மேகக் கூட்டத்தின் மீது பறப்பது போன்ற உணர்வு சாலையில் காரில் பயணிக்கும்போது கிடைத்தால் எப்படியிருக்கும்! அப்படி ஓர் உணர்வைப் பெற்று மகிழ்ந்தேன். அதன் விளைவே இப் பதிவு.
ஹுயூஸ்டனில் வசிக்கும் இரவி பர்வத மீனா இணையர் நேற்று என் மகளின் இல்லத்திற்கு விருந்தினராக வந்தனர். அவர்கள் ஓட்டிவந்த மின்சார கார் நேற்று இரவு முழுவதும் என் கனவில் வலம் வந்தது.
நேற்று மாலை தேநீர் அருந்தியதும் அந்தக் காரில் சற்று நேரம் நகர்வலம் வந்தோம். ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் அமர்ந்து பயணித்தேன். இரவி அவர்கள் கார் ஓட்டியது ஒரு செயல் விளக்கமாக அமைந்தது. கார் நூறு மைல் வேகத்தில் மிதந்தவாறு சென்றது. உள்ளே ஒரு துளி இரைச்சல் இல்லை. கியர் போட வேண்டிய வேலை இல்லை. ஸ்டியரிங் வீலை அவர் தொடவே இல்லை. வீட்டில் கிடக்கும் சோஃபாவில் அமர்ந்து பேசுவது போல என்னிடம் பேசிக்கொண்டு வந்தார்.
முன்னால் சென்ற காரின் வேகம் திடீரென குறைய நான் பதறிப் போனேன். அந்தச் சூழலிலும் இரவி என்னைப் பார்த்துப் புன்னகையுடன் பேசிக்கொண்டிருந்தார். என்னே அதிசயம்! நாங்கள் பயணம் செய்த கார் தானே வேகத்தைக் குறைத்துக் கொண்டு உரிய இடைவெளி விட்டுச் சென்றது. வியந்து போனேன்! பிறகுதான் தெரிந்தது காரை அவர் தானியங்கி நிலையில் வைத்திருந்தார் என்று!
புதிதாய்த் திருமணம் செய்த இளைஞன்
தன் புது மனைவியின் சிறப்புகளைப் பாராட்டிச் சொல்வதுபோல அந்த இருபது நிமிடங்களில்
காரின் சிறப்பியல்புகளை ஆர்வத்துடன் சொன்னார் இரவி.
இந்தக் காரின் பேட்டரி ஒரு
மாறுபட்ட அமைப்பினை உடையது. ஒரு பெரிய தட்டில் இருபது தேநீர் கோப்பைகளை அருகருகே வைத்தது
போல் காரின் அடிவயிற்றில் தொள்ளாயிரம் சிறிய பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. எட்டு
ஆண்டுகளுக்கு மேல் தொய்வின்றி இயங்கும். இடையில் ஏதேனும் தொய்வு வந்தால் கார்
நிறுவனம் கட்டணமின்றி சரி செய்து கொடுக்கும் அல்லது புதிய பேட்டரியைக் கொடுக்கும்.
இந்தக் காரில் இயந்திரம் இல்லை. எனவே
காரின் முன்புறத்திலும் சாமான் சட்டுமுட்டு வைக்க நிறைய இடம் உள்ளது. காரின் இரு
பக்கங்களிலும் முன்னும் பின்னும் கண்ணுக்குத் தெரியாதபடி நிறைய சென்ஸார்கள்
பொருத்தப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து வெளியாகும் லேஸர் கதிரின் உதவியால், ஓட்டுநர்
சற்றே கண் அசந்தாலும் அல்லது கவனக் குறைவாய் இருந்தாலும் கார் எதன் மீதும்
முட்டாமல் மோதாமல் தானே தகுந்த இடைவெளிவிட்டுச் செல்லும். கூடவே காச்மூச் என்று
கத்தி ஓட்டுநரை விழிப்படையச் செய்யும்!
உள்ளே காரின் முன்புறம் உள்ளது ஒரு பெரிய தொடுதிரை. அது ஒரு சூப்பர் கம்ப்யூட்டர். காரின் மூளையாய் இருப்பது அதுவே. செயற்கை நூண்ணறிவுத் திறன் கொண்டது. திரையில் ஒரு நான்கு இலக்க இரகசிய எண்ணை இட்டால்தான் காரை இயக்க முடியும். மேலும் அந்தக் கணினித் திரையில் நம் காரின் முன்னால், பின்னால், அருகில் செல்லும் வாகனங்களைக் காணலாம்.
காரை தானியங்கி
நிலையில் வைத்துவிட்டு, ஓரக்கண்ணால் திரைப்படம் பார்க்கலாம். கணினித் திரையைத் தொட்டால் காரின்
தட்ப வெப்ப நிலையைக் கூட்டலாம்; குறைக்கலாம். அதுமட்டுமா? தொடு திரையில் தொட்டுப் பெயரைச் சொன்னால் உலகத்தில் யாருடனும் தொலைப்பேசியில் பேசலாம்; பார்க்கலாம்.
கார் நிறுத்தியுள்ள இடத்தில்
யாரேனும் வந்து சேதப்படுத்தினால் அவரை வீடியோ படம் எடுத்து அருகிலுள்ள காவல்
நிலையத்திற்கு அனுப்பிவிடும். அதற்கு முன்னதாக ஊரைக் கூட்டும் வண்ணம்
ஒலியெழுப்பும்; ஓட்டுநரின் கைப்பேசியிலும் எச்சரிக்கை ஒலியை எழுப்பும். .
இந்தக் கணினியானது ஓட்டுநரின்
கைப்பேசியுடன் இணைக்கப்பட்டது. கைப்பேசி மூலமாகவே காரின் கதவுகளைத் திறக்கலாம்;
காரை ஸ்டார்ட் செய்யலாம்.
நம் வீட்டு மின்சாரத்திலும்
மின்சக்தியை ஏற்ற முடியும் என்பது இந்தக் காரின் தனிச் சிறப்பாகும்.
அமெரிக்க நாட்டின் புகழ்பெற்ற டெஸ்லா
நிறுவனம் இவ்வகை மின்சார கார்களைத் தயாரிக்கிறது.
“இரவிஜி, ஆப்கா காடி பஹூத் அச்சா ஹை”
என்று சொன்னேன். கடந்த ஒரு மாதமாக இணையவழியில் நான் இந்தி பேசக் கற்றுக் கொள்வதால்
ஏற்பட்ட கோளாறு இது.
“எல்லாம் சரி. காரின் விலையைச் சொல்லாமல்
கதைக்கிறீர்களே” என நீங்கள் சொல்வது என் செவிகளில் கேட்கிறது.
இந்திய பண மதிப்பில் ஏறக்குறைய
இருபத்தெட்டு இலட்சமாம்!
முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.
படிக்கப் படிக்க வியப்பு
ReplyDeleteபயண அனுபவத்தைக் கண்டதும் அந்த 28 இலட்சம் என்பது பெரிதாகத் தெரியவில்லை ஐயா.
ReplyDeleteஆகா...!
ReplyDeleteடெஸ்லா நிறுவனத்தின் கார்கள் குறித்து சமீபத்தில் படித்தேன்.
ReplyDeleteஇந்தியாவிலும் தற்போது பேட்டரியில் இயங்கும் கார்களுக்கான தேவை அதிகரித்து இருக்கிறது. பல அரசு அலுவலகங்களில் - குறிப்பாக தில்லியில் மின்சாரத்தில் இயங்கும் கார்கள் வாங்க ஆரம்பித்து பயன்படுத்தி வருகிறார்கள். ஆங்காங்கே சார்ஜ் செய்ய வசதிகளும் செய்திருக்கிறார்கள். தானியங்கி வசதிகள் இல்லை என்றாலும் இவையும் சிறப்பாகவே இயங்குகின்றன. சத்தம் இல்லா பயணம்!
தகவல்கள் அனைத்தும் சிறப்பு.
சிறப்பான தகவல்கள் ஐய்யா.
ReplyDeleteநேற்றுதான், சொல்வனம் தளத்தில் ரவி நடராஜன் அவர்களின் தானியங்கி கார்கள் உருவாக்குவதில் உள்ள கேமரா மற்றும் மென்பொருள் வடிவமைப்புச் சிக்கல்கள் குறித்து படிக்கத் தொடங்கினேன்.
இன்று அது அமெரிக்காவில் சாத்தியமானது குறித்து அறிந்து பெருமிதம் அடைகிறோம்.
தங்களின் பயணக் கட்டுரை மிக மிக அருமை. மிக்க நன்றி ஐயா.
ReplyDeleteஆமாம் ஐயா மகனும் டெஸ்லா குறித்துச் சொல்ல நானும் வாசித்தேன். இக்கார்கள் குறித்து அறிந்து கொண்டேன். உங்கள் பதிவில் கூடுதல் தகவல்களும் அறிந்தேன்.
ReplyDeleteஇங்கும் பேட்டரியில் இயங்கும் கார்கள் வருகின்றன. வீட்டருகில் வைத்திருப்பவரள் ஓட்டும் போது சத்தமே இல்லாமல் தான் ஓடுகின்றன. ஆனால் தானியங்கி வரவில்லை. இங்கிருக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு நாளாகாலாமோ? என்று தோன்றுகிறது...
நல்ல தகவல்கள் ஐயா
கீதா
Tesla electric car செயல்விளக்கம் மிக அருமை. இன்னும் 40ஆண்டுகளில் வாகன எரிபொருள் கிடைக்காமல் போகலாம். மேலைநாடுகள் முன்னேற்பாடாக 50% உயிரிஎரிபொருளை (jetrobha curcas-காட்டாமணக்கு விதை) உற்பத்தி செய்தது. ஆனாலும் அதைச் சந்தைப்படுத்துவதில் தவறிவிட்டது.ஆகவே இனி வரும் காலங்களில் வாகனப் பயன்பாட்டிற்கு மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்த இயலும். அதன் மாற்று வடிவங்களாக காற்றாலை, சோலார் எனர்ஜி மற்றும் அணுமின்சாரம் என புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்த மக்கள் தயாராக வேண்டும். அதன் முன்னோட்டமே மின்சார வாகனங்கள். மேலை நாடுகள் உயரிய தொழில்நுட்பத்துடன் அதற்கு உரிய மேம்பட்ட விலையுடன் நீண்ட காலத்திற்குப் பயன்படும் வகையில் டெஸ்லா போன்ற நிறுவனங்கள் தங்களது வாகனத்தைச் சந்தைப்படுத்தி உள்ளது. ஆனால் நம் நாடு என பெருமையோடு கூறிக் கொண்டாலும் விலை மலிவாக தரம் குறைவாக நீண்ட காலம் பயன்படுத்த இயலாததாக வாகன உற்பத்தி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த நிலை மாறுமே ஆனால் தரமான வாகனத்தை இந்தியச் சாலைகளிலும் காணலாம்.
ReplyDeleteமுனைவர் ரா.லட்சுமணசிங்
பேராசிரியர்