கோபி வைரவிழா மேனிலைப் பள்ளியில் என்னிடம் படித்த மாணவர் இவர். 1993 முதல் 1995 வரை மேனிலைக் கல்வி பயின்றவர். பின்னாளில் பல் மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று இந்நாளில் இத் துறையில் கொடிகட்டிப் பறக்கிறார். சென்னை சவிதா பல்மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் திறம்படப் பணியாற்றுகிறார்.
இவரது ‘காரியம் யாவிலும் கைகொடுத்து’ வாழ்க்கைத் துணையாய் வலம் வருபவர் மருத்துவர்
கிருபா. இவரும் பல் தொழில்நுட்பத்தைப் முனைப்புடன் கற்றுத் தேர்ந்தவர்.
சென்னையில் ஓர் இடத்தில் பத்துக்குப் பத்து பரப்பளவில் ஒரு மருத்துவ மனையை நடத்திக்கொண்டு
ஓரேர் உழவனைப் போல் காலந்தள்ள இந்த இணையர் விரும்பவில்லை. வந்த வெளிநாட்டு வேலை வாய்ப்புகளையும்
உதறித் தள்ளிவிட்டு, உட்கார்ந்து யோசித்ததன் விளைவாக இன்று தமிழ் நாட்டில் பதின்மூன்று
பல் மருத்துவ மனைகளை நிறுவி பாங்குற நடத்துகிறார்கள். நூற்றுக்கணக்கில் வேலை வாய்ப்புகளை
உருவாக்கித் தந்துள்ளனர். ISO தரச்சான்று பெற்ற மருத்துவமனை என்பது குறிப்பிடத் தக்கது.
எல்லா மருத்துவ மனைகளுக்கும் ஒரே பெயர்தான். i Tooth
Dental Clinic.
ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் சுழற்சி முறையில் இந்த மருத்துவ மனைகளுக்குச்
சென்று காலை ஒன்பது மணிமுதல் இரவு ஒன்பது மணிவரை இருவரும் சிகிச்சை அளிக்கின்றனர்.
மற்ற நாள்களில் ‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து’ இவர்கள் தேர்ந்தெடுத்த பல்
மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். இவர்கள் அளிக்கும் சிறப்புச் சிகிச்சை குறித்த
விவரங்களை www.itooth.in என்னும் இணையத் தளத்தில் காண்க.
இன்று நானும் என் துணைவியாரும் கரூரில் திண்ணப்பா திரையரங்கிற்கு எதிரில் அமைந்துள்ள
மருத்துவ மனைக்குச் சென்றோம். எங்களுக்கென நேரம் ஒதுக்கி இருவரும் எங்கள் பற்களை ஆய்வு
செய்து உரிய சிகிச்சையை உடனடியாகத் தொடங்கினார்கள்.
உடன் பணியாற்றும் மருத்துவர், உதவியாளர் அனைவரிடமும் “இவர் என் தலைமையாசிரியர்”
என அறிமுகப்படுத்தியபோது என் மெய் சிலிர்த்தது!
சிக்கல்களைத் தெளிவாக எடுத்துச் சொல்லி, சிகிச்சை முறைகளையும் புரியும்படியாய்
விளக்கிய பாங்கு என்னை மிகவும் கவர்ந்தது. அறை, அறையில் இருந்த அறைகலன், மருத்துவக்
கருவிகள் எல்லாம் தூய்மையாக இருந்தன.
எனக்கு ஒரு பல்லை எடுக்க வேண்டியிருந்தது. மற்றொரு பல்லில் இருந்த துளையை அடைக்க
வேண்டியிருந்தது. ஸ்கேலிங் எனப்படும் பல்தூய்மையும் தேவைப்பட்டது. என் துணைவியாருக்கு
ஒரு பல் எடுத்தல், பல்தூய்மை செய்தல் மட்டும். இவை எல்லாம் முறையாக செய்து முடித்தபோது
சரியான நேரத்தில் சரியான மருத்துவர்களிடம் சரியான சிகிச்சை பெற்றோம் என்னும் மன நிறைவு
ஏற்பட்டது.
விடை பெறுமுன், மருத்துவக் கட்டணம் குறித்துக் கேட்டேன். ‘இது ஒரு மாணவனின்
குருவுக்கான காணிக்கை’ என்று கூறி வாயில் வரை வந்து இருவரும் வணங்கி வழியனுப்பினர்.
ஓர் ஆசிரியன் தினையளவு செய்த உதவியைப் பனையளவாகக் கொண்டு நன்றி பாராட்டும் மாணவர்
கூட்டத்தின் பதச் சோறாக விளங்குகிறார் என் முன்னாள் மாணவர் மருத்துவர் பெ.செந்தில்நாதன்.
முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.
மகிழ்ச்சி ஐயா...
ReplyDeleteமகிழ்ச்சி அளிக்கிறது
ReplyDeleteArumai iyya ARUMAI
ReplyDeleteமகிழ்ச்சி ஐயா.
ReplyDeleteHappy to hear.
ReplyDeleteஅருமையான மாணவர்கள்.
ReplyDeleteஅருமையான மாணவர். நானும் ஓர் ஆசிரியன் என்பதால் இதனை உணர்வுபூர்வமாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
ReplyDeleteதுளசிதரன்
மகிழ்வான விஷயம் ஐயா. தன் ஆசிரியர் என்பதால் மருத்துவக்கட்டணம் வாங்காமல் செய்ததை வாசித்த போது மனம் நெகிழ்ந்துவிட்டது. பெரும்பாலும் ஆசிரியர்களுக்கு அதுவும் நல்லாசிரியர்களுக்குக் கிடைக்கும் பெருமைகள்.
ReplyDeleteகீதா
கற்றுத்தந்த ஆசிரியரை வணங்குவதும் போற்றுவதும் மிகச்சிறப்பு. ஆசிரிய பெற்றோரின் மகனாகவும் ஆசிரியராய் பணியாற்றியவன் என்ற வகையிலும் உள்ளம் மகிழ்கின்றேன்.
ReplyDeleteகோ.