Wednesday 20 September 2017

கனடாவின் மறு பக்கம்

   என்னுடைய பயணக் கட்டுரைகளைத் தொடர்ச்சியாகப் படித்த எனது முன்னாள் மாணவர் ஒருவர், “கனடா என்ன உலகின் சொர்க்க பூமியா” என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

    கனடாவுக்கு மறுபக்கமும் உண்டு. உலகின் வளமையான நாடுகளில் ஒன்றாகத் திகழ்ந்தாலும் இங்கும் ஒரு பக்கம் ஏழைமை இருக்கத்தான் செய்கிறது. இங்கே ஒரு தனி மனிதரின் மாத வருமானம் 1844 டாலருக்குக் குறைவாக இருந்தால் அவர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வதாகச் சொல்கிறார்கள். நான்கு பேர்கள் கொண்ட குடும்பத்தின் மாத வருமானம் 3688 டாலருக்குக் குறைவாக இருந்தால் அது வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பம் என அறியப்படுகிறது.

   இன்றைய தேதியில் நாட்டில் 48,000,00 பேர்கள் கடும் வறுமையில் வாழ்வதாக அரசின் ஆய்வறிக்கை கூறுகிறது. இது நாட்டின் மக்கள் தொகையில் 14% என்று அது மேலும் தெரிவிக்கிறது. பன்னிரண்டு இலட்சம் குழந்தைகள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாழ்கிறார்கள் எனக் குறிப்பிட்டுச் சொல்கிறது. இருந்தாலும் அரசின் திட்டமிட்ட அணுகுமுறையால் இந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று அறிக்கையின் முடிவுரை அமைந்துள்ளது.

     ஒட்டாவா கனடா நாட்டின் தலைநகரமாகும். இங்கும் இரவு உணவு கிடைக்காமல் படுக்கைக்குச் செல்வோர் இருக்கிறார்கள். ஆனால் ஒட்டாவா உணவு வங்கி என அழைக்கப்படும் அரசு சாரா அமைப்பு இவர்களுக்கு இரவு உணவைத் தந்துதான் படுக்கைக்கு அனுப்புகிறது. சராசரியாக மாதம் 40,000 பேர்களுக்கு நல்ல தரமான உணவை அளிக்கிறது. இவ்வாறு மூவாயிரம் உணவு வங்கிகள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. மாதம் தோறும் நாடு முழுவதும் எட்டு இலட்சம் பேர்கள் இவற்றின் மூலம் பயனடைவதாக ஒரு நாளேடு குறிப்பிடுகிறது.

    ஒட்டாவா உணவு வங்கியில் நூற்றுக்கணக்கானோர் தன்னார்வத் தொண்டர்களாக உள்ளனர். வறுமையில் வாழும் மக்களை அறிவியல் பூர்வமாக இனங்கண்டு பட்டியலைத் தயாரிக்கிறார்கள். குடும்பத்தின் சூழ்நிலைக்கேற்ப உணவுப் பொருள்களாகவும் தருகிறார்கள்; சமைத்த உணவாகவும் அவர்களுடைய வசிப்பிடத்தில் கொண்டு சென்று தருகிறார்கள்.

   இந்த அமைப்பினர் கொடையாகப் பெறப்பட்ட பரந்த நிலப்பரப்பில் சோளம், காய்கறி போன்ற உணவுப் பொருள்களை உற்பத்தி செய்கிறார்கள். மேலும் வேளாண் பெருமக்களை அணுகி அறுவடையின்போது விளைபொருள்களின் ஒரு பகுதியைக் கொடையாகப் பெறுகிறார்கள். இவற்றை எல்லாம் சேமித்து வைக்க உறைகுளிர் கிடங்குகளை நிறுவி உள்ளார்கள்.

    குடும்ப விழாக்களின்போது உணவுப் பண்டங்கள் மீதியாகிவிட்டால் இந்த அமைப்புக்குத் தெரிவிக்கலாம். உடனே வந்து எடுத்துச் சென்று உறைகுளிர் பெட்டியில் வத்து மறுநாள் விநியோகம் செய்கிறார்கள்.
 மற்றும் இந்த அமைப்பின் வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள் தங்கள் பிறந்தநாள், மணநாள் போன்ற நாள்களில் தங்கள் வசதி வாய்ப்பிற்கேற்பத் தாராளமாக நன்கொடை வழங்குகிறார்கள்.

    ஒட்டாவா உணவு வங்கிக்கு உறுதுணையாக வணிக நிறுவனங்கள் தாமாக முன் வந்து உதவுகின்றன. எடுத்துக்காட்டாக, சென்ற ஜூலை முதல் நாளன்று நாடு சுதந்திரம் பெற்று 150 ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியபோது, ஓர் உணவக உரிமையாளர்  அன்று மட்டும் ஆயிரம் வறுத்தக் கோழிகளை விற்று அதில் கிடைக்கும் இலாபத்தை ஒட்டாவா உணவு வங்கிக்கு அளித்தார்.

    உணவுத் தேவையை உணவு வங்கிகள் நிறைவேற்றும் வேளையில், சில தொண்டு நிறுவனங்கள் பயன்படுத்திய ஆனால் கிழியாத ஆடைகளைச் சேகரித்துத் துவைத்துத் தேய்த்து மடித்து அழகான உறைகளில் இட்டு ஏழை மக்களுக்கு அன்புக் கொடையாக வழங்குகின்றன.



      வறுமைக் குறைப்புப் பணிகளை அரசும் முன்னின்று செய்கிறது. குழந்தைகளுக்குப் பள்ளி கல்லூரிகளில் கட்டணத்தின் ஒரு பகுதியை அரசே ஏற்கிறது. இளைஞர்களுக்குத் தொழிற் பயிற்சி அளிக்கிறது. குடும்ப வருமானம் குறைவாக உள்ளோர்க்கு அரசுப் பேருந்துகளில் கட்டணச் சலுகை உண்டு.

    சிக்கனக் கடைகள் என்னும் பெயரில் தொண்டுள்ளம் படைத்தவர்கள்  நடத்தும் கடைகளில் ஏழை எளியவருக்காகக் குறைந்த விலையில் பொருள்கள் விற்கப்படுகின்றன. இந்தக் கடையில் விற்கப்படும் பொருள்களுக்கு அரசு முழு வரிவிலக்கு அளித்துள்ளது. இந்தச் சலுகையை வசதி படைத்தவர்கள் ஒருபோதும் பயன்படுத்துவதில்லை! Relieving hunger today என்ற கோட்பாட்டுடன் உணவு வங்கிகளும், Preventing hunger tomorrow என்ற கோட்பாட்டுடன் அரசும் செயல்படுகின்றன.

 ஆக,
    வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு
    வாழும் மனிதர்க்கெல்லாம்
என்னும் பாரதியின் பாடல் வரி இந் நாட்டில் செயல்வடிவம் பெற்றுள்ளது என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.
.................................................
முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து


8 comments:

  1. இப்படி குளிர்சாதப்பெட்டியில் வைத்து வழங்கும் சேவை இங்கும் சென்னையிலும் செய்கிறார்கள். ஒரு மருத்துவர் பெஸன்ட்நகரில் ஒரு கடை திறந்து இப்படிச் செய்துவருகிறார். அங்கு யார் வேண்டுமானாலும் உணவை அழகாகப் பேக் செய்து கொண்டு கொடுக்கலாம். அவர்க்ள் வைத்துவிடுகிறார்கள். தேவைப்பட்டோர் அங்கு வந்து எடுத்துச் செல்கிறார்கள். இன்னும் ஓரிரு இடங்களில் நடக்கிறது ஸார்.

    வளர்ந்த நாடுகளிலும் ஏழ்மை இருக்கத்தான் செய்கிறது ஸார். நல்ல தகவல்கள்

    கீதா

    ReplyDelete
  2. ஐயமிட்டு உண் என்று சொல்லும் ஔவை
    ஏற்பது இகழ்ச்சி என்கிறார்
    ஏற்பதற்கு எவருமில்லாதபோது
    யாருக்கு ஐயம் இடுவது?
    கடவுள் வாழ்த்தோடு தொடங்கிய
    வள்ளுவர்
    இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்
    பரந்து கெடுக உலகியற்றியான்
    என்று குழப்புகிறார்கள்
    வீட்டுக்கு வீடு வாசப்படி என்பதைப்போல
    நாட்டுக்கு நாடு வறுமையும் இருக்கும் போல
    இதில் கனடா மட்டும் விதி விலக்கா என்ன?

    ReplyDelete
  3. நீங்கள் எழுதிய பதிவுகளில் வித்தியாசமான கண்ணோட்டத்தில் அமைந்த யதார்த்த பதிவு. மறுபக்கம் என்பதையும் நான் காணவேண்டியது அவசியம் என்பதை உணர்த்திய விதம் அருமை.

    ReplyDelete
  4. நிச்சயமாக இந்த அரசு சாரா உணவு வங்கியின் சேவை பாராட்டுக்குரியது. எனினும் தம்மக்களின் பசியற்ற வாழ்விற்கு அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்பது என் எண்ணம். சந்தைப் பொருளாதாரத்தின் கோரமுகம் தான் தாங்கள் குறிப்பிட்ட பசியும் பட்டினியும்.
    ஒரு புறம் சமூகத்தை சுரண்டி பெரும்பணம் பண்ணும் முதலாளித்துவம் மக்கள் சேவை என்னும் முகமூடி அணிந்து பிச்சை இடுவதும் உலகமயமாதலின் தீர்வு இல்லாத பின் விளைவு.

    ReplyDelete
  5. நன்றி - எங்கள் நாட்டின் நிலைமையை தெளிவாக பதிவு செய்தமைக்கு...

    ReplyDelete
  6. அரசு சாரா உணவு வங்கியின் சேவை பாராட்டுக்குரியது ஐயா

    ReplyDelete
  7. நல்ல ஆய்வுதான். தலைப்பில் கவனம் தேவை என்பது என் கருத்து. நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete
  8. Karur Melai Palaniappan's feedback through Whatsapp
    நம் புண்ணிய பூமியாம் பாரத தேசத்தில் சலுகை என்றால் முன் வரிசையில் நிற்கும் பணக்காரர்கள் போல் அல்லாமல் கனடாவில் தேவைப்படுவோர் மட்டும் சலுகை களைப் பெறுவதையும், இல்லாமை, இயலாமை உள்ள சூழலில் உதவும் கரங்களின் சிறப்பையும் மறுபக்கமாக மலர விட்டுள்ள கட்டுரை சிந்திக்க வைக்கிறது.ஒரு எழுத்தாளனின் கடமை கட்டுரையில் பிரதிபலிக்கிறது - வாழ்த்துகள் - ே மலை பழநியப்பன் - கருர்

    ReplyDelete