அண்மைக் காலத்தில் புத்தகச் சந்தையில் குழந்தைகளுக்கான அழகிய நூல்கள் அணிவகுத்து வருகின்றன. பொதுவாக வழவழப்பான தாள்களில் வண்ணப் படங்கள் அச்சடிக்கப்பெற்ற புத்தகங்களைப் பார்த்திருக்கிறோம். அளவில் பெரியதாய் நீள் சதுர வடிவில் இருக்கும். எளிதில் கிழியாத தாள்கள், கெட்டி அட்டையிலான கட்டமைப்பு ஆகியவற்றுடன் இருக்கும் என்பதையும் அறிவோம்.
இங்கே கனடாவில் இரண்டு வயது கூட நிரம்பாத என் பேரனுக்கு வீட்டில் ஒரு சிறு நூலகம்
உள்ளது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். என் மகள் முப்பதுக்கும் மேற்பட்ட
புத்தகங்களை வாங்கி வைத்துள்ளாள். என் பேரன் காலையில் கண் விழித்ததும் ஒரு புத்தகத்தை
எடுத்துப் புரட்டுவதை முதல் வேலையாய்க் கொண்டுள்ளான்.
இந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றும் என் கண்ணுக்குப் புதுமையாய்த் தோன்றுகிறது.
நான் இதுவரை நம்மூரில் பார்த்த புத்தகங்களிலிருந்து இவை வடிவத்தில், வண்ணத்தில், பயன்பாட்டில்
மாறுபட்டவை. இந்தப் புத்தகங்களை என் பேரனைக்காட்டிலும் நான்தான் அதிகமாக நேசிக்கிறேன்;
வாசிக்கிறேன்; யோசிக்கிறேன்.
என் பேரன் காரில் செல்லும்போது அவனுக்கு மிகவும் பிடித்த ஒரு புத்தகம் அவன்
கூடவே செல்லும். அப் புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ள விலங்குகளை அவன் தொட்டால் ஒலி வரும்.
புலி உறுமும்; சிங்கம் கர்ஜிக்கும்; யானை பிளிறும்!
இன்னொரு புத்தகத்தில் ஒரு கடிகாரம் இருக்கும். பதினைந்து நிமிடங்கள் மட்டும்
ஓடும். அதைத் தொட்டால் பல இசைகள் ஒலிக்கும்.
மற்றுமொரு புத்தகம். அதன் ஒரு பக்கத்தில் திரைச்சீலை தொங்குவது போல் ஜன்னல் படம் உள்ளது. அந்தத் திரைச்சீலையத் தொட்டால் அது துணி! ஒரு மேசைமீது பழங்கள் இருக்கும் படம். ஆரஞ்சுப் பழத்தைத் தொட்டால் வியப்பு! நிஜ ஆரஞ்சுப் பழத்தின் தோல் கைக்குத் தட்டுப்படுகிறது! ஒரு சிறுமியின் படம் உள்ளது. அவளது தலை முடியைத் தொட்டு உணரலாம்! இப்படி பக்கம்தோறும் குழந்தை தன் பிஞ்சு விரல்களால் தொட்டு உணரும் வகையில் முப்பரிமாண நுணுக்கத்துடன் புத்தகத்தை உருவாக்கி உள்ளனர்.
இன்னொரு புத்தகத்தின் நம் ஆட்காட்டி விரல் மட்டும் நுழையும் அளவில் ஒரு வண்ணத்
துணிப்பை பொருத்தப்பட்டுள்ளது. அதன் நுனியில் ஒரு பன்றிக்குட்டியின் முகம் அமைந்துள்ளது.
அதனுள் விரலை நுழைத்து ஆட்டியபடி படித்தால் பன்றிக்குட்டி படிப்பது போலவே இருக்கும்.
குழந்தை அதைப் பார்த்துச் சிரித்து மகிழ்கிறது!
ஒரு புத்தகத்தில் முயல் குட்டி தன் இருகைகளையும் அசைத்துப் பேசும் வகையில் வடிவமைத்துள்ளனர்! (காணொளியை இயக்கிப் பார்க்க.)
குழந்தைகளுக்காக நல்ல, தரமான, விலை அதிகம் உள்ள புத்தகம் வாங்கிக் கொடுப்பது
செலவு அன்று. அது முதலீடு என்பதை பெற்றோர் முதலில் உணர வேண்டும்.
முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.
Read to lead! 😊
ReplyDeleteமிக அருமையாக புதுமையான ஆச்சரியப்படக்கூடிய தகவலை கூரிய வடிவில் கூறியமைக்கு நன்றி சார்.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் எழுத்திற்கும் மூப்பே கிடையாது. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்
அருமை. ஆமாம் ஐயா அங்கு குழந்தைகளுக்கான புத்தகங்கள் மிகவும் ஈர்க்கக் கூடியவை. குழந்தைகளை மட்டுமல்ல நம்மையும்.
ReplyDeleteஎன் மகன் கால்நடை மருத்துவம் படிக்கும் போது பயன்படுத்திய ஒரு புத்தகம் அவன் ஆர்வமுடன் படித்த புத்தகம் வேறு ஒன்றுமில்லை அதில் விலங்குகள் மருத்துவர்கள் எல்லாருமே ஒரு கதாபாத்திரம் போன்றும் கார்ட்டூன் போலவும் உரையாடல்களில் நகைச்சுவை கலந்து புத்தகம். ஒவ்வொரு விலங்கின் உபாதைகளுக்கு மருத்துவர்கள் சொல்லும் மருத்துவக் குறிப்புகள் என்று எல்லாமே இப்படி. நினைவில் வைத்துக் கொள்ளவும் வசதி. நானும் அதை வாசித்து ரசித்தேன்.
குழந்தைகளுக்கான புத்தகங்கள் என்றால் அது தனிதான் அங்கு.
ஒரு சிலரிடம் பழகியபோது ஒரு விஷயம் நான் தெரிந்து கொண்டது அதாவது அவர்கள் எதையும் ஓர் ஆர்வத்துடன், ஈடுபாட்டுடன், லயித்துச் செய்வது.
கீதா
குழந்தைகளுக்காக நல்ல, தரமான, விலை அதிகம் உள்ள புத்தகம் வாங்கிக் கொடுப்பது செலவு அன்று. அது முதலீடு என்பதை பெற்றோர் முதலில் உணர வேண்டும்
ReplyDeleteஉண்மை
குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் தரமான புத்தகங்கள் எவ்வளவு அழகாகத் தயாரிக்கிறார்கள்!
ReplyDeleteதுளசிதரன்
அறுமை ஐய்யா.
ReplyDeleteமுப்பரிமாண நுட்பம் குறித்து 20 ஆண்டுகளுக்கு முன் ஹாரி பாட்டர் புதினத்தில் கற்பனையாக படித்திருக்கிறோம்.
இப்போது அறிவியலால் நிஜமாகி வருவது அருமை.