கடுங்குளிர் காரணமாக ஒருவார
இடைவெளிக்குப் பிறகு இன்று மணிக் கணக்கில் நீண்டதூரம் நடந்தேன். கொடைக்கானலில்
மாலை நேரத்தில் நடப்பது போல தட்பவெப்ப நிலை சுகமாக இருந்தது.
நடைப் பயிற்சியின்போது நான் கண்டதும்
கேட்டதும்தான் இன்றைய பதிவாக அமைகிறது.
ஓர் இடத்தில் புயல் நீர் சேகரிப்பு
மையம்(Storm water Storage for ground water Replenishment) என எழுதப்பட்டிருந்தது. அது சுமார் ஆறு ஏக்கர்
பரப்பில் அமைந்தது. அதைச் சுற்றிலும் பத்தடி உயரமுள்ள கம்பிவலை வேலி உள்ளது.
மரங்களால் சூழப்பட்டுள்ளது. அருகில் சென்று இடுக்கின் வழியாக எட்டிப்பார்த்தேன்.
ஒழுங்கில்லாத படு பாதாளம் செயற்கையாகத் தோண்டப் பட்டிருந்தது.. ஐந்து கிலோ மீட்டர்
சுற்றளவில் நகரில் பெய்யும் மழை, பெய்த அடுத்த பத்து நிமிடத்தில் இந்தப்
பாதாளத்தில் பாய்ந்து தஞ்சம் அடைந்து விடுமாம். இதனால் சாலைகளில் வெள்ள நீர்
தேங்குவது தவிர்க்கப்படுகிறது. மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. இப்படியான
ஏற்பாடு ஒவ்வொரு குடியிருப்புப் பகுதியிலும் இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த
ஊரிலிருந்து இருபது கிலோமீட்டர் தூரத்தில் கடல் இருந்தாலும் புயல் நீரைக் கடலில்
கலக்க விடுவதில்லை.
அடுத்து நான் பார்த்தது பழைய
துணிகள் சேகரிப்பு மையம். “இங்கே நீங்கள்
போடும் பழைய துணிகள், ஷூ முதலியவற்றை சீர் செய்து இலாப நோக்கில் அதே சமயம் படு
குறைந்த விலையில் அரசு தரும் முழு வரிவிலக்குடன் ஏழை எளிய மக்களுக்கு அளிக்கிறோம்.
நீங்கள் தரும் பழைய பொருள்களுக்கு மீண்டும் ஒரு பயன்பாட்டு வாய்ப்பைத் தருகிறோம்”
என்று ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளார்கள். பொருள்கள் வந்து குவிகின்றன.
தொடர்ந்து நடந்தபோது இந்த ஊர்
வங்கி ஒன்று கண்ணில் பட்டது . Drive up banking, Drive up ATM வசதி உண்டு என எழுதப்பட்டிருந்து. போய்ப் பார்த்தேன். காரில் சென்று,
இறங்காமலேயே ஓட்டுநர் இருக்கையில் இருந்தவாறே வங்கி வேலைகளை முடிக்க ஒரு
கவுன்ட்டரும், பணம் எடுக்க ஒரு பணம் வழங்கி இயந்திரமும் கைக்கெட்டும் வகையில்
அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளரின் நேரம் மிச்சமாவதோடு கார் பார்க்கிங் பிரச்சனை
வெகுவாகக் குறைகிறதாம். நம் நாட்டின் பெருநகரங்களில் ட்ரைவ் த்ரூ உணவு மையம்
இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ட்ரைவ் த்ரூ வங்கி வசதி உண்டா என்பது தெரியவில்லை.
மற்றொரு தெருவின் நடைப்பாதையில்
நடந்தபோது என் அருகில் ஒரு கார் வந்து நின்றது. ஓர் இளம்பெண் ஓட்டுநர்
இருக்கையிலிருந்து இறங்கி வந்து கையில் இருந்ததை அந்த வீட்டின்முன் இருந்த
பெட்டியில் போட்டுச் சென்றாள். மேலும் சில இடங்களில் நிறுத்தி அவ்வாறே செய்தாள்.
இந்த ஊரில் தபால்காரருக்கும் அஞ்சல்துறை வழங்கும் கார் உண்டு என்பது பிறகுதான்
தெரிந்தது!
ஓர் இடத்தில் நின்று வீடுகளின்
மேலே பார்த்தேன். இங்கு எந்த வீட்டிலும் மேனிலைத் தண்ணீர்த் தொட்டி இல்லை. வீட்டுக்கு
வீடு ஆழ்குழாய் கிணறு அமைப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர்
தாறுமாறாக உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. நகராட்சியே எல்லா வீடுகளுக்கும் தண்ணீரையும்
வெந்நீரையும் இருபத்து நான்கு மணிநேரமும் வழங்குகிறது; கட்டணம் உண்டு. எல்லோரும்
தண்ணீரைச் சிக்கனமாகவே பயன்படுத்துகிறார்கள். தெருக்களில் அடி பம்ப் அல்லது பொது
குடிநீர்க் குழாய் என்ற பேச்சுக்கே இடமில்லை. இதனால் இவ்வூர்ப் பெண்களுக்கு
குழாயடி சண்டை போட வாய்ப்பில்லாமல் போவது ஒரு குறைதான்.
அட இது என்ன கூத்து? ஒரு பள்ளிப்
பேருந்து சாலை வலது ஓரத்தில் வந்து நிற்கிறது. குழந்தைகள் வரிசையில் நின்று
ஏறுகிறார்கள். அகன்ற சாலை காலியாக உள்ளது. ஆனால் பின்னால் வரும் அத்தனை
வாகனங்களும் அப்படியே வரிசை கட்டி
நிற்கின்றன. பள்ளி வாகனத்தின் முன்னாலும் வாகனங்கள் குறுக்கே செல்லக் கூடாது.
பள்ளி வாகனம் நகர்ந்தபின்தான் மற்ற வாகனங்கள் முன்னேற முடியும். மீறினால் இந்திய
பண மதிப்பில் பார்த்தால் ரூபாய் எழுபதாயிரம் மட்டுமே அபராதம்!. இந்த நடைமுறை இருப்பதால் பள்ளி வாகன விபத்து
என்பது அறவே இல்லை எனச் சொல்கிறார்கள்.
இவற்றை எல்லாம் பார்த்துப்
பெருமூச்சு விட்டபடி வீடு வந்து சேர்ந்ததும் சுவையான காலை உணவாக என் மனைவி தயாரித்த பீசா தயாராய் இருந்தது.
அது வேறொன்றுமில்லை; நம்மூர் ராகி
அடைதான்!
& &
& & &
பின் குறிப்பு: இன்று கேமராவை எடுத்துச் செல்ல மறந்துவிட்டேன்.
………………………………………………….
Dr.A.GOVINDARAJU
Camp : New York, USA.
வணக்கம் ஐயா!
ReplyDeleteநீங்கள் கண்டதும்பார்த்ததும் படித்தேன்!
அருமையான நல்ல பழக்கங்கள் அங்கே!
உங்கள் மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் வாழ்த்துக்கள்!
படிக்கப் படிக்க வியப்புதான் மிஞ்சுகிறது ஐயா
ReplyDeleteநடைப்பயிற்சியிலே இவ்வளவா? ரசித்தேன்.
ReplyDeleteஆம் ஐயா நிறைய விஷயங்கள் பெருமூச்சு விடும்படிதான் இருக்கும் அங்கு!! நாம் கற்பதற்கு நிறைய இருக்கு. இங்கு எந்த சட்டமுல் வலியுறுத்தப்படுவதில்லை என்பதும் பெரும் வேதனை. ஹா ஹா ஹா ராகி அடை - அந்த ஊரில் செய்ததும் பீஸா ஆகிவிட்டதா!!??
ReplyDeleteதுளசிதரன், கீதா
It is rain water(not puyal water) harvesting.You are an interesting person.We eagerly awaiting for your photos.Always carry your camera with you.
ReplyDeleteஅய்யா, வ்ணக்கம். நீண்ட... இடைவெளிக்குப் பின் இன்று தங்களது ”நம்ப முடியாத செய்திகள்” என்னும் தலைப்பில் நீங்கள் பதிவிட்ட செய்திகளைப் படித்தேன், இரசித்தேன், மகிழ்ந்தேன். நாம் வாழும் நாட்டில் இத்தகைய வசதிகளை நம்மவர்கள் பின்பற்றுவதில்லை. இதில் நாம் காணவேண்டியது தனிமனித ஒழுக்கம் மட்டுமே. மனிதன் தன்னையும் திருத்திக் கொள்ளவேண்டும், தான் சார்ந்துள்ள சமுதாயத்தையும் திருத்த வேண்டும். இல்லயென்றால் நாடும் வீடும் செழிப்படையாது. காலம் தான் மாற்றத்தைக் கொடுக்க வேண்டும்.
ReplyDeleteமுனைவர் ரா.லட்சுமணசிங்
பேராசிரியர்
கரூர்
வலிமைமிக்க தங்களின் எழுத்திற்கு வழித்துணை (கேமரா) தேவையில்லை.
ReplyDeleteVery good narration.
வியப்புடன்...
நூலகர் மோகன சுந்தரம்,கரூர்.
ஐயா நமது கலாச்சாரத்தை திருடியவன் நன்றாக வாழ்கிறான். நாம் அவன் விட்டுச்சென்ற திருட்டுத்தனத்தில் திண்டாடுகிறோம்
ReplyDelete