மரபு சார்ந்த கவிதை குறித்த யாப்பியல் செய்திகள் கணக்கில் அடங்கா. அண்மையில் ஒரு புதிய யாப்பு வகை குறித்து யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக்கண நூலில் வரும் ஒரு சிறு குறிப்பைப் பார்த்தேன். பின்னர் பிற யாப்பியல் நூல்களையும் படித்து, இந்தப் பாவகை பற்றிய செய்திகளைத் தொகுத்தேன். அவை பின்வருமாறு:
இப் பாவகைக்கு வெளிவிருத்தம் என்று பெயர்.
சிந்தியல் அல்லது அளவியல் பாவாக மட்டும்
அமையும். அதாவது மூன்று அல்லது நான்கு அடிகளை மட்டும் கொண்டிருக்கும். ஒவ்வோர் அடியிலும்
நான்கு சீர்கள் அமையும்; அவற்றைத் தொடர்ந்து ஈரசை அல்லது மூவசை கொண்ட தனிச்சொல் அமையும்.
அதிலும் ஓர் இன்றியமையாத குறிப்பு உண்டு. முதல் அடியில் அமையும் தனிச்சொல்லே அடுத்தடுத்த
அடிகளிலும் அமையும். அடி தோறும் ஓரெதுகை அமையும்.
முதல் அடியில் அமையும் வாய்பாட்டில் மற்ற அடிகளும் அமைந்தால் ஓசைநயம் சிறப்பாக இருக்கும்.
இது வெண்பாவுக்குரிய பாவினம் என்பதால். வெண்டளைகளால்
அமைதல் சிறப்புடைத்து. எனினும் பிற தளைகள் விரவி வரலாம் என்கிறார் மருதூர் அரங்கராசன்.
இக் கருத்தில் பாவலர் ப.எழில்வாணன் அவர்களுக்கும் உடன்பாடு உண்டு.
மேற்காண் விதிகளுக்கு உட்பட்டு விநாயகர்
சதுர்த்தியன்று சில வெளிவிருத்தங்களை எழுதினேன். சிறப்பாக உள்ளதா என்பதை வாசகர்கள்
சொல்ல வேண்டும்.
விநாயகர் வெளிவிருத்தம்
(வெண்டளைகளால் அமைந்தது மா மா விளம் மா)
செய்யும் வினையைச் செயவிடு நன்றே – விநாயகனே
உய்யும் வழியை உரைத்திடு மெல்ல – விநாயகனே
பெய்யும் மழைபோல் பெரிதெனச் செய்க – விநாயகனே.
(வாய்பாடு: மா மா விளம் விளம்)
வையம் போற்றும் வான்புகழ் உடையவன் – நீதானே
ஐயம் இன்றி அருட்கொடை தருபவன் – நீதானே
கையால் தொழுதால் கருணையைச் செய்வதும் – நீதானே.
(வாய்பாடு: மா மா மா மா)
மோதகம் என்றால் மோகம் கொள்வாய் – விநாயகனே
பாதகம் செய்யின் பார்க்க மாட்டாய் – விநாயகனே
வேதனை தீர்க்க விரைந்து வருவாய் – விநாயகனே.
(வாய்பாடு: மா மா விளம் மா)
யானை முகத்தான் அருள்செய வருவான் – யானறிவேன்
பானை வயிறோன் பார்த்திட முக்தி – யானறிவேன்
மோனை போன்ற முதல்வனும் அவனே – யானறிவேன்.
முனைவர் அ.கோவிந்தராஜூ,
(கவிஞர் கருவூர் இனியன்)