ஒட்டாவா நகரில் அடுத்துப் பார்க்க
வேண்டிய முக்கிய நிகழ்வு இது. இரவு பத்து மணிக்குத் தொடங்கிய காட்சி முப்பது
நிமிடங்களே நீடித்தது. ஆனால் மூன்று நிமிடங்களில் முடிந்துபோன உணர்வு ஏற்பட்டது.
கனடா நாடாளுமன்ற கட்டடத்தின்
முகப்புதான் திரையாகப் பயன்படுகிறது. அக் கட்டடம் முப்பது மாடி அளவு உயரமுடையது;
470 அடி நீளம் உடையது.
பதினேழு ப்ரஜெக்டர்கள் மூலம் ஒரே
சமயத்தில் ஒரே செய்தியை ஒரே படமாக, வண்ணப்படமாக அதுவும் பேசும் காணொளிப் படமாகக்
காட்டுகிறார்கள். இந்த காணொளிக் காட்சி பத்து சர்வர்களைக் கொண்ட கணினி வலைத் தொடர்மூலம்
காட்டப்படுகிறது. காட்டப்படும் படங்கள் முப்பத்தைந்து மில்லியன் பிக்சல் அளவு கொண்டது
என எனது பக்கத்தில் நின்றவர் குறிப்பிட்டார். இடையிடையே இருநூறு ஒளியுமிழ்
விளக்குகளிலிருந்து வண்ண வண்ண ஒளிக்கதிர்களை வாரி இறைக்கிறார்கள். மேலும் அரைவட்டத்தில்
அமைந்துள்ள உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய பதினெட்டு ஸ்பீக்கர்கள் மூலம் மிகத்துல்லியமாகக்
கேட்க முடிகிறது. குதிரைகளின் குளம்பொலி நம் அருகில் இடதுபக்கம் பேரொலியாய்த் தொடங்கி
அப்படியே நம் வலதுபக்கம் சென்று தேய்ந்து மறைகிறது.
கட்டடத்தின் முன்னால் பரந்து விரிந்து கிடக்கும் அழகிய புல்வெளியில் பத்தாயிரம் பேர் நின்றும் அமர்ந்தும் ஒலி ஒளிக் காட்சியைக் கண்டுகளிக்க முடியும். கடந்த முப்பது ஆண்டுகளாக நாள் தோறும்- ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மட்டும் நடைபெறும் இந் நிகழ்ச்சியை ஒவ்வொரு நாளும் பல்லாயிரக் கணக்கானவர் வந்து பார்க்கிறார்கள். அவர்களுள் பெரும்பான்மையினர் இளைஞர்கள் இளம்பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதியவரெல்லாம் சக்கர நாற்காலியில் அமர்ந்த வண்ணம் காட்சியைக் கண்டுகளிக்கிறார்கள். இடையிடையே கரவொலி எழுப்பியும் ஆரவாரம் செய்தும் (யாரும் விசிலடிக்கவில்லை!) மகிழ்கிறார்கள்.காணொளிக் காட்சியை நீங்களும் காணலாம்.
கனடா நாட்டின் நானூறு ஆண்டுகால விடுதலைப்
போராட்ட வரலாற்றையும், சுதந்திரம் பெற்று, கடந்த 150 ஆண்டுகளில் நாடு அடைந்த வளர்ச்சிகளையும்
நிரல்பட அமைத்துக் காட்டுகிறார்கள். இதைக் காணும் பேறு எனக்கும் என் மனைவிக்கும்
மட்டுமே வாய்த்தது.
புது தில்லியில் செங்கோட்டையில் இத்தகைய ஒலி
ஒளிக் காட்சியைப் பார்த்திருக்கிறேன். இப்பொழுது தொடர்கிறதா எனத் தெரியவில்லை. மதுரை
நாயக்கர் மகாலிலும் நடைபெறுவதாய் என் மகள் தெரிவிக்கிறாள்.
ஒரே ஒரு குறை. கார் நிறுத்த இடம்
கிடைக்காமையால் எங்களை நிகழ்விடத்தில் இறக்கிவிட்டுச் சென்ற என் மகள், ஓடுதளம் கிடைக்காமல் வானில்
சுற்றிக்கொண்டிருக்கும் விமானியைப்போல காரில் சுற்றித் திரிந்து, நிகழ்ச்சி முடிந்ததும்
பாய்ந்து வந்து நொடியில் ஏறச்சொல்லி இல்லம் நோக்கி விரைந்தாள்.
இந்த ஒலி ஒளிக் காட்சியை மீண்டும்
ஒருமுறை காணமுடியாதா என்று ஏங்கினேன். அந்த ஏக்கம் தீர்ந்தது அதுவும் கனடா நாட்டின்
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அருகில் அமர்ந்து அவருடன் உரையாடியபடி பார்த்தேன். ஆனால்........கனவில்!
முனைவர் அ.கோவிந்தராஜூ
கனடாவிலிருந்து
நன்றி ஐயா
ReplyDeleteஇதோ காணொளியைக் காணச் செல்கிறேன்
கனடா நாட்டுப் பிரதமரோடு உரையாடி மகிழும் தருணம் விரைவில் வரும் ஐயா
வருகைக்கு நன்றி
Deleteஉங்கள் எண்ணக்கலவையை வண்ணக்கலவையாக அளித்தமைக்கு நன்றி.
ReplyDeleteஇதேபோல் தில்லியில் உள்ள அக்ஷர்தாம்கோவிலில் ஒலி ஒளிக்காட்சியும் நீரூற்று காட்சியும் நடைபெறுகிறது.
நல்ல தகவல் நல்கியுள்ளீர்; நன்றி
Deleteகாணொளி கண்டேன்
ReplyDeleteஉங்கள் கனவு நனவாக வாழ்த்துகள் - கில்லர்ஜி
உங்கள் வருகை எனக்குப் பெருமை; நன்றி
Deleteஅருமை...
ReplyDeleteநன்றி நண்பரே
DeleteArumai
ReplyDeleteஅத்தி பூத்தாற் போன்ற வருகை; நன்றி
Deleteஅருமை.....ஆஹா கனடா நாட்டின் பிரதமருடன் உரையாடிக் கொண்டு பார்த்ததைச் சொல்லி...கனவில் என்று சொன்னதும் புஸ் என்று ஆனாலும். உங்கள் கனவு நனவாகிட..வாழ்த்துகள் ஐயா....
ReplyDeleteதுளசி, கீதா
உங்கள் இருவரின் வருகை மகிழ்ச்சியளிக்கிறது; நன்றி
DeleteYou have enormous energy,interest and capacity;you will achieve whatever you want.Soon you will meet Mr.Trump,when you will be in America.Best Wishes Sammandhi Junior.
ReplyDeleteThank you for your nice words
Deleteகாணொளியை பிறகு பார்க்க வேண்டும். இந்தியாவிலும் இப்படி ஒலி ஒளி காட்சிகள் உண்டு. உங்கள் கனடா அனுபவங்கள் தொடரட்டும்.
ReplyDeleteநீங்கள் தொடர்ந்து என்னுடன் பயணிப்பது உற்சாகத்தைத் தருகிறது.
Delete