Monday 1 January 2024

நாளும் கேட்போம் நலந்தரும் சொல்லை

   ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்என்னும் வள்ளுவரின் கூற்று, செவிடர் செவியில் ஊதிய சங்காகப் போனதோ என்ற ஐயம் எனக்கு அவ்வப்போது எழும்.

  வள்ளுவர் செவியை மட்டும் ஏன் செல்வம் என்று சொன்னார்? கட்செல்வம் என்றோ, மூக்குச்செல்வம் என்றோ, உடற்செல்வம் என்றோ, வாய்ச்செல்வம் என்றோ எங்கும் குறிப்பிடவில்லையே!

   திருஞான சம்பந்தர் தம் முதல் பாடலின் முதல் அடியை தோடுடைய செவியன் என ஏன் தொடங்குகிறார்?

   ஆங்கில மருத்துவத்தில் செவியைச் சிறப்புப் புலன்(Special sense) என்று குறிப்பிடுகின்றனர்.

    பண்டைக்காலத்தில் ஒருவர் சொல்ல, அதைச் சொல்லக் கேட்டவர் மற்றொருவருக்குச் சொல்ல, இப்படி வழி வழியாக இலக்கியங்கள் காலந்தோறும் கடத்தப்பட்டன.

   எழுதிப் படிக்கும் வழக்கம் பிற்காலத்தில் தோன்றியது. நல்லவற்றை, தேவையானவற்றைக் காதால் கேட்டு மனத்தில் நிறுத்தி மனப்பாடம் செய்யும் திறன் வாய்க்கப் பெற்றவர் பலராக இருந்ததால் இன்று நாம் மிகுதியான இலக்கியச் செல்வங்களின் உரிமையாளராய் இருக்கின்றோம்.

   இசையைக் கற்கும் போது செவிகளுக்குத்தான் முக்கிய பங்குண்டு.   செவியால் கூர்ந்து கேட்டால்தான் இசை நுணுக்கங்களை அறிய முடியும். ஒரு மொழியைத் திருத்தமாகப் பேசுவதற்கும் செவிப்புலன் மிகவும் வேண்டற்பாலது. காதால் கேட்டால்தான் சொல்களின் உச்சரிப்பு நம் வயப்படும்.

    ஒரு மகிழுந்து இயங்கும்போது அந்த இயந்திரம் விடுக்கும் ஒலியைக் கேட்டே பழுதுநீக்கும் பணியாளர் இன்ன பழுது என்பதை நொடியில் அறிவார். அந்த அளவுக்கு செவிப்புலன் இன்றியமையாதது ஆகும்.

   இத்தகு சிறப்பு வாய்ந்த செவிகளை,  இப்போது நாம் நல்ல உரைகளைக் கேட்க, நல்ல செவ்வியல் இசைப் பாடல்களைக் கேட்கப் பயன்படுத்தாமல், வீண் பேச்சை, வெட்டிப் பேச்சை, வலையொளியில் வரும் வதந்திகளை மற்றும் செவிப்பறையைக் கிழிக்கும் குத்தாட்டப் பாடல்களைக் கேட்கப் பயன்படுத்துகிறோம்.

   இவற்றை எல்லாம் எண்ணியவாறு இன்று காலையில் நடைப்பயிற்சியை மேற்கொண்டபோது ஒரு வீட்டின் முன் இடப்பட்டிருந்த புத்தாண்டுக் கோலமும், அதன் கீழ் தவறாக எழுதப்பட்டிருந்தஇல்லைமிகச் சரியாக அமைந்துவிட்ட வாசகமும்(HAPPY NEW EAR) என் கண்ணில் பட்டது.



ஆம். இந்தப் புத்தாண்டில் புதிய செவிகளைப் பெற்றுப் பயனுள்ளவற்றைக் கேட்கப் பழகுவோம்.

முனைவர் அ.கோவிந்தராஜூ.

1 comment:

  1. தி. முருகையன்2 January 2024 at 11:36

    அருமை ஐயா. இந்தப் புத்தாண்டில் புதிய செவிகளைப் பெற்றுப் பயனுள்ளவற்றைக் கேட்கப் பழகுவோம். பயனுள்ளவற்றைப் பேசப் பழ(க்)குவோம்.

    ReplyDelete