Sunday 13 November 2016

கரணம் தப்பினால்

  பருவகால மாற்றம் என்பது நாம் வாழும் பூமிக்கு மட்டும் நிகழ்வதில்லை. பிறந்து பன்னிரண்டு வயது ஆனவுடன் ஒவ்வொரு ஆண், பெண் குழந்தையிடத்தும் பருவ கால மாற்றம் நிகழ்கிறது. எதிர் பாலரைப் பார்க்கும்போது ஓர்  இனம்புரியாத ஈர்ப்பு ஏற்படுகிறது.


   சக மாணவன், பள்ளிப் பேருந்து அல்லது ஆட்டோ ஓட்டுநர், தனிப் பயிற்சி அளிக்கும் ஆசிரியர், பக்கத்து மனையிடத்தில் வேலை செய்யும் கொத்தனார் இவருள் யாரேனும் ஒருவர் காட்டும் கண் சிமிட்டலைச் சூது என அறியாமல் அது காதலுக்கான தூது என எண்ணி கற்பனைத் தேரில் உலாவரும் சிறுமியர் சிலர், சிலந்தி வலையில் சிக்கிய சிறுபூச்சிகள் போல மீள முடியாமல் கெட்டழிகின்றனர்.

   இப்படிச் சிக்கிக் கொள்ளும் சிறுமியரிடத்தில் நடத்தை மாற்றங்கள் நிச்சியமாக இருக்கும். அந்தக் காலத்து அப்பா அம்மாக்கள் தம் பெண் குழந்தையிடத்தில் நிகழும் சிறு நடத்தை மாற்றத்தைக் கூட மிகத் துல்லியமாக அறிந்து நல்லது கெட்டதை எடுத்துக் கூறி அல்லது இடித்துக் கூறி நெறிப்படுத்துவார்கள். ஆனால் இந்தக் காலத்து அப்பா அம்மாக்கள் தாம் உண்டு தம் வேலையுண்டு என்று இருக்கிறார்கள். அப்படியே கொஞ்சம் ஓய்வு நேரம் வாய்த்தாலும் கைப்பேசியிலும் தொலைக்காட்சியிலும் மூழ்கி விடுகின்றனர்.

    காதல் எது காமம் எது எனப் புரிந்து கொள்ளும் பக்குவம் பதின்ம வயதினரால் பகுத்தறிய முடியாது. இருபத்திரண்டு வயதுக்கு மேல்தான் அவை குறித்த புரிதல் ஏற்படும். இந்தப் புரிதல் இல்லாத ஒரு சிறு பெண், பத்தாம் வகுப்பில் மூன்று பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவள், பன்னிரண்டாம் வகுப்பு முடிவதற்குள் மாயக்காதலில் சிக்கி உடலைத் தீண்ட அனுமதித்த  முட்டாள் தனத்தால், தன்னைவிட பதின்மூன்று வயது மூத்தவனான  ஒரு கொத்து வேலை செய்பவனின் சூழ்ச்சியால் கருவுற்றாள். ஒருமாதம் கழித்து வீட்டைவிட்டு வெளியேறி பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் அவனுக்குக் கழுத்தையும் நீட்டினாள். அவர்கள் மாற்றிக்கொண்ட மலர்மாலைகள் வாடுவதற்குள், அவளுடைய அப்பாவுக்கு மாலைகள் குவிந்தன. ஆம். பெற்றப் பெண் தந்த அவமானம் தாங்காமல் தன்னை மாய்த்துக் கொண்டார்! பதினெட்டு வயதில் ஒரு பெண் குழந்தையை ஈன்று படாதபாடு படுகிறாள். அந்தத் தடியன் குடியனாகவும் மாறி அவளை வாட்டி வதைப்பது தனிக்கதை.

   இது ஏதோ ஒரு முன்பின் தெரியாத ஒரு பெண்ணின் சோகக்கதை என என்னால் ஒதுக்கிவிட முடியவில்லை. காரணம் அவள் திருசெங்கோட்டுப் பள்ளியில் நான் முதல்வராக இருந்தபோது பத்தாம் வகுப்புப் படித்தவள். நானும் பணித்துறப்பு செய்து கரூருக்கு வந்துவிட்டேன். அவளும் தன் சொந்த ஊரான திருப்பூருக்குச் சென்று உள்ளூர்ப் பள்ளியில் மேனிலைப் படிப்பைத் தொடர்ந்தாள்.

    உடலில் ஏற்படும் பருவநிலை மாற்றத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு விழிப்புணர்வுடன் இருந்திருந்தால் அவளுக்கு இளமையில் கண்ணீரும் கம்பலையுமாக வாழ வேண்டிய அவல  நிலை ஏற்பட்டிருக்காது.   வயதுக்குப் பொருந்தாத ஆசைகளை மனத்தில் வைத்து அடைகாத்ததால் ஏற்பட்ட விபத்தில் சிக்கிக் கொண்டாள். பெரிய கட்டுமானப் பொறியாளராக ஆகப் போவதாக என்னிடம் சொன்னவள் இன்று சித்தாளாகச் செங்கல்லைச் சுமக்கிறாள்!

    வளரிளம் பருவத்தில்  உள்ள யாரும் தம் மனத்தில் தோன்றும் எதிர் பாலினக் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தருதல் கூடாது. அத்தகைய உணர்வுகள் தற்காலிகமானவை. இது மிகச் சிலருக்குப் படிக்கின்ற பருவத்தில் ஏற்படும் மனமாசு. இது மனத்தில் முளைக்கும் முட்செடி. படிப்பு என்னும் பயிரை வளர விடாமல் தடுக்கும். முட்செடிகளை முளைக்கும் போதே பிடுங்கி எறிதல் வேண்டும்.   அண்மையில் என்னை ஓர் அரசுப் பள்ளியில் பேச அழைத்திருந்தார்கள். அங்கிருந்த முகப்புக் கரும்பலகையில் எழுதியிருந்த கவிதையைப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சி அடைந்தேன். என்னுடைய கவிதைத்தேன் என்னும் நூலிலிருந்து
பள்ளி வயதில் கொள்ளும் காதல்
        பாலினக் கவர்ச்சி பிறிதொன் றில்லை
பள்ளி வயதில் காதல் கொள்ளல்
        கொள்ளி யால்தலை வாரல் ஒக்குமே!

என எடுத்து எழுதியிருந்தார்கள்.


     கரணம் தப்பினால் மரணம் என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் யாருக்கும் அதன் பொருள் தெரியாது. கரணம் அன்றால் திருமணம் என்று பொருள். அது முறையாக நடைபெறாவிட்டால் குடும்பத்தில் கொலை, தற்கொலை போன்ற  சோகம் நிகழும் என்பது பழமொழி உணர்த்தும் பாடம்.

   சிறுமியரைச் சமுதாயத்தின் நாற்றங்கால் என்பார் தீபம் நா.பார்த்தசாரதி. இப்படி நாற்றங்கால் பழுதுபட்டால் வருங்கால சமுதாயம் என்னாகுமோ என்பதுதான் என் கவலை. “நீ ஒருவருடைய வெற்றிக் கதையைப் படிப்பதைவிட, வாழ்வில் தோல்வி அடைந்தவரின் கதையைப் படி; அதில் உனக்கு ஒரு செய்தி கிடைக்கும்” என்பார் டாக்டர் அப்துல் கலாம். அதனால்தான் முளைத்து மூன்று இலை வருவதற்குள், ஒருத்தி வாழ்வில் வழுக்கி விழுந்த கதையை என் வலைப்பூவில் பதிவு செய்கிறேன். இதைப் படிக்கும் பதின்ம வயதுப் பெண்களில்  ஒருத்திக்காவது   அவளுடைய அனுபவம் பாடமாக அமைந்து நெறிப் படுத்தினால் கூட என் எழுத்துக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுவேன்.

எண்ணமும் எழுத்தும்
முனைவர் .கோவிந்தராஜூ
மனநல ஆலோசகர்


10 comments:

  1. உங்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்று புரிகிறது ஐயா... அருமையான விழிப்புணர்வு பகிர்வு...

    ReplyDelete
  2. அருமையான விழிப்புணர்வுப் பதிவு ஐயா
    தங்களின் எழுத்து வெற்றி பெறட்டும்

    ReplyDelete
  3. Well said. More appropriate to today's situation.

    ReplyDelete
  4. அனைவருக்கும் ஒரு பாடம் ஐயா. தற்போதைய சூழலை செறிவாகப் பகிர்ந்துள்ளீர்கள். தங்கள் எழுத்துக்கு கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.

    ReplyDelete
  5. ஆசிரியர்கள் சமுதாயப் பொறுப்புள்ளவர்கள் என்பதற்கு தாங்கள் ஒரு சிறந்த எடுத்தக்காட்டு.வாழ்த்துக்கள். நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete
  6. Sir, This article is very important to the present days youth.

    ReplyDelete
  7. சிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்! மறக்காமல் படிக்க வாருங்கள்! நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்!
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    ReplyDelete
  8. first of all i will encourage our old student and them kutties to study the blog site .thanks a lot

    ReplyDelete
  9. ”கரணம் தப்பினால் மரணம்” அழகான தலைப்பு, அருமையான செய்திகள். பதின்ம வயதுப் பெண்களுக்காக எழுதப்பட்டுள்ளது. பெரும்பாலும் பதின்ம வயதுப்பெண்கள் தங்களை மீறி பாலுணர்வுகளுக்கு அடிமைப்பட்டு தங்களது வாழ்கை திசைமாற தாங்களே காரணமாகின்றனர். ஆண் பெண் பேசிப்பழகுவது இன்றைய காலத்தில் தவிர்க்க இயலாதது. ஆனாலும், ஒரு எல்லையை வகுத்துக்கொள்ளவேண்டும். மெய்யுறு புணர்ச்சிக்கு இடம் தராமல், தனது வாழ்கை, தன் பெற்றோர், உடன் பிறந்தோர் மற்றும் தான் வாழும் சமுதாயம் போன்றவற்றை மனதில் நிறுத்தி வாழ்ந்தாலே இந்த பாலுணர்வுத்தூண்டலில் இருந்து விடுபடலாம். பிறந்த ஆணாகிலும் பெண்ணாகிலும் ஒரு நாள் திருமணத்தில் இணைவர். அதற்கு காத்திருப்பு அவசியம். விதைத்ததும் அறுவடை செய்ய இயலாது. பயிர் விளையும் வரை காத்திருக்க வேண்டும். ஆண், பெண் இருவரும் உடலளவிலும், மனதளவிலும் தன்னை தயார் செய்துகொண்ட பிறகே காதல் என்றாலும் காமம் என்றாலும் நினைக்க வேண்டும். இல்லையென்றால் தாங்கள் கூறியது போல “கரணம் தப்பினால் மரணம்” தான். பெண்களுக்காக ஒரு செய்தி, பெற்றோர்கள் ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்து ’ஈ’ கடிக்காமல் ‘எறும்பு’ கடிக்காமல் பாதுகாத்து, ஒவ்வொரு நாளாக கண்ணுக்குள் வைத்து வளர்த்து, படிப்பு வயதில் படிக்க வைத்து, பருவ வயதில் அப்பெண்ணுக்கு வேண்டிய ஆடை அணிகலன்களைத் தேடி, அப்பெண்ணிற்கு வேண்டிய வரனையும் பார்ப்பர். இருபதாண்டுகளாக வளர்த்த அப்பெண் எப்படி பெற்றோர்களைத் தவிக்க விட்டுச் செல்ல மனம் வருகிறது. காதல் கண்ணை மறைக்கிறதா? காமம் கண்ணை மறைக்கிறதா? காதலாக இருந்தால் பெற்றோருக்குத் தெரிவித்து முறைப்படி திருமணம் செய்து கொள்ளவேண்டும். காமமாக இருந்தால் அதை முளையிலேயே கிள்ளி எறியத் தயங்கக்கூடாது. பெண் வெற்றியடைய மனக்கட்டுப்பாடே சிறந்தது.
    பேராசிரியர் ரா.லட்சுமணசிங்

    ReplyDelete