நிலையாமை குறித்துப் பாடிய திருவள்ளுவரின்
திருக்குறள் ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் நிலைத்து நிற்கிறது. ஆனால் அவர்
நினைவாக எழுப்பப்பட்ட சென்னை வள்ளுவர்
கோட்டம் இன்னும் பத்தாண்டுகள் நிலைத்திருக்குமா என்பது சந்தேகமே.
நான் சென்னை செல்லும் போதெல்லாம் வள்ளுவர்
கோட்டத்திற்குச் செல்வதுண்டு. ஆனால் கடந்த ஐந்தாண்டுகளில் அது கைகூடாமல் போயிற்று.
இம்முறை நேரம் ஒதுக்கிப் பார்க்கச் சென்றேன். பார்த்துவிட்டுக் கண்ணீர் மல்க
இப்பதிவை இடுகிறேன்.
ஒரு காலத்தில் சென்னைக்குக் கண்ணாக விளங்கிய
வள்ளுவர் கோட்டம் இன்று சென்னையின் புண்ணாக விளங்குகிறது. ஏனோ நுழைவாயிலை
வேறுபக்கத்திற்கு மாற்றியுள்ளனர். நான் சென்றபோது ஏதோ ஒரு தனியார் நிறுவனத்தின்
விற்பனைப் பொருள்காட்சி அங்கே பரவிக் கிடந்தது.
ஆறாயிரம் பேர் அமரத்தக்க, 220 அடி நீளமும் 100
அடி அகலமும் கொண்ட தூண்கள் எதுவும் இல்லாத அந்த மாபெரும் அரங்கம் இப்போது பொலிவிழந்து காணப்படுகிறது.
மேல் மாடியில் அமைந்துள்ள குறள் மணிமாடம் சிதைந்தும் சீரழிந்தும், உடைந்தும்
உருமாறியும் தோன்றுகிறது.
திருவாரூர் தேர்வடிவில் அமைந்துள்ள, பளிங்குக் கல்லில் ஆன சிற்பத் தேரும், அதன் மேலே
திருவள்ளுவர் சிலை அமைந்த கருவறையும்
பூட்டிக் கிடக்கின்றன. கருவறைக்குச் செல்லும் வேயா மாடப்பகுதி வெறுமனே பாழாய்க்
கிடக்கிறது.
31.1.1976இல் கட்டி முடிக்கப் பெற்ற வள்ளுவர்
கோட்டம் 15.4.1976இல் அன்றைய மேதகு குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது
தொடங்கிவைத்தார். ஏழு ஏக்கர் பரப்பளவில் தொண்ணூற்று ஒன்பது இலட்சம் ரூபாய் செலவில்
கட்டப்பட்டது இன்றைக்கு ஐந்நூறு கோடி ரூபாய் ஒதுக்கினாலும் கட்ட முடியாது. மக்கள்
வரிப் பணத்தில் கட்டப்பெற்ற இம்மாபெரும் கலைக்கூடம் இன்று களையிழந்து
வழிப்போக்கர்களின் தங்குமிடமாகவும், தூங்குமடமாகவும் கிடக்கின்றது.
இதைத் தட்டிக் கேட்க யாருமே இல்லையா?
தமிழ் அறிஞர்களெல்லாம் கட்சிச் சாயம் பூசிக்கொண்டு கண்மூடிக் கிடக்கின்றார்களா?
என்னக் கொடுமையடா இது. சோ சொல்வது போல யாருக்கும் வெட்கமில்லை.
வள்ளுவர் கோட்டம் குறித்து கூகிள் இணையதளத்தில்
பார்த்தால் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் வகையில் ரெவ்யூ போட்டுள்ளார்கள். ஒரு
நாளில் பல நூறு பேர் வருகை தந்த இச் சுற்றுலா மையத்திற்கு இப்போது பத்து பேர்கூட
வருவதில்லையாம்.
இவை எவற்றையும் காணச் சகிக்காமல் வள்ளுவர் கோட்டத்தின்
பின்புறத்தில்(ஒரு காலத்தில் முன்புறமாக இருந்தது) கையிலுள்ள ஒரு நூலைப் படித்தபடி
சிலையாக அமர்ந்துள்ளார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
அழகான கலைச் சின்னங்கள் ஆட்சி மாற்றத்தால்
அலங்கோலமாகிப் போவது எந்த விதத்தில் நியாயம் ஆகும்?
எனவே, வள்ளுவர் கோட்டத்தை மீட்டெடுக்க
எவ்வகையிலேனும் முயற்சி செய்ய வேண்டியது தமிழர்களின் கடமையாகும். சட்ட மன்றத்தில்
குரல் கொடுக்கலாம்; போராட்டம் நடத்தலாம்; உண்ணாவிரதம் இருக்கலாம். தேவை எனின் உயர்
நீதி மன்றத்தையும் அணுகலாம்.
வேதனைதான் ஐயா
ReplyDeleteஆட்சி மாற்றம் என்பது அனைத்திலும் பெரிய பாதிப்பை உண்டாக்குகின்றது.
ReplyDeleteமிகவும் வேதனை தரக்கூடிய சூழல். ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்ட சீரழிவு என்று சொல்லும் கூற்றை ஏற்க முடியாது. ஏனெனில், இந்த நிலை நிச்சயமாக கடந்த 5 ஆண்டுகளுக்குள் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. கடந்த ஆட்சியில் கூட தமிழறிஞர் பெருமக்கள் அன்றைய முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்றும் பயனொன்றும் இல்லை.
ReplyDeleteஉண்மையான பிரச்சனை என்னவென்றால், புதிய திட்டங்களில் ஆர்வம் காட்டும் ஆட்சியாளர்கள், பராமரிப்பு பணிகளில் கவனம் செலுத்துவதில்லை. காரணம் ஊரறிந்த ரகசியம்.......
நண்பர் அவர்களின் உணர்வுகளைத் தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வுகளாகக் கருத வேண்டும். குறையைக் களையும் வழித் தேட வேண்டும். அதை அரசிடம்ஆழப் பதிய வைக்க வேண்டும். முடிவில் நன்மைப் பயக்கும். - நீதிபதி மூ.புகழேந்தி
ReplyDeleteநண்பர் அவர்களின் உணர்வுகளைத் தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வுகளாகக் கருத வேண்டும். குறையைக் களையும் வழித் தேட வேண்டும். அதை அரசிடம்ஆழப் பதிய வைக்க வேண்டும். முடிவில் நன்மைப் பயக்கும். - நீதிபதி மூ.புகழேந்தி
ReplyDeleteதங்களின் மனஉணர்வை மதிக்கிறேன். அய்யன் திருவள்ளுவர் எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் தனது குறட்பாக்களை எழுதியுள்ளார். அரசியல் பற்றி தனி அதிகாரமே படைத்துள்ளார். இன்றைய அரசியல்வாதிகளுக்கு வள்ளுவரால் என்ன பயன் கிட்டப்போகிறது. அவரால் ஏதேனும் ஆதாயம் (டப்பு) கிடக்குமானால் வள்ளுவரைத் தோளில் தூக்கிவைத்துக் கொண்டாடுவர். ஆனால், மக்களுக்கு வாழ்வியல்நெறிகளைத் தானே தந்துள்ளார் அதைவைத்து ஏதும் செய்யமுடியாதே! நெறிகள் அரசியளுக்கு அப்பாற்பட்டதல்லவா? எனினும் வள்ளுவத்தைப் போற்றவேண்டும். தமிழ்நாட்டுப் பாடநூலில் திருக்குறளைப் புகுத்திய அறிஞர் தி.சு.அவினாசிலிங்கம் அவர்களும் அரசியல் களம் கண்டவர், கல்வி அமைச்சராக இருந்து திருக்குறளைத் தமிழரங்கில் நிலைத்திருக்கச் செய்தவர். அவர் வழியில் வந்தவர்கள் ஏனோ மறந்துவிட்டனர். எனினும் எவர் போற்றினாலும் போற்றாவிட்டாலும் திருக்குறள் தனிப்பெருமை உடையது, தமிழனைத் தலை நிமிறச்செய்தது திருக்குறள் தான் என்பதை எவரும் உலகில் மறக்கக்கூடாது.
ReplyDelete