Thursday, 5 January 2017

படிப்பும் பகுதிநேர வேலையும்

             நான் மகள் இருவரைப் பெற்ற மகராசன். பெரியவள் திருமணமாகி அமெரிக்காவில் தன் ஆய்வுப் படிப்பைத் தொடர்கிறாள். சின்னப் பெண் கனடா நாடு ஒட்டாவா நகரில் உள்ள உலகப் புகழ் பெற்ற கார்ல்டன் பல்கலைக்கழகத்தில்  எம்.பி. படிக்கிறாள்.
     வால்மார்ட்  என்பது உலக அளவில் பல நாடுகளில் பரவிக் கிடக்கும் பல்பொருள் பேரங்காடி நிறுவனமாகும். அதில் பகுதிநேர  பணி வாய்ப்பு கிடைத்திருப்பதாகச் சொல்லி, அப் பணியில் சேருவது தொடர்பாக சின்னவள் என்னிடம் தொலைபேசியில் பேசினாள். காலையில் மட்டும் வகுப்புகள் என்பதால் மாலை நேரத்தில் பகுதிநேரப் பணியில் சேர எண்ணியிருக்கிறாள். தொடர்ந்து எட்டுமணி நேரம் நின்றபடி பில் போட வேண்டிய பணி என்று சொன்னாள். சற்று யோசிக்கலாமே என்று பட்டும் படாமல் பேசிமுடித்தேன்.

     அப்போது ஒரு வேலையாக சென்னை சென்று சகலை இல்லத்தில் தங்கியிருந்தேன். மகள் இப்படிச் சொல்கிறாளேஎன்று மனைவியிடம் தொலைபேசியில் பேசினேன். “அதனால் என்ன வேலையில் சேரட்டும்என்று கூறினாள். “எட்டு மணி நேரம் எப்படி நிற்பாள்?” என்று கேட்டேன். “எல்லாம் நிற்பாள்என்று சொல்லி போனை வைத்துவிட்டாள்.

    ஆனாலும் என் மனம் ஒப்பவில்லை. அவள் சிறு குழந்தையாக இருந்தபோது எப்போதும் தூக்கச் சொல்லியே அடம்பிடிப்பாள். அவளை இடுப்பில் வைத்துக் கொண்டே மணிக்கணக்கில் அடுப்பில் வேலை செய்வாள் என் மனைவி. மாலையில் பள்ளிவிட்டு நான் வந்தால்தூக்குங்க நைநாஎன்று இரு கைகளையும் உயர்த்தியபடி ஓடிவருவாள்.  நானும் தூக்கிக்கொண்டு நடைபோடுவேன். மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம்என்பார் வள்ளுவர். அதை அதிகமாகக் கொடுத்தவள் அவள். எட்டு நிமிடம் கூட ஒரு இடத்தில் நிற்காத அவளா எட்டு மணி நேரம் நின்றவாறு  வேலை செய்யப்போகிறாள் என்று எண்ணியவாறே காலை நடைப் பயிற்சிக்காக வீட்டைவிட்டு வெளியில் வந்தேன்.
     
அன்று ஞாயிற்றுக்கிழமை. செய்தித்தாள் போடும் பையன் செய்தித்தாளைப் போட்டுவிட்டுத் திரும்பினான். “தம்பி! ஒரு நிமிடம் நில்லேன்என்றேன். அவன் பெயர் லோக்கேஷ். ஓட்டேரிப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தமிழ் வழியில் பன்னிரண்டாம் வகுப்புப் படிப்பதாகச் சொன்னான். அப்பா ஒரு பெயின்ட்டர். அம்மாவுக்கு ஓர் உணவகத்தில் பார்சல் கட்டும் வேலையாம். வருமானம் போதவில்லை என்பதால் தானும் மனம் விரும்பி செய்தித்தாள் போடும் வேலையைச் செய்வதாகக் கூறினான். அவனை ஒத்தவர்கள் காலை நேரத்தில் கிரிக்கெட் மட்டையோடு திரியும்போது அவன் பொறுப்பாக ஒரு பகுதி நேர வேலைசெய்து குடும்பத்திற்கு உதவிசெய்வதை எண்ணி அவனைப் பாராட்டினேன்; என் ஆறாம் விரலாகத் திகழும் கேமிராவில் ஒரு படமும் எடுத்தேன்.

        வழக்கமாகச் செல்லும் மூலிகைப் பூங்காவிற்குக் கால்கள் தம் போக்கில் நடந்தன. என் மனமோ 50 ஆண்டுகளுக்குப் பின்னோக்கி நடந்தது.

    அப்போது ஆறாவதோ ஏழாவதோ படித்ததாக நினைவு. கணக்கு ஆசிரியர் ஜியோமெட்ரி பாக்ஸ் வாங்கிவரச் சொன்னார். அம்மாவிடம் சொல்லி ஒருவாரம் ஆயிற்று. ஆசிரியரிடம் அடி வாங்கியதுதான் மிச்சம். வளமையும் இல்லை வறுமையும் இல்லை என்ற குடும்பச் சூழல். அப்போது ஊரில் தார்ச்சாலை போடும் பணிகள் நடந்து கொண்டிருந்தன. புளிய மரத்து நிழலில் நின்ற ஒப்பந்ததாரரிடம் சென்றேன்.

எனக்கு ஏதாவது வேலை கொடுக்க முடியுமா?”

பார்த்தால் படிக்கிற பையனாய்த் தெரிகிறாய்!”

ஆமாங்க, ஏழாம் வகுப்பில் படிக்கிறேன். ஒரு ஜியோமெட்ரி பாக்ஸ் வாங்க வேண்டும். வீட்டில் பணம் இல்லை. வேலை செய்து வாங்க நினைக்கிறேன்

கண்ணு நீ ஒண்ணும் வேலை செய்ய வேண்டாம். இந்தா இரண்டு ரூபாய்.; போய் ஜியோமெட்ரி பாக்ஸ் வாங்கிக்க; எங்கள மாதிரி வெயில்ல அலையாம நல்லா படிச்சு நெழல்ல உக்காந்து வேல செய்

   ஒன்றும் பேசாமல் பணத்தை வாங்கிக் கொண்டேன். அதுபற்றி அம்மாவிடம் பேச துணிச்சல் இல்லாமல் மூன்று நாள்கள் கழிந்தன. நான்காம் நாள் மாலை அதுபற்றி மென்று விழுங்கி அம்மாவிடம் சொன்னேன். அவருடைய கண்களில் கண்ணீர்த்துளிகள் அரும்பின. அப் பணத்தை அவரிடம் கொடுத்துவிட்டு வருமாறு விரட்டினார். நானும் ஓடினேன். ஆனால் அங்கே யாரும் இல்லை; பணி முடிந்து முதல் நாளே சென்றுவிட்டதாக சிலர் கூறினார்கள். அவருடைய நினைவாக ஒரு ஜியோமெட்ரி பெட்டியும் ஒரு சுச்சி பேனாவும் வாங்கிக் கொண்டேன்.        அந்த முகம் தெரியாத மனிதரின் வாக்கு பலித்தது. பின்னாளில் பள்ளி முதல்வராகி குளிரூட்டப்பெற்ற அறையில் அமர்ந்து வேலை செய்யும் வாய்ப்பினைப் பெற்றேன்!

     கைப்பேசி அழைப்பு மணி ஓசையில் சுய நினைவுக்கு வந்தேன். மீண்டும் சின்னப்பெண் இணைப்பில் வந்தாள். தெளிவான மன நிலையில் சொன்னேன்.

   “வால்மார்ட் வேலையில் சேர்ந்துகொள். ஆனால் படிப்புக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக்கொள்




   

15 comments:

  1. // பின்னாளில் பள்ளி முதல்வராகி //

    உங்களின் சந்தோசம் எனக்கும் பற்றிக் கொண்டு விட்டது ஐயா...

    நன்றி..

    ReplyDelete
  2. உங்கள் கருத்துரைக்காக :

    http://dindiguldhanabalan.blogspot.com/2017/01/Find-Thirukkural-Chapter.html

    ReplyDelete
  3. உண்மைதான் ஐயா
    கடின உழைப்பை உழைக்க நாம்தான் நம் பிள்ளைகளுக்குப் போதிக்க வேண்டும்
    தங்களின் உழைப்பும் உயர்வும் வியக்க வைக்கின்றது ஐயா
    போற்றுகின்றேன்

    ReplyDelete
  4. ஐயா, செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம் என்று கற்றுத்தந்தவர் தாங்கள். அதனாலேயே நான் தொழில் பக்தி காரணமாக இரவில் 12.30 வரை தினமும் மாணவர்களுக்காக உழைக்கிறேன். ஆனால் இன்றைய மாணவர்கள் பொழுதுபோக்கு எண்ணத்தை வைத்திருப்பதால் அவர்களை நல்வழிப்படுத்த முடியாமல் தினரும் நிலையில் உள்ளேன். மாணவர்கள் வளாக நேர்காணலின் போதுகூட ஒரு எதிர்கால உணர்வில்லாநிலையில் இருப்பதால், குறை எனும் இடி எங்கள் தலையில் விழுகிறது.இந்த இளைய தலைமுறை மாற்ற என்ன செய்யவேண்டும் என அறிய என்னைப்போன்ற ஆசிரியர்களுக்கே மனநல ஆலோசனை தேவைப்படுகிறது.

    ReplyDelete
  5. எனது மக்களில் இருவர் அமெரிக்காவில் உள்ளனர். இங்கே பகுதிநேரப் பணி என்பது எளிதில் கிடைக்கும். காரணம், நிரந்தரமாகத் தொழிலாளர்களை வைத்துக்கொள்ளும் அளவுக்கு வியாபாரம் சிறப்பாக இல்லை என்பதும், பகுதிநேரப் பணியாளர்கள் மிகக் குறைந்த சம்பளத்தில் கிடைக்கிறார்கள் என்பதுமே. குறிப்பாக உணவுக்கடைகளில் சற்றே அதிகச் சம்பளம் கிடைக்கும். இந்திய மாணவர்களை அங்கு காணலாம். உடல் உழைப்பைப் பொறுத்தவரை இங்கு எந்தவிதமான அலட்டலும் கிடையாது. பெரும்பாலும் தன்னைப் போன்ற மாணவர்களுடன் சேர்ந்தே இவர்கள் ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவதால் உற்சாகமாகவே பணியாற்றுகிறார்கள். ஒரே விஷயம் என்னவென்றால், இப்படி பணியாற்றுவது பெரும்பாலும் சட்ட விரோதமாகவே இருக்கும். ஆனால் முதலாளிகளோ, அரசோ அதைக் கண்டுகொள்வதில்லை. ஏனெனில், இவ்வளவு குறைந்த சம்பளத்தில் நல்ல ஊழியர்கள் வேறு வகையில் கிடைப்பதில்லையே! எனவே உங்கள் வீட்டுக் குழந்தைகள் இப்படிப் பணியாற்றுவது பற்றி கவலை கொள்ளவேண்டிய அவசியமே இல்லை! - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து. (http://chellappatamildiary.blogspot.com)

    ReplyDelete
    Replies
    1. முற்றிலும் உண்மை. ஆனால் கனடாவில் இது சட்டப்படி அனுமதிக்கப்பட்ட ஒன்று. பகுதி நேர வேலையில் வருமான வரி பிடித்தம் கூட உண்டு.

      இந்தியாவிலும் பெற்றோர்கள் இதை ஊக்குவிக்க வேண்டும். தங்கள் கருத்துக்கு நன்றி. உங்கள் வலை பதிவு தளம் அருமை.

      இப்படிக்கு,
      புவனா

      Delete
  6. உழைத்துச் சம்பாரித்துப் படிப்பதால் பணத்தின் அருமை புரியும்

    ReplyDelete
  7. I pray to the Almighty to bless your daughter, sir. Prof.Pandiaraj

    ReplyDelete
  8. Earn while you learn. That is how the students abroad manage educationall expenses. Though tough , Bhuvana will manage. Best wishes .

    ReplyDelete
  9. படிக்கும் காலத்தில் படிப்பும் முக்கியம், பணமும் முக்கியம் என்ற வாக்கியத்தைச் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். வள்ளுவர் அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குறிப்பிட்டுள்ளார். தாய் தந்தையரின் அனுமதி பெற்று எந்த ஒரு செயலையும் தொடங்குவது தவறாகாது. நன்மக்களைப் பெற்றுள்ளீர். தாய் தந்தையர் தங்களைப் பார்க்கவா போகின்றனர். அதுவும் கடல் கடந்து வாழும் சூழ்நிலையில் என நினைப்பவர்கள் உண்டு. எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக இளம் வயதில் பொருளிட்டத்தொடங்குபவர்கள் தங்கள் தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்துகொள்வர். பெற்றோரின் பணச்சுமையினைக் குறைப்பர். பணத்தின் அருமை அறிந்து, உழைப்பின் அருமை அறிந்து, பொருளிட்டுவதன் சிரமத்தை உணர்ந்து அதனை முறைப்படிச் செலவிடுவர். இதை நானே உணர்ந்திருக்கிறேன். தந்தையின் பாச உணர்வை வெளிப்படுத்தி உள்ளீர்கள். தந்தை தன் குழந்தையை தோளில் அமர்த்தி இறைவனை அல்லது காண இயலாத காட்சிகளை காணும் வகைசெய்வர். குழந்தையின் கால் வலிக்குமே, எட்டு மணி நேரம் நிற்க வேண்டுமே என தங்களின் ஆழ்மனத்தின் வேதனையைச் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். ஆனால் அம்மாவோ அதெல்லாம் நிற்பாள் என தெரிவித்து போனை வைத்து விட்டார் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதற்காக அம்மாவிற்குப் பாசம் இல்லை என்பதல்ல, அவர்களும் மகளின் சிரமத்தை உணர்வார். ஆனாலும் சமுதாயத்தில் தன்னைத் தற்காத்துக் கொள்ள ஒரு பயிற்சியாக இருக்கட்டுமே என இருவரும் நினைத்திருப்பீர்கள். புவணாவின் தன்னபிக்கையினைப் பாராட்டுகிறேன். எந்த வேலை செய்தாலும் அதில் மனநிறைவுடன் பிறர் பார்த்துப் போற்றும்படியும், நாம் இல்லாத நேரத்தில் இவர் இருந்தால் இப்பணியைச் சிறப்பாகச் செய்திருப்பார் என பலரும் வியக்கும் வகையில் நமது பணி அமையவேண்டும். வாழ்க! வளர்க! வெல்க!
    முனைவர் ரா.லட்சுமணசிங்
    கரூர்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் இனிய வாழ்த்துகளுக்கு நன்றி !

      Delete
  10. அருமையான பதிவு. IBM இல் white collar job செய்து வந்த எனக்கு இது முதலில் கடினமாகவே இருந்தது. பின்னர் எந்த வேலை செய்தாலும் அதை விரும்பி செய்து அதில் நிறைய கற்றுக்கொள்வதே முக்கியம் என்று எண்ணினேன். அதுவே என்னை ஊக்குவிக்கின்றது. பதிவுக்கு நன்றி !

    ReplyDelete
  11. நண்பரே, நானும் ஆட்டவாவில்தான் வசிக்கிறேன். பத்து ஆண்டுகளுக்குமுன் என் மகனும் "டீக்கடையில்" வேலை பார்க்கப் போறேன் என்றபோது அதிர்ச்சியில் உறைந்து விட்டேன். ஆனால் அதுதான் வாழ்க்கைக்கு தேவையான படிப்பு என்று இப்ப உணருகிறேன்.
    She will be alright and she will learn lot of skills that are not taught in school.
    அப்பாவுக்கும், மகளுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. அருமையான நெகிழ்ச்சியான பதிவு.நல்ல அப்பா; நல்ல மகள்.வாழ்த்துக்கள் அய்யா & புவனா.

    ReplyDelete