சென்ற ஆண்டுக்கு முந்தைய ஆண்டு பெரிய மகளின் அழைப்பை ஏற்று அமெரிக்கா சென்றபோது இதே சமயத்தில் நயாகரா அருவியைக் கண்டு வியந்தோம். அப்போது அமெரிக்காவில் இருக்கும் நயாகராவைப் பார்த்துவிட்டு, கனடா நாட்டின் அணிகலனாய்த் திகழும் நயாகரா அருவியைக் காண்பதற்கான கனவு விதையை மனத்தில் ஊன்றினேன்.
அந்தக் கனவு என் இளைய மகள் மூலமாக இப்போது நனவானது. இங்கு ஒட்டாவாவில் கட்டுமானப் பொறியாளராகப் பணியாற்றும் நண்பர் குமரேசன் தன் மகிழுந்தைத் தந்ததோடு தானே சாரதியாகவும் வர ஒப்புக்கொண்டார். காலை எட்டு மணிக்குப் புறப்பட்டு இடையில் ஒரு சாலையோர விடுதியில் சற்றே இளைப்பாறிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தோம்.
வழியில் கிங்ஸ்டன் நகரை ஒட்டியிருந்த ஆயிரம் தீவுகள் பகுதியில் இறங்கி ஒரு நோட்டம் விட்டோம். அடுத்த மாதம் இங்குவந்து ஒரு நாள் முழுவதும் படகு சவாரி செய்து ஒரு நூறு தீவுகளையாவது பார்க்கும் திட்டம் உள்ளது. நகரை ஒட்டி விரிந்து கிடந்த கடலில் நூற்றுக்கணக்கில் படகுகள் திரிந்து கொண்டிருந்தன. அவை மட்டுமா திரிந்தன? வண்ண வண்ண வாத்துகளும் நம் இலக்கியத்தில் வரும் இணைபிரியா அன்றில் பறவைகளைப்போல நீந்தித் திரிந்தன. அவற்றையெல்லாம் அண்மையில் தந்தையர் நாள் பரிசாக மகள் எனக்கு வழங்கியிருந்த வீடியோ கேமிராவில் பிடித்துப் போட்டுக்கொண்டேன். பயணம் தொடர்ந்தது.
மாமியார் வீட்டுக்கு ஓய்வாக வந்து ஒருவாரம் தங்கிய மருமகனைப்போல் மழையும் தூறலும் சில நாள்களாகத் தொடர்ந்து இருந்தது. கடும் மழையிலும் விரைந்தோம். 2.30 மணிக்கு டொரண்ட்டோ நகரின் மையப்பகுதியில் காரை நிறுத்தினார்கள். எட்டிப் பார்த்தால் நம்மூர் சரவணபவன் கண்ணில் பட்டது. பஞ்சாபி ஒருவர் பெயர் உரிமை(Franchise) ஏற்று உணவகத்தை நல்லமுறையில் நடத்துகிறார்.
அந்த உணவகத்தில் தட்டேந்தி முறையில்(Buffet system) உண்ண, தின்ன, பருக, கடிக்க, நக்க என பதினாறு வகையான பதார்த்தங்களை வேண்டுமளவு எடுத்து வயிறார உண்டு மகிழலாம். அவ்வப்போது ஓர் பஞ்சாபி இளமங்கை இளநகையுடன் வந்து சூடான தோசை பூரிகளைப் பரிமாறிச் சென்றாள். தட்டில் உணவை மீதி வைத்தால் ஒரு டாலர் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுமாம். வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள் எடுத்ததை முழுமையாக உண்டு விடுங்கள் என்னும் பொருள்பட Take all you eat and eat all you take என்று ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்ததை மீண்டும் மீண்டும் படித்து இரசித்தேன். நல்ல வேளை நாங்கள் ஒரு பருக்கையைக் கூட வீணடிக்கவில்லை பற்றுக்கோடு அட்டையை(Debit Card) உரசி ஐவருக்கும் சேர்த்து ஐம்பத்தைந்து டாலரை செலுத்தியதோடு, சில பாராட்டு வார்த்தைகளையும் சொல்லிவிட்டு வெளியே வந்தோம்.
அருகிலிருந்த டொரண்ட்டோ பொது நூலகத்தை எட்டிப் பார்த்துவிட்டு நேரே விமான நிலையம் சென்றோம். அது கனடாவின் மிகப்பெரிய பன்னாட்டு விமான நிலையம் ஆகும். அமெரிக்காவிலிருந்து வந்திறங்கிய என் மகளின் கல்லூரித் தோழி சத்யாவை வரவேற்றோம். அவள் எங்களின் இன்னொரு மகள் மாதிரி பழகுவாள். அவள் இருக்குமிடத்தில் உற்சாகம் அனைவரையும் தொற்றிக்கொள்ளும். எங்களுடன் அவளையும் அழைத்துக்கொண்டு நயாகராவை நோக்கி விரைந்தோம்.
இப்போது ஓட்டுநர் இருக்கையில் என் மகள் புவனா. கவனம் சிதறாமல் காரை ஓட்டிய அழகை இரசித்தபடி பின் இருக்கையில் அமர்ந்து இருபுறமும் 120 கிலோமீட்டர் வேகத்தில் பின்னோக்கிப் பயணித்த மரங்களையும் கட்டடங்களையும் பார்த்துக்கொண்டே சென்றேன்.
மாலை சரியாக எட்டு மணியளவில் நயாகரா நகரில் நுழைந்து உரிய இடத்தில் வண்டியை நிறுத்தினாள். பொழுது சாய்வதற்குள் நயாகரா அருவியைப் பார்த்துவிட வேண்டும் என்னும் முடிவோடு ஓட்டமும் நடையுமாக விரைந்தோம்.
நயாகரா அருவி பேரழகின் பெட்டகமாகத் திகழ்ந்ததைக் கண்டு வியப்பில் கத்தினோம். சமையலறை மேடையில் அம்மா வைத்திருந்த பாலை ஒரு பூனை தள்ளிவிட்டால் எப்படிப் பரவி அங்கிருந்து தரையில் கொட்டுமோ அப்படித்தான் சமவெளிப் பகுதியிலிருந்து பாலெனப் பரவி பட்டென கீழ்நோக்கிக் குதிக்கிறது நாம் பார்க்கும் இந்த நயாகரா அருவி.
பரண் மீதிருந்த பாலைக்
கவிழ்த்து விட்டது யார்?
அருவி
என்று எப்போதோ நான் எழுதியிருந்த ஹைக்கூ கவிதை நினைவில் தோன்றி மறைந்தது.
அருவி நீர் ஆறாக மாறி ஆர்ப்பரித்து ஓடும் அழகே அழகு! ஆற்றின் இந்தப்பக்கம் கனடா அந்தப்பக்கம் அமெரிக்கா. இரு நாடுகளையும் இணைக்கிறது ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மிகப் பழமையான ஓர் இரும்புப் பாலம். பாஸ்போர்ட்டும் விசாவும் கைவசம் இருந்தால்தான் அந்தப் பாலத்தைக் கடக்க முடியும். இங்கே அருவியை ஒரு பறவையைப்போல மேலிருந்து காண்பதற்காக 168 மீட்டர் உயரமுள்ள கோபுரத்தைக் கட்டியுள்ளார்கள். ஸ்கைலன் டவர்(Skylon Tower) என்று பெயர்.
1867 ஆம் ஆண்டு இந்த அருவி சுற்றுலா பயணியருக்குத் திறந்து விடப்பட்டதாம். கனடா ஆண்ட்டாரியோ மாநிலத்தின் மிகப்பழமையான சுற்றுலாத் தலம் இதுதானாம்.
ஒருவருக்கு படகுக் கட்டணமாக நாற்பது டாலர் (ரூபாய் இரண்டாயிரம்) எனக் கட்டணம் செலுத்தி, மின்தூக்கி மூலம் இறங்கி ஆற்றின் படகுத்துறைக்குச் சென்றோம். படகு மூலம் அருவியின் அருகில் சென்று அருவி நீர் விழும் காட்சியைப் பார்ப்பதற்காக வரிசையில் நின்றோம்.
.
அருவிச் சாரலில் நனையாமல் இருப்பதற்காக சிவப்பு நிறத்தில் ஒரு பாலித்தின் அங்கியைக் கொடுத்தார்கள். இது இல்லை என்றால் தொப்ப ந
னைந்திருப்போம்
Horn Blower என்னும் இரண்டடுக்கு இயந்திரப் படகின் மேற்தளத்தில் ஏறி நின்றுகொண்டு அருவியை நோக்கி முன்னேறினோம். உயரமான இடத்தில் அமைந்திருந்த எல்.இ.டி மின் விளக்குகளிலிருந்து பாய்ச்சப்பட்ட வண்ண ஒளிவெள்ளம் அருவியின் மீது பட்டு வர்ணஜாலம் நிகழ்த்தியது ஏழு வண்ண ஒளிகள் அருவி நீரில் மாறி மாறி விழுந்தது கண்களைவிட்டு அகலாத காட்சியாகும். அந்த இரவு நேரத்திலும் வெள்ளை நிற கடற்காகங்கள் விண்ணில் பறந்தன. பாயும் ஒளிக்கேற்ப அவற்றின் சிறகுகளும் வண்ண மயமாய் மாறி எண்ணத்தைக் கொள்ளை கொண்டன!.
குதிரை லாட வடிவில் அமைந்துள்ள அருவியிலிருந்து சிவந்த நிறத்தில் வழிந்த நீர் அடுத்தகணம் நீலமாக மாறிக் கொட்டியது. மலரின் மகரந்தத்தூள் போன்ற சாரல் துளிகள் எங்கள் மேல் கொட்டின சாரலைப் பொருட்படுத்தாமல் காமிராவை வெளியில் எடுத்துச் சில படங்களை எடுத்தேன். ஒரே ஒரு நிமிடம் மட்டும் அங்கே நின்ற படகு திரும்பி விரைந்தது. கொஞ்ச தூரம் சென்று நங்கூரம் பாய்ச்சிய கப்பல் போல நின்றது.
நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்த வாண வேடிக்கை வான வேடிக்கையாகத் தொடங்கியது. சிவகாசி வாணங்களை ஒட்டுமொத்தமாக வாங்கி விண்ணில் விட்டதுபோல் அடுத்த இருபது நிமிடங்கள் வெளுத்து வாங்கிவிட்டார்கள். ஒருபக்கம் மனம் மகிழ்ந்தாலும் இன்னொரு பக்கம் வானவெளி மாசடைகிறதே என்ற வருத்தமும் இருக்கத்தான் செய்தது.
பிரிய மனமில்லாமல் அருவியைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தோம். குளிர் என்றால் அப்படியொரு குளிர். மனைவி என் கைகளை இறுகப் பிடித்துக்கொண்டு நடந்தாள். இதற்காகவே அடிக்கடி நயாகராவுக்கு வரலாம் போலிருந்தது!
இரவு பத்தரை மணி. கொண்டு வந்திருந்த பொடிதடவிய அதி கார இட்லியை அளவாய்ச் சாப்பிட்டுவிட்டு காரில் ஒடுங்கினோம். இப்போது குமரேசன் ஓட்டுநர் இருக்கையில்; அவருடைய இரு கையில் செலுத்துச் சக்கரம்(Steering wheel). சாலையெல்லாம் ஈரம்; 600 கிலோமீட்டர் தூரம்; ஐந்துமணி நேரம்.
இறையருளால் அதிகாலை நேரத்தில் பாதுகாப்பாக ஒட்டாவா வந்து சேர்ந்தோம்..
படுத்துறங்கி நண்பகலில் எழுந்தபோது கண்களை விட்டுத் தூக்கம் அகன்றது; ஆனால் நயாகரா அகலவில்லை.
கனடாவிலிருந்து
முனைவர் அ.கோவிந்தராஜூ
மனதைக் கவரும் அற்புதக் காட்சிகள் ஐயா
ReplyDeleteநாயகராவின் அழகும் இதற்காகவே
Deleteஅடிக்கடி வரலாம் என்று அம்மாவின் மீது
தாங்கள் வைத்துள்ள அன்பை வெளிப்படுத்திய குறும்பும் ரசிக்க வைத்தன
இளமையிலே காதல் வரும்
எதுவரையில் கூட வரும்
முழுமைப்பெற்ற காதலென்றால்
முதுமையிலும் கூட வரும்
உண்மை உண்மை உண்மை
நண்பர் விமலாதித்தன் அவர்களே உங்கள் பின்னூட்டத்தைப் படித்ததும் என் மனைவியைப் பிடிக்க முடியவில்லை! நன்றி நன்றி
Deleteநண்பர் கரந்தையாரே எனது பதிவுகளின் அடியுரமே உங்கள் பின்னூட்டந்தான்; நன்றி
Deleteஎன்னே அழகு...!!!
ReplyDeleteநண்பரே வருகைக்கும் தருகைக்கும் நன்றி
Deleteவாண வேடிக்கை.... வான வேடிக்கையானது எனும்போது சொல் விளையாட்டை ரசித்தோம். கூடவே தங்களது சுற்றுச்சூழல் பற்றிய கவலை இந்த பூமிப் பந்தின் மீது தங்களுக்கு இருக்கும் காதலை உணர்த்தியது.
ReplyDeleteஎன் பதிவுகளின் மீதான உங்கள் பார்வை தனித்துவம் வாய்ந்ததாகவே உள்ளது. நன்றி. தொடர்ந்து வருக.
DeleteWe too were with you at Niagara Falls.I don't know how you missed us unnoticed.Anyway we appreciate your spirit of publishing fantastic pictures
ReplyDeleteஉற்சாகமூட்டும் பின்னூட்டம். நன்றி
Deleteஉலகின் அற்புத அருவி நயாகராவை கண்முன் நிறுத்தியதிற்கு நன்றி!
ReplyDeleteஎன் பயணக் கட்டுரைகளை விரும்பிப் படிக்கிறீர்கள்; நன்றி
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThank you very much for bringing before my eyes the picturesque view of the Niagara. Every one of your articles is a gem.
ReplyDeleteThank you for your nourishing feedback
Deletevery nice details of the visit and the write up with apt words. Though I visited in 2001 now i had an opportunity to see u all in your memorable trip. Best wishes
ReplyDeleteI cherish your compliments; thank you
Deleteஎத்தனை அழகு இந்த அருவிகள்.... இந்தியாவில் சில அருவிகளைக் கண்டதுண்டு.... உங்கள் மூலம் நயாக்ராவும் மானசீகமாக் கண்டு களித்தேன்..... மிக்க நன்றி ஐயா.
ReplyDeleteபதிவினைப் படித்து நிறைவு செய்தபோதிலும், புகைப்படங்களைவிட்டுச் செல்ல மனம் மறுக்கின்றது.
ReplyDeleteபஞ்சபூதங்களில் ஒன்று நீர். இயற்கையின் அழகைப் போற்றாத கவிஞர்கள் எவரும் இல்லை. அதிலும் நீரில் தொடங்கி நீரில் முடிவது மனிதனின் வாழ்கை. அருவியின் ஆர்பரிக்கும் ஓசை ஒரு இசை அது செவிகளுக்கு இன்பம். அருவியிலிருந்து விழும் நீர் கண்களுக்கு விருந்து. நம் உடலில் தெரிக்கும் சாரல் உடலுக்குப் புத்துணர்வு. அனைத்தும் வழங்குவது தான் நயாகாரா நீர்வீழ்ச்சி. அருமை.
ReplyDeleteபேராசிரியர் ரா.லட்சுமணசிங்
கரூர் - 5
இங்கு இந்தியாவில் பல அழகு அருவிகளைக் கண்டு மகிழ்ந்ததுண்டு. குளித்ததும் உண்டு. நயாகராவின் அழகையும் உங்கள் பதிவின் மூலம் கண்டோம்...அருவிகள் அழகுதான்....
ReplyDeleteகீதா