தேசியப் பேரிடர் என அறிவிக்கும் அளவிற்குத் தமிழ் நாட்டில் வெள்ளத்தின்
பாதிப்புகள் மிகக் கடுமையாகவும் கொடுமையாகவும் உள்ளன. சென்னை, திருவள்ளூர் மற்றும்
கடலோர மவட்டங்களில் வாழும் மக்கள் வாரக்கணக்கில் வெள்ள நீரால் சூழப்பட்டுப்
பரிதவிக்கின்றனர்.
மின்சார வசதியும் தொலைத்தொடர்பு
வசதியும் முழுமையாக இல்லை. அடிப்படைத் தேவைகளான குடி நீர், உணவு, மாற்றுத் துணி
இல்லாமல் வருந்துகின்றனர். அரசின் உதவிகள் உரியவர்களிடம் உரிய நேரத்தில் போய்ச்
சேர்வதில்லை என்று பாதிக்கப்பட்டோர் கண்ணீர் மல்கக் கூறுகின்றனர்.
நேற்று காலை நான் பள்ளி வளாகத்தில்
நுழைந்ததும் எனது அறைக்கு முதலாம் வகுப்புச் சிறுமி ஓடி வந்தாள். ஒரு பெரிய
பிஸ்கட் பாக்கெட்டை என்னிடம் தந்து, “சென்னையில் என்னை மாதிரி குழந்தைகள் எல்லாம்
வெள்ளத்தால கஷ்டப்படறாங்களாம். இதை அவங்களுக்குக் குடுங்க சார்” என்று சொன்னாள்.
உண்மையில் துன்பப் படுவோருக்கு உரிய நேரத்தில் உதவ வேண்டும் என்ற பாடத்தைச்
சொல்லிக்கொடுத்த அந்தச் சிறுமியைப் பாராட்டி அனுப்பிவிட்டு, தொடர்ந்து நடந்த காலை
வழிபாட்டுக் கூட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் படும் துன்பங்களை
விரிவாக எடுத்துரைத்து, அம் மக்களுக்குத் தேவையான பிஸ்கட், உடைகள் முதலியவற்றைத்
தந்துதவுமாறு வேண்டுகோள் விடுத்தேன்.
பள்ளிக்கல்வித் துறையின்
வழிகாட்டுதலில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் இரண்டாம் தேதி முதல் எட்டாம் தேதிவரை
கொடுத்து மகிழ்வோம் வாரம் கொண்டாடப்படுகிறது. இதனால் மாணவர்களின் இளம்பருவத்தில்
அவர்களுடைய உள்ளங்களில் கொடை உணர்வு பதியம் போடப்படுகிறது. பின் நாளில் அவர்கள்
வளர்ந்து பொருள் ஈட்டும் வயதில் பேரிடர் சமயங்களில் பெரிதும் மனமுவந்து உதவுவார்கள்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை
இயல்பு நிலைக்குக் கொண்டுவருவது என்பது ஊர்கூடித் தேர் இழுக்கும் செயலுக்கு
ஒப்பாகும். அது அரசின் பணி என்று நாம் ஒதுங்கி நிற்றல் கூடது. எல்லோரும் இணைந்து
உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
இன்று காலையில் குழந்தைகள்
வரிசையாக வந்து பிஸ்கட் பாக்கெட்டுகள், உடைகள், சோப், பற்பசை, பேனா, பென்சில்
போன்ற பொருள்களைக் கொடுத்தார்கள். ஒரு ஐந்தாம் வகுப்புச் சிறுமி, “சார் போன மாதம்
தீபாவளிக்கு எங்கப்பா வாங்கிக்கொடுத்த பட்டுப் பாவாடையும் சட்டையும்” என்று
சொன்னபடி பையை நீட்டினாள்; சற்றே தயங்கினேன். “எங்க அப்பா அம்மாவோட அனுமதியோடதான்
எடுத்து வந்துள்ளேன் சார்” என்று சொன்னாள்; நன்றி கூறிப் பெற்றுக் கொண்டேன்.
பிறகு பார்த்தால் ஒரு டெம்போவில்
ஏற்றும் அளவிற்கு பொருள்கள் குவிந்து விட்டன. பிறகுதான் சிக்கலே ஆரம்பித்தது. இதை
எப்படி எடுத்துச் செல்வது எங்கே எடுத்துச் செல்வது யார் மூலமாக யாருக்குக்
கொடுப்பது என்று புரியாத நிலையில், எனது முக
நூல் பக்கத்தில் இந்தச் செய்தியை வெளியிட்டேன்.
அடுத்த அரை மணி நேரத்தில் தகவல்கள்
வந்து குவிந்தன. அவற்றுள் ஒரு செய்தி இது: வேலூரிலிருந்து பத்தாயிரம்
சப்பாத்திகள், ஜாம் பாக்கெட்டுகள், போர்வைகள் முதலிய பொருள்களோடு மற்றும் ஐந்து நீச்சல் வீரர்களோடு
சென்னைக்கு வருகிறோம். இவற்றை எல்லாம் பெற்று முறையாக உரியவர்களுக்கு வினியோகம்
செய்ய யாராவது அங்கே இருக்கிறார்களா?
கோவையில் கல்லூரி மாணவர்கள் ஒன்று
சேர்ந்து சரக்குந்துகள் மூலம் நிவாரணப் பொருள்களை அனுப்புவதாகவும் கரூரில் இருந்து
பொருள்களை அனுப்பினால் பெற்றுக் கொள்வதாகவும் எனது முன்னாள் மாணவர் ஒருவர் செய்தி அனுப்பி, தொடர்புக்குத் தொலைபேசி
எண்களையும் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்காவில் ஹூஸ்டனில் பணியாற்றும்
திருச்சியைச் சேர்ந்த ஒரு பெண் நம்ம திருச்சி டாட் காம் என்னும் இளைஞர் அமைப்பு
நிவாரணப் பொருள்களைச் சேகரித்து அனுப்புவதாகவும் அங்கு உங்கள் பொருள்களைத் தரலாம்
என்றும் செய்தி அனுப்பியிருந்தாள்.
ஆனால் நாங்கள் இங்கு இன்ன
இடத்தில் இருக்கிறோம் பொருள்களைக் கொண்டுவந்து கொடுங்கள் என்ற தகவல் எதுவும்
வரவில்லை. 2004 ஆம் ஆண்டு தமிழ் நாட்டைச் சுனாமி தாக்கிய போது நாகப்பட்டினத்தில்
மலை போல் குவிந்த நிவாரணப் பொருள்கள் உரிய வகையில் வினியோகம் செய்யப்படாமல்
வீணாகிப் போனதை நாளேடுகள்
சுட்டிக்காட்டின.
இப்போதும் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொதுமக்கள் உதவிக்கரம் நீட்டவும் மாணவர்கள் களமிறங்கிப்
பொருள்களைச் சேகரிக்கவும் தயாராக உள்ளனர். அரிமா, ஜேசீஸ், சுழற்சங்கம் போன்ற சமூக
நலச் சங்கங்கள் பொருள் சேகரிப்பு மையங்களையும் வினியோக மையங்களையும் உருவாக்கி
நிர்வகிக்கலாம். மாவட்ட ஆட்சியரகங்களில் வெள்ள நிவாரணப் பொருள்கள் சேகரிப்பதற்கு
ஆவன செய்யலாம். இப் பணிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் சேவையைப்
பயன்படுத்திக் கொள்ளலாம். கரூர் ஆட்சியரகத்தில் இத் தகைய மையம் செயல்படுகிறது. எனது
முகநூல் பக்கத்தைப் பார்த்த ஒரு நாளேட்டின் நிருபர் இந்தச் செய்தியைத் தொலைபேசி
மூலம் தெரிவித்தார். அரசு இது குறித்த அதிகாரப் பூர்வமான விளம்பரங்களை நாளேடுகளில்
தொலைக்காட்சிகளில் வானொலிகளில் வெளியிட்டால் பொது மக்கள் நம்பிக்கையுடன் நன்கொடைப்
பொருள்களை வழங்குவார்கள்.
loading the cartons of bread loaves |
கொடுப்பார் உள்ளார் கொள்வார் இல்லை
என்பதுதான் இப்போதுள்ள நிலைப்பாடு. இந்நிலை மாற வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின்
எதிர்பார்ப்பாகும்.
உண்மைதான் ஐயா
ReplyDeleteஅரசு அதிகாரப் பூர்வ விளம்பரங்களை வெளியிட்டு ஆவண செய்ய வேண்டும்
நன்றி ஐயா
நல்உள்ளங்களுக்கு பாராட்டுகள்...
ReplyDeleteசோதனைக்காலத்தில் கைகொடுக்கும் முயற்சிக்கு பாராட்டுகள்.
ReplyDeleteபௌத்த சுவட்டைத்தேடி 23 ஆண்டு களப்பணியில் கண்ட 29 சிலைகளைக்காண அழைக்கிறேன். http://www.ponnibuddha.blogspot.com/2015/12/23-29_4.html