Tuesday, 4 August 2020

பிறந்த கதையும் பறந்த கதையும்

பிறந்த கதையும் பறந்த கதையும்

   எங்கள் பேரன் பிறந்த கதை முதலில் வரும். அவனைப் பார்க்க நாங்கள் பறந்த கதை அடுத்து வரும். எங்கள் இளைய மகளும் மாப்பிள்ளை தாயுமானவரும் கனடாவில் படித்து, மணம் முடித்து அங்கேயே வேலை பார்ப்பவர்கள் என்பது உறவுக்கும் நட்புக்கும் தெரிந்ததே. அவர்கள் அதே நாட்டில் சென்ற ஜூன் இருபத்தெட்டாம் நாள் ஓர் அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து கண்ணும் கருத்துமாய் வளர்த்து வருகின்றனர்.

    குழந்தைப் பேற்றில் உதவிடவேண்டி நானும் என் துணைவியும் கடந்த ஏப்ரல் மாதத்தில் கனடா செல்ல திட்டமிட்டிருந்தோம். ஆனால் சிவ பூசையில் கரடி நுழைந்ததுபோல் கொரோனா நுழைந்து எங்கள் பயணத் திட்டத்தை முடக்கியது. அப்புறம் என்ன? மாப்பிள்ளை குமரேசன்தான் தாயாய் உடனிருந்து என் மகள் கத்தியின்றி இரத்தமின்றி ஒரு யுத்தமின்றி ஓங்கி குரல் கொடுத்தபடி அதீரன் பிறக்க அனைத்து உதவிகளையும் அகம் மகிழ்ந்து செய்தார். அவருடைய பணியைப் பாராட்டி அன்றுமுதல் என் துணைவியார்  அவரைத் தாயுமானவர் என அழைக்கத் தொடங்கினார் என்பதோடு என் பேரன் பிறந்த கதை நிறைவடைகிறது.

   இனி அவனைப் பார்க்க நாங்கள் பறந்த கதை தொடர்கிறது.

  அவன் பிறந்து இரண்டே வாரங்கள் ஆன நிலையில், “ உங்கள் பேரன் இரவு பகல் வேறுபாடில்லாமல் அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறான். வந்து உதவமுடியுமா?” என்று மகள் வேண்டுகோள் விடுக்க, நாங்கள் சரியென்று சொல்ல, விமானங்கள் பறக்கின்றனவா எனப் பார்க்க இணையத்தில் இணைந்தோம்.     பொன் வைக்கும் இடத்தில் பூ வைத்தல் என்பார்களே அப்படி மாதத்தில் ஓரிரண்டு விமானங்கள் மட்டும் அவ்வப்போது பறக்கின்றன என்பதை அறிந்து நம்பிக்கையுடன் தேட, நம் நாட்டு ஏர் இண்டியா, அமெரிக்காவின் யுனைட்டெட் ஏர்லைன்ஸ், கனடாவின் ஏர் கனடா ஆகிய நிறுவனங்கள் கூட்டணி அமைத்து எங்களை பேரனின் இருப்பிடமான ஒட்டாவா நகருக்கு எங்களை அழைத்துச் செல்ல முன்வந்தன. ஒரு இலட்சத்து எழுபதாயிரம்  ரூபாயை ஒரு நிமிடத்தில் இடமாற்றம் செய்ததும் கடைசி இரண்டு இடங்கள் கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது என்னும் நிபந்தனையுடன் எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.

     இரண்டு வாரங்களில் எல்லா பயண முன் ஏற்பாடுகளையும் முடித்துப் பெட்டிகளை எங்கள் காரில் திணித்தேன். பயணநாள் ஞாயிற்றுக் கிழமை. அன்று முழு ஊரடங்கு என்பதால் முதல்நாள் மாலையே கோவைக்குச் சென்று, என்னிடம் கோபி வைரவிழா பள்ளியில் படித்த  அருமை மாணவர் பொறியாளர் கருணாநிதி இல்லத்தில் தங்கினோம். அவருடைய துணைவியாரின் விருந்தோம்பல் குறித்துத் தனிக் கட்டுரையே எழுதலாம்.

  பயணத் திட்டத்தில் ஒரு மாறுதல் என்னும் செய்தி என் கைப்பேசியில் வந்து நின்றது. கோவையிலிருந்து நண்பகல் பன்னிரண்டு மணிக்குப் புறப்பட வேண்டிய ஏர் இண்டியா விமானம் பிற்பகல் மூன்று மணிக்குப் புறப்படும் என அச்செய்தி தெரிவித்தது. இந்த இடைப்பட்ட நேரத்தில் என்னுடைய தலை மாணாக்கர் கோவை காவல்துறைக் கண்காணிப்பாளர் அர.அருளரசு, மருத்துவர் அர.அன்பரசு இருவரையும் சந்தித்து அளவளாவினோம்.

    கருணாநிதியின் பெரிய மகிழுந்தில் பயணித்து, 2.8.2020 ஞாயிறன்று முற்பகல் 11.30 மணிக்கு கோவை விமான நிலையத்தை அடைந்தோம். அவரே எங்கள் பெட்டிகளை எல்லாம் ஏற்றி இறக்கி உடன் வந்து உதவிகள் செய்த பாங்கும் பண்பாடும் என்றும் எங்கள் நினைவில் நிற்கத் தக்கவை.

    பாதுகாப்புச் சோதனைகள் எல்லாம் முடிந்து ஓய்வாக அமர்ந்து கருணாநிதியின் துணைவியார் கொடுத்தனுப்பிய எலுமிச்சம் சோறு, உளுந்து வடை ஆகியவற்றை உண்டு மகிழ்ந்தோம். பின்னர் விமான நுழைவு வாயிலை அடைந்தோம். முகக்கவசம்(mask), முகக்கேடயம்(Face shield), கிருமிக்கொல்லி(sanitizer) ஆகியவற்றை அளித்தார்கள்.

   இதற்கு முன்னர் பலமுறைகள் விமானப் பயணங்களை மேற்கொண்ட நாங்கள் முதல்முறையாக ஏர் இண்டியா விமானத்தில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. பிறநாட்டு விமானங்களுக்கு இணையாக எல்லா வசதிகளையும் கொண்டதாகவே இந்த விமானமும் இருந்தது.  சற்றே தாமதமாகப் புறப்பட்ட விமானம் கொச்சியில் தரையிறங்கி மேலும் பயணிகள் சிலரை ஏற்றிக்கொண்டு பறந்தது. குறித்த நேரத்தில் 7.30 மணிக்கு புதுதில்லி இந்திராகாந்தி விமான முனையத்தில் தரையிறங்கியது.

  கடவுச் சோதனையும்(Emigration check) சுங்கச் சோதனையும்(customs check) சற்றுக் கடுமையாகவே இருந்தன. மூன்றடுக்குப் பாதுகாப்புச் சோதனைகளை முறையாக முடித்து அடுத்த விமான வாயிலுக்குச் சென்று சேர்ந்தபோது மணி பத்து ஆகியிருந்தது. கருணாநிதியின் துணைவியார் கொடுத்தனுப்பிய பொடி தடவிய சுவையான இட்லிகளை உண்டு முடித்து, யுனைட்டெட் நிறுவனத்தார் கொடுத்த முகக்கவசத்தை அணியாமல் நாங்கள் கொண்டுசென்ற N95 முகக்கவசங்களை அணிந்தோம். அவர்கள் கொடுத்த கொரோன அங்கியை அணிந்துகொண்டோம். இந்த கொரோனா அங்கி (protective gown)அணிவது கட்டாயமாகும். அவர்கள் கொடுத்த முகக்கேடயத்தை(Face shield) அணியாமல், தொடர்ந்து AIR INDIA என எழுதப்பட்டிருந்த கேடயத்தையே அணிந்தோம். நெற்றியில் இந்தியர் என எழுதி ஒட்டிக்கொள்வதில் ஒரு தனிப்பெருமை உண்டுதானே!



        புதுதில்லியில் இரவு 11.35க்குப் புறப்பட வேண்டிய விமானம் முக்கால் மணிநேரம் தாமதமாகப் புறப்பட்டாலும் நியூயார்க்கில் குறித்த நேரத்தில் தரையிறங்கியது. பதினைந்து மணிநேரம் தொடர்ந்து பறந்தோம். மூன்று முறைகள் உண்பதற்கான உணவு வகைளை வழங்கினர். எங்களுக்கான சைவ உணவினை வழங்கியதால் கூடுதலாக மகிழ்ச்சியடைந்தோம்.

     நிறைய கையுறைகளை எடுத்துச் சென்றதால் நோய்த்தொற்றுப் பயமின்றி கழிப்பறையைப் பயன்படுத்தினோம்.

   12000 மீட்டர் உயரத்தில் மணிக்கு 800 கிலோமீட்டர் வேகத்தில் பறந்தபடி 12000 கிலோமீட்டர் பயணம் செய்து அமெரிக்க நேரப்படி 3.8.2020 திங்கள் காலை ஐந்து மணிக்கு நியூயார்க் விமானநிலையத்தில் இறங்கினோம். விமானம் இறங்குமுன் சாப்பிடக் கொடுத்தார்கள். அடுத்துப் பயணிக்க உள்ள விமானங்களில் சாப்பிட எதுவும் கிடைக்காது என்பதை அறிந்த நாங்கள் கிடைத்த உணவை முழுமையாய் உண்டோம்.    

  முன்னதாகப் பாதுகாப்பாக இயக்கிய விமானிகளுக்கு இணைய வழியே ஒரு பாராட்டுரையைப் பதிவிட்டேன்.

    உதவியாளர் கொண்டுவந்த சக்கர நாற்காலியில் அமர்ந்து சென்று அடைவுச் சோதனையை(Immigration check) வெற்றிகரமாக முடித்தோம். நிறைய கேள்விகள் கேட்டார்கள்; உண்மையைத் தவிர வேறேதும் சொல்லவில்லை. அடிப்படையில் நான் ஒரு தமிழாசிரியனாக இருந்தாலும், விரும்பி ஆங்கிலப் புலமையை வளர்த்துக் கொண்டதால் அது எனக்குச் சரியான நேரத்தில் பயன்பட்டது. நாம் கற்கும் ஒவ்வொரு மொழியும் கூடுதலாக நமக்குக் கிடைக்கும் ஒரு விழியாகும் என்பது என் கருத்து. அரசியல்வாதிகளின் தவறான அணுகுமுறையால் நாம் இந்தி, மலையாளம் போன்ற மொழிகளைக் கற்காமல் விட்டு மொழி ஊனமுள்ளவராய் வருந்துகின்றோம்.

    அடுத்து, கோவையில் விமானத்தில் போட்ட நான்கு பெரிய பெட்டிகளை இங்கே தேடி எடுத்துக் கொஞ்ச தூரம் தள்ளுவண்டியில் வைத்து நானே தள்ளிச்சென்று மீண்டும் ஏர் கனடா விமானத்துக்காரர்களிடம் ஒப்படைத்தேன். அந்தத் தள்ளுவண்டிக்கு வாடகை ஆறு டாலர்!  ஒரு இயந்திரம் நான் கொடுத்த பத்து டாலர் தாளை விழுங்கிவிட்டு ஒரு பற்றுச்சீட்டையும் மீதி நான்கு டாலரையும் துப்பியது!

    பின்னர் ஏர் கனடா விமான நுழைவாயிலுக்குச் சென்று காத்திருந்தோம். எதிர் வரிசையில் அமர்ந்திருந்த முதிய சீக்கியர் ஒருவர் அமெரிக்கப் பணத்தாள் இல்லாமல் தவிப்பதாய்ச் சொன்னார். அவர் கொடுத்த கனடா பணத்தாள்களைப் பெற்றுக்கொண்டு அன்றைய நிலவரப்படி அவற்றுக்கு இணையான அமெரிக்க டாலர்களைக் கொடுத்தேன். அவர் அதன்மூலம் அங்கிருந்த உணவகத்தில் காலையுணவை வாங்கி மகிழ்ச்சியுடன் உண்டுமுடித்து மீண்டும் மீண்டும் என்னிடம் வந்து நன்றி கூறினார்.

    அடுத்த விமானம் புறப்படுவதற்கான அழைப்புக்குரலைச் செவிகள் கேட்டு மூளைக்கு அனுப்பின. உடனே உரிய ஆவணங்களைக் காட்டி விமானத்தின் அருகே சென்றால் ஒரே வியப்பு! நம்மூர் பேருந்து அளவில் சிறியதாய் இருந்தது. சாத்தி வைக்கப்பட்டிருந்த படிக்கட்டின் வழியே மேலேறி உள்ளே நுழைந்தோம். முகக்கவசம் அணிந்த அழகிய கண்களைக் கொண்ட விமானப் பணிப்பெண் ஒருத்தி எங்களை வரவேற்றுக் குடிநீர், கையுறைகள், முகக்கவசம், கிருமிக்கொல்லி அடங்கிய உறையைத் தந்தாள். நாற்பது சிறிய இருக்கைகளைக் கொண்ட அந்த விமானம் பார்க்கப் புதுமையாக இருந்தது. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரியது என்னும் பழமொழிக்கு ஏற்ப 900 கிலோமீட்டர் தூரத்தை ஒரு மணி நேரத்தில் கடந்து பகல் 11.15 மணிக்கு கனடா நாட்டில் மான்ட்ரியல் நகரத்தை அடைந்தது.

   இங்கே ஒரு சிக்கல். நாங்கள் முன்னரே கேட்டதற்கிணங்க, உதவியாளர் இருவர் அடுத்த விமானத்தைப் பிடிப்பதற்காக எங்களை சக்கர நாற்காலியில் அழைத்துச்சென்றனர். நடுவழியில் இருந்த காத்திருப்புக் கூடத்தில் நிறுத்தி, அப்படியே சக்கர நாற்காலியில் அமரச் சொல்லிவிட்டு எங்கோ சென்றுவிட்டனர்.   அடுத்த விமானம் 1.45 மணிக்கு. 1.30 மணிக்கு விமான வாயில் அடைக்கப்படும். 12.45 வரை எங்களை அழைத்துச் செல்ல அவர்கள் வரவில்லை. உடனே இறங்கி நடக்கத் தொடங்கினோம். உதவியாளர் சொதப்பலால் முன்னர் மேற்கொண்ட அமெரிக்கப் பயணத்தின்போது ஒரு விமானத்தைத் தவறவிட்ட கசப்பான அனுபவம் எங்களுக்கு உண்டு.

   பதினைந்து நிமிட நடைக்குப் பிறகு பாதுகாப்புச் சோதனை மையம் கண்ணில் பட்டது.     அங்கே பாதுகாப்புச் சோதனைகள் பலமடங்காக இருந்தன. எனது ஷூக்களை கிழித்துப் போடாத குறைதான்; அப்படி ஆராய்ந்தார் அந்த அதிகாரி, மொத்தத்தில் ஷூ தூய்மையாக ஆனது!       என் மனைவி அணிந்திருந்தவை இரண்டு தங்க வளையல்கள் மட்டுமே. அவற்றைத் தனியாக ஸ்கேன் செய்தார்கள். பல எந்திரங்கள் அவற்றை விழுங்கி வெளித் தள்ளின. இந்த அதிகாரிகளிடம் கொடுக்க மறுக்கவோ அல்லது ஏன் எதற்கு என்று கேட்டாலோ நம் கதை கந்தலாகிவிடும். அமைதியாக எல்லா சோதனைகளையும் அல்லது வேதனைகளையும் எதிர்கொள்ள வேண்டும். ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் என்று நம் வள்ளுவர் தாத்தா சொன்னது முற்றிலும் உண்மை!

   தொடர்ந்து நடந்து விமான நுழைவாயிலை அடையவும் அழைப்புக்குரல் கேட்கவும் சரியாக இருந்தது. இப்படியாக நான்காம் கட்ட விமானப் பயணம் தொடர்ந்தது.

      அதுவும் ஒரு சிறிய விமானந்தான். வெறும் முப்பது நிமிடப் பயணம். பாதுகாப்பாக ஒட்டாவா விமானத் தளத்தில் தரையிறங்கினோம். பெட்டிகளைத் தேட வேண்டிய அவசியமில்லாமல் ஓர் அன்பர் எங்களுடைய நான்கு பெட்டிகளையும் ஒரு தள்ளுவண்டியில் ஏற்றி வைத்திருந்தார்.  அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, நான் வண்டியை முன்னே தள்ளிச் செல்ல என் துணைவி பின்னே வர விமான நிலையத்தின் வெளிவாயிலை அடைந்தோம். மாப்பிள்ளையைக் கைப்பேசியில் அழைத்தேன்.  அவர் இரண்டே நிமிடத்தில் பறந்து வந்து தன் மகிழுந்தில் அழைத்துச்சென்று பதினான்கு நாள் தனிமைக்காக(quarantine) ஒரு அடுக்ககத்தில் இருந்த தனி வீட்டில் விட்டுச் சென்றார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது போல அடுத்தத் தளத்தில் மகள் வீடு இருந்தும் மகளையும் பேரனையும் பார்க்க முடியவில்லை..

                                           மீதிக் கதை  தொடரும்.

முனைவர் .கோவிந்தராஜூ,

கனடா நாட்டிலிருந்து.

 

 

 

 

 

    

  

  

   

     

 

   


20 comments:

  1. இவ்வளவு தூரம் சென்று, 14 நாட்கள் தனிமை சிரமம் தான்... ஆனாலும் பேரனை பார்த்தவுடன் அனைத்து சிரமங்களும் பறந்தோடி விடும்...

    ReplyDelete
  2. வருக வருக உங்கள் வரவு நல்வரவாகட்டும்

    ReplyDelete
  3. ஒரு இலட்சத்து எழுபதாயிரம் ரூபாய் - ஒருவருக்கா? இருவருக்கும் சேர்த்தா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம். இருவருக்கும் சேர்த்துதான் இந்தக் கட்டணம்.

      Delete
  4. மகிழ்ச்சி. பயணம் கடுமையாக இருப்பினும் செல்லும் இடம் நோக்கி இனிதாகச் சேர்ந்தது மகிழ்ச்சியே. நல்லபடியாக உங்களைத் தாயுமானவர் தனிவீட்டில் 14 நாட்கள் வனவாசம் போன்று வீட்டுவாசத்தில் இருக்க வைத்துவிட்டார். வீட்டுவாசம் நிறைவு பெறட்டும். பேரனை மனமகிழ்வுடன் ஆரத்தழுவுங்கள். வாழ்க! வளர்க! அதீரன்.

    ReplyDelete
  5. //நாம் கற்கும் ஒவ்வொரு மொழியும் கூடுதலாக நமக்குக் கிடைக்கும் ஒரு விழியாகும் என்பது என் கருத்து//

    அற்புதமான வாக்கியம் ஐயா.

    நிகழ்வுகளை நேரில் பார்ப்பது போன்ற வர்ணனை அருமை.

    பெயரனை கண்டு கொஞ்சி மகிழ்ந்து வாருங்கள்.

    ReplyDelete
  6. Really a wonderful travelogue. You have spread your information interestingly all over the article. Awaiting to know more in the days to come. Best wishes to everyone there.

    ReplyDelete
  7. பிறந்த கதையும்
    பரந்த கதையும்
    சிறந்த கதையாய்
    சிறப்பு கட்டுரையால்
    சீரிய முறையில்
    சிந்திக்கும் வகையில்
    சந்தித்த நிகழ்வுகளை
    அழகாய் பகிர்ந்தமைக்கு
    அடியேனின் வணக்கங்கள்.
    அதிரனுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. மகிழ்ச்சி அண்ணா, நீங்களும் மதினியாரும் (அண்ணியார் என்று குறிப்பிடுவதில் ஒரு நெருக்கம் குறைவதாக உணர்கிறேன். இதற்கு தனியாக ஏதேனும் விளக்கம் இருந்தால் பதிவிடவும்) நல்லபடியாக கனடா சென்றடைந்து தங்களின் பேரன்புக்குரிய பெயரனைக் கண்டு மகிழ்ந்தது எங்களுக்கும் மகிழ்ச்சியே.

    எங்கள் ஊர் பக்கம் ஒரு சொலவடை உண்டு. "ஆடும் மேச்ச மாதிரி....அண்ணனுக்கும் பொண்ணு பார்த்த மாதிரி...!" என்று. உங்கள் பயணம் கிட்டத்தட்ட அப்படித்தான். பெயரனைப் பார்த்த மாதிரியும் ஆச்சு; இன்னொரு பயணக் கட்டுரை நூல் எழுதிய மாதிரியும் ஆச்சு.

    "மும்மொழிக் கொள்கை" எல்லாம் நாம் வேறு தளங்களில் விவாதிப்போம்.
    வாழ்த்துக்களுடன்.

    உங்கள் அன்புத் தம்பி, த. தங்கப்பாண்டியன்

    ReplyDelete
  9. எப்படியோ நீங்கள் கனடா சென்று சேர்ந்தாச்சு இல்லையா இனி பேரனைப் பார்த்ததும் உங்கள் மகிழ்ச்சி மற்றதை எல்லாம் மறக்கடிக்கச் செய்யும். பெயரனோடு இருந்து உறவாடி மகிழ்ந்து இனிய நினைவுகளைப் பதிந்து வாருங்கள் ஐயா.

    ////நாம் கற்கும் ஒவ்வொரு மொழியும் கூடுதலாக நமக்குக் கிடைக்கும் ஒரு விழியாகும் என்பது என் கருத்து//

    இதை அப்படியே வழி மொழிகிறோம் ஐயா அருமையான வரி.

    தொடர்கிறோம்.

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete
  10. Not a travel but an adventurous journey of the grandpa and the grandma. They deserve it to be with their blessed grandson,Adheeran ! Best wishes to all !

    ReplyDelete
  11. 14 நாட்கள் தனிமை என்பது இப்பொழுது கட்டாயமாகிவிட்டதே
    பெயரனுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  12. Not a travel but an adventurous journey of the grandpa and the grandma. They deserve it to be with their blessed grandson,Adheeran ! Best wishes to all !

    ReplyDelete
  13. Not a travel but an adventurous journey of the grandpa and the grandma. They deserve it to be with their blessed grandson,Adheeran ! Best wishes to all !

    ReplyDelete
  14. தொற்றுத்தடைக் காப்புத்தனிமைக் காலத்தின் (quarantine)
    தனிமைத் தருணங்களையும்
    இனிமைத் தருணங்களாக்கி
    பிறந்த கதையும் பறந்த கதையும் எழுதியுள்ளீர்கள்.
    அடைவுச் சோதனை போன்ற
    அழகுத் தமிழ் சொற்களால்
    சொக்கிப் போனேன்.
    அடுத்தடுத்த கட்டுரைகள்​ கவிதைகள்
    அணி அணியாகத் தொடர்ந்து வருமென
    ஆவலுடன் காத்திருக்கிறோம்.


    ReplyDelete
  15. பிறந்த,பறந்த பயணக் கதையைப் படித்த தும் தங்களுடன்





    பயணித்தது போன்ற உணர்வுதான் ஏற்பட்டது பயணம் சற்று சுமையாக இருந்தாலும் பேரனைப் பார்த்தவுடன் இந்தச்சுமை‌ சுகமான சுமையாக மாறிவிடும். பேரனோடு மகிழ்ச்சியாய் இருந்து இனிய நினைவுகளைப் பதிந்து வாருங்கள்.வனவாசம் முடிந்து மிகப்பெரிய மகிழ்ச்சி காத்திருக்கிறது அதீரனுக்கு வாழ்த்துக்கள்.க.மல்லிகா முதுகலை ஆசிரியை (ஓய்வு)

    ReplyDelete
  16. அவ்வளவு தூரம் சென்று..தனிமை..
    அப்பப்பா..எவ்வளவு அனுபவங்கள்.

    ReplyDelete
  17. தங்களின் பயணக்கட்டுரை வழக்கம்போலவே அருமை ஐயா, புவனா & தாயுமானவர் ஆகியோர்க்கு என் இனிய நல்வாழ்த்துக்கள். பேரன் அதீரன் பார்த்தவுடன் பயணக் களைப்பு எல்லாம் தீர்ந்துவிடும். அம்மாவுக்கு எனது அன்பை தெரிவியுங்கள். 🙏🙏🙏

    ReplyDelete
  18. தி. முருகையன்7 August 2020 at 21:16

    தாயுமானவர் பெயருக்கேற்ப பேறுகாலத்தில் பவனாவிற்கு தாயும் ஆனர். வாழ்த்துக்கள். பேரனைப் பார்ந்ததும் 14நாள் தனிமை சுவடின்றி மறைந்துபோகும். அதீரனை இறைவன் ஆசிர்வதிப்பாராக.

    ReplyDelete