Wednesday 13 July 2022

வந்ததே அந்த நாள் நினைவுகள் நெஞ்சிலே

    என்னிடம் படித்த மாணவர்களின் பெயர்கள் மறந்து போகின்றன. நண்பர்களின் பிறந்த நாள்கள் என் நினைவில் நிற்பதில்லை. ஆனால் பள்ளியில் என்னுடன் படித்த தோழர், தோழியரின் பெயர்கள் மட்டும் இன்றளவும் மறக்கவில்லை!

   தோழியரைப் பெயர் சொல்லி அழைத்துப் பேசியதாக நினைவில்லை. ஆனாலும் அவர்களுடைய பெயர்கள் அவர்தம் முன்னெழுத்துடன் நினைவில் நிற்கிறதே. அது எப்படி?

    நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கின்ற காலத்தில் சற்றே கூச்ச சுபாவம் உடையவனாகவே இருந்தேன். அதனால் வகுப்புத் தோழியருடன் நெருங்கிப் பழக வாய்ப்புகள் அமைந்தும் அவற்றைத் தவிர்த்தேன். ‘என் கூச்ச சுபாவமே எனக்குப் பாதுகாப்புக் கவசமாக அமைந்து, பல சமயங்களில் நெறி தவறாமல் என்னைக் காப்பாற்றிக் கொள்ள உதவியதுஎன்று காந்தியடிகள் தாம் எழுதிய சத்திய சோதனை நூலில் குறிப்பிடுவார். எனவே என் கூச்ச சுபாவமும் எனக்குக் கிடைத்த வரமோ என்னவோ!

   ஒருபொழுதும் உடன் படித்த சிறுமியரை நான் எள்ளி நகையாடியதாக நினைவில்லை. அவர்களிடம் மிகுந்த கண்ணியத்துடன் நடந்து கொண்டேன். அதற்கு எனக்கு அமைந்த குடிப்பண்பும், ஆசிரியர்களின் கண்டிப்பும், நல்ல நண்பர்களும் காரணம் என நினைக்கிறேன்.

   அந்தக் காலத்து ஆசிரியர்கள் முற்பகல் பிற்பகல் இருவேளையும் வருகைப் பதிவு செய்யும்போது மாணவ மாணவியரை முனை முறியாமல் பெயர் சொல்லி அழைப்பதும்எழுந்து நின்று உரத்தக் குரலில்உள்ளேன் ஐயாஎன்று மாணவ மாணவியர் சொல்வதும் வழக்கத்தில் இருந்தன. ஆசிரியர் பெயர்களைச் சொல்லும்போது நாளும் கூர்ந்து பார்த்துக் கவனித்ததால் இன்றும் உடன்படித்தோர் பெயரும் உருவமும் என் உள்ளத்தில் ஊற்றெனத் தோன்றுகிறது.

    நான் பள்ளி இறுதி வகுப்பில் படித்தது 1969-70 ஆம் கல்வியாண்டு; சுவாமி சிவானந்தா உயர்நிலைப் பள்ளி, பெரியநாயக்கன்பாளையம், கோவை மாவட்டம்.

      “ஒரு செயலைச் செய்யுபோது அச்செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ள வேண்டும்.  ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றது அதுஎன்பார் திருவள்ளுவர். சென்ற வாரம் நண்பர் ஒருவரைக் காண கோவை சென்றிருந்தபோது, என் மனத்தில் நெடுநாளாகக் கிடப்பில் கிடந்த ஒரு திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தேன்.

    நான் படித்த பள்ளிக்குச் சென்று, உதவித் தலைமையாசிரியர் முனைவர் என்.பெரியசாமி அவர்களை அணுகி ஐம்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் அப் பள்ளியில் படித்த விவரத்தைச் சொன்னதும் வியந்துபோனார். அன்புடன் வரவேற்று தேநீர் நல்கி உரையாடினார். என் திட்டம் குறித்துச் சொன்னேன்.

  “என்னுடன் பதினோராம் வகுப்பில் படித்த வகுப்புத் தோழியரில் ஒருவரைச் சந்தித்துப் பேசும் நோக்கத்துடன் கரூரிலிருந்து வருகிறேன்.” என்றேன்.

   “பழைய மாணவர் சங்கப் பொறுப்பாளரைத் தொடர்புகொண்டு, அடுத்தமுறை நீங்கள் வரும்போது தகவல்களைத் தருகிறேன்.” என்றார். சரி எனச் சொல்லி, அவரது தொடர்பெண்ணைப் பெற்றுக்கொண்டு, நான் படித்த பழைய வகுப்பறையின் முன்னால் நின்று அவருடன் ஓர் ஒளிப்படம் எடுத்துக் கொண்டு விடை பெற்றேன்.


    அதே பள்ளியில் எனக்குப் பதினோராம் வகுப்பில் அறிவியல் பாடம் கற்பித்த  ஆசிரியை திருமதி.கே.விஜயலட்சுமி அவர்களைச் சந்தித்துப் பழங்களை நல்கி வணங்கினேன்; நலம் விசாரித்தேன்; ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிப் பயணம் செய்து, பள்ளி நினைவுகளைப் பகிர்ந்து கொண்டோம். பிறகு என் திட்டம் குறித்துச் சொன்னேன்.

   “உன்னுடன் படித்த வசந்தகோகிலம் என்னும் பெண் கணித ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்று இந்தப் பகுதியில் எங்கோ குடியிருக்கிறாள். அவளுடைய கணவர் பெயர் கனகாசலம் என்பதாக நினைவு. அவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்தான்; ஆசிரியர் சங்கத்தில் பொறுப்பாளராகவும் இருந்தார்.” என்றார்.

    அவரிடம் விடைபெற்று வெளியில் வந்ததும் மீண்டும் முனைவர் பெரியசாமி அவர்களை அலைபேசியில் அழைத்துக் கனகாசலம் என்பாரின் தொடர்பெண்ணைப் பெற்றுத் தரும்படி கேட்டேன். அடுத்த அரைமணி நேரத்தில் அலைபேசி எண் கிடைத்தது. கனகாசலம் அவர்களைத் தொடர்பு கொண்டு விவரம் கூறினேன். உடனே இல்லத்திற்கு வருமாறு வேண்டினார்.

   அரை நூற்றாண்டுக்குப் பிறகு என் வகுப்புத் தோழியைக் காணும் என் ஆர்வம் எனது மகிழுந்துக்கும் தொற்றிக்கொள்ள அது கூடுதல் வேகத்தில் விரைந்து சென்றது. இல்லத்தைக் கண்டுபிடித்து அழைப்பு மணியைத் தொட்டவுடன்கனகாசலம் அவர்கள் அன்புடன் வரவேற்றார். வரவேற்பறையில் அமர்ந்து அறிமுகம் செய்துகொண்டோம்.

   உள்ளேயிருந்து தன் பெயரனை கைகளில் ஏந்தியபடி வந்த என் வகுப்புத் தோழி வசந்தகோகிலம் முகமும் அகமும் மலர என்னை வரவேற்றார். எனது அலைபேசியில் சேமித்து வைத்திருந்த பழைய குழுப்படத்தைக் காட்டினேன். பிறகென்ன பழைய நினைவுகளைப் படக்காட்சியாக ஓடவிட்டு அளவளாவி மகிழ்ந்தோம். அந்த வகுப்பில் வேட்டி சட்டையில் இருந்த ஒரே மாணவன் நான்தான் என்பதைத் தன் கணவரிடம் சொல்லிச் சிரித்தார்.

    சற்று நேரத்தில் அவருடைய மகன் மருமகள் இருவரும் வந்து அமர்ந்து உற்சாகமாக முன்னரே பழகியோர் போல உரையாடினர்.

  விடைபெறும்போது நான் எழுதியகவிதைத்தேன்நூலை அளித்தேன். கனகாசலம் அவர்களும் தாம் எழுதிய மணம் கமழும் மலர்கள் நூறுஎன்னும் கவிதை நூலை நினைவுப் பரிசாய் அளித்தார்.   நண்பரின் இல்லத்திற்குத் திரும்பியதும் என் துணைவியாரிடம் நடந்த நிகழ்வுகளைச் சொல்லி சொல்லி மகிழ்ந்தேன்.

 

முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.

   

10 comments:

 1. மறக்கவே முடியாத சந்திப்பு ஐயா... அருமை...

  ReplyDelete
 2. நெகிழ்வான காட்சிகள் ஐயா.

  ReplyDelete
 3. பள்ளி நண்பர்களை பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்கும் பொழுது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு இணையேதும் இல்லை ஐயா...மிக அருமையான பதிவு ஐயா..

  ReplyDelete
 4. INCREDIBLE... MIGHT BE A MAN OF INDOMITABLE SPIRIT

  ReplyDelete
 5. Golden house and sweet memories anna..❤️❤️❤️🥰🧑‍🤝‍🧑👫

  ReplyDelete
 6. அருமையான சந்திப்பு ஐயா. இத்தனை வருடங்கள் கழித்துப் பள்ளி நட்பை சந்திக்கும் இனிய தருணம்.

  அருமை.

  கீதா

  ReplyDelete
 7. வணக்கம் ஐயா.
  முயற்சி திருவினையாக்கும் என்பதை வளர்ச்சிக்குத் தான் உதவும் என்றறிந்திருந்தேன் . தற்போது நட்பு வளர்ச்சிக்கும் உதவியுள்ளது என்பதனை தங்களின் முயற்சியால் தெரிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி.
  எங்களது நட்புப் பெருக்கத்திற்கும் தங்களது நட்பு வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை.
  நன்றி ஐயா.

  ReplyDelete
 8. மாறாத அன்பு மறையாத நினைவு அருமை. நட்புகள் தொடரட்டும். வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. வாழ்ந்த வசந்த நாட்கள்.. வாழ்க!

  ReplyDelete
 10. சேரலாதன் பெரியநாயக்கன்பளையம்8 October 2022 at 13:50

  முயற்சி திருவினையாக்கும்!
  பள்ளியும் பள்ளித்தோழமைகளும் நமக்கு எப்போதுமே இனிமை தரும்

  ReplyDelete