2023 ஆம் ஆண்டு இன்று நிறைவடைகிறது. திரும்பிப் பார்க்கிறேன். நான் ஏதாவது உருப்படியாகச் செய்திருக்கிறேனா?
வழக்கம்போல்
வலைப்பூவில் எழுதியது,
புலனத் தொடரில் எழுதியது, மாத இதழ்களுக்கு கவிதை எழுதி அனுப்பியது, பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று உரையாற்றியது, வானொலியில் பேசியது, பொதிகைத் தொலைக்காட்சியில் தோன்றியது, நூல் எழுதி வெளியிட்டது – இவையெல்லாம் ஆண்டு தோறும் வழக்கமாகச் செய்வதுதான். இந்த ஆண்டிலும் அவற்றைத் தொடர்ந்து செய்தேன்.
1.1.23 அன்று ‘இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்’ என்னும் பாரதியின் பாடல் வரிக்கேற்ப, நாளும் ஒரு வெண்பா எழுதுவது என முடிவெடுத்தேன். பொதுவாக எதை எழுத எண்ணினாலும் நேரடியாக மடிக்கணினியில்
தட்டச்சு செய்யும் வழக்கமுடைய நான், நாளும்
ஒரு வெண்பா எழுதுவதற்கு ஒரு நோட்டுப்புத்தகத்தை எடுத்துக் கொண்டேன். ஒரு நோட்டு முடிந்து இரண்டாவதிலும் தொடர்ந்தேன்.
எதைப்பற்றி
வெண்பா எழுதுவது என்று யோசித்தேன். பிறகு
எதைப்பற்றியும் எழுதலாம் என முடிவு செய்தேன்.
உண்ணும் உணவே உயர்ந்த மருந்தென
எண்ணி உரைத்ததை
ஏனோ மறந்தனை
கண்டதை உண்ணின்
கணக்கிலா நோயுனை
அண்டுமே தம்பி
அறி.
இது ஜனவரி ஒன்றாம் தேதி நான் எழுதிய முதல் வெண்பா.
தொடர்ந்து எழுத முடியாமல் பல சிக்கல்கள் வந்தன. பயணங்கள், உடல்நலமின்மை, நெருங்கிய உறவுகளின் இழப்பு போன்ற காரணங்களால் சில நாள்களில் எழுத முடியாமல் போனதுண்டு. அந்தந்த மாத இறுதியில் உட்கார்ந்து விடுபட்ட நாள்களுக்கும் வெண்பாக்களை எழுதி நிரப்பி வந்தேன். எடுத்த ஒரு செயலை எப்படியாவது நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்ற வெறி உள்ளத்தில் இருந்ததால், சூளுரைத்த வண்ணம் 365 வெண்பாக்களை எழுதி முடித்துவிட்டேன்.
இன்று நான் எழுதிய நிறைவு வெண்பா இது:
ஒறுப்பதில் இன்பம் ஒருநாளும் கொள்ளேல்
வெறுத்தால் விளையும் வெறுமை உணர்வு
பொறுத்தார் உலகில் பொலிவார்; இதனை
மறுத்தார்
மனங்களில் மாசு.
ஒரு நாளைக்கு நான்கு வரிகள் என்று எழுதத் தொடங்கினேன். இன்று ஒரு நூலாக வெளியிடும் அளவுக்கு வெண்பாக்கள் குவிந்து விட்டன.
சிறுகச் சிறுகச் சேமித்தால் செல்வம் பெருகும் என்பார்கள். எழுத்துக்கும் இது பொருந்தும்.
முனைவர் அ.கோவிந்தராஜூ.
எடுத்த ஒரு செயலை எப்படியாவது நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்று எண்ணி ஒரு நாளைக்கு நான்கு வரிகள் என்று எழுதத் தொடங்கினேன். இன்று ஒரு நூலாக வெளியிடும் அளவுக்கு வெண்பாக்கள் குவிந்து விட்டன. சிறுகச் சிறுகச் சேமித்தால் செல்வம் பெருகும் என்பார்கள். எழுத்துக்கும் இது பொருந்தும். இன்றைய இளம் தலைமுறையினர் தம் வாழ்வில் நாளும் கடைப்பிடிக்க வேண்டிய வேத வாக்கு.
ReplyDeleteநன்றிகள் ஐயா.
வாழ்த்துகள் ஐயா!
ReplyDeleteகீதா