போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து
என்றொரு புரியாத பழமொழியை அவ்வப்போது சொல்லி நம் முயற்சிக்கு முட்டுக்கட்டைப்
போடும் சிலரைச் சந்திக்கிறோம். அவ்வளவு ஏன்? நாமும் இந்தப் பழமொழியைச் சொல்லி நம்
குழந்தைகளின் முயற்சியைக் கூட முடமாக்கி விடுகிறோம்.
இது ஒரு மோசமான மனப்பாங்கு ஆகும். உளவியலாளர்
என்ற வகையில் இது குறித்து நான் ஆழ்ந்து சிந்திப்பதுண்டு.
சென்ற வாரம் நான் பேருந்துக்காக காத்திருந்த போது
அருகில் நின்ற பெரியவர் செல்போனில் பேசியது என் காதில் விழுந்தது. “பொண்ண படிக்க
வச்சி என்ன ஆகப் போகுது? இருக்கிற நகை நட்டைப் போட்டு காலா காலத்தில கல்யாணம்
பண்ணிக் குடுப்பியா?” என்று உரத்தக் குரலில் யாருக்கோ சொல்லிக் கொண்டிருந்தார்
அந்தப் பெரியவர்.
ஒரு காலத்தில் பெண்ணுக்குப் படிப்பு எதுவும் தேவையில்லை
என்னும் கருத்து சமுதாயத்தில் பரவலாக இருந்தது. அதை மாற்றுவதற்கு வடக்கில்
சாவித்திரி பாய் பூலே (நாட்டின் முதல் பெண்கள் பள்ளியை நிறுவியவர்) முதல் தெற்கே
பாரதியார் வரை போராட வேண்டியிருந்தது. தனிமனித மனப்பாங்கு மாறாமல் சமுதாய மாற்றம்
நிகழாது.
சென்ற மாதம் அதிகாலை நேரத்தில் என்
மகிழுந்தில் கடவூருக்குப் பயணித்தேன். நீண்ட நெடிய கிராமச் சாலைவழியே
போய்க்கொண்டிருந்த போது சாலை ஓரத்தில் பலர் திறந்த வெளியில் மலங்கழித்துக்
கொண்டிருந்ததைப் பார்க்க நேர்ந்தது. அவர்களில் ஒருவர் எனக்குத் தெரிந்த ஆசிரியர்.
நான் சென்ற விழாவிற்கு அவரும் தாமதமாக வந்தார். “நீங்கள் காரில் வந்ததைப் பார்த்தேன்”
என்றார். அவரைத் தனியாக அழைத்துச் சென்று, “நானும் பார்த்தேன். வீட்டில் கழிவறை
இல்லையா?” என்று கேட்டேன். “அப்படியே பழகிப் போச்சுங்க, சார்” என்றார்.
இப்படி மாற்றத்தை விரும்பாமல், இருப்பதிலே
நிறைவு கொள்ளும் அல்லது இருப்பதை வைத்தே காலந்தள்ளும் மனப்பாங்கு இருக்கிறதே- அது தமக்குத் தாமே பொறி
வைத்து அதில் சிக்கித் தவிக்கும் மோசமான அணுகுமுறை என்றுதான் சொல்வேன். இந்த
அணுகுமுறையை நாங்கள் உளவியலில் Status quo trap என்று பெயர்
சூட்டியுள்ளோம்.
இந்த மனப்பாங்கை மாற்றாதவரை முன்னேற்றத்தைக்
காணமுடியாது. இன்றைக்குப் புகழ்பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியாக விளங்கும் சைலேந்திர
பாபு அவர்கள் தொடக்கத்தில் ஒரு வங்கியில் நல்ல ஊதியத்தில் சேர்ந்தார். போதும் என்ற
மனமே பொன்செய்யும் மருந்து என்று அவர் இருந்திருந்தால் குடத்தில் இட்ட விளக்காகவே
இருந்திருப்பார். ஆனால் முழு மூச்சுடன் முயன்று
ஆட்சிப் பணித் தேர்வை எழுதியதால் இன்று நாடறிந்த காவல் துறை அதிகாரியாக உலகை வலம்
வருகிறார். Status
quo trap என்னும் பொறியில் அவர் சிக்கிக் கொள்ளவில்லை.
அதனால் உயர்ந்தார். அதுமட்டுமா? தமக்குத்தாமே பொறிவைத்துத் தேங்கிக் கிடக்கும்
இளைஞர்களிடம் தம்முடைய எழுத்தாலும் பேச்சாலும் மனமாற்றத்தை ஏற்படுத்தும் மகத்தானப்
பணியைச் செய்து வருகிறார்.
நடந்து முடிந்த ரியோ பாராலிம்பிக்கில்
குண்டு எறியும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ள ஹரியாணாவைச் சேர்ந்த தீபா
வாதநோயால் பாதிக்கப்பட்டவர். இடுப்புக்குக் கீழே எந்த உணர்வும் இல்லாதவர். ‘என்னுடைய
வாழ்க்கை இவ்வளவுதான்” என்று வீட்டில் முடங்கிக் கிடந்திருந்தால் இன்று ஐந்து கோடி
பரிசுத் தொகையை அடைந்திருக்க முடியுமா? ஆக இவரும் Status quo trap என்ற பொறியில் அகப்பட்டுக்கொள்ளவில்லை.
“தனக்கு ஆங்கிலம் வராது, கணக்கு வராதுன்னு
இருந்திட்டா; பார்டர் மார்க் வாங்கி பாஸ் ஆனா என் பெண்” – இது காலை நடைப் பயிற்சியின்போது நண்பர்
தெரிவித்தது. அவருடைய பெண் மாதிரி நிறைய பேர் பின்னடைவை இயல்பாக ஏற்றுக்கொண்டு
முயலாமலும் முன்னேறாமாலும் இருந்த இடத்திலே இருக்கிறார்கள். கிடந்த இடத்திலே கிடப்பதற்கு
நாம் என்ன கல்லா மரமா?
ஆறறிவு படைத்த மனிதராக இருந்துகொண்டு இப்படி
தனக்குத் தானே பொறிவைத்துச் சிக்கிக் கொள்வது எந்த விதத்தில் நியாயம்?
எனக்குத் தெரிந்த ஒருவர் தொடக்கப்பள்ளி
ஆசிரியராகப் பணியில் சேர்ந்து தொடக்கப்பள்ளி ஆசிரியராகவே பணிநிறைவும் பெற்றுவிட்டார்.
அஞ்சல் வழியில் படித்து ஒரு பட்டம் பெறவில்லை. மொத்தப் பணிக்காலத்தில் ஒரு பதவி
உயர்வும் இல்லை. முப்பது ஆண்டுகள் ஒரே பணியைச் செய்து முடித்த இவருக்கும் செக்கு
மாட்டுக்கும் என்ன வேறுபாடு உள்ளது? செக்கு மாடாய் இருப்பதிலும் ஒரு சுகம் உண்டு போலும்!
“நான் நல்லாதானே இருக்கிறேன். நான் ஏன்
உடற்பயிற்சி நடைப் பயிற்சி செய்ய வேண்டும்?”- இது ஒரு நண்பரின் கேள்வி.
“வா.மணிகண்டன் எழுதியுள்ள மூன்றாம் நதி
நாவலைப் படித்தீர்களா?” என்று தெரிந்த தமிழாசிரியர் ஒருவரிடம் கேட்டேன். “நியூஸ்
பேப்பரோட சரி; நாவல் படிச்சி என்னா பண்ண
போறோம்? நோ யூஸ்” இப்படி வெகு அழகான தமிழில் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனேன்.
இப்படிப்பட்ட மனப்பாங்கு உள்ளவரால் வீடும்
முன்னேறாது; நாடும் முன்னேறாது. இந்த
மனப்பாங்குடைய மக்களை வைத்துக்கொண்டு எப்படி தூய்மை இந்தியாவை உருவாக்க முடியும்?
கலாம் கண்ட கனவு 2020 இல் எப்படி நனவாகும்?
என் அளவுக்கு என் மகள் அறிவும் வளமும்
பெற்றால் போதும் என்று நினைக்கும் தந்தையின் மனநிலைதான் Status quo trap என்பது. இதை நம் பாட்டன் வள்ளுவன் ஏற்றுக்
கொள்ளவில்லை. எனவேதான்,
தம்மின்தம் மக்கள் அறிவுடமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது
என்று குறள் படைத்தார்.
முயன்றும்
கிடைக்காதபோது யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது என்ற பாணியில் கிடைத்ததில் நிறைவு
கொள்ளலாம். ஆனால் எவ்வித முயற்சியும் செய்யாமல், விதிப்பயன் என்று, இருப்பதை
வைத்துக் காலத்தை ஓட்டுவோம் என்னும் மனப்பாங்கு உடையோரை உளவியல் படித்த என்னால் ஏற்றுக்கொள்ள
முடியவில்லை.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
பின் குறிப்பு: Status quo
trap என்னும் ஆங்கிலத் தொடருக்குப் பொருத்தமான தமிழ்த் தொடரை வாசகர் தெரிவித்தால்
சிறப்பாக இருக்கும்.
நேர்மறை பதிவு. மனநிலையை எப்படி வைத்துக்கொள்ளவேண்டும் என்ற நிலையில் பக்குவத்தை எடுத்துக் கூறுகிறது. நன்றி.
ReplyDeleteஇன்றைக்குப் பெரும்பாலோர் இப்படித்தான் இருக்கிறார்கள் ஐயா
ReplyDeleteநன்றி
ஆங்கிலச்சொல்லுக்கு தமிழாக்கமாக " இருக்கும் நிலையிலேயே இருத்தல்" என்பதைக் கொள்ளலாம்.
ReplyDeleteஉணர்ந்து தெளிந்து தேர்ந்து எழுதியுள்ளீர்கள். மனிதன் என்றால் இறுதிவரை முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்படியே போட்டக் கல் மாதிரி இருந்தால் ஆறாவது அறிவிருந்து பயன் இல்லை. என்னதான் பழக்க வாதியாக இருந்தாலும் சுகாதாரத்தை, சுற்றுப்புற சூழலை ஆசிரியர் என்பவர் உணர்ந்து தன் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அருமையான பாடம் புகட்டும் கட்டுரை. -நீதிபதி மூ.புகழேந்தி
நல்ல பதிவு. மாறாதிருக்க நான் மரமோ கல்லோ அல்ல.
ReplyDeleteStatus quo trap தாங்களே உளவியாளர் ஒரு கருத்தையும் கூறிவிட்டீர்கள். இருப்பினும் தன்னம்பிக்கை தான் ஒரு மனிதனை மனிதனாக்கும். முடங்கிக்கிடந்தால் சிலந்தி வலையும் சிறைகொள்ளும் எழுந்து நடந்தால் எலி வலையும் வழி சொல்லும். நம் சிந்தனையும் செயலும் மணி முள்ளைப் போலன்றி நொடிமுள்ளைப் போன்று முனைப்புடன் செயல்பட வேண்டும். அத்தகையவர்கள் தான் மாரியப்பன், ஹரியாணாவைச் சேர்ந்த தீபா ஆகியோர். ஐந்து பெரிதா ஆறு பெரிதா என கவிஞர் வைரமுத்து கேட்பார். இதில் ஐந்து என்பது பறவை விலங்குகளையும் ஆறு என்பது மனிதனையும் குறிக்கிறார். ஆறறிவுடைய மனிதன் சுயநலத்தோடு தான் என்ற அகந்தையோடு வாழ்கிறான். விலங்குகளில் யானை மனிதனுக்கு இணையான அறிவு படைத்தது. யானை, கன்றை ஈன்றவுடன் அது செயலற்றுக் கிடக்குமானால் தனது காலால் அக்கன்றை உதைத்து உதைத்து அதற்கு உணர்வைத் தூண்டி எழுப்பும். இன்றைய மருத்துவத்திலும் குழந்தை அழவில்லை என்றால் மருத்துவர் குழந்தையின் முதுகைத்தட்டி உணர்வை ஏற்படுத்துவார். அதுபோல விலங்குகளுக்கு அத்தகைய ஆற்றல் உள்ள போது மனிதர்கள் முடங்கலாமா? மாற்றுத் திறன் படைத்தவராக இருந்தாலும் இந்தியத் திருநாட்டிற்குப் பெருமை தேடித்தரவேண்டும் என்ற என்ணமே வெற்றிக்கு வழி வகுத்திருக்கும். மாற்றம் தான் வாழ்க்கை.
ReplyDeleteடாக்டர்.ரா.லட்சுமணசிங்
பேராசிரியர்
அரசு கலக் கல்லூரி (தன்னாட்சி)
கரூர் - 639 005