Wednesday, 21 September 2016

மறதியை வென்று மகிழ்வாய் வாழ்வோம்

இன்று(21 செப்டம்பர்)  உலக அல்சீமர்ஸ் தினம்

    மனிதர்களுக்கு வரும் உடல் சார்ந்த  நோய்களைவிட மனம் சார்ந்த நோய்கள் கொடுமையானவை.


      அதுவும் முதுமையில் வரும் மறதி நோய் மனம் சார்ந்த நோய்களில் மிக மோசமானது. காலையில் உண்ட உணவு என்ன என்பது மதியத்திற்குள் மறந்து போகும். நடைப் பயிற்சிக்குச் சென்று திரும்பும்போது வீட்டு அடையாளம் சுத்தமாக மறந்து போகும். யாராவது பெயரைக் கேட்டால் சட்டெனச் சொல்ல வராது.

        இந்த மறதி நோயின் பெயர்தான் அல்சீமர்ஸ் நோய். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அல்சீமர் என்னும் மனநல மருத்துவர் கண்டுபிடித்ததால் இந் நோய் அவர் பெயரால் அமைந்தது.
டாக்டர் அல்சீமர்

     இந் நோய்க்கு இன்னும் சரியான மருந்தினை யாரும் கண்டுபிடிக்கவில்லை. இந் நோய்க்கு வருமுன் காப்பதற்கான வழிமுறைகள் சில உள்ளன.

1.நாள் தோறும் நீண்ட நடைப்பயிற்சி அவசியம்.

2.உடற்பயிற்சியோடு உளப்பயிற்சிகளும் செய்ய வேண்டும். சிறந்த உளப்பயிற்சிகளாவன: சதுரங்க விளையாட்டு, ஆடுபுலி ஆட்டம், கேரம் போர்டு விளையாட்டு, குறுக்கெழுத்துச் சொற்களை எழுதுதல், விடுகதைக்கு விடை காணல், பிற மொழி கற்றல், கணக்குப் போடுதல், நாள்தோறும் நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை நூல்கள் ஏதேனும் 30 நிமிடம் படித்தல்.

3.சமூகப் பணிகளை விரும்பிச் செய்தல்

4.குழந்தைகளுக்குக் கதை சொல்லுதல்

5.நல்ல உறக்கமும் ஓய்வும் அவசியம்

 பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் செல்போனை ஓரம் கட்டிவிட்டு மேற்குறிப்பிட்ட பயிற்சிகளைச் செய்தால் முதுமையில் மறதிநோய் இல்லாமல் மகிழ்ச்சியாக நூறாண்டுகள் வாழலாம்.

-முனைவர் அ.கோவிந்தராஜூ,
மனநல ஆலோசகர், கரூர்.

2 comments:

  1. பயனுள்ள பதிவு ஐயா
    நன்றி

    ReplyDelete
  2. ”ஐந்தில் வளைவது ஐம்பதில் வளையாது” என்பர். இப்பழமொழிக்கு அறிவியல் பார்வை வேறு. குழந்தைகளின் எலும்பு வளையும் தன்மை பெற்றது ஆகையால் குழந்தைகளுக்கு எத்தகைய பயிற்சியை வழங்கினாலும் அது கற்றுக்கொள்ளும். எடுத்துக்காட்டாக யோகாவைக் குறிப்பிடலாம். அதுபோல் இப்பழமொழி நினைவாற்றலுக்கும் பொருந்தும் நாற்பது வயதைக் கடந்தவர்களுக்கு நினைவாற்றலை மேம்படுத்தும் “செல்” அழிவதால் நினைவை இழக்கின்றனர் என்பது மருத்துவக் குறிப்பு. இதைப் பயிற்சியின் வாயிலாக நாம் மேம்படுத்திக்கொள்ளலாம். அறிவியல் தமிழறிஞர் டாக்டர்.வா.செ.குழந்தைசாமி அவர்களுடன் நான் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்ன தகவலை நினைவுபடுத்துகிறேன். ஒரு செயலை அல்லது நினைவில் இருத்திக்கொள்ள வேண்டியவற்றை ஒரு முறைக்குப் பலமுறை திரும்பத் திரும்ப நினைவில் கொண்டுவந்து நிறுத்தினால் போதுமானது என்கிறார். நானும் அவரது ஆலோசனைப்படி வகுப்பு மாணவர்களது பெயர்களை நாளொன்றுக்கு ஐந்து நபர்களது பெயர்களைச் சொல்லவைத்து அனைத்து பெயர்களையும் நினைவில் வைத்துக்கொள்வேன். மறதி என்பதை நான் நோயாகக் கருதவில்லை அதற்கு மருந்து வேண்டியதில்லை மாறாகப் போதிய முயற்சியும் பயிற்சியும் தொடர்ச்சியாய் இருந்தால் போதுமானது எனக் கருதுகிறேன்.
    டாக்டர்.ரா.லட்சுமணசிங்
    பேராசிரியர்
    அரசு கலக் கல்லூரி (தன்னாட்சி)
    கரூர் - 639 005

    ReplyDelete