Sunday 9 July 2017

போற்றத் தகும் பொதுப் போக்குவரத்து

   பொதுவாக எல்லோருக்கும் காரில் பயணிக்க ஆசைவரும். ஆனால் எனக்கு இங்கே பேருந்தில் பயணிக்க பேராசை வந்தது. கனடா வந்து ஒரு மாதம் ஆன பின்னால் இன்றுதான் அந்த ஆசை நிறைவேறியது. அதுவும் தனியாகப் பயணித்தேன். ஒட்டாவா விமான நிலையம்வரை சென்று திரும்பினேன்.   மாதம் முழுவதும் எந்தப் பேருந்திலும் எங்கும் எந்த நேரத்திலும் பயணிக்கத் தகுந்த பிரஸ்டோ (Presto) எனப்படும் பயண அட்டையை ஐம்பது டாலர் செலுத்தி வாங்கிக் கொடுத்துவிட்டாள் என் மகள். இந்த ஊர்ப் பேருந்துகளில் பணம் கொடுத்து பயணிக்க இயலாது. முன்னதாக பிரஸ்டோ அட்டையை பணம் செலுத்தி ரீ சார்ஜ் செய்துகொள்ள வேண்டும். நடத்துநர் இல்லாத பேருந்து என்பதால் சென்சார் கருவிகள் மட்டும் இருக்கும். அதன்மேல் ஏட்டியெம் கார்டு வடிவத்தில் இருக்கும்  பிரஸ்டோ அட்டையை வைத்து எடுத்தால் போதும். உரிய கட்டணம் அட்டையிலிருந்து கழிந்துவிடும்.

  இங்கெல்லாம் செல்லும் தூரத்தைப் பொருத்துக் கட்டணம் அமைவதில்லை. பிரஸ்டோ பயண அட்டையை ஒருமுறை பயன்படுத்தினால் 90 நிமிடம் எந்தப் பேருந்திலும் எங்கும் பயணிக்கலாம். ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை; ஆனால் தனி இருக்கை உண்டு. பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், அறுபத்தைந்து வயது முடிந்த முதியவர்களுக்கும் அரைக்கட்டணம்தான்.

தொடர் பேருந்துகள்
   
      இங்கே மூன்று வகையான நகரப் பேருந்துகள் ஓடுகின்றன. நம்மூர் பேருந்து போன்றது ஒருவகை. இரண்டு பேருந்துகள் இணைக்கப்பட்ட தொடர் பேருந்து இன்னொரு வகை. ஒன்றின்மேல் ஒன்றாக அமைந்திருக்கும் இரண்டடுக்குப் பேருந்து மற்றொரு வகை.

   எல்லாப் பேருந்துகளிலும் வெயில் காலத்தில் இதமான குளிரும் குளிர் காலத்தில் பதமான வெப்பமும் நிலவும்.        மிகப்பெரிய கண்ணாடி ஜன்னல்கள்; அவற்றைப் பார்த்து அறிய முடியாது., தொட்டுதான் உணரமுடியும். பெரிய திரையில் சினிமா பார்ப்பதுபோல் வேடிக்கை பார்க்கலாம். பேருந்தின் முன்பகுதியிலும் பின்பகுதியிலும் நடுவிலும் என மூன்று பெரிய தானியங்கிக் கதவுகள் உள்ளன. ஒரே சமயத்தில்  நான்கு பேர் ஏற முடியும். ஆனால் இந்த நாட்டில் ஒருவர்பின் ஒருவராகத்தான் ஏறுகின்றனர்; இறங்குகின்றனர். இறங்கும் பயணியர் அனைவரும் இறங்கிய பின்னரே ஏறுகின்றனர். இந்தப் பழக்கம் நமக்குச் சுட்டுப் போட்டாலும் வராதே.

    பேருந்தின் வடிவமைப்பே வியக்கத் தக்கதாய் உள்ளது.  இப் பேருந்துகள் மண்டியிடும் பேருந்துகள்(kneeling buses) என்று அழைக்கப்படுகின்றன. ஏன் தெரியுமா?

  
பேருந்து நிறுத்தம்

   பேருந்து சாலையின் வலப்புறம் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றதும் முழுப்பேருந்தும் மெல்ல நடைமேடை அளவுக்குத் தாழ்கின்றது. பேருந்து வாயிலின் அடிப் படிக்கட்டும் சாலையோர நடைமேடையும் மூன்று அங்குல இடைவெளியில் சமதளத்தில் அமைகிறது. பிறகுதான் கதவுகள் திறக்கின்றன. இதனால் முதியவர்கள் குழந்தைகள் அனைவரும் வசதியாக ஏறி இறங்க முடிகிறது. பயணியர் ஏறியதும் இறங்கியதும் கதவுகள் மூடுகின்றன. அடுத்தக் கணம் பேருந்து உயர்ந்து நகர்கிறது. அடுத்த நொடியில் குறிப்பிட்ட வேகத்தில் சீறிச் செல்கிறது.
நிற்க வசதியாக
  
  ஒரு நிறுத்தத்தில் வண்டி நிற்கிறது. ஒரு பயணி தன் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி ஏற நினைக்கிறார். பேருந்து மெல்லத் தாழ்கின்றது. ஓட்டுநர் தன் முன்னால் உள்ள கணினி தொடுதிரையில் ஒரு ஐகானைத் தொடுகிறார்.  உடனே ஒரு பலகை எழுந்து நடைமேடைக்குச் சாய்தளம் அமைக்கிறது. அந்தப் பயணி பேட்டரியால் இயங்கும் தன் சக்கரநாற்காலியில் அமர்ந்தவாறு ஓட்டுநருக்கு நன்றி சொல்லியபடி பேருந்தின் உட்பகுதிக்குச் சென்று உரிய இடத்தில் நிறுத்தி அப்படியே பயணிக்கிறார். அவருடன் நான் பேச்சுக் கொடுத்தபோது தான் ஒரு மாற்றுத்திறனாளி என்பதை மறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதாகக் கூறினார். மாற்றுத் திறனாளிகளை மாறாத அன்புடன் நேசிக்கும் நாடாக கனடா திகழ்கிறது.

   மற்றொரு நிறுத்தத்தில் ஓர் இளம்தாய் தன் பச்சிளம் குழந்தை அமர்ந்துள்ள தள்ளுவண்டியுடன்(stroller) ஏறுகிறாள். உள்ளே நகர்ந்து தன் இடக்கையால் அங்கு இருக்கும் மூன்று காலி இருக்கைகளை உயர்த்திச் சாத்திவிட்டு அவ்விடத்தில் தள்ளுவண்டியை நிறுத்திவிட்டு, உயரமாக அமைந்துள்ள ஒரு குஷன் பலகையில் ஒய்யாரமாக சாய்ந்து நின்றபடி தன் கைப்பேசியில் மேய்கிறாள். குழந்தை மலரினைப்போல் உறங்குகிறது. சாலைகளில் வேகத்தடுப்பான்கள் இல்லாததால் குழந்தையோடு நாமும் ஆனந்தமாய் ஒரு தூக்கம் போடலாம்.
வாசிப்பை நேசிக்கும் பயணி

    இந்த ஊர் பேருந்துகளில் செவிப்பறையைக் கிழிக்கும் பாட்டு கிடையாது. பயணியரும் அமைதியாக புத்தகம் படித்தபடி, அல்லது இலவச செய்தித் தாள்களைப் பார்த்தபடி அல்லது அலைப்பேசியில் மூழ்கியபடி பயணிக்கின்றனர். அப்படியே பேசினாலும் மூன்றாவது மனிதருக்குக் கேட்காதபடி மெல்லிய குரலில் பேசுகின்றனர்.

 
அப்படியே திரும்பி பேருந்தின் இருக்கை அமைப்பைப் பார்க்கிறேன். கால் நீட்டி அமரத்தக்க வசதியான இருக்கைகள் படு தூய்மையாக உள்ளன. இரு பக்கவாட்டிலும் நெடுக இரண்டிரண்டு இருக்கைகளாக அமைந்துள்ளன. நடுவில் விசாலமான நடைபாதை உள்ளது. மாற்றுத் திறனாளருக்கும் முதியவர்களுக்கும் சற்றே உயரம் குறைவான இருக்கைகள் உள்ளன. அவற்றில் மற்றவர் மறந்தும்கூட உட்காருவதில்லை. நம்மூரில் இருப்பதுபோல் மகளிருக்கென தனி இருக்கை ஒதுக்கீடு இல்லை. எங்கும் அமரலாம். நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை; அரைக்கால் சட்டை அணிந்த ஓர் அமெரிக்க இளம்பெண் என் அருகில் அமர்ந்து பயணித்தாள்! அதுவும் மெல்லிய குரலில் இனிக்க இனிக்கப் பேசிக்கொண்டு! ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி படிப்பதாய்ச் சொன்னாள். இது குறித்து என் மனைவியிடம் மூச்சுவிடவில்லையே!

    பேருந்தில் எளிதில் கண்ணில் படும்படியாய்த் திரைகளை வைத்துள்ளனர். அதில் பேருந்தின் கடைசி நிறுத்தம், இப்போதைய நேரம், அடுத்துவர உள்ள நிறுத்தம் ஆகியவை பளிச்சென்று தெரிகின்றன. ஆங்கிலத்திலும் ஃப்ரென்ச் மொழியிலும் அறிவிக்கவும் செய்கிறார்கள். நாம் இறங்கவேண்டிய நிறுத்தம் நெருங்கும்போது கைக்கெட்டும் தூரத்தில் தொங்கும் ஒரு மணிக்கயிற்றை இழுத்தால் போதும் ஓட்டுநர் நமது நிறுத்தத்தில் நிறுத்திவிடுவார். நிறுத்தியவுடன் நாம்பாட்டுக்கும் இறங்கிச் செல்லுதல் கூடாது. பிறகு? ஓட்டுநருக்கு நன்றி சொல்லிவிட்டு இறங்கவேண்டும். இதுதான் இங்கே மரபு!

   நானும் எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள உட்ரிட்ஜ் நிறுத்தத்தில் இறங்கியபோது ஓட்டுநரைப் பார்த்து, “நான் இந்தியாவிலிருந்து வருகிறேன். நீங்கள் அளிக்கும் பேருந்து சேவை நன்றாக உள்ளது. நீங்களும் அழகு; பேருந்தை ஓட்டிய விதமும் அருமை. நன்றி” என ஆங்கிலத்தில் கூறினேன். “வெல்கம்; தேங்க்யூ ஃபார் யுவர் நைஸ் வேர்ட்ஸ்” என்று குழைந்தாள் அந்த சீனப்பெண்.

      இங்கு இயங்கும் நகரப்பேருந்தில் நின்றவாறு வசதியாகப் பயணிக்கலாம். ஆனால் நின்று யாரும் பயணித்ததைப் நான் இதுவரைப் பார்க்கவில்லை. அதிக எண்ணிக்கையில் அதிக வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுவதுதான் காரணம்.

    குறித்த நேரத்தில் பேருந்துகள் உரிய நிறுத்தத்தில் வந்து சேருவது வியப்பாக உள்ளது. எப்போதாவது அசாதாரண சூழ்நிலையில் தாமதமாக வரலாம். பொதுப் போக்குவரத்துச் செயலி ஒன்று உள்ளது. அதை நமது கைப்பேசியில் தரவிறக்கம் செய்து வைத்துக்கொண்டால் தட எண், செல்லும் இடம், நேரம் போன்ற விவரத்தை அறியலாம். ஒரு தட எண்ணைத் தட்டினால் அடுத்த நொடியில் குறுஞ்செய்தி வந்துவிடும்; குரல் செய்தியாகவும் கேட்கமுடியும்! அதுமட்டுமா? பேருந்து இப்போது எந்த இடத்தில் வந்துகொண்டுள்ளது என்பதைப் பார்க்கவும் செய்யலாம்!

    இவ்வளவு வசதிகள் இருப்பதால் மகிழுந்துகள் வைத்துள்ளவர்கள் கூட மகிழ்ச்சியாக பொதுப் பேருந்துகளில் பயணிக்கிறார்கள். ஆட்டோ போன்ற வாகனங்கள் அறவே இல்லை. இதனால் நகரின் உட்சாலைகளில் கூட வாகன நெரிசல் இல்லை.

   பெரும்பாலும் மகளிர் ஓட்டுநராய் உள்ளார்கள். ஆண்களிலும் நம்நாட்டுச் சீக்கியர்கள் பலராக அவர்களுக்கே உரிய தலைப்பாகை அணிந்து கம்பீரமாக ஓட்டுகிறார்கள். பேருந்து ஓட்டுநர்கள் பயணியரிடம் நட்பு பாராட்டுபவராய் இருக்கிறார்கள். நாம் கேட்கும் கேள்விகளுக்கு நிறுத்தி நிதானமாக புன்னகையுடன் பதில் சொல்லுகிறார்கள். இரவு ஏழு மணிக்குமேல் பயணித்தால் நிறுத்தம் அல்லாத இடத்திலும் நிறுத்தி இறக்கிவிடுகிறார்கள்! ஒரு பயணிக்குத் திடீர் உடல் நலக்குறைவு என்றால் –பேருந்தில் என்றாலும் பேருந்து நிறுத்தத்தில் என்றாலும்- அருகில் உள்ள முதலுதவி மையத்தில் சென்று சேர்த்துவிட்டுப் பயணத்தைத் தொடர்கிறார். முன்னதாக மற்றப் பயணியரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு செயல்படுகிறார்.

   மிக முக்கியமானது ஒன்று. பொதுவாகவே ஒருவர் பொருளை மற்றவர் கவர்வது பெரும் பாவச்செயல் என்று கருதும் மனப்பாங்கு மக்களிடத்தில் வேரூன்றி உள்ளது. பயணியர் எவரேனும் பேருந்தில் மறந்து தம் பொருள்களை விட்டுச்செல்ல நேர்ந்தால், அந்தப் பேருந்தின் ஓட்டுநர் பொருள்களை உரியவரிடம் சேர்த்துவிட்டுதான் மறுவேலை பார்க்கிறார். தான் ஒரு பேருந்துப் பயணத்தின்போது தொலைத்துவிட்ட கைப்பை மறுநாளே கிடைத்ததை என் மகள் கதை கதையாய்ச் சொன்னாள்; வியப்பில் உறைந்து போனேன்.

   உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
   கள்ளத்தால் கள்வேம் எனல்
என்ற குறளை இவர்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்?

மகிழ்ச்சியான பயணம்
   இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். நம்மூர் பொதுப் போக்குவரத்து அதிகாரிகள் கோபப்படுவார்களோ என அஞ்சி பதிவை நிறைவு செய்கிறேன்.

முனைவர் .கோவிந்தராஜூ

கனடா ஒட்டாவா நகரிலிருந்து.

26 comments:

 1. இன்றைய போக்குவரத்து நெரிசலுக்கான தீர்வே மேம்பட்ட பொது போக்குவரத்து முறை தான். இது பற்றிப் பேசினால் நம் அரசியல்வாதிகள் மக்கள் தொகையை குற்றம் சொல்வார்கள். நம்மைவிட மக்கள் தொகை அதிகமுள்ள சீனாவின் பொது போக்குவரத்து (Metro, Bus Rapid Transport BRT) மிகச்சிறப்பாக செயல்படுவதைக் குறிப்பிட்டால் நாம் Anti-Indian ஆகி விடுவோம்.
  மிக்க நயத்துடன் எழுதப்பட்ட கட்டுரை. பாராட்டுக்கள் அண்ணா!

  ReplyDelete
  Replies
  1. நன்றாகச் சொன்னீர். இந்த அரசியல்வாதிகளை வழிக்குக் கொண்டுவர வழியே இல்லையா?

   Delete
 2. Ideal place to live.Our politicians will never allow such a system in our Country.Even in Karnataka transport system is much better.We hope you will write a book named 'KAVINMIGU CANADA'after arriving to our Nation.We wish Best for your progressive capacity.

  ReplyDelete
 3. பொது போக்குவரத்துச் சேவையில் நம் நாடு எவ்வளவு பின்தங்கியுள்ளோம் என்பதை உணர முடிகிறது !

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

   Delete
 4. நல்ல கட்டுரை. அரசாங்கமும் செயல்பட்டு, மனிதர்களும் ஒத்துழைத்தால் நல்ல பல விஷயங்களை இங்கே செய்ய முடியும். இரண்டிலும் தகறாறு. தில்லி மெட்ரோ ஆரம்பித்த புதிதில் அத்தனை சுத்தமாக இருந்தது. இப்போது பல இடங்களில் பான் பராக் துப்பி வைத்திருக்கிறார்கள்! எத்தனை தான் சொன்னாலும் திருந்தாதவர்கள்.... அப்படிச் செய்பவர்களை பிடித்து அபராதம் வாங்க முயன்றால் அந்த ஊழியர்களை ஒரு வழி செய்து விடுகிறார்கள். இறங்குவதற்குள் அவர்களைத் தள்ளிக்கொண்டு உள்ளே செல்வது தான் இங்குள்ளவர்கள் செய்யும் வேலை.

  அந்த ஊர் பேருந்துகளில் இருக்கும் வசதிகள் பிரமிக்க வைக்கின்றன. தலைநகரிலும் தாழ்தள பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டு, நடைமேடை உயரத்திற்கு ஏற்ப பேருந்தினை தாழ்த்தவோ, உயர்த்தவோ முடியும் என்றாலும் எந்த ஓட்டுனரும் இதைச் செய்வதில்லை! தலைநகர் தில்லியின் ஓட்டுனர்கள்/நடத்துனர்கள் பெரும்பாலானவர்கள் ஹரியானா மாநிலத்தவர்கள் - எதிலும் கொஞ்சமும் விட்டுக்கொடுக்காது சண்டை போடுபவர்கள்! ஒன்றும் சொல்வதிற்கில்லை.

  மின்னஞ்சல் மூலம் உங்கள் பதிவுகள் வரும்படி செய்து கொண்டதால், தொடர்ந்து வரமுடிகிறது. நன்றி. தொடர்ந்து சந்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. "அரசாங்கமும் செயல்பட்டு, மனிதர்களும் ஒத்துழைத்தால் நல்ல பல விஷயங்களை இங்கே செய்ய முடியும்." என்று நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.
   உங்கள் வருகைக்கும் தருகைக்கும் நன்றி.

   Delete
 5. ம்ம்ம்... வேறு ஒன்றுமில்லை... பெருமூச்சு...!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பெருமூச்சில் தெரிகின்றன ஒரு நூறு செய்திகள்!

   Delete
 6. பாயும் ஒளி நீ எனக்கு
  பார்க்கும் விழி நான் உனக்கு
  என்பான் பாரதி
  கனடாவை உங்கள் விழிகளால்
  பார்த்து பதிவு செய்யும்
  பயணக்கட்டுரை பயனுள்ள கட்டுரை

  ReplyDelete
  Replies
  1. வாசகரின் தரமே எழுத்தாளரின் தரம் என்பதற்கு நீங்கள்தான் சான்று.
   தொடர்ந்து என்னுடன் பயணிப்பதற்கு நன்றி.

   Delete
 7. Are our politicians aware of these things? What is the purpose of their visit abroad?

  ReplyDelete
  Replies
  1. Neither the politicians nor the officials. They simply enjoy the abroad trip in the expense of poor men.
   Thank you.

   Delete
 8. ஆஹா! என்ன ஒரு அற்புதமான நாடு!
  பிரமிக்க வைக்கிறது.��

  ReplyDelete
  Replies
  1. பதிவைப் படித்துப் பகிர்ந்தமைக்கு நன்றி

   Delete
 9. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 10. ஐயா, நீங்கள் இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது தனி மனித ஒழுக்கம் மற்றும் கல்வி. எங்கே தனி மனித ஒழுக்கமும், தரமான கல்வியும் இருக்கிறதோ அங்கே அனைத்தும் அருமையாக இருக்கும் என்பதன் எடுத்துக்காட்டே கனடாவும் உங்கள் கருத்தும். கல்வி நிலையங்கள் அறிவை புகட்டாமல், வெறும் பட்டம் விற்கும் விற்பனை நிலையங்களானதாலேயே இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஊழல் மலிந்து காணப்படுகிறது. தமிழகத்தில் தனியார் பேருந்துகளில் WiFi போன்ற சேவைகளை வழங்குகின்றனர். அரசுப் பேருந்துகளில் தான் வசதிகளும் பாதுகாப்பும் குறைந்து காணப்படுகிறது. இதற்கு காரணம் அரசுப்பணிக்கு வந்தால் வேலை செய்யத்தேவையில்லை எனும் மனப்பாங்கை இன்றைய கல்வி ஏற்படுத்தி வருகிறது. 8 மணிநேரம் தனியார் துறையில் பணிபுரிவோர் அரசுத்துறையில் பெரும் ஊதியத்தில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே பெறுகின்றனர். எனவே அடிப்படையே தவறாக இருக்கும் போது நாம் கனடா போன்ற நாடுகளை கனவு நாடுகளாக மட்டுமே எடுத்துக்கொள்ளமுடியும்.

  ReplyDelete
 11. " இந்த நாட்டில் ஒருவர்பின் ஒருவராகத்தான் ஏறுகின்றனர்; இறங்குகின்றனர். இறங்கும் பயணியர் அனைவரும் இறங்கிய பின்னரே ஏறுகின்றனர். இந்தப் பழக்கம் நமக்குச் சுட்டுப் போட்டாலும் வராதே. " - பழக்கம் கட்டாயம் வரவேண்டும், வரிசையில் நிற்கும் நாலு பேர் நிற்க மறுக்கும் இருவரைக் கண்டிக்க வேண்டும். ஒவ்வொரு முறை இந்தியா வரும்போது நான் வரிசையில்தான் நிற்கிறேன். என்றாவது ஒருநாள் விடிவு வரும் என்ற நம்பிக்கையில் ...

  ReplyDelete
 12. பேருந்துப் பயணம் மகிழுந்துப் பயண அனுபவத்தைத் தங்களுக்குக் கிடைத்தது என்பதை உங்கள் கட்டுரை வெளிப்படுத்துகிறது. ஒட்டாவா நகரப்பேருந்துகள் அருமையான வடிவமைப்புடன் காணப்படுகிறது. மனிதர்களையும் மனிதநேயத்தையும் போற்றும் நாடாகக் கனடா திகழ்கிறது.
  முனைவர் ரா.லட்சுமணசிங்
  கரூர் - 5

  ReplyDelete
 13. நம்மூரில் இப்படியான சேவைகளை அரசு செய்யுமா? செய்ய முடியாதா என்ன? முடியும். அதே போன்று மக்களும் ஒத்துழைக்க வேண்டும். பொது இடங்களில் துப்புவது, பேனாவால் எழுதுவது, பேருந்துகளில் காதல் மொழிகள் எழுதுவது, என்று என்னென்னவோ கிறுக்குத்தனங்களைச் செய்கிறார்களே. சமீபத்து ரயில் பயணத்தில் குளிரூட்டப்பட்ட பெட்டியில் குப்பைகள் இடுவதற்குத் தொட்டிகள் இருந்தன. ஆனால் அதில் போடும் மக்கள் மிகவும் குறைவு, சீட்டிற்கடியில் அல்லது கதவு வழியாக வெளியே எறிகின்றார்கள். என்ன சொல்ல? நான் எப்போதுமே கையில் ஒரு பை வைத்துக் கொண்டுவிடுவேன் குப்பைகளைக் கொட்ட என்று. அதனை அப்புறம் எங்கு குப்பைத் தொட்டி பார்க்கிறேனோ அதில் போட்டுவிடுவேன். ரயில் என்றாலும் சரி பேருந்து என்றாலும் சரி.

  மகன் கனடாவிலிருந்த போது அவனும் இதை எல்லாம் சொன்னான். அமெரிக்காவிலும் கூட பேருந்துகளில் இப்படியான சேவைகள் உண்டு என்றாலும் கனடாவில் இன்னும் அதிகம் என்றான் மகன். மக்கள் தொகையும் குறைவுதானே ஐயா. நம்மூர் மக்கள்தொகையைக் கணக்கிடும் போது..

  என்னைக் கேட்டால் ஜப்பான் பள்ளிகள் போன்று நம்மூரிலும் சிவிக் சென்ஸ் சிறு வகுப்புகளிலேயே சொல்லித் தரப்பட வேண்டும். பொதுஇடச் சுத்தம், பொது இடத்தில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், சாலையைக் கடக்கும் விதிகள் என்று பலவும் கற்றுத் தரப்பட வேண்டும். வீட்டிலும் பெற்றோர் கற்றுக் கொடுக்க வேண்டும் முன்மாதிரியாகவும் இருக்க வேண்டும். ஆனால் இங்குள்ள மக்கள் தொகையும், மக்களின் விழிப்புணர்வும் அந்த நாட்டோடு ஒப்பிட முடியாதே ஐயா...நம் நாட்டில் அடிப்படையிலிருந்தே மாற்றம் தேவை...

  மிகவும் ரசித்தோம் ஐயா பதிவை,

  கீதா

  ReplyDelete
 14. அரைக்கால் சட்டை அணிந்த ஓர் அமெரிக்க இளம்பெண் என் அருகில் அமர்ந்து பயணித்தாள்! அதுவும் மெல்லிய குரலில் இனிக்க இனிக்கப் பேசிக்கொண்டு! ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி படிப்பதாய்ச் சொன்னாள். இது குறித்து என் மனைவியிடம் மூச்சுவிடவில்லையே!// ஹஹஹஹ்

  ReplyDelete
 15. கனடா நாடு வியக்க வைக்கிறது ஐயா! பதிவிலிருந்து பல அறிய முடிகிறது!!

  ReplyDelete
 16. today i only read this. What an effective public transprt system in Canada meeting the needs of handicapped , mother with young children and elderly and young ones. when will such system will be in operation in our country.?

  ReplyDelete