Wednesday, 9 September 2020

மழையில் மகிழ்ந்த மலர்கள்

    நம் ஊர் இரமணனும் புவியரசனும் தோற்றுப் போகும் அளவுக்கு இங்கே உள்ள வானியல் வல்லுநர் மழை வரும் நேரத்தை மிகத் துல்லியமாகக் கணித்துச் சொல்கிறார். அவர் இந்த நேரத்தில் பெய்யும் என்றால் அந்த நேரத்தில் மழை பெய்கிறது! இங்கே மணிக்கணக்கில் தொடர்ந்து மழை பெய்வதில்லை. மாதம் முழுவதும் அடிக்கடி  பேரிடி முழக்கத்துடன் சிறிது நேரம் மழை பெய்கிறது.

   இன்று காலை எழுந்தவுடன் மழையின் முகத்தில்தான் விழித்தேன். சற்று நேரத்தில் மழை ஓய்ந்தது. சினிமா மழை போல நின்றுவிட்டது. தொடர்ந்து தூறல் எதுவுமில்லை. கேமராவும் கையுமாக வெளியில் விரைந்தேன்.

      சாலையோரம் வளர்ந்து கிடக்கும் மலர்ச்செடிகளின் முகத்தில் மழையில் நனைந்த மகிழ்ச்சி தெரிந்தது. பூவின் இதழ் மேல் விழுந்து அதில் தங்கிவிட்ட மழைத் துளிகள் ஒளியுமிழ் முத்துக்களாய் ஒளிர்ந்தன; சில துளிகள் இதழ் அடுக்கில் ஒளிந்தன.

    இங்கே பூத்துக் கிடக்கும் ரோஜா உட்பட அனைத்து மலர்களும் கண்டு மகிழ்வதற்கே; பறித்துச் சூடி மகிழ்வதற்கு அல்ல. மக்களிடம் சுயக்கட்டுப்பாடு இருப்பதால் ‘மலர்களைப் பறிக்காதீர்கள்’ என்னும் அறிவிப்புப் பலகையெல்லாம் வைக்கப்படும் வழக்கம் இங்கே இல்லை.

    மழை ஓய்ந்து சுளீர் என்று வெயில் அடித்ததும் கனடா வாத்துகளும், அணிலும், கோஃபர் என்னும் பெருச்சாளியும் புல்லை மேய்ந்தவாறு  வெயில் காய்ந்தன.

    நேற்று பெய்த மழையில் இன்று காலையில் முளைத்த விதவிதமான காளான்கள் கண்களுக்கு விருந்தாய் அமைந்தன. அங்கே எதிரே வந்த ஒருவரிடம்” இந்தக் காளான் இவ்வளவு அழகாக உள்ளதே; உண்ணத் தகுந்ததா?” என்று கேட்டேன். ஆம் அல்லது இல்லை என்று அவர் சொல்லி இருக்கலாம். ஆனால் அவர் சொன்னது என்ன தெரியுமா?

    “இது பார்க்கத்தான் அழகாக இருக்கும். ஆனால் இது நச்சுக் காளான்; உண்ண முடியாது. மனிதர்களிலும் சிலர் இப்படித்தான்...”

 

   உண்மைதானே? எப்போதோ நான் படித்த

மைபொதி விளக்கே என்ன

மனத்தினுள் கறுப்பு வைத்துப்

பொய்த்தவ வேடம் கொண்டு

புகுந்தனன் முத்தநாதன்”

 

என்னும் சேக்கிழாரின் வைரவரிகள் என் மனத்தில் தோன்றி மறைந்தன. ஒரு மனநல ஆலோசகர் என்ற முறையில், காதலித்து ஏமாந்த பெண்கள் சொல்லும் கதைகளைக் கேட்டிருக்கும் நான் அந்தக் கனடாக்காரர் சொன்னதை வழிமொழிந்து,”நன்றாகச் சொன்னீர்” என்னும் பாராட்டு மொழியை ஆங்கில மொழியில் உதிர்த்துவிட்டு அந்தக் காளான்களை எனது கேமராவுக்குள் பிடித்துப் போட்டேன்.

முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.

அழகிய நச்சுக்காளான்










அணில்

கனடா வாத்துகள்

கோஃபர் என்னும் பெரிய எலி


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


14 comments:

  1. அழகாக உள்ளது ஐயா

    ReplyDelete
  2. கணினியில் கட்டுரை....காமிராவில் கவிதை.....அடடே....இயற்பியலும் தமிழும் இணைப்பு அல்லவா!!!

    ReplyDelete
  3. Nice to see the wounderful pictures sir

    ReplyDelete
  4. மனிதர்களிலும் சிலர் இப்படித்தான்... உண்மையான வார்த்தைகள்.

    படங்கள் அனைத்துமே அழகு ஐயா. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  5. இலக்கியம் தொடங்கி புகைப்படம் வரை உங்களின் ரசனை எங்களுக்கு விருந்து ஐயா.

    ReplyDelete
  6. நச்சுக்காளான் குறித்த தகவலைக் கூட "நச்"செனக் கூற உங்களால் மட்டுமே முடியும் ஐயா. வாழ்க வளமுடன்

    ReplyDelete
  7. Arumai.. .Rat looks like Rabbit in size

    ReplyDelete
  8. Arumai.. .Rat looks like Rabbit in size

    ReplyDelete
  9. எனது தமிழாசான் புலவர் பு.க.வரதராசன் ஐயா அவர்கள் நடத்திய முத்தநாதன் கதை வரிகளையும் மலரும் நினைவுகளையும் நினைவூட்டிவிட்டீர்கள் ஐயா. மிக்க மகிழ்ச்சி.தங்களின் சொல்லோலோவியத்தைப் போலவே தங்களின் கேமராவின் புகைப்படமும் அழகாக உள்ளது. நன்றி ஐயா.

    ReplyDelete
  10. இரசித்தேன் நானும்...

    ReplyDelete
  11. அருமையான வரிகள் ஐயா!

    ReplyDelete
  12. மலர்கள் மட்டுமின்றி மனித உணர்வுகளும் மென்மையாகிறது போலும்.

    ReplyDelete
  13. இயற்கைப் பாடம்
    அருமையான பதிவு. விசம் மனிதர்களிடம் மட்டுமல்ல செடிகளிலும் உண்டு. ஆனாலும் இரசிக்கலாம் ருசிக்க இயலாது. அதுபோல் அன்பானவர்களிடம் அன்பை விதைக்கலாம். விசமனிதர்களிடம் சற்று விலகி இருப்பது நமக்கு நன்மையே. அதுபோல் இயற்கை நமக்கு போதிக்கும் பாடமாக எடுத்துக்கொள்ளலாம்.
    முனைவர் ரா.லட்சுமணசிங்
    பேராசிரியர்
    கரூர்

    ReplyDelete