Friday, 21 October 2022

மனத்தில் நிற்கும் மனோ சாலமன்

    இந்த முறை நாங்கள் மகிழுந்தில் சென்னைக்குச் சென்றபோது முற்றிலும் மாறுபட்ட சாலையோர விடுதி ஒன்றைக் கண்டோம். மேல்மருவத்தூருக்கு அருகில், அச்சிறுபாக்கம் என்னும் ஊரில் நான்கு வழிச் சாலையை ஒட்டி இந்த அழகிய விடுதி அமைந்துள்ளது.

     இந்திய இராணுவத்தில் திறம்படப் பணியாற்றியவர் மனோ சாலமன். பணி நிறைவுக்குப் பிறகு சமுதாய நலனை இலக்காகக் கொண்டு ஒரு வணிகம் செய்ய விரும்பினார். சென்னையிலிருந்து திண்டிவனம் செல்லும் சாலையின் ஓரத்தில், சரியாக 99ஆவது கிலோமீட்டர் தூரத்தில் 50 செண்ட் நிலத்தை வாங்கி ஒரு விடுதியை அமைக்கத் திட்டமிட்டார். பார்ப்பதற்கு வியப்பூட்டும் வகையில் மிக உயரமான, இதுவரை நான் பார்க்காத வடிவமைப்புடன் தகட்டுக்கூரையுடன் கூடிய பெரிய விடுதியைக் கட்டி முடித்து வணிகத்தை மிக எளிமையாகத் தொடங்கினார்.

    நாங்கள் சென்ற நாள் விடுதியின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவைக் குறிக்கும் நாளாக அமைந்தது. விடுதியின் உரிமையாளரே முகமும் அகமும் மலர வாடிக்கையாளர்க்கு இனிப்புகளை வழங்கி வரவேற்றார்.

வெள்ளைச் சட்டை அணிந்திருப்பவர் மனோ சாலமன்

    நாம் வீட்டிலிருந்து எடுத்துச் செல்லும் உணவை இவ் விடுதியின் கூடத்தில் அமர்ந்து உண்ண அனுமதி உண்டு. மிகவும் தூய்மையான மேசை, இருக்கைகள் உள்ளன. உடனுக்குடன் தூய்மை செய்வதற்குப் பணியாளர்களும் உள்ளனர்.

   “சாலையோரத்தில் வண்டியை நிறுத்தி, கொண்டுவந்த உணவை நின்றபடி உண்பது பாதுகாப்பானது அன்று. எனவே எங்கள் விடுதிக்கு வந்து அமர்ந்து உண்ணுங்கள்என எழுதி வைத்துள்ளனர். ஆனால் வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவு சைவ உணவாக இருக்க வேண்டும்.

   நாங்கள் கொண்டு சென்ற எலுமிச்சம் சாதத்துடன் அங்கே விற்கப்பட்ட வாழைப்பூ வடையைச் சேர்த்து உண்டோம்; வயிறும் மனமும் நிறைந்தது.

     விடுதியின் கழிவறைகள் படு தூய்மையாய் உள்ளன. அடிக்கடி தூய்மை செய்ய பணியாளர் உள்ளனர். இவற்றைப் பயன்படுத்த எந்தக் கட்டணமும் இல்லை.

    சைவ உணவு வகைகள் மட்டும் கிடைக்கும். சிறுதானியங்களில் செய்யப்படும் உணவு வகைகள் சுவையாகவும் தரமாகவும் உள்ளன. செக்கு எண்ணெய் மட்டும் அதுவும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என அறிந்தபோது மிகவும் வியப்படைந்தேன். இங்கேபாக்கெட் பால்பயன்பாடு இல்லை. அன்றாடம் பால் கறக்கும் இடத்தில்  நேரில் சென்று வாங்கி வருகிறார்கள்.

     மண்பாண்டங்கள், அழகுப் பொருள்கள், மூலிகைப் பொடிவகை விற்பனையும் உண்டு. பாரம்பரிய இனிப்பு, கார வகைகள் விற்பனையும் நன்றாக நடக்கிறது. அதிக விலை என்றும் சொல்ல முடியாது.

    குடிப்பதற்கு மூன்று விதமான நீர் கட்டணமின்றி கிடைக்கிறது. நான் நன்னாரி கலந்த நீரை அருந்தினேன். நன்றாகவே இருந்தது.

    நமது வாகனங்களை வசதியாகவும், பாதுகாப்பாகவும் நிறுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

இவ் விடுதி தொடர்பான நம்ப முடியாத செய்திகள் பல உள்ளன.

காலை 5.45 மணி முதல் இரவு 9.30 மணி வரை மட்டுமே இயங்கும்.

இரவில் வாகன ஓட்டுநர்கள் மட்டும் இங்குள்ள கழிவறை வசதியைக் கட்டணமின்றிப் பயன்படுத்தலாம். சற்று நேரம் படுத்து ஓய்வெடுக்கவும் வசதி உண்டு; கட்டணமில்லை.

இங்கே பணியாற்றுவோர் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த எளிய குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள்வெளியூர், வெளி மாநிலத்தவர்க்கு இங்கு பணிவாய்ப்பு இல்லை.

   “இவ் விடுதியின் மூலம் கிடைக்கும் வருவாயில் பெரும்பகுதியை மனவளர்ச்சி இல்லாத குழந்தைகளுக்காகச் செலவிடுகிறேன்என்று விடுதியின் உரிமையாளர் மனோ சாலமன் சொன்னபோது என் கைகள் தாமாகவே அவரை நோக்கி வணங்கின.

அடடா விடுதியின் பெயரைச் சொல்லவில்லையே.

99 K.M Coffee Stop

6 comments:

  1. ஐயா வணக்கம்.
    பணம் சம்பாதிப்பது ஒன்றே வாழ்வின்இலட்சியம் என வாழும் மக்கள் மத்தியில் மனோ சாலமன் ஐயா அவர்களின் நல்ல மனம் பாராட்டுக்குறியது. மனம் நெகிழ்ந்தது. அவர் பல்லாண்டு வாழ இறைவன் அருள்புரிவாராக.

    ReplyDelete
  2. அந்த உயர்ந்த உள்ளத்தை நானும் வணங்கி கொள்கிறேன் ஐயா.

    ReplyDelete
  3. Appreciate his service towards humanity with love.

    ReplyDelete
  4. போற்றுதலுக்கு உரியவர்.
    கடந்த முறை சென்னை சென்றபொழுது இந்த உணவு விடுதிக்குச் சென்றுள்ளேன்.

    ReplyDelete