Sunday 13 December 2015

உதிரும் மொட்டுகள்

   காலை  நாளிதழை விரித்ததும் என் கண்ணில் பட்ட அந்தச் செய்தி என்னைக் கதிகலங்கச் செய்துவிட்டது. சந்தித்த அத்தனை பேரும் அந்தச் செய்தி குறித்தே பேசினார்கள். ஆங்கில நாளிதழிலும் அந்தச் செய்தி வந்திருந்தது.


    ஒரு மகளிர் மேனிலைப்பள்ளியில் விடுதியில் தங்கிப்படிக்கும்  பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பற்றிய செய்திதான் அது. இதற்குப் போய் இப்படிச் செய்வாளோ என்று பெண்கள் கூடிக் கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

   காலையில் ஐந்தரை மணிக்கு அவளுடைய தோழியர் எல்லாம் கீழே இருக்கும் படிக்கும் கூடத்திற்குச் சென்றுவிட தலைவலி என்று சாக்குப் போக்குச் சொல்லிவிட்டு அறையில் தனியே இருந்தவள் தன் துப்பட்டாவை எடுத்து மேலே இருந்த மின்விசிறியில் வீசி கண நேரத்தில் தொங்கிவிட்டாள். சற்று  நேரம் கழித்து வேறொரு புத்தகத்தை எடுப்பதற்காக அங்கு சென்ற அறைத் தோழி  தூக்கில் தொங்கியவளைப் பார்த்துப் பயந்துபோய் ஓடிச் சென்று விடுதிக்காப்பாளரிடம் சொன்னாள்.
    அவள் கதை முடிந்துவிட்டது.

   தன் கைப்பட ஒரு கடிதம் எழுதிவைத்துவிட்டுதான் போயிருக்கிறாள். அந்தப் பள்ளி, பெற்றோரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பள்ளி என்பது உண்மை. அது ஒரு நிதி உதவி பெறும் பள்ளியாகும். நல்ல தலைமை ஆசிரியை, நல்ல ஆசிரியப் பெருமக்கள் பணியாற்றும் பள்ளி என்பது பொதுவான கருத்தாகும். பத்து, பன்னிரண்டாம் வகுப்பில் 100 விழுக்காடு தேர்ச்சி தருவதும் அப் பள்ளியின் தனிச்சிறப்பாகும். இந்த நற்பெயர் ஒரு நொடியில் தவிடுபொடி ஆகியிருக்கும். அவள் எழுதியிருந்த கடிதத்தால் பள்ளி தப்பித்தது.

: “என்னுடைய சாவுக்கு நானே பொறுப்பு; ஆசிரியர்கள் எல்லோரும் என்னையும் பாடங்களையும் நன்றாகவே நடத்தினார்கள்; என்னால்தான் படிக்க முடியவில்லை; வருகிற பொதுத்தேர்வில் என் பெற்றோரின் ஆசிரியர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மதிப்பெண் பெற முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.” என கடிதத்தை முடித்து ஒரு முற்றுப் புள்ளியும் வைத்துவிட்டாள்.

 இவள் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் மிகச் சிறந்த மதிப்பெண் பெற்றவள். பிறகு ஏன் இந்த முடிவை எடுத்தாள்?   பெற்றோரின் வற்புறுத்தலால் தன்  மனத்துக்குப் பிடிக்காத பாடப்பிரிவில் சேர்ந்ததும் காரணம் என ஒரு தகவல் உலவுகிறது.

  ஓர் உளவியலாளர் என்ற முறையில் இது குறித்து  ஆழ்ந்து யோசித்தேன்.

   கடந்த இரண்டு பத்தாண்டுகளில் தமிழ் நாட்டில் ஒரு மோசமான மனநிலை உருவாகிவிட்டது. அது ஒரு மனநோய் கூட . இந்த நோய் பரவத் தொடங்கிய போதே அதற்கு சென்டம் சின்ரோம்(Centum Syndrome)  எனப் பெயரிட்டவன் நான்தான்.    குழந்தைகள்    நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற வேண்டும் என்பது பெற்றோர் மற்றும் , பள்ளிகளின் கனவாக மாறிவிட்டது. இந்த நோய் கடந்த மூன்று ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளையும் தொற்றிக்கொண்டதுதான் கொடுமை. இதனால் அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் இரத்த அழுத்தமும் உயரத் தொடங்கிவிட்டது.  பொதுத் தேர்வை எழுதவுள்ள மாணாக்கச் செல்வங்கள் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.
photo courtesy: google

   உயர் மதிப்பெண் எடுத்தவர்களைத் தலைமீது தூக்கிவைத்துக் கொண்டாடுவதும், குறைவான மதிப்பெண் பெற்றவர்களைப் போட்டு மிதிப்பதும் அண்மைக்காலப் போக்காக உள்ளது. இது முற்றிலும் தவறான அணுகுமுறையாகும்.    எண்பதுகளில் இந்த நிலை இல்லை. 980 மதிப்பெண் எடுத்த என் முன்னாள் மாணவர்தான் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து இப்போது அரசின் உயர் அதிகாரியாக பொது சுகாதாரத் துறை இயக்குநராக உள்ளார்.

   அவரவர் திறமைக்கேற்ப அடைவுத்திறன் இருப்பதுதானே இயல்பு? ஏன் மாணவர்களை வறுத்தெடுக்க வேண்டும்? உண்ண நேரமில்லை; உறங்க நேரமில்லை; சிறிது நேரம் விளையாடவும் நேரமில்லை. வண்டியில் தன் அப்பாவின் பின்னால் அமர்ந்து பள்ளிக்குச் செல்லும் பெண் புத்தகத்தை விரித்துப் படித்தபடியே செல்கிறாள். பாவம்! அவர்கள் தம்  இளமைப் பருவ இன்பங்களை எல்லாம் இழந்துவிட்டுப் பாடப்புத்தகத்தில் புதைந்து கிடக்கிறார்கள்; மனம் புகைந்து கிடக்கிறார்கள்.

   மதிப்பெண் என்னும் அளவுகோலை வைத்துக்கொண்டு மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசும்போது அவமானத்தால் கூனிக்குறுகிப் போய்விடுகிறார்கள். தாமாகவே மற்றவர்களுடன் ஒப்பிட்டுத் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு மன அழுத்தத்திற்கு ஆளாகும் நிலையும் மாணவர்களிடையே மிகுதியாகக் காணப்படுகிறது. தேவையில்லாத முக்கியத்துவத்தை பாழாய்ப்போன மதிப்பெண்ணுக்கு நாம் தருவதுதான் இதற்கெல்லாம் காரணம்.

    படி படி என்று நச்சரிப்பதால், நண்பர்களாக இருக்க வேண்டிய பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களுடைய எதிரிகளாக மாறிவிட்டார்கள். இந்தச் சூழலில்தான் அன்பையும் அரவணைப்பையும் அவர்களுக்கு நாம் தர   வேண்டும். அவர்களைப் புரிந்துகொண்டு யாரும் அன்பு காட்டாத நிலையில்தான் மன அழுத்தத்தைத் தாங்க முடியாத சிலர் நொடிப் பொழுதில் விபரீத முடிவை எடுத்து விடுகிறார்கள். 

    குருட்டு மனப்பாடம் செய்யவைத்து உயர் மதிப்பெண்கள் பெறுவதைவிட, பாடங்களை நன்றாகப்  படித்துப் புரிந்துகொண்டு தேர்வெழுதி  குழந்தைகள் தத்தம் திறமைக்கேற்ப  மதிப்பெண்கள் பெற்றாலே போதும் என்ற மனநிலை மக்களிடையே பெருக வேண்டும்.
    பெண் குழந்தைகளை அதுவும் குறிப்பாக வளர் இளம்பருவத்தில் உள்ள குழந்தைகளைப் பெற்றோர் தம் இல்லத்திலிருந்து பள்ளிக்குச் செல்லுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே விடுதியில் விடுவது குறித்து யோசிக்க வேண்டும்.


    நூறு விழுக்காடுத் தேர்ச்சி என்பது ஒரு மாயை என்று பள்ளிகளும் உணரவேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு பயிற்சி பெற்ற மனநல ஆலோசகரை அழைத்து ஆலோசனை வழங்க ஆவன செய்ய வேண்டும். இது போன்ற மாற்றங்கள் விரைவாக வந்தால் மட்டுமே மலர்ந்து மணம் வீச வேண்டிய மலர்கள் மொட்டாக இருக்கும்போதே உதிர்வதைத் தடுக்க முடியும்.

12 comments:

  1. கல்வித் துறையே தவறான பாதையில் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது ஐயா
    வேதனை வேதனை

    ReplyDelete
  2. சே... என்னவொரு முட்டாள்தனம்...

    ReplyDelete
  3. Lack of love and care is the only reason for such incidents. No body is ready to care about it. Day by day students are losing their self-confidence. Instead they are highly filled with inferiority and lack of confidence. The one and only solution for this issue is in the hands of TEACHERS.

    ReplyDelete
    Replies
    1. I do endorse your view. The Teachers should nullify the pressure received by the children from various quarters.
      Thank you for your feedback.

      Delete
  4. It is the government which is to blame. The government compels the teachers to produce 100% result and they, in turn, force the students to score 100% result. The useless government compels all the schools to promote all the students up to the 9th standard. How can a student who has been promoted in a worthless manner up to the 9th standard get a pass in the 10th standard? Is it a magic?

    ReplyDelete
    Replies
    1. Thank you for your noteworthy feedback.
      What you have pointed is to be pondered.

      Delete
  5. It is the government which is to blame. The government compels the teachers to produce 100% result and they, in turn, force the students to score 100% result. The useless government compels all the schools to promote all the students up to the 9th standard. How can a student who has been promoted in a worthless manner up to the 9th standard get a pass in the 10th standard? Is it a magic?

    ReplyDelete
  6. இன்று சமுதாயத்தில் கல்விப் போட்டி நிலவுகிறது. அது பல பள்ளிகளுக்கும் பொறுந்தும். பயிலும் மாணவர்கள் அனைவரும் இயந்திரங்கள் அல்ல என்பதை பெற்றோரும் ஆசிரியரும் உணர வேண்டும். படிப்பு ஒன்றே வாழ்க்கையல்ல. அவரவர் திறமைக்கேற்ப சமுதாயத்தில் நல்ல உயர்நிலையில் படித்தவர்களை விட நன்றாக வாழ்கிறார்கள். என்ன பண்பில்லாமல் இருப்பார்கள் அவ்வளவு தான். கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்ட மாணவி போல பலரை நான் கேஎள்விப்பட்டிருக்கிறேன். அவர்களது ஒரு நிமிட முடிவில் உயிரும் ஆன்மாவும் அடங்கி விடுதலை பெறுகின்றனர். ஆனால் அவரை ஈன்ற தாய் தந்தையரின் நிலை அவ்ர்களின் இறுதிக்காலம் வரை உணவு உண்ணாமலும், உறக்கம் வராமலும் தவிக்கும் தவிப்பு இருக்கிறதே அதை எழுத்தாலும், சொற்களாலும் வடிக்க் இயலாது. இனிமேலாவது. பள்ளியில் பயிலும் மாணவர்கள்(இருபாலருக்கும்) தங்கள் பெற்றோரை மனதில் நிறுத்தி வாழ்வேண்டும். அதே போன்று தன் பிள்ளைகளின் அரிவாற்றலை அளவிட்டு பேண வேண்டும். இக்கட்டுரை மனதை வலிக்கச் செய்கிறது.

    ReplyDelete
  7. இன்று சமுதாயத்தில் கல்விப் போட்டி நிலவுகிறது. அது பல பள்ளிகளுக்கும் பொறுந்தும். பயிலும் மாணவர்கள் அனைவரும் இயந்திரங்கள் அல்ல என்பதை பெற்றோரும் ஆசிரியரும் உணர வேண்டும். படிப்பு ஒன்றே வாழ்க்கையல்ல. அவரவர் திறமைக்கேற்ப சமுதாயத்தில் நல்ல உயர்நிலையில் படித்தவர்களை விட நன்றாக வாழ்கிறார்கள். என்ன பண்பில்லாமல் இருப்பார்கள் அவ்வளவு தான். கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்ட மாணவி போல பலரை நான் கேஎள்விப்பட்டிருக்கிறேன். அவர்களது ஒரு நிமிட முடிவில் உயிரும் ஆன்மாவும் அடங்கி விடுதலை பெறுகின்றனர். ஆனால் அவரை ஈன்ற தாய் தந்தையரின் நிலை அவ்ர்களின் இறுதிக்காலம் வரை உணவு உண்ணாமலும், உறக்கம் வராமலும் தவிக்கும் தவிப்பு இருக்கிறதே அதை எழுத்தாலும், சொற்களாலும் வடிக்க் இயலாது. இனிமேலாவது. பள்ளியில் பயிலும் மாணவர்கள்(இருபாலருக்கும்) தங்கள் பெற்றோரை மனதில் நிறுத்தி வாழ்வேண்டும். அதே போன்று தன் பிள்ளைகளின் அரிவாற்றலை அளவிட்டு பேண வேண்டும். இக்கட்டுரை மனதை வலிக்கச் செய்கிறது.

    ReplyDelete
  8. இன்று சமுதாயத்தில் கல்விப் போட்டி நிலவுகிறது. அது பல பள்ளிகளுக்கும் பொறுந்தும். பயிலும் மாணவர்கள் அனைவரும் இயந்திரங்கள் அல்ல என்பதை பெற்றோரும் ஆசிரியரும் உணர வேண்டும். படிப்பு ஒன்றே வாழ்க்கையல்ல. அவரவர் திறமைக்கேற்ப சமுதாயத்தில் நல்ல உயர்நிலையில் படித்தவர்களை விட நன்றாக வாழ்கிறார்கள். என்ன பண்பில்லாமல் இருப்பார்கள் அவ்வளவு தான். கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்ட மாணவி போல பலரை நான் கேஎள்விப்பட்டிருக்கிறேன். அவர்களது ஒரு நிமிட முடிவில் உயிரும் ஆன்மாவும் அடங்கி விடுதலை பெறுகின்றனர். ஆனால் அவரை ஈன்ற தாய் தந்தையரின் நிலை அவ்ர்களின் இறுதிக்காலம் வரை உணவு உண்ணாமலும், உறக்கம் வராமலும் தவிக்கும் தவிப்பு இருக்கிறதே அதை எழுத்தாலும், சொற்களாலும் வடிக்க் இயலாது. இனிமேலாவது. பள்ளியில் பயிலும் மாணவர்கள்(இருபாலருக்கும்) தங்கள் பெற்றோரை மனதில் நிறுத்தி வாழ்வேண்டும். அதே போன்று தன் பிள்ளைகளின் அரிவாற்றலை அளவிட்டு பேண வேண்டும். இக்கட்டுரை மனதை வலிக்கச் செய்கிறது.

    ReplyDelete