‘சோதனை மேல் சோதனை போதுமடா சாமி’ என்று மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கட்டத்தில் புலம்ப வேண்டியிருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதில் நான் மட்டும் விதி விலக்கா என்ன?
சென்ற மாதம் ஒருநாள் பேரங்காடி ஒன்றில் மூவாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களை வாங்கிவிட்டு வங்கி அட்டை மூலம் பணம் கொடுக்க முயன்றேன். பலமுறை முயற்சி செய்தும் வெற்றுக் காகிதமே வெளியே வந்தது; பற்றுச் சீட்டு வரவில்லை.
வங்கிக் கணக்கில் போதிய பணம் இருந்தது; குறியீட்டெண்ணையும் சரியாகவே இட்டேன். “சர்வர் கோளாறாக இருக்கும். பணமாகக் கொடுங்கள்” என்றார் அந்தப் பெண்மணி. துழாவிப் பார்த்தேன்; நூறு ரூபாய் தாள்கள் மூன்று மட்டும் என்னைப் பரிதாபமாய்ப் பார்த்தன.
நல்லவேளையாகக் கொஞ்சம் அறிமுகமான அங்காடி மேலாளர் கண்ணில் பட்டார்; சிக்கலைச் சொன்னேன். “பரவாயில்லை, அடுத்த முறை வரும்போது கொடுங்கள்” என்று சொல்லி என் மானத்தைக் காத்தார். உள்ளூர் என்பதால் பிழைத்தேன். வெளியூரில் காருக்கு எரிபொருள் நிரப்பியபின் இந்த நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? அன்றிலிருந்து வங்கி அட்டையுடன் மாற்று ஏற்பாடாகப் பணமும் எடுத்துச் செல்வது என முடிவெடுத்தேன்.
சென்ற வாரம் திண்டுக்கல்லில் உள்ள சம்பந்தி இல்லத்திற்குச் சென்று தேநீர் அருந்தியபின் என் கைப்பேசியை எடுத்தேன். அதில் ஓர் அதிர்ச்சி தரும் செய்தி கண் சிமிட்டியது. SIM not installed என்பதே அச் செய்தி. என் மாப்பிள்ளையிடம் கொடுத்துப் பார்க்கச் சொன்னேன். தட்டிக் கொட்டிப் பார்த்துவிட்டு “‘சிம்’ செயலிழந்து விட்டது” என்றார். இனி எந்த அழைப்பும் வராது, செல்லாது என்னும் கூடுதல் தகவலையும் தந்தார். இப்படியொரு சிக்கல் இதற்குமுன் வந்ததே இல்லை. உடனே என் மாப்பிள்ளை ஏர்டெல் கடைக்கு அழைத்துச் சென்றார். புதிய ‘சிம்” ஒன்றை விலை கொடுத்து வாங்கிப் பொருத்தினார். இருபத்து நான்கு மணிக்குப் பின்னரே என் கைப்பேசி முழுமையாக வேலை செய்யத் தொடங்கியது. உள்ளூர் என்பதால் பரவாயில்லை. வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும்போது இப்படி ஆனால் நிலைமை என்னாவது என எண்ணினேன். மாற்று ஏற்பாடாக ஓர் இரட்டை “சிம்’கள் கொண்ட கைப்பேசியை வாங்குவது என முடிவெடுத்தேன்.
நேற்று ஒரு வங்கியின் பணம் அளிக்கும் ATM பொறியில் வங்கி அட்டையை நுழைத்துப் பலமுறை முயற்சி செய்தும் பணம் வரவில்லை. என் வங்கிக் கணக்கில் பணம் இருந்தும் பயன்படவில்லை. நல்ல வேளையாக என் துணைவியார் உடன் இருந்ததால் அவரது வங்கி அட்டையைப் பயன்படுத்திப் பணம் எடுத்தேன். இனி மாற்று ஏற்பாடாக எனது இன்னொரு வங்கி அட்டையையும் வைத்துக்கொள்வது நல்லது என எண்ணினேன்.
என்னுடைய நண்பர் ஒருவர் வட்டாட்சியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். அலுவலக நடைமுறையை வீட்டிலும் பின்பற்றும் வழக்கம் அவருக்கு உண்டு. தன் மனைவிக்கு எதையும் எழுத்து மூலமாகவே சொல்வார். அவரது துணைவியாரும் எழுத்து மூலமாகவே பதிலளிக்க வேண்டும் எனப் பணித்தார். ‘நாளை நம் வேலைக்காரப் பெண் வரமாட்டாள்; மாற்று ஏற்பாடு செய்துகொள்’ என்று ஒரு துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுப்பார். அவரும் ‘அவ்வாறே செய்கிறேன்’ என எழுதிக் கொடுப்பார். ‘நாளை நம் கார் சர்வீசுக்குப் போகிறது; மாற்று ஏற்பாடு செய்துகொண்டு கடைக்குச் செல்’ என்று எழுதிக்கொடுப்பார்.
ஒரு நாள் அவசரமாக அலுவலுகத்திற்குப் புறப்பட்டபோது அவரது துணைவியார், “நான் இன்று மாலை என் அம்மா வீட்டுக்குச் சென்று ஒரு வாரம் கழித்து வருவேன்.’ என்று எழுதிக் கொடுத்தார். அதை வாங்கிப் படித்துவிட்டு, “மாற்று ஏற்பாடு செய்துவிட்டுச் செல்க.’ என்று வழக்கமான அலுவலக நடைமுறையில் எழுதிக் கொடுத்தார். பிறகென்ன அவர் கதை கந்தலாகிப் போனது!
முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.
ஹா.. ஹா.. முடிவில் இப்படியொரு சம்பவம் வரும் என்று நினைத்தேன்.
ReplyDeleteஅதுவே நிகழ்ந்து விட்டது ஐயா.
ஐயா தங்களுக்கு ஏற்பட்டதாக கூறியது போன்ற அனுபவம் எனக்கும் ஏற்பட்டதுண்டு . வட்டாட்சியர் கூறிய மாற்று ஏற்பாடு செய்து விட்டு செல்க நிகழ்வு சிந்திக்க வைக்கும் நகைச்சுவை. நன்றி ஐயா.
ReplyDeleteமுக்கியமான நேரத்தில் இப்படி சிக்கல் வருவதுண்டு...
ReplyDeleteMr.Rengasamy, Rtd HM through whatsapp: நல்ல பதிவு. அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்க நல்ல செய்தி.
ReplyDeleteMr.Ethiraj, Chennai through whatsapp: Great joke !
ReplyDeleteWhat we need to learn from your 1st part of writing is that “learning is a continuous process” and until last.
Dr.Gunasekar through WhatsApp: Good morning! Have read your humorous write up. Nice, I enjoyed.
ReplyDeleteNadayanur Karupannan through WhatsApp: மாற்று ஏற்பாடு
ReplyDeleteமுடிப்பு மிக அருமை
Life will be better if we look back at our problems and find humor !
ReplyDeleteஎன் வாசிப்பு வழக்கம் உங்களால் புத்துயிர்ப் பெற்றுக்கொள்கிறது...உங்களுடன் என்றும் எங்கள் வாசிப்பு தொடர்ந்து பயணிக்கும். மிக்க நன்றி ஐயா.
ReplyDeleteமாற்று ஏற்பாட்டின் முக்கியத்துவத்தை அறிந்துக்கொண்டேன் ஐயா.
ReplyDeleteகதை கந்தல்...அதிகம் ரசித்தேன்.
ReplyDeleteஇந்த மாதிரியான பிரச்சனைகள் வருகிறதுதான். எல்லாவற்றிற்கும் ஒரு மாற்று ஏற்பாடு செய்துவிடலாம் அனால் கடைசில சொன்ன விஷயத்திற்குச் செய்ய முடியுமா!! ஹாஹாஹா சிரித்துவிட்டேன். ஆனால் எதிர்பார்த்தேன் அதை வாசித்து வரும் போதே
ReplyDeleteகீதா