அதற்காக நாங்கள் முறுக்கிக்கொண்டு திரும்பி
வந்துவிடவில்லை.
அது என்ன வகையான இடம், அதன் சிறப்புகள் என்னென்ன என்பவை போன்ற விவரங்களைத் தெளிவாக ஆங்கிலத்திலத்திலும் உள்ளூர் மொழியான ஃபிரெஞ்சிலும் பெரிய எழுத்துகளில் அச்சிட்டு மழையில் நனையாதபடி வைத்துள்ளார்கள். அவற்றை ஒரு நோட்டம் விட்டதும் காட்டுக்குள் ஓட்டம் பிடிக்காமல் மெல்ல நிதானமாக நடந்தோம். அப்படித்தான் நடக்கமுடியும். இல்லையேல் வழுக்கிவிழ வேண்டியிருக்கும். நாங்கள் சென்றது சதுப்புநிலக் காடு. பொதுவாக நிலம் ஆண்டு முழுதும் ஈரமாகவே இருக்கும். போதாக்குறைக்கு அண்மையில் பெய்த மழை காரணமாக வழியெங்கும் சேறும் சகதியும் காணப்பட்டன.
ஆங்காங்கே நீர் தேங்கிய குட்டைகள்
காணப்படும். அவற்றில் நெருக்கமாக ஆளுயரத்திற்கு வளர்ந்து நிற்கும் ஜம்பு எனப்படும்
கோரைப்புல் பார்க்க வியப்பாக இருக்கும். இக் குட்டைகளை beaver, musk rat, painted turtle, pickerel, bull frog போன்ற விலங்குகளும், black duck, wood
duck, great blue heron போன்ற பறவைகளும்
தம் வாழிடமாகக் கொண்டுள்ளன.
உலகில் உள்ள சதுப்பு நிலக்காடுகளில்
25% அளவுக்குக் கனடா நாட்டில் உள்ளதாக ஓர் ஆய்வறிக்கை சொல்கிறது. நிலம், நீர்,
காற்று இவற்றைச் சமநிலையில் தரம் குறையாமல் வைத்திருக்க, இத்தகைய காடுகள் பெரிதும்
உதவும் என்பதால் இவற்றைப் பாதுகாக்கப்பட்ட இடமாகக் கனடா நாட்டரசு அறிவித்து வெகு
காலம் ஆயிற்று.
நம் நாட்டிலும் பாதுகாக்கப்பட்ட
காடுகள் உள்ளன. ஆனால் அந்த வனப்பகுதிக்குள்
பொதுமக்கள் நினைத்த நேரத்தில் செல்ல முடியாது. வன அலுவலரின் சிறப்பு அனுமதி
பெற்றுச் செல்ல வேண்டும். இங்கே பொதுமக்கள் தராளமாகச் செல்லலாம். முன் அனுமதி
எதுவும் தேவையில்லை. ஆனால் அங்கே செல்வோர் ஓர் ஒழுங்கு முறையைக்
கடைப்பிடிக்கிறார்கள். குழுவாக அமர்ந்து குடித்துக் கும்மாளம் போடுவதில்லை;
புகைப்பது அறவே இல்லை; திறந்தவெளிக் கழிப்பிடமாய்ப் பயன்படுத்துவதில்லை.
கொண்டுவரும் நொறுக்குத் தீனியைத் தின்றுவிட்டு பிளாஸ்டிக் குப்பைகளை வீசி
எறிவதில்லை. இவை எல்லாவற்றையும் விட இங்கு வருவோரின் ஒரு பண்பாடு என்னை மிகவும்
கவர்ந்தது. குழுவாகச் சென்றாலும் யாரும் உரக்கப் பேசுவதில்லை. இதன் காரணமாக பறவைகளின்
கீச்சொலி, வண்டுகளின் முரலொலி யாவும் செவிகளில் வந்து நிறைகின்றன.
நாங்கள் சென்ற நேரம் மேகம்
திரண்டு நின்றதால் காட்டினுள் அவ்வளவாக வெளிச்சம் இல்லை. சில பறவைகள் கண்ணில்
பட்டாலும் தெளிவாகப் படம் எடுக்கமுடியவில்லை. மாப்பிள்ளை வைத்திருந்தது அதிநவீன
கேமராவாக இருந்ததால் சில படங்கள் தேறின.
இந்தக் காட்டில் முற்றிலும்
கோனிஃபர் மரவகை அதிகமாகக் காணப்படுகின்றன. ஜேக் பைன் எனப்படும் மரங்கள் அதிகம்
காணப்படுவதால் அம்மரத்தின் பெயரால் இக் காடு அழைக்கப்படுகிறது. இவைதவிர vascular plants என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும்
சாற்றுக்குழல் தாவரங்கள் மண்டிக்கிடக்கின்றன. இந்தக் காட்டின் சிறப்பே இத்
தாவரங்கள்தானாம்.
இங்கே ஓரிடத்தில் பறவைகள் பயமின்றி பறந்து வந்து மனிதர்களின் உள்ளங்கையில் அமர்ந்து அவர்கள் தரும் கொட்டைகளைக் கொரிக்கின்றன. குழந்தைகள் ஆரவாரத்துடன் இதைக் கண்டு களிக்கின்றன. பார்க்க மிக வியப்பாய் உள்ளது. இது வன விதிகளுக்குப் பொருந்தாச் செயல் எனக் கருதியதால் பறவைக்கான உணவுப்பொருள் எதையும் நாங்கள் எடுத்துச் செல்லவில்லை.
நீண்ட நேரம் நடந்தோம்.
குட்டைகளின் ஊடே செல்லும் மரப்பலகைகளால் அமைக்கப்பட்ட பாதையில் நடந்தது மறக்க
முடியாத அனுபவம். சுருங்கச் சொன்னால், வீட்டில் இரண்டுமாத காலம் முடங்கிக் கிடந்த
எனக்கு அடுத்த ஆறு மாதங்களுக்குத் தேவையான புத்துணர்வைப் பெற்றுக்கொள்ளும் வகையில்
இந்த வனநடைப் பயணம் அமைந்தது.
முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.
Nandri..
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteகொ.பி.காலத்தின் உங்களுடைய பயணம் ஆறு மாதங்களுக்குப் புத்துணர்வைத் தந்ததறிந்து மகிழ்ச்சி. இயற்கையோடு இணைந்து உங்களுடன் பயணித்தோம்.
ReplyDeleteசதுப்புநிலக் காடுகளின் விவரிப்பு உங்களுடன் பயணித்தது போன்ற உணர்வைத் தந்தது.
ReplyDeleteபுகைப்படங்கள் அனைத்தும் மிகத்தெளிவு, அழகு.
எங்களையும் தங்களுடன் பைன் மரக் காட்டிற்கு கட்டுரை மூலம் அழைத்துச் சென்று விட்டடீர்கள். மிக்க நன்றி ஐயா. இது போன்ற அயல் நாட்டுப் பயணக் கட்டுரைகள் தொடர்ந்து வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் ஐயா... 👍🙎🌍🚂🚃
ReplyDeletePictures are so beautiful sir.
ReplyDeleteபடங்களும் பதிவும் பரவசமூட்டுகின்றன... அருமை ஐயா...
ReplyDeleteபடிக்கும்போதே பரவசமூட்டுகிறது.படங்கள் அருமை. உங்களுக்கு இப்படி ஓர் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த உங்கள் மருமகனுக்கு பாராட்டுக்கள்.
ReplyDeletevery nice sir
ReplyDeleteவன நடை பயணத்தில் தங்களுடன் பயணித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா.
ReplyDeleteபயணக்கட்டுரை என்பதைக் காட்டிலும் பயனுள்ள கட்டுரை என்பதே எனது பணிவான மதிப்புரை. பயணத்துடனே பண்பாட்டையும் நாகரிகத்தையும் பங்கோடு சொல்லித்தரும் பாங்கான கட்டுரைகளே தங்களது அனைத்து கட்டுரைகளும்...
நன்றிவுடன் உங்களின் நான்🙏
வன நடைப்பயணத்தில் தங்களோடு பயணித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா. பயணக்கட்டுரை என்பதைக் காட்டிலும் பயனுள்ள கட்டுரை என்பதே எனது பணிவான மதிப்புரை.பயணத்தினூடே பண்பாட்டையும் நாகரிகத்தையும் பாங்கோடு கற்றுத் தருவன தங்களின் கட்டுரைகள் அனைத்தும். மிக்க நன்றி ஐயா
ReplyDeleteNaangale neril senru paarthathu pola irukkirathu.. Nalla description..
ReplyDeleteபரவசமூட்டும் பதிவு. வெகு அருமை.
ReplyDeleteபரவசமூட்டும் பதிவு. வெகு அருமை.
ReplyDeleteபரவசமூட்டும் பதிவு. வெகு அருமை.
ReplyDeleteஅருமையான அனுபவக் கட்டுரை. அனுபவியுங்கள் அந்த நாட்டின் அழகை.
ReplyDeleteபடங்களும் பகிர்வும் அருமை ஐயா
ReplyDeleteதாங்களால் நாங்களும் வன நடை பயின்ற ஓர் உணர்வு
அங்கே..பறவைகள் பயமின்றி மனிதர்களின் கைகளில் அமருகின்றன..... இங்கோ...மனிதர்களை கண்டாலே பறவைகள் தெறித்து பறக்கின்றன........
ReplyDeleteபடங்களும் பயணக் குறிப்புகளும் அருமை.
ReplyDeleteபடங்கள் பார்த்து ரசித்தேன் ஐயா.
காட்டினை எப்படி அழகாக வைத்திருக்கிறார்கள். பறவைகள் உங்கள் கையில் அமர்ந்திருப்பது அழகாக இருக்கிறது.
பணி காரணமாக வர இயலவில்லை ஐயா. அவ்வப்போது வந்து வாசிக்கிறேன் ஐயா.
கீதா