Wednesday, 7 June 2023

தென்காசிச் சங்கமம்

  இடையிடையே அரசியல் வாடை வீசிய காசிச் சங்கமத்திற்குச் செல்லும் வாய்ப்பிருந்தும் நான் செல்லவில்லை. ஆனால் முழுக்க முழுக்க இலக்கிய வாடை வீசும் தென்காசிச் சங்கமத்திற்கு, வள்ளுவர் குரல் குடும்ப நிறுவுநர் திருமிகு சின்னசாமி இராஜேந்திரன் அவர்களின் அழைப்பை ஏற்றுச் சென்று, இரண்டுநாள் தங்கி, திருக்குறள் சான்றோர் பெருமக்களைக் கண்டு, அவர்தம் சொற்பொழிவைக் கேட்டு, ஓர் அமர்வில் ‘மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்’ எனும் தலைப்பில் உரையாற்றி, விழாக் குழுவினர் அளித்த அறுசுவை உணவை உண்டு மகிழ்ந்த பசுமையான நினைவுகள் என் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும்.

    1927ஆம் ஆண்டு திருக்குறள் அட்டாவதானியார் சுப்பிரமணியதாசர் என்ற அறிஞர் பெருமகனால் தோற்றுவிக்கப்பெற்ற தென்காசித் திருவள்ளுவர் கழகம் நடத்தும் 96ஆவது ஆண்டு நிறைவுத் திருக்குறள்  விழாவைத்தான் தென்காசிச் சங்கமம் எனக் குறிப்பிட்டேன்.

  எட்டு நாள் விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட சொற்பொழிவாளர், நூற்றுக் கணக்கில் திருக்குறள் ஆர்வலர், கழிபெரும் ஆர்வம் கொண்ட கல்லூரி மாணாக்கர் என அனைவரும் ஓரிடத்தில் சங்கமிக்கும்  ஒப்பற்ற விழா என்பதால் தென்காசிச் சங்கமம் என்று குறிப்பிட்டேன்.

  இக் கழகத்தின் செயற்பாடுகள் வியக்கத்தக்கன. மாதத்தின் ஒவ்வொரு ஞாயிறு மாலையிலும் திருக்குறள் ஆய்வுக் கூட்டம், மாதத்தின் முதல் ஞாயிறன்று திருக்குறள் முற்றோதல் நிகழ்வு, அக்டோபர் மாதத்தில் ஐந்து நாள் கலைவிழா, தை மாதத்தில் இருநாள் தமிழ் விழா, ஜூன் மாதத்தில் திருக்குறள் வார விழா, நாள்தோறும் மாலை மூன்று மணிமுதல் ஏழு மணிவரை கழக நூலகத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தல், தகுதிமிக்கத் தண்டமிழ்ப் புலவர்க்குப் பட்டங்கள் வழங்கிச் சிறப்பித்தல், தக்கார் எழுதிய நூல்களின் தகுதியறிந்து வெளியிடல் என அனைத்தும் சிறிதும் தொய்வின்றித் தொடர்ந்து நடைபெறுகின்றன.

     இக் கழகத்தின் செயலாளர் தமிழ்ச்செம்மல் ஆ.சிவராமகிருட்டிணன் அவர்களின் தோளோடு தோள் நின்று ஒரு திருத்தொண்டர் படை மேற்காண் செயல்களை ஒரு வேள்விபோலக் கருதி கண்ணும் கருத்துமாகச் செய்கின்றது. இந்த வேள்வியில் வள்ளுவர் குரல் குடும்பமும் இணைந்து கட்டுக்கோப்பாகச் செயல்படுவது பாராட்டத் தகுந்தது.





















   ‘தம்மின் பெரியாரைத் தமராக் கொளல்’ என்னும் குறள் கூற்றின்படி, இந்த விழாவின்போது  பேராசிரியர் தே.ஞானசுந்தரம், பேராசிரியர் அரங்க.இராமலிங்கம் ஆகியோரின் அறிமுகம் எனக்குக் கிடைத்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்.

    ஊர் வந்து சேர்ந்தபின்னும் என் உள்ளம் மட்டும் தென்காசியைச் சுற்றி வருகிறது.

    இராமலிங்க வள்ளலாரின் சமகாலத்தவரான மாயூரம் நீதிபதி வேதநாயகம் பிள்ளை அவர்கள் திருவாவடுதுறை ஆதீனத்தலைவரும் தமிழறிஞருமான மேலகரம் சுப்பிரமணிய தேசிகரைச் சந்தித்து அளவளாவி ஊர் திரும்பியதும் அவர் எழுதிய கவிதை வரியே இன்று என் மனநிலைக்கும் பொருந்தும்.

  ஊர்வந்து சேர்ந்தேன்; என்றன் உளம் வந்து  சேரக்காணேன்

    ஆர்வந்து சொலினும் கேளேன் ; அதனையிங் கனுப்புவாயே.

 

முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.

 

  

    

    

 

    

3 comments:

  1. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது ஐயா.

    விழாத்தகவல்களும் சிறப்பு

    ReplyDelete
  2. சிறப்பான நிகழ்வு ஐயா...

    ReplyDelete