நூலைப் போல சேலை விதையைப் போல
விளைச்சல் என்பன காலங்காலமாக வழங்கிவரும் சொலவடைகளாகும். இந்தப் பொன்மொழிகள் நாம் தேர்ந்தெடுக்கும்
சட்டமன்ற, நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கும் பொருந்தும்.
வேட்பாளர் சரியில்லாதவர் என்று
அறிந்தும், நம் மதத்தவர்,
நம் இனத்தவர் என்பதைக்
கருத்தில் கொண்டு வாக்களிக்கும் போக்கு அண்மைக் காலத்தில் அதிகமாகி வருகிறது. பொன்கத்தி என்பதால் கழுத்தை வெட்டிக் கொள்ளலாமா? வேட்பாளர் தகுதிப்பாடுகளை
அறியாமல் வாக்களிப்பது தற்கொலை முயற்சிக்குச் சமம் ஆகும்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
வாழ்ந்த திருவள்ளுவர் வேட்பாளர்களின் தகுதிப்பாடுகள் இவையிவை எனப் பட்டியலிடுகிறார். அரசியல், அமைச்சியல் என்னும் இரண்டு இயல்களில் விரிவாகப் பேசுகிறார்.
குறைந்த அளவு கல்வித் தகுதியாவது ஒரு
வேட்பாளருக்கு இருக்க வேண்டும். அதோடு
காலங்கடத்தாமல் கடமையாற்றும் திறனும், தடைகளைத் தகர்த்தெறிந்து, செயலாற்றும்
திறனும் இருத்தல் வேண்டும்.
தன் தொகுதிப் பக்கம்
தலைகாட்டாதவரையும், அத்திப் பூத்தாற்
போல வந்தாலும் சினம் மிகுந்து சிடுசிடுப்பவரையும் மறுமுறையும் தேர்ந்தெடுத்து என்ன
பயன்? காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லன் என்ற
இரண்டு குணங்களும் வேட்பாளருக்கு உரிய தகுதிகளில் முதன்மையானவை.
விமர்சனங்களைப் பொறுத்துக் கொள்ளாமல் சொற்போரும். அறிக்கைப்போரும்
நிகழ்த்துவதை வள்ளுவர் கடிந்து பேசுகிறார். செவி கைப்பச் சொற்பொறுக்கும் பண்பு
வேட்பாளருக்கு இருக்க வேண்டும் என்கிறார்.
பழி வருமோ என அஞ்சும் பண்பு ஆள்வோரிடம் இருக்க
வேண்டும். தினையளவு குற்றம் நேர்ந்தாலும்,
பனையவளவாகக் கொண்டு பழி
நாணும் பண்பு வேட்பாளருக்கு அவசியம் வேண்டும்.
மனதில் தூய்மை, செயலில் தூய்மை என இரண்டும் இன்றியமையாதவை. ஆனால் இவை யாருக்கு வாய்க்கும்? தான் நட்பு
கொள்ளும் மாந்தர் நல்லவர்களாக இருந்தால் மட்டுமே
வாய்க்கும். கடத்தல்காரர்கள், கயவர்கள், தீவிரவாதிகள் இவர்களோடு தொடர்பு
வைத்திருப்போருக்கு மனத்தூய்மையும் செயல்தூய்மையும், செய்வதில் தூய்மையும் அமையா. எனவே வேட்பாளரிடத்தில் இனந்தூய்மை, மனந்தூய்மை, செய்வினை தூய்மை மூன்றும் இருக்கின்றனவா
என்பதையும் வாக்காளர் சிந்திக்க வேண்ண்டும்.
மன உறுதி, பண்பாடு மிக்கக் குடும்பப் பின்புலம், மக்களைக் காக்கும் மாண்பு, தொடர்ந்து கற்கும் ஆர்வம், முயற்சி என்ற ஐந்தும் வேட்பாளரின் அடிப்படைத்
தகுதிகளாகும்.
மக்கள் நலனை மட்டும் நோக்கமாகக்
கொண்டு பதவிப் பொறுப்புகளை ஏற்கக் கூடியவரா என்பதையும் வாக்காளர் ஆராய
வேண்டும். சுயநலமிக்க ஓர் அமைச்சர் எழுபது
கோடி பகைவருக்குச் சமம் என்கிறார் வள்ளுவர்.
“பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள்
தெவ்வோர்
எழுபது கோடி உறும்”
என்பது குறள். ‘தெவ்வோர்’ என்னும் சொல்லுக்குப் பகைவர்
என்று பொருள். வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில்
எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் குறள் இதுவாகும்.
இன்றைக்கு வழிமுறைகளைப் பற்றி
கவலைப்படாமல் முடிவுகளைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் அரசியல்வாதிகளைப் பார்க்கிறோம். வழிமுறைகளும், முடிவுகளும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பார் காந்தியடிகள். அறவழியில் நம்பிக்கையுடைய வேட்பாளரா என்பதையும்
எண்ணிப் பார்க்க வேண்டும். அறத்தான் வருவதே இன்பம்
என்னும் குறள்கொள்கையைப் பின்பற்றும் வேட்பாளரா என்று ஒரு கணம் யோசிக்க வேண்டும்.
சட்ட மன்றமும், நாடாளுமன்றமும், அறிவார்ந்த விவாதக் களமாகத் திகழ வேண்டிய இடங்களாகும். அங்கே வெற்றுப்பேச்சும், வெறுங்கூச்சலும் வேண்டாதவை. அம் மன்றங்களில் அறிவுத் தெளிவுடன் பேசும்
ஆற்றலுடையவராயும் வேட்பாளார் இருக்க வேண்டும். என்வே நாநலம்
என்னும் நலனுடைமை மிக்கவரா என்பதையும் சீர்தூக்கிப் பார்க்க
வேண்டும். அவர் நாகாக்கும்
நற்பண்பு உடையவராயும் இருத்தல் வேண்டும்.
வாக்காளருடைய கடமைகளையும் சுட்டிக் காட்டுகிறார் திருவள்ளுவர். அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பதற்காக
வாக்களித்தல் கூடாது.
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
என்பது விழிப்புணர்வை ஊட்டும் குறள்.
மேலே பட்டியலிடப்பட்ட குணங்கள்
உடையவரா அல்லது குற்றங்கள் உடையவரா என்பதை ஆராய்ந்துப் பார்த்து ஒரு
வேட்பாளரைக் கொள்ள வேண்டும் அல்லது தள்ள வேண்டும்.
குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்
என்பது ஒவ்வொரு வாக்காளரும் தன் நெஞ்சத் தடத்தில் பதிவு செய்ய வேண்டிய குறள்
ஆகும்.
ஞானம் வந்தாற்பின் வேறென்ன வேண்டும்
என்று கேட்பான் பாரதி. வாக்காளருக்கு இந்த
ஞானம் பிறக்க வேண்டிய தருணம் இதுதானே?
மனதில் என்னென்ன நினைத்தேனோ அதை விட சிறப்பாக பல வரிகள் உள்ளது...
ReplyDeleteஇந்தப் பதிவின் இனணப்பை சேமித்து வைத்து விட்டேன்... விரைவில் எனது தளத்தில் வரும்...
மிக்க நன்றி ஐயா...
இந்த அடிப்படையில் நாம் நினைத்தோமானால் NOTAவிற்குத் தான் நம் அனைவரின் வாக்கும் போய்ச் சேரும் போலுள்ளது ஐயா. இதுதான் காலத்தின் கோலம்.
ReplyDeleteDear Sir, This is the ' lesson of the hour 'that every voter should not only to learn but also to follow ! JAI HIND !My appreciations to you Dr !
ReplyDeleteஅருமை
ReplyDeleteநீங்கள் முதல் முறையாக என் வலைப்பூ தளத்திற்கு வந்ததில் மகிழ்ச்சி
Deleteநன்றி
அருமையான பதிவு ஐயா
ReplyDeleteவாக்காளர்களுக்க ஞானம் பிறக்க வேண்டுமே
மிக மிக அருமை ஐயா.
ReplyDeleteடிடியும் எழுதி வருகிறார் ஐயா. நம் மனம் விரும்பவதும் அதற்கு எதிர்மறையான கேள்விகளும் என்று.
இங்கு சொல்லப்பட்டிருப்பது அனைத்தும் மனம் விரும்பும் ஒன்று.
ஆனால் யாரேனும் ஒருவராவது தேறுவாரா? என்பது மிகப் பெரிய கேள்வி ஐயா.
கீதா
ஐயா அவர்களின் கனிவான கவனத்திற்கு... தங்களின் இந்த பதிவின் இணைப்பை, இன்று கீழ் உள்ளே பதிவில் கொடுத்துள்ளேன்... மிக்க நன்றி...
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2019/04/Election-Decision-Making-Process-Part-4.html
மிக அருமையாக சொன்னீர்கள்.
ReplyDelete//ஞானம் வந்தாற்பின் வேறென்ன வேண்டும் என்று கேட்பான் பாரதி. வாக்காளருக்கு இந்த ஞானம் பிறக்க வேண்டிய தருணம் இதுதானே? //
இது தான் சரியான நேரம்.
மிக அருமையான சிந்தனைகளைச் சரியான சமயத்தில் பதிவுட்டீர்கள். கல்வி அறிவு உள்ளவர்கள் இருபது சத்விகிதமாவது இந்த சிந்தனை கொண்டிருந்தால்
Deleteநாடு உருப்படும். அறிவுரை கேட்பவர் யார் என்று மனம் வருந்துகிறது. நல்லாசிரியராக நீங்கள் சொல்வதை மக்கள் காதுகளில் வாங்கி மனத்தில் பொதிய வேண்டும்.