Tuesday, 24 October 2023

நாமக்கல் என்னும் நலம் தரும் சொல்

    உள்ளத்திற்கு வலிமை தரும் கவிதைகளைப் படைத்த நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் வாழ்ந்த ஊர் நாமக்கல். உடலுக்கு வலிமை தரும் முட்டைகளை உற்பத்தி செய்யும் ஊரும் நாமக்கல்தான். எனவேதான் நலம் தரும் சொல் எனக் குறிப்பிட்டேன்.

தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கோர் குணமுண்டு
அமிழ்தம் அவனுடை மொழியாகும்
அன்பே அவனுடை வழியாகும்

மானம் பெரிதென உயிர்விடுவான்
மற்றவர்க் காகத் துயர்படுவான்
தானம் வாங்கிடக் கூசிடுவான்
தருவது மேல் எனப் பேசிடுவான்

என முழங்கிய நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிறந்த நாள் 19.10.1888.

 யாரும் யோசிக்காத ஒரு திட்டத்தைக் கையிலெடுத்து, இடைவிடாது முயன்று அதில் வெற்றி பெற்றுக் கொண்டாடுவது என் வழக்கம். 53 ஆண்டுகளுக்கு முன்னால் கோவையில் பள்ளி இறுதி வகுப்பில் என்னுடன் படித்த வசந்த கோகிலம் என்ற அன்புத் தோழியைச் சென்ற ஆண்டில் தேடிக் கண்டுபிடித்துப் பேசி மகிழ்ந்து கட்டுரை எழுதியது என் வலைப்பூ வாசகர்களுக்கு நினைவிருக்கும். அந்த வகையில் சென்ற வாரம் இந்தத் திட்டத்தை வகுத்தேன்.

   நாமக்கல் கவிஞர் எனப் பெயர் வழங்கினாலும் அது அவர் பிறந்த ஊர் அன்று. அது அவர் வாழ்ந்து மறைந்த ஊர். அவர் பிறந்த ஊர் நாமக்கல் மாவட்டத்திலுள்ள மோகனூர். அந்த ஊருக்குச் சென்று அவர் பிறந்த வீட்டைக் காண வேண்டும் என்பதே என் திட்டம்.

   கரூரில் காலை எட்டு மணிக்குப் புறப்பட்டோம். வாங்கல் என்னும் அழகிய சிற்றூரின் வழியே செல்லும் அகன்ற காவிரியின் மேல் அண்மையில் கட்டப்பட்டுள்ள அழகான மிக நீண்ட பாலத்தின் வழியே சென்றோம். சின்னக் குழந்தை ஆடை அணிந்தாலும் அழகுதான்; ஆடை அணியாவிட்டாலும் அழகுதான். அப்படித்தான் காவிரி ஆற்றில்  நீர் ஓடினாலும் அழகுதான்; ஓடாவிட்டாலும் அழகுதான்! காவிரி ஆற்றைத் தாண்டியதும் மோகனூர் எங்களை வரவேற்றது.

   அங்காங்கே காரை நிறுத்தி விசாரித்தேன். யாருக்கும் நான் கேட்டது புரியவில்லை; காரணம் அவர்களுக்குத் தெரியவில்லை. “அவர் பெயரே நாமக்கல் கவிஞர். மோகனூரில் தேடுகிறீர்களேஎன்றார் ஒருவர். யாராவது பள்ளியாசிரியர் ஒருவரை அணுகிக் கேட்கலாம் என நினைத்துப் பள்ளியைத் தேடிச் சென்றேன்.

    சாலையோரம் ஒருவரைப் பார்த்தவுடன் காரை நிறுத்தினேன். அவரிடம் எனக்கு வேண்டிய தகவல் கிடைக்கும் என என் உள்மனம் சொல்லவே, விவரம் சொல்லி நாமக்கல் கவிஞரின் பிறந்த வீடு எங்குள்ளது எனக் கேட்டேன்.

   “அந்த வீட்டை நாங்கள்தான் வாங்கியுள்ளோம். அக்ரகாரத்தில் உள்ளது.” என்றார்! வியப்பில் மகிழ்ந்தேன்.

அப்படியா, மிகவும் நல்லது. ஒரு நிமிடம் வந்து வீட்டைக் காட்ட முடியுமா?” என்று கேட்டேன். உடனே அவரும் ஒத்துக்கொண்டு, முன்னால் அவர் இருசக்கர வாகனத்தில் செல்ல, நாங்கள் அவரைப் பின் தொடர்ந்தோம்.

    நீண்ட தூரம் சென்றார். எதிரே ஒரு கார் வந்தால் கூட ஒதுங்க முடியாத சிறிய தெருக்கள் வழியாகச் சென்றார்குறிப்பிட்ட இடத்தில் காரை நிறுத்திவிட்டு அவருடன் சென்றோம். அவருடைய துணைவியார் எங்களை அன்புடன் வரவேற்றார். நாமக்கல் கவிஞர் சின்னக் குழந்தையாய் இருந்தபோது துள்ளி விளையாடிய அந்த வீட்டு முற்றத்தில் நாங்கள் நின்று பேசிக்கொண்டிருந்தோம். அந்த வீட்டை அப்படியே சுருட்டி என் காமிராவுக்குள் போட்டுக்கொண்டு நாமக்கல்லுக்குச் சென்றேன்.


   கூகுள் வழிகாட்ட, நாமக்கல் கவிஞர் நினைவு மண்டபத்திற்கு சென்றேன். உள்ளே பெருங்கூட்டம் நிரம்பி வழிந்தது. யாரோ ஒருவர் இனிப்புகளை வழங்கியபடி வெளியே வந்தார். மாவட்ட ஆட்சியர், பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் வந்திருப்பதாய்ச் சொன்னார்கள். அடுத்த பத்து நிமிடங்களில் கூடாரம் காலியானது. உள்ளே என்னைத் தவிர யாருமில்லை. அம் மண்டபத்தில் கிளை நூலகம் இருந்ததால் நூலகர் எனக்கொரு படம் எடுத்து உதவினார்.

   நாமக்கல் கவிஞர் எழுதிய நூல்களின் முழுத் தொகுப்பு நூலகத்திலும் இல்லை நினைவகத்திலும் இல்லை! சில நூல்களே இருந்தன. ஏதோ பெயருக்கென்று மண்டபம் அமைந்துள்ளது. நாமக்கல் கவிஞர் காந்தியடிகளுடன் நெருங்கிப் பழகியவர். காந்தியை நாமக்கல்லுக்கு அழைத்து வந்து பொதுக்கூட்டம் நடத்தியவர். ஆனால் காந்தியும் நாமக்கல் கவிஞரும் இருக்கும் படம் ஒன்று கூட அம் மண்டபத்தில் இல்லை. அவர் பத்ம விருதுகள் பெற்றவர். அந்தப் படங்கள் எதுவும் அங்கே இல்லை.






    ‘திடுக்கிடும் வள்ளுவர்என்பது  பரிமேலழகர் உரையை மறுத்து எழுதப்பட்ட நூல். இது நாமக்கல்லார் எழுதிய ஆகச் சிறந்த ஆய்வு நூல் எனக் கேள்விப்பட்டுள்ளேன். அந்த நூலை அங்கே காணாமல் திடுக்கிட்டேன்.

    விடுதலைக்கு வித்திட்ட பல கவிதைகளை எழுதிக் குவித்தவர்; விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுப் பலமுறை சிறை சென்றவர்; தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் என்னும் சிறப்பினைப் பெற்றவர். இத்தகைய மாமனிதரின் மணி மண்டபம் பெயரளவில் உள்ளதே என்று பெரிதும் வருந்தினேன்.

முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.

..............................

நன்றி: திரு.சரவணன், மோகனூர் அஞ்சலகர்,  எங்களுடன் வந்து நாமக்கல்லார் வீட்டைக் காட்டியவர்.

7 comments:

  1. திராவிட சித்தாந்தம் தமிழ் மற்றும் தமிழர்களின் அடையாளத்தைப் பெயர்த்தெரிகிறது என்பதை உங்கள் வருத்தத்தில் உணர முடிகிறது ஐயா

    ReplyDelete
  2. தி.முருகையன்24 October 2023 at 19:07

    அனைத்து செயல்களுமே பெயரளவில்தான் இருக்கும். அரசியல்வாதிகள் செய்வது அனைத்தும் ஓட்டுக்காகவும் நோட்டுக்காகவும் மட்டுமே ஐயா.

    ReplyDelete
  3. உங்களின் துடிப்பான இந்த தேடலுக்கு என் பணிவான
    பாராட்டுக்கள் ஐயா!

    ReplyDelete
  4. முனைவர் ஐயா அவர்களுக்கு வணக்கம்...

    இது கூத்தாடன், கூத்தாடிகளை கொண்டாடும் கேவலமான சமூகம் இந்த சூழலிலும் நாமக்கல் கவிஞர் திரு. இராமலிங்கம் அவர்கள்
    வாழ்ந்த வீட்டை தேடியலைந்த தங்களுக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கம்.

    ReplyDelete
  5. ஐயா தங்கள் முயற்சிக்கும் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்கள் மேல் தாங்கள் வைத்திருக்கும் பக்திக்கும தலை வணங்குகிறேன்.

    ReplyDelete
  6. திடுக்கிடும் வள்ளுவர் - தானும் தேடுகிறேன்...

    ReplyDelete