கனடா நாட்டில் மழைக்காலம் தொடங்கி நான்கு மாதங்கள் ஆகி விட்டன. இங்கே மழைக்காலம் என்றால் மழை பெய்யாது; மாறாகப் பனிதான் பெய்யும். பனியே நம்மூர் மழைபோல் பெய்வதால் மழைக்காலம் என அழைக்கிறார்கள் போலும்!
இங்கே மழைக்காலத்தில்
வெப்பநிலை எப்படியிருக்கும் தெரியுமா?
வெப்ப நிலையே இருக்காது. தட்ப நிலை மட்டுமே நிலவும். -1 முதல் -40 வரை தட்பநிலை ஊசலாடிக் கொண்டிருக்கும். வீட்டைவிட்டு வெளியில் செல்ல முடியாது. விண்வெளிப் பயணத்திற்குத் தயாராவதுபோல் பல்வேறு
வெப்ப உடைகளை ஒன்றன்மேல் ஒன்றாக
அணிய வேண்டும். கால்களில் இந்தப் பருவத்திற்கே உரிய காலுறைகளையும்
ஷூக்களையும் அணிய வேண்டும்.
கைகளிலும் உறைகளை அணிய
வேண்டும். இல்லாவிட்டால் ஊசி குத்தினால் வலிக்குமே
அப்படி வலிக்கும்.
சுருக்கமாகச் சொன்னால்
ஒருவர் வெளியே சென்றால் வாயும் கண்ணும் மூக்கும் மட்டுமே மூடப்படாமல் இருக்கும். இக் காலத்தில் மூக்கையும் மூடும்படி முகக்கவசம்
அணிவதும் கட்டாயம்.
நாள்தோறும் நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் நான், நான்கு மாதங்களாக வெளியில் செல்லவில்லை. ஆனால் இங்கேயே வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் வெளியில் செல்கிறார்கள். தங்கள் வீட்டின் முன் மலையாய்க் குவிந்து கிடக்கும் பனிக்குவியலை வெட்டி அப்புறப்படுத்துகிறார்கள். குழந்தைகளை அழைத்துச் செல்ல பள்ளிப் பேருந்துகள் வருகின்றன. குழந்தைகள் மகிழ்ச்சியாகப் பள்ளி செல்கிறார்கள். பெற்றோர் கட்டித் தழுவியும், கையசைத்தும் அனுப்புகிறார்கள். எல்லாம் பனிப்பொழிவுக்கிடையே இயல்பாக நடக்கின்றன!
கடும் பனிப்பொழிவை
இந்த நாட்டுக் குழந்தைகள் மகிழ்ச்சியாக்க்
கொண்டாடுகின்றனர். பனித்துகள்களை அள்ளி ஒருவர் மீது ஒருவர்
வீசி விளையாடுகிறார்கள்.
சிலர் மல்லாந்து படுத்துக்கொண்டு
முகத்தைத் தவிர்த்து
உடல் முழுவதையும் பனிக்குள்
புதைத்துக் கொள்கிறார்கள்.
மற்றும் சிலர் பனிப்பொம்மை செய்து பொழுது போக்குகின்றனர். சிலர் உறைபனி மீது சறுக்கி விளையாடுகிறார்கள். இவை அனைத்தையும் எங்கள் வீட்டின் சாளரம்
வழியே பார்க்கின்றேன்.
இந்தப் பனிப்
பருவத்தில் வீட்டின் கருமை நிற மேற்கூரைகள் பனிப்பொழிவால் வெள்ளி முலாம் பூசிக்கொண்டு
வெய்யிலில் தகதகவென்று மின்னும்!
ஒவ்வொரு நாளும் Snow plow என்று அழைக்கப்படும் ஒரு நகராட்சி வண்டி வந்து சாலையில் கிடக்கும்
பனிக்குவியலை அப்புறப்படுத்தும் காட்சியைப் பார்க்க வியப்பாக இருக்கும். மற்றொரு வண்டி வந்து உப்புத்தூளைச் சீராகத்
தெளித்துக்கொண்டே செல்லும்.
பனி உறைந்து வழுக்காமல்
இருக்க இந்த ஏற்பாடு.
எந்தப் பனி
எவ்வளவு கொட்டினாலும் தூய்மைப் பணியாளர்கள் உரிய வாகனத்தில் வந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தனித்தனியே சேகரித்துச்
செல்கின்றனர்.
சிலசமயம் பனிப்புயல்
வீசும். மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் பனிக்காற்று வீசும்போது நமக்கு
அடிவயிறு சற்றே கலங்கும்!
இந்த மாறுபட்டச் சூழலில்
பறவைகள் பறப்பதில்லை.
ஆனால் ஒன்றிரண்டு காகம்
பறப்பதைப் பார்த்திருக்கிறேன்.
நாம் எந்த நாட்டிலும்
எந்தச் சூழலிலும் வாழ்வதுபோல்,
நம் ஊர் காகங்களும்
இங்கே தகவமைத்துக் கொள்கின்றன!
கரடி, முயல், நரி இன்னும் பெயர் தெரியாத விலங்குகள் எல்லாம்
நீள் உறக்கத்திற்குச் சென்றுவிடுகின்றன. இந்த
மோசமான பருவநிலை முடிவுற்றால்தான் அவை விழித்தெழும்.
மரங்கள் எல்லாம்
இலைகளை உதிர்த்துவிட்டு அம்மணமாய் நின்றாலும் அழகாக உள்ளன! ஒற்றைக் காலில் நின்று கடுந்தவம் புரியும்
தவ யோகியரைப் போல என் கண்ணுக்குக் காட்சியளிக்கின்றன.
பொதுவாக மார்ச்
முதல் வாரத்தில் பனிப்பொழிவு குறையும். ஆனால்
இந்த ஆண்டில் இன்னும் தொடர்கிறது.
இது குறித்து இங்கே
ஒட்டாவா நகரில் வசிக்கும் என் நண்பர்
திண்டுக்கல் முருகானந்தம் முக நூலில் எழுதிய கவிதை இப்போதைய சூழலுக்கு மிகப் பொருத்தமாய் உள்ளது:
கொட்டும் பனி
நிற்கவில்லை
கடுங்குளிரும் குறையவில்லை!
தை மாச தரை
நடுக்கம்
மாசி வந்தும் போகவில்லை!
ஊசி போலக்
குத்தும் இந்த
ஊதக்காத்து நிற்கவில்லை!
சாலை ஓரம்
ஒதுக்கி வைத்த
உறைபனிதான் உருகவில்லை!
வீதி மீது
வாகனங்கள்
வழுக்காமல் போவதற்கு
உப்புத்தூள்
தூவும் பணி
நகராட்சி நிறுத்தவில்லை.
தெக்க போன
பறவைக் கூட்டம்
திரும்பும் நேரம் வரவேயில்லை
வெளிச்சம்
தரும் சூரியனால்
வெப்பம் தர இயலவில்லை!
கையுறையும் குல்லாவும்,
கனமான
காலணியும்
கழற்றி
எறிவதற்குக்
காலம்
இன்னும் வரவில்லை!
மிகவும் நன்றி, நண்பரே
ReplyDeleteபனிப்பொழிவு அதிகமாக இருக்கும் நாட்கள் கடினமானவை தான். வெளியிலிருந்து பார்க்க அழகாய் இருந்தாலும், அங்கேயே இருப்பவர்கள் படும் அவதிகள் அதிகம் தான்.
ReplyDeleteNice narration & candid photos!
ReplyDelete