உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் உயிர் வாழ்கின்றனர் என்பது ஜப்பானியர்தம் கருத்து. உலகிலேயே அதிக ஆண்டுகள் அதாவது நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழும் ஜப்பானிய கிராமத்து மக்கள் தாங்கள் மகிழ்ச்சியாக, நீண்ட காலம் வாழ்வதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருப்பதாகக் கருதுவர்.
இக்கிகய் என்னும் ஜப்பானிய
சொல்லுக்குக் காரணம் அல்லது நோக்கம் என்று பொருள்.
யாருக்கு வாழ்வதற்கான காரணம் அல்லது நோக்கம்
இருக்கிறதோ அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் பயனுள்ள நாளாகவே இருக்கும். யார் தாங்கள்
எடுத்துக்கொண்ட வேலையைப் பேரார்வத்துடன், ஈடுபாட்டுடன், ஓர் இலக்குடன்
செய்கின்றனரோ அவர்க்கு ஒவ்வொரு நாளும் பயனுள்ள நாளாகவே இருக்கும். அதனால்தான்
ஜப்பானியர் அதிகாலையில் எழுந்து வேலை செய்கின்றனர்.
ஜப்பானியரின் தாய்மொழியாகிய ஜப்பானிய
மொழியில் பணி ஓய்வு அதாவது ரிட்டையர்மெண்ட் என்னும் சொல்லே இல்லை என்பதைப் பெருமையுடன்
சொல்கின்றனர்.
அவர்தம் நாட்டில் எத் துறையிலும் பணி ஓய்வு
அதாவது ரிட்டையர்மெண்ட் என்பது இல்லை. “நான் வாழ்ந்து முடித்து விட்டேன். வீடு போ
என்கிறது; காடு வா என்கிறது” என்றெல்லாம் ஜப்பானியர் எவரும் புலம்புவதில்லை. அவர்க்கு
எந்த வயதிலும் வாழ்வதற்கான காரணம் ஒன்று இருக்கின்றது. தங்கள் உடலில் உள்ளத்தில்
சக்தி உள்ளவரை வேலை செய்து கொண்டே இருக்கின்றனர். தாங்கள் எப்போதும் சுறுசுறுப்பாக
இயங்கிக்கொண்டே இருப்பதில் மகிழ்ச்சி அடைகின்றனர். அதுதான் நெடுங்காலம் வாழ்வதற்கான இரகசியம் என்கின்றனர்.
இக்கிகய் என்னும் நூலின் ஆசிரியர் இருவர். ஹெக்டர்
கார்கியா மற்றும் ஃப்ரான்செஸ் மிரலெஸ். முதன் முதலில் ஒரு மதுக்கூடத்தில்
சந்தித்து இந்த இக்கிகய் நூலை எழுதத் திட்டமிட்டனர். பின்னர் இருவரும் நூறாண்டுகளுக்கு
மேல் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்துவந்த ஜப்பானியர் பலரை நேர்காணல் செய்தனர்.
அந்த சதம் அடித்த ஜப்பானியர் நெடிது வாழ்ந்ததற்கான காரணங்களை இருவரும்
ஆராய்ந்தபின், மக்கள் நெடிது வாழ்வதற்கான பல பயனுள்ள குறிப்புகளை இந்த நூலில்
பதிவு செய்துள்ளனர். சதம் அடித்த மனிதர் எல்லாரும் என்ன சாப்பிடுகின்றனர், எந்த
வேலையை எப்படிச் செய்கின்றனர், சக மனிதர்களோடு எப்படி உறவாடுகின்றனர், எந்தக் காரணம்
அல்லது நோக்கம் மன நிறைவைத் தருகிறது என்பனவற்றை எல்லாம் இந்த நூலில் விளக்கமாக
எழுதியுள்ளனர்.
நீண்ட காலம் உடல், உள நலத்துடன் வாழ வேண்டும்
என விரும்புவோர் நேர்மையாக அறவழியில் வாழ வேண்டும் என்னும் கருத்து மணியிடை இழையாக
இந் நூலில் காணப்படுகிறது.
சொல்லப்போனால், இந்நூல் மக்கள் முறையாக
வாழ்வதற்கான ஒரு செய்முறை விளக்கக் கையேடு எனலாம். ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சி
நிறைந்த நாளாக அமைய வேண்டும் என்னும் ஆசை நம்மில் யாருக்குத்தான் இல்லை? இந்த ஆசை நிறைவேற நூலின் இறுதியில்
பிழிவாகக் காணப்படும் பத்துக் கட்டளைகள். இதோ உங்களுக்காக.
1.ஓய்வைத் தவிர்த்து
எப்போதும் இயங்குக.
2.எதையும் யோசித்து
நிதானமாய்ச் செய்க.
3.கண்டதைத் தின்று
வயிற்றை நிரப்பாதீர்.
4.நல்ல நண்பர்களுடன்
நேரத்தைச் செலவிடுக.
5.அன்றாடம்
உடற்பயிற்சி செய்து உங்கள் உடம்பை இயங்கும் நிலையில் ஓம்புக.
6.எப்போதும் உங்கள்
முகத்தில் புன்முறுவல் பூக்கட்டும்.
7.மீண்டும் இயற்கையுடன்
இணைந்து வாழ்க.
8.உண்ணும் உணவு,
உள்ளிழுக்கும் மூச்சுக்காற்று, நண்பர், குடும்பத்தார் என எல்லாவற்றுக்கும்,
எல்லார்க்கும் நன்றி சொல்லுக.
9.நிகழ்காலத்தில்
பயனுள்ள வகையில் வாழ்க.
10.நீங்கள் வாழ்வதற்கு ஒரு காரணம் நிச்சயம் இருக்கும்; அதற்காக வாழ்வீர்.
நூல் விவரம்:
தலைப்பு: IKIGAI (நீண்ட காலம்
மகிழ்ச்சியாக வாழும் வழிகள்)
மூல ஆசிரியர்கள்: Hector
Garcia and Francesc Miralles
ஆங்கில
மொழிபெயர்ப்பு: Heather Cleary
வெளியீடு: PENGUIN BOOKS,
New York
.............................................
முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து
தகவல்கள் மிகவும் பயனுள்ளவை... நன்றி ஐயா...
ReplyDeleteஅருமையான நூல் அறிமுகம்.
ReplyDeleteவிரைவில் வாங்கி வாசிக்கிறேன் ஐய்யா.
மிக மிக அருமையான பயனுள்ள, உற்சாகம் தந்து வாழும்கலையைச் சொல்லி வாழ்வதற்கு ஊக்குவிக்கும் கருத்துகள்.
ReplyDeleteஅறிமுகத்திற்கு மிக்க நன்றி ஐயா
கீதா