More என்னும் வெளிநாட்டுப் பத்திரிகை Is India the capital of sexual
abuses? என்னும் தலைப்பிட்டு ஒரு செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது. இது நமக்கு எவ்வளவு பெரிய தலைக்
குனிவு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஆண் பெண் புணர்வு என்பது மிகவும் புனிதமான
ஒன்று என்பதை நமது ஆண் சமூகம் உணரத் தவறிவிட்டது. ஆடு மேய்க்கும் சிறுவன் முதல்
ஆட்சிப் பொறுப்பில் உள்ள அமைச்சர் வரை வன்புணர்ச்சியில் ஈடுபடுகின்றனர் என்னும்
செய்தி நாளேடுகளில் வந்த வண்ணம் உள்ளது. இக் கொடுமையான வன்புணர்ச்சிக்கு ஆளாகும் பெண்களின் வயதைப் பார்த்தால் தலை
சுற்றுகிறது. இரண்டு வயது பெண் குழந்தை கூட இக் கொடுமையிலிருந்து தப்பவில்லை.
அதேபோல் எழுபது வயது மூதாட்டியும் இக் கொடுமைக்கு ஆளாகிறாள்.
இந்தியாவில் ஒவ்வொரு இருபது நிமிடத்துக்கும்
ஒரு பெண் இந்தக் கொடூரத்திற்கு ஆளாகிறாள் என்று அரசு புள்ளி விவரம் தருகிறது.
காவல் துறையின் கவனத்துக்கு வந்ததன் அடிப்படையில் இந்தப் புள்ளி விவரம்
அமைந்துள்ளது. நடக்கும் பாலியல் குற்றங்களில் மூன்றில் ஒரு பங்குதான் வெளிச்சத்துக்கு
வருகிறது என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து. ஏச்சுக்கும் பேச்சுக்கும் பயந்து
எத்தனைப் பேர் வெளியில் சொல்லாமல் இருக்கின்றார்களோ? அவமானம் தாங்காமல் எத்தனைப் பேர்
தம் உயிரை மாய்த்துக் கொண்டார்களோ? தீராத வயிற்று வலியால் பூச்சி மருந்து
குடித்துவிட்டாள் என்று பெற்றோரே பூசி மழுப்பிவிடும் அவலம் தொடரத்தானே செய்கிறது?
எட்டு வயது சிறுவர்கள் முதல் எண்பது வயது
கிழவர்கள் வரை இக் கொடுஞ்செயலில் ஈடுபடுவதாக ஓர் ஆய்வறிக்கைக் கூறுகிறது. இந்த
வன்புணர்வுக் கலாச்சாரம் நாளும் பெருகி வருவதற்கு என்ன காரணம்?
மிக முக்கியமானது பெற்றோரின் வளர்ப்பில் உள்ள
குறைபாடுதான் என உளவியலார் கூறுகின்றனர். சிறுவர்களைச் சொல்லிச் சொல்லி வளர்க்க
வேண்டும்; பார்த்துப் பார்த்து வளர்க்க வேண்டும். திருமணம் ஆவதற்கு முன்னால் எந்தச்
சூழ்நிலையிலும் புணர்வு கூடாது என்பதைப் பெற்றோர் சொல்ல வேண்டும்.
பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும்போது
அல்லது இருவரும் வெளியூர் செல்லும்போது சிறுவர்கள் வீட்டில் தனிமையில்
விடப்படுகிறார்கள். அப்போது கணினியில், கைப்பேசியில் பார்க்கக் கூடாத படங்களைப்
பார்த்து பாலியல் எழுச்சி அடைகிறார்கள். இது அவர்களுடைய ஆழ்மனத்தில் அடைகாக்கப்
படுகிறது. அவர்கள் வளர்ந்து குமரப் பருவத்தை அடையும்போது, எங்காவது சிறுமியர்கள்,
பெண்கள் தனியாக இருக்கும் சூழல் நேர்ந்தால் ஆழ்மனத்தில் உள்ள அந்த அரக்கன்
செயல்படுகிறான். அந்த அரக்கனுக்கு இடம், பொருள், ஏவல் எதுவும் தெரியாது; அந்த
அரக்கனுக்கு, தான் படித்த படிப்பு, வகிக்கும் பதவி, குடும்பப் பாரம்பரியம் என
எதைப் பற்றியும் எண்ணிப் பார்க்கமாட்டான். அந்த அபலைப் பெண் கத்தினாலும்,
கதறினாலும், காலில் விழுந்தாலும் விடமாட்டான். பிறகென்ன? ஐந்து நிமிடத்தில் செய்த தவறுக்காக ஆயுள்
முழுவதும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
இராவணன் ஓர் அரக்கன். மாற்றான் மனைவி எனத்
தெரிந்தும் சீதையைச் சிறைப்பிடிக்கிறான். ஆனால் அவன் அத்துமீறவில்லை. அதனால்தான்
புலவர் குழந்தை தான் எழுதிய இராவண காவியத்தில் இராவணனை வெகுவாகப் பாராட்டுகிறார்.
இந்த இராவணன் என்னும் அரக்கனைவிட இன்றைக்குப் பாலியல் வன்புணர்வில் ஈடுபடும் அரக்கர்கள்
மிக மோசமானவர்கள் என்பதை அறிவுடையோர் எவரும் ஒத்துக் கொள்வார்கள்.
வன்புணர்வில் ஈடுபடும் இழிகுணம் விலங்குகளிடத்தில்
இல்லை என்பதை விலங்கியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கருவுற்ற பெண் விலங்கு,
குறிப்பிட்ட எல்லைக்கு அப்பாலிருந்து வரும் பெண்விலங்கு, இன விருத்தி வயதை எட்டாத
பெண்விலங்கு ஆகியவற்றை எந்த ஆண் விலங்கும் அண்டாது என அவர்கள் மேலும்
சொல்கிறார்கள். ஆனால் ஆறு அறிவு உடைய சமூக விலங்கு எனச் சொல்லப்படும் மனித விலங்குதான் எந்த வரையறையும்
இல்லாமல் இந்த ஈனச்செயலைச் செய்கிறது.
அண்மையில் வந்த ஒரு பத்திரிகைச் செய்தி. மலை அழகைக்
காட்டுவதற்காக அவளை அழைத்துச் செல்கிறான். சென்ற இடத்தில் அவன் வன்புணர்வுக்கு அடிபோட்டபோது அவள் சுதாரித்துக்கொண்டு தான்
எப்போதோ பள்ளியில் கற்ற கராத்தே நுணுக்கத்தைப் பயன்படுத்தி அவளுடைய காதலனை இல்லை இல்லை காமுகனை உதைத்துத்
தள்ளிவிட்டு ஓடிவந்து தன் அப்பாவிடம் சொல்ல, இப்போது அவன் சிறையில் களியைத் தின்று
காலம் கழிக்கின்றான். ஆனால் பாதிக்கப்படும் எல்லாப் பெண்களுக்கும் இத்தகைய
துணிச்சல் வருமா என்பது சந்தேகமே.
ஆண்
பெண் புணர்வு என்பது திருமண பந்தத்தால் நிகழ வேண்டுமே அன்றி மற்ற எந்த
வகையிலும் நிகழக் கூடாது. வன்புணர்வை எல்லா மதங்களும் வன்மையாகக் கண்டிக்கின்றன.
தெய்வமாகக் கொண்டாட வேண்டிய குழந்தைகளை இந்த இழிச் செயலுக்கு உட்படுத்துவது உலக
மகா பாவமாகும். பெண்கள் சமுதாயத்தின் நாற்றங்கால் போன்றவர்கள். அந்த நாற்றங்கால்
சீரழிந்தால் விளைவது எப்படி என்று கேட்பார் தீபம் நா.பார்த்தசாரதி அவர்கள்.
பிறன்மனை நோக்காத பேராண்மைதான் ஓர் ஆண்
மகனுக்கு அழகு என்பார் திருவள்ளுவர். இதை நம் சிறுவர்களுக்குச் சிறுபிள்ளைப்
பருவத்தில் உணர்த்த வேண்டாமா? ஐந்தில் வளைக்கா விட்டால் ஐம்பதில் வளையுமா?
உயர் மதிப்பெண் பெறவைக்கும் பள்ளிகளில்
பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் விரும்புகிறார்கள். உயர் பண்புகளைச் சொல்லித்தரும்
பள்ளிகள் அருகிவிட்டன. அப்படியே ஒன்று இரண்டு இருந்தாலும் அங்கே பெற்றோர் தம்
பிள்ளைகளைச் சேர்க்க முன்வருவதில்லை.
இந்த மோசமான கலாச்சாரம் உலக அளவில்
பெருகிவரும் சூழலில் பெண்கள் விழிப்புணர்வு மிக்கவர்களாக இருக்க வேண்டும்.
படிக்கும்போதும் பணியாற்றும்போதும் கவனமாக இருக்க வேண்டும். ஆடை அணியும்
சுதந்திரம் இருக்கிறது என்றாலும் அது வம்பை விலைக் கொடுத்து வாங்கும் வகையில்
அமைந்துவிடக் கூடாது. நேரம் கெட்ட நேரத்தில் தனியே செல்லக் கூடாது. ஆண்
நண்பர்களோடு சேர்ந்து பயணிப்பது, தங்குவது என்பதை முடிந்தவரையில் தவிர்க்க
வேண்டும்.
பெண் குழந்தைகள் எப்போதும் சிறுவர்களிடமிருந்து
சற்றுத் தள்ளி நின்றே பேச வேண்டும் எனப் பெற்றோர் அறிவுறுத்த வேண்டும். ஆண்கள்
பெண் குழந்தைகளிடத்தில் எங்கே தொட்டால் தவறில்லை எங்கே தொட்டால் சரியில்லை என்பதை
அம்மா சொல்லித்தர வேண்டும்.
முழங்கால், முதுகு மற்றும் மார்புப்
பகுதிகள் தெரியும்படியான ஆடைகளை பெண்குழந்தைகளுக்கு அணிவித்தல் அறவே கூடாது.
அப்படி அணிந்துகொள்ள குழந்தைகள் அடம்பிடிப்பது இயல்பு. கொஞ்சம் கண்டிப்புடன்
இருந்தால் அது தன் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளும்.
என்.லட்சுமி பாலசுப்ரமணியன் அவர்கள் ஒரு
தினமணிக் கட்டுரையில் சொல்லியிருந்த குட்டிக் கதையை இங்கே குறிப்பிடுவது
பொருத்தமாக இருக்கும்.
ஒரு ஆப்பிரிக்கச் சிறுமி வழி தவறிக் காட்டினுள்
செல்ல, எதிரே ஒரு ஓநாய் வந்தது. அவள் ஒதுங்கிச் சென்றாள். “என்னைப் பார்த்தால்
உனக்குப் பயம் இல்லையா?” என்று கேட்டது ஓநாய். “இல்லை” எனச் சொல்லிவிட்டு அவள் நடையைக்கட்ட,
ஒரு கரடி எதிரே வந்து அதே கேள்வியைக் கேட்டதாம். ”இல்லை” என்றபடி நடந்தாள்.
சிறிது தூரம் செல்ல, ஒரு புலி வந்து அதே கேள்வியைக்
கேட்க, அச்சிறுமி அதே பதிலைச் சொல்லிச் சென்றாள். கொஞ்சம் தூரத்தில் ஒரு சிங்கம்
பாய்ந்து வந்து அவள் எதிரில் நின்று கர்ஜித்தது. “நான்தான் காட்டுராஜா. என்னைப்
பார்த்தும் உனக்குப் பயமில்லையா?” என்று அது கேட்டதாம். ”இல்லவே இல்லை” என்று
சொன்னபடி புன்முறுவல் பூத்தாளாம் அச் சிறுமி.
“யாருக்குதான் நீ பயப்படுவாய்?” என்று சிங்கம்
கேட்டதாம். “சிறுமிகளிடம் பேரிளம் பெண்களிடம் வன்புணர்வு செய்யும் ஆண்களை
நினைத்தாலே பயத்தில் உடம்பெல்லாம் நடுங்குகிறது.” என்று அவள் கூறியதைக் கேட்டு
அந்தச் சிங்கம் கண் கலங்கியதாம்.
பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா என்று
எக்காளமிட்ட பாரதி இன்று உயிரோடு இருந்தால் ஆண்கள் ஒழிக என்று அறம் பாடி
இருப்பான்.
படிக்கப் படிக்க மனது வலித்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் *good touch & bad touch* பற்றி பெண் குழந்தைகள் மட்டுமன்றி இருபால் குழந்தைகட்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறோம். ஆனால் இப்போதெல்லாம் *no touch at all* என்று சொல்லித்தான் குழந்தைகளை வளர்க்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
ReplyDeleteஇந்த பிரச்சனைக்கு முக்கிய காரணியாக இருப்பது திரைப்படம் உள்ளிட்ட ஊடகங்கள் தான் என்பதை முதலில் ஊடகங்கள் உணர வேண்டும்.
வளர்கிறோம் என்கிறோம், பெண்ணுரிமை என்கிறோம், ஆனால் பல அவலங்களை அல்லவா எதிர்கொள்கிறோம்?
ReplyDeleteஅருமையான அறிவுரைக்கட்டுரை. சம்பத்தப் பட்டவர்கள் படித்தால் பயன் கிடைக்கும். பெண்கள் பாது காக்கப்படவேண்டிய பொக்கிஷங்கள். நீதிபதி மூ.புகழேந்தி
ReplyDeleteஅருமையான அறிவுரைக்கட்டுரை. சம்பத்தப் பட்டவர்கள் படித்தால் பயன் கிடைக்கும். பெண்கள் பாது காக்கப்படவேண்டிய பொக்கிஷங்கள். நீதிபதி மூ.புகழேந்தி
ReplyDelete