இப்படி
அவ்வப்போது எங்களை அழைத்துச் சென்று திரைப்படங்களைக் காட்டி மகிழும் இணையர் எங்கள்
மதிப்பிற்குரிய மருத்துவர் சங்கரபாண்டியன் – மருத்துவர்
பங்கஜம்.
இவர்களுடன்
படம் பார்க்கச் சென்றால் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. படத்தோடு
சுவையான சோளப்பொரியும் கிடைக்கும்!
படம் தொடங்குமுன்
சில அறிவிப்புகளையும் செய்தனர். வியப்பாக இருந்தது.
"எல்லா விதமான
மின்னணுக் கருவிகளையும் அணைத்து வையுங்கள். படம் ஓடும்போது
அருகில் இருப்பவருடன் பேசாதீர்."
படம் தொடங்கியதும்
ஓர் அதிர்ச்சி இருந்தது! படத்தில் வந்த உரையாடல்கள் எல்லாம் தெலுங்கு
மொழியில் இருந்தன! தமிழில் எடுக்கும்போதே பல மொழிகளில் மாற்றொலி தந்து வெளியிட்டிருப்பார்கள்
போலும். நல்ல வேளையாக நாங்கள் வீட்டில் பேசும் மொழி தெலுங்கு என்பதால்
எந்தச் சிக்கலும் இல்லாமல் படம் பார்த்தோம்.
எனது தனிப்பட்ட
கணிப்பில் இது பார்க்கத் தகுந்த படம் என்பேன். படத்தின்
முதன்மை நடிகர் பிரதீப் ரெங்கநாதன் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார்.
அளவில்லாத
சண்டைக் காட்சிகளின் ஆக்கிரமப்பு இல்லாத படம். காட்சிக்குக்
காட்சி திருப்பங்களை வைத்துத் திரைப்படம் பார்ப்பவர்களைத் திகைக்க வைப்பதில் வெற்றி
பெறுகிறார் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து.
அனுபமா
பரமேஸ்வரன், காயது லோஹர் என்னும் முதன்மை நடிகையர் இருவரும் தம் நடிப்பால்
அசத்துகின்றனர்.
திரைப்படத்தின்
நடுவே ஓர் இடைவெளி இருக்கும். ஆனால் இன்று ஏனோ இடைவெளி இல்லாமல் படத்தை ஓட்டினார்கள். என்றாலும்
157 நிமிடங்கள் போனதே தெரியவில்லை!
சரி, படத்தில்
எடுத்துச் செல்லும் செய்தி ஏதேனும் இருக்கிறதா எனப் பார்த்தேன். இருக்கிறது
என்பதுதான் வியப்பான செய்தி.
குறுக்கு
வழியில் பொறியியல் பட்டம் பெற்று, குறுக்கு வழியில் பணியும் பெற்று இலட்சக்கணக்கில் ஊதியம்
பெறும் ஒருவன், ஒரு கட்டத்தில் தான் செய்தது தவறு, அந்தத்
தவறு காரணமாக பலரது வாழ்வு மறைமுகமாகப் பாதிக்கப்படுகிறது என உணர்ந்து அந்த நொடிமுதல்
அறவழியில் நேர்மையாக வாழ்வை நடத்த முடிவு செய்கிறான்.
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை
நன்று
என்னும் குறள் கூறும் கருத்து இப் படத்தில் இருப்பதாக நான்
உணர்கின்றேன். ஆகவே நான் இப் படத்திற்கு வழங்கும் மதிப்பெண் என்ன தெரியுமா?
நூற்றுக்குத் தொண்ணூறு மதிப்பெண்!
முனைவர் அ.கோவிந்தராஜூ.
No comments:
Post a Comment