Monday, 26 September 2016

நம்மாலும் முடியும்

நூல் மதிப்புரை
(முனைவர் .கோவிந்தராஜூ)

   முனைவர் செ.சைலேந்திர பாபு ஐ.பி.எஸ் அவர்கள் எழுதி, கோவை விஜயா பதிப்பகம் அண்மையில் வெளியிட்டுள்ள நம்மாலும் முடியும் என்னும் நூல் தமிழ் கூறும் நல் உலகிற்கு ஒரு புது வரவாகும்.


   ஒரு நாட்டின் புவியியல் கூறுகள் முக்கியமல்ல; அங்கு வாழும் மக்களின் தரத்தைப் பொருத்தே  நாட்டின் உயர்வும் தாழ்வும் அமைகிறது என்பார் நம் தமிழ் மூதாட்டி ஒளவையார். இதுதான்  இந் நூலின் மையக் கருத்தாக அமைந்துள்ளது.


     நூலாசிரியர் ஜப்பான் நாட்டிற்கு சென்று வந்து எழுதியுள்ள இந்த நூல் ஒரு பயணக்கட்டுரை நூல் என வகைப்படுத்திவிட முடியாது. Info Travelogue என்று சொல்லத்தக்க வகையில் ஜப்பான் நாடு குறித்த அத்தனைத் தகவல்களையும் இணைத்து எழுதியுள்ள பாங்கு ஒரு புதிய அணுகுமுறையாகும்.

    ஜப்பானியரின் இரத்தத்தில் ஊறிக்கிடக்கும் புஷிடோ கலாச்சாரம்தான் அவர்களுடைய உலக சாதனைக்கு உரம் என்பதை உறுதியாகக் கூறுகிறார் நூலாசிரியர். நேர்வழி,  துணிச்சல்,கருணை, பணிவு, சத்தியம், கெளரவம், இராஜ விசுவாசம் என்னும் ஏழு உன்னதப் பண்புகளை உள்ளடக்கியதே புஷிடோ என்னும் ஒழுக்க மரபாகும். எத்தனை அறிவியல் முன்னேற்றம் வந்தாலும் இந்த அடிப்படை ஒழுக்க மரபுகளை ஜப்பானியர் கைவிடுவதில்லை என்பதைச் சான்றுகளுடன் விளக்கிச் சொல்கிறார் நூலாசிரியர்.

   பொது சுகாதாரம், தனிமனிதத் தூய்மை என்ற இரண்டும் ஒரு நாட்டின் அடிப்படைத் தேவை என்பதை பல நாட்டவரும் உணர்ந்து  பல நூறாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், நாம் மட்டும் ஏனோ இன்னும் உணரவில்லை என்று நூலின் முன்னுரையில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ஆசிரியர், ஒவ்வொரு இயலின் முடிவிலும் நம்மால் முடியும் என்னும் தலைப்பில் அவற்றை எட்டுவதற்கான வழிமுறைகளைத் தருகிறார்.

   பதச் சோறாக ஒன்றைக் குறிப்பிடுகிறேன்.
   ”விஞ்ஞான அடிப்படையிலான ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். உணவுப் பொருளில் கலப்படம் செய்தால் நரகம் கிடைக்கும் என்பதவிட, நம்மைப் போன்ற மனிதர்களுக்கு உடல் நலக்கேட்டை ஏற்படுத்தும் என எண்ணிப் பார்க்க வேண்டும்.” நூலைப் படிப்போர் இப் பகுதியை ஊன்றிப் படிப்பது அவசியமாகும்.

    ஜப்பானியரைப் போலவே நாமும் உன்னதமான ஒழுக்க மரபுகளுக்குச் சொந்தக்காரர்தாம் என்றாலும், வேலை செய்ய வேண்டும் என்னும் கடமை உணர்வு, செய்யும் வேலையை உலகத்தரத்துக்கு இணையாகச் செய்ய வேண்டும் என்னும் பொறுப்புணர்வு ஜப்பானியர்களைவிட நம்மிடம் குறைவாகவே உள்ளது என்பதைச் சுட்டியும் காட்டுகிறார்; கோபத்தோடு குட்டியும் காட்டுகிறார்.

    ஜப்பான் நாட்டு மக்கள் உழைப்பு, உறக்கம், ஓய்வு, உணவு, உணர்வு, புணர்வு, குடி என அனைத்திலும் உள்ள  வரைமுறைகளை ஒருபோதும் மீறுவதில்லை என்பதை இந் நூலின் வாயிலாக உணரமுடிகிறது.

    ஒவ்வொரு இயலின் நிறைவிலும் பொருத்தமான ஒரு சென் கதையைச் சொல்கிறார் நூலாசிரியர்.  அக் கதை உணர்த்தும் நீதி என்ன என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். இது நூலின் தனிச் சிறப்பாகும்.

    யாரைக் குறிவைத்து இந் நூலை எழுதியிருக்கிறார்? பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், இளைஞர் இளம்பெண்கள் இவர்களுக்காகவே இந்த நூலை எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது. நாட்டின் வருங்காலத் தூண்களை வலுப்படுத்தும் முயற்சியின் வெளிப்பாடுதான் இந் நூல்.

  இந்த நூலைப் படிக்கும் அனைவரும் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்னும் உணர்வுடன் தாம் செய்யும் செயலை முன்னைவிடவும் சிறப்பாகச் செய்வார்கள் என்பது உறுதி. தனி மனித அணுகு முறையில் சீரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை உடைய இந் நூல் ஒவ்வொரு இல்லத்திலும் குடும்பச் சொத்தாக இருக்க வேண்டும்.


நூல் விவரம்

தலைப்பு: நம்மாலும் முடியும்
ஆசிரியர்:முனைவர் செ.சைலேந்திர பாபு,IPS
பக்கம்:236
விலை ரூ.150/- 
வெளியீடு:விஜயா பதிப்பகம், கோவை    
 தொடர்புக்கு: vijayapathippagam2007@gmail.com 
 பேசி: 0422-2382614,2385614


   





    

3 comments:

  1. படிக்கும் ஆர்வத்தைத் தூண்டிய மதிப்புரை. நன்றி

    ReplyDelete
  2. ”நம்மாலும் முடியும்” நூல் வெற்றிபெற வாழ்த்துகள். ஒரு படைப்பாளியின் நோக்கம் நல்ல செய்திகளை உலகிற்கு அறிமுகம் செய்வதே ஆகும். அந்த வகையில் முனைவர் சைலேந்திரபாபு அவர்கள் தனது பணிகளுக்கிடையே தான் சென்று வந்த பயணக்குறிப்புகளை நூலாக்கியுள்ளார். அந்நூலைச் சிறப்புமிக்க விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலை அனைவரும் படித்து இன்புறுவதுடன் படைப்பாளியின் சிந்தனைக்கு மேலும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தந்து மேலும் மேலும் நல்ல நூல்கள் அவர் படைக்க ஒரு வாய்ப்பினை வழங்க வேண்டும். முனைவர் சைலேந்திரபாபு அவர்களை அறிந்தவன். அவர் எழுதிய “நீங்களும் IPS ஆகலாம்” என்ற நூலைப் பெருமளவில் மாணாக்கர்களுக்கு வாங்கித்தரப்பட்டது. அதுமட்டுமல்லாது அவரைக் கல்லூரிக்கு அன்புடன் அழைக்க விருப்பமுடன் வருகை தந்து உணர்ச்சிமிகு பேருரை ஆற்றினார். அவரதுமற்றுமொரு படைப்பு நம்மாலும் முடியும் நூலைப் படிக்க ஆர்வமுடன் உள்ளேன்.

    ReplyDelete
  3. தங்கள் மதிப்புரையால் உந்தப்பட்டு நூல் வாங்கினேன். வாசிக்க உற்சாகமூட்டியது. நம்மால் முடியுமா என்றும் திகைப்பூட்டியது.நாம் வேறு, அரசு என்பது வேறு என்ற ஆயிரம் ஆண்டு அடிமை மனப்பாங்கினால் , நம்மிடம் குழு உணர்வு என்பது கிட்டத்தட்ட இல்லை. சிந்தனை ,பகுத்தறிவு ,புத்திகூர்மை உடையோர் மிகக் குறைவு. அதனால்தான் பலருக்கும் அடிமையாக ஆயிரம் ஆண்டுகள் இருந்தோம். சுமார் 70 ஆண்டுகளாகத் தான் (கட்டற்ற) சுதந்திரத்தை அனுபவிக்கிறோம்.ஒழுங்கு, சட்டம் கடைப்பிடிக்கச் சொன்னால் கசக்கிறது.ஜப்பானியர் போன்ற போர்க்குணம் அற்ற நம் அடிமை மனப்போக்கால் நம்மாலும் முடியும் என்ற நூலாசிரியரின் கனவு நம் தலைமுறைக்குள் நனவாகுமா என்பது ஐயமே. கண்ணன்

    ReplyDelete