Thursday, 8 March 2018

இந்தியாவின் இனிய மகள்

    விடுதியில் தங்கிப் படிக்கும் பள்ளிச் சிறுவன் வீட்டு நினைப்பு அதிகமாகி,  விடுமுறையில் வீடு திரும்ப ஏங்கிக் காத்துக்கிடப்பது போல இப்போது என் மனநிலை உள்ளது. அவனுக்கு வீட்டு நினைப்பு; எனக்கு நாட்டு நினைப்பு. அவ்வளவுதான் வேறுபாடு. இந்தியாவுக்கு விமானம் ஏறும் அந்த இனிய நாள்- இந்த மாதம் இருபத்து எட்டாம் தேதிக்காகக் காத்திருக்கிறேன்.

    நம் நாடு பற்றிய நினைப்பில் மூழ்கியிருந்தபோது இன்றைய நாள் பற்றிய நினைவும் உடன் எழுந்தது.

இன்று உலக மகளிர் நாள்.

   என் மனத்துக்குச் சிறகு முளைத்துப் பின்னோக்கிப் பறந்தது. மதுரைக் காமராசர் பலகலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் காந்திய சிந்தனை குறித்த இரண்டாண்டுப் பட்டயப் படிப்பில் சேர்ந்துப் படித்த பொற்காலம் அது. காந்தியடிகளின் சுயவரலாற்று நூல் தனித்தாளாக பாடத்திட்டத்தில் இருந்ததால், அதை எழுத்தெண்ணிப் படித்தேன். பின்னாளில் தான் நடத்திய சத்தியாக்கிரக போராட்டங்களுக்கு வித்து இட்டவள் ஒரு பதினாறு வயது பெண் என்று குறிப்பிட்டு விலாவாரியாக அந்நூலில் எழுதியிருந்தார்.

   இந்த மகளிர் தினத்தில் அந்தப் பெண்ணைப் பற்றி எழுதுவது பொருத்தமாக இருக்கும் என்ற எண்ணத்தில் என் மடிக் கணினியைத் திறந்து தட்டச்சு செய்து கொண்டுள்ளேன்.

  முனுசாமி என்ற அந்த இளைஞருக்குச் சொந்த ஊர் புதுச்சேரி. மங்களத்தம்மாள் என்ற இளம்பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் பிடித்துப்போக, வீட்டு மாப்பிள்ளையாகவும் இருக்க உடன்பட்டதால்,  நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்துள்ள தில்லையாடியில் திருமணம் நடந்தேறியது. தன் குலத்தொழிலான நெசவுத் தொழிலில் ஈடுபட்டார்.

   வெள்ளையர்கள் இங்கிலாந்திலிருந்து ஆலையில் நெய்த துணிகளைத் தமிழ்நாட்டுச் சந்தைகளில் கூவிக் கூவி விற்றதால், உள்ளூர் கைத்தறி நெசவுத் தறிகள் மூடிக்கிடந்தன; நெசவாளரின் குடும்பங்கள் வாடிக்கிடந்தன. அந்தச் சூழ்நிலையில்தான் நம் முனுசாமி தன் கரு சுமந்த மனைவியுடன் பிழைப்புக்காக கப்பலேறி தென்னாப்பிரிக்கா செல்கிறார். இருவரும் அங்கே அடிமைகளாக வெள்ளையரின் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்து அரைகுறையாக வயிற்றை நிரப்பி வாழ்கிறார்கள். பிறகு முயற்சி உடைய முனுசாமி ஒரு தின்பண்டக் கடை நடத்தி கொஞ்சம் வருமானைத்தைப் பெருக்குகிறார். அப்போது மகள் பிறக்கிறாள். அந்த மகிழ்ச்சி நிறைந்த நன்னாள் 22.2.1898. வள்ளியம்மை என்று அழகு தமிழில் பெயர்சூட்டி வளர்க்கிறார்கள். பள்ளிப்பருவம் அடைந்ததும் ஆங்கிலவழி பள்ளியில் படிக்க வைக்கிறார்கள்.
  
அவள் ஆறாம் வகுப்பு படித்தபோது நம் காந்தி- மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி- ஓர் இளம் வழக்கறிஞராக அங்கு ஜோகன்னஸ்பர்க்கில் பணிபுரியச் செல்கிறார். இந்தியர்களின் வாழ்வுரிமைக்காக அவ்வப்போது கூட்டங்கள் நடத்திக் குரல் கொடுக்கிறார். அக் கூட்டங்களில் வள்ளியம்மையும், அவளுடைய பெற்றோரும் பங்கேற்கிறார்கள்.
    ஐந்தாண்டுகள் சிறிதும் பெரிதுமாக நடந்த போராட்டங்களில் தொடர்ந்து பங்கேற்ற வள்ளியம்மை மோகன்தாசுக்கு தோளொடு தோள் கொடுக்கும் இளம் போராளியாக மாறுகிறார்.

   ஒரு சமயம் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த காந்தியை நோக்கி ஒரு போலீஸ் அதிகாரி துப்பாக்கியை நீட்டிக் குறிபார்த்த வேளையில், வள்ளியம்மை புயலெனப் பாய்ந்து காந்திக்கு முன்னால் போய் நின்றுகொண்டு, “என்னை முதலில் சுடுங்கள்” என்று ஆவேசமாகக் கூறவும் நடுங்கிப் போய்விட்டான் அந்த அதிகாரி.

    அடுத்தநாள் ஓர் அதிர்ச்சிதரும் செய்தி பத்திரிகையில் வெளியானது. கிறித்துவ முறைப்படி செய்த, செய்யும் திருமணங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்று வெள்ளை அரசாங்கம் ஒரு சட்டம் போட்டது. வந்தது கோபம் வள்ளியம்மைக்கு.

   காந்தி ஏற்பாடு செய்த மகளிர் பேரணியில் முன்னணியில் முழங்கினாள் வள்ளி - துள்ளி! பேரணியில் மொத்தம் பதினாறு பேர்கள்தாம். அவர்களுள் பத்து பேர் தமிழர்கள். அதுவும் தானா வந்த கூட்டம்!

    “நேற்றுவரை என் அம்மா என் அப்பாவுக்கு பெண்டாட்டி; இன்றிலிருந்து வைப்பாட்டி என்பது எந்த ஊர் நியாயம்?” என்று நெஞ்சை நிமிர்த்திக் கேட்டாள். அதைக்கேட்டு காந்தி சற்றே ஆடிப்போனார்; அங்கு நின்ற போலீஸ்காரர் ஓடிப்போனார். ஓடிப்போன போலீஸ்காரர் உயரதிகாரியுடன் திரும்பிவந்தார். “உங்களுக்கு என ஒரு கொடி கூட இல்லை. போராட வந்துவிட்டீர்களா?” என்று கேட்டான் அந்த போலீஸ் அதிகாரி. அதைக்கேட்ட வள்ளியம்மை தன் பச்சை நிற தாவணியின் ஒரு பகுதியைக் கிழித்து அவன் முகத்தில் வீசியவாறு, ”இதுதான் எங்கள் தேசியக் கொடி. போதுமா?’ என்றாள். பிறகென்ன வள்ளியம்மையைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

     சிறைச் சூழல் அவளை கடும் நோயாளி ஆக்கியது. தண்டத்தொகை கட்டிவிட்டுச் செல்லலாம் என்ற சலுகையை ஏற்க மறுத்தாள். இதற்கிடையே அரசு காந்தியுடன் பேசியது. அந்தக் கற்புக்குக் களங்கம் சேர்த்த கறுப்புச் சட்டத்தை அரசு விலக்கிக் கொண்டது. வள்ளியம்மை விடுதலை செய்யப்பட்டாள். சிறை வாயிலில் காத்து நின்ற காந்தியும், அவரது  நண்பர் போலக் என்பவரும் சேர்ந்து துணியால் ஒரு தூளி கட்டி, நோயுற்று மெலிந்து  கிடந்த வள்ளியம்மையைத் தூளியில் போட்டு, தோள்களில் சுமந்து சென்று வீட்டில் விட்டார்கள். வள்ளியம்மை உணர்வு திரும்பி கண் விழித்தாள்.

  அதன்பின் காந்திக்கும் வள்ளியம்மைக்கும் இடையே நடந்த உரையாடலை சத்திய சோதனை நூலில் உள்ளவாறு அப்படியே தருகிறேன்.

“வள்ளியம்மா, நீ ஜெயிலுக்குப் போனதற்காக வருந்துகிறாயா?”

“வருத்தமா? இப்போது கைது செய்தாலும் மீண்டும் ஜெயிலுக்குப் போகத் தயாராக இருக்கிறேன்.”

“ஆனால் அப்படிப் போனால் உனக்கு மரணமும் நேரிடலாமே”

“அதனால் என்ன, தாய்நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்ய யாரேனும் தயங்குவார்களா?”

காந்தியின் கண்கள் குளம் கட்டின.

  அடுத்த சில நாள்களில், சரியாகச் சொன்னால் 22.2.1914 அன்று வள்ளியம்மை என்ற விளக்கு அணைந்து விட்டது.

   ஓடோடிச் சென்ற காந்தி, அவளை அள்ளி எடுத்துத் தன் மடியில் கிடத்திக்கொண்டு, “வள்ளியம்மா! இந்தியாவின் இனிய மகளே! புனித மகளே! என்னுடைய விடுதலை உணர்வுக்கு விதையாய் இருந்தவளே நீதானே அம்மா” எனச்சொல்லி அழுதார். அவர் விடுத்த இரங்கற் செய்திகளே தனிக் கட்டுரை ஆகும் அளவுக்கு நீண்டது; நெடியது.

   அடுத்த சில மாதங்களில் நாடு திரும்பிய காந்தி முழு மூச்சாக இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்நின்று நடத்தியது தனி வரலாறு.

   1.5.1915 அன்று தமிழகம் வந்த காந்தி முதல் வேலையாக தில்லையாடிக்குச் சென்று, அந்த ஊர் மண்ணை எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டு, கண்ணீர் மல்க வள்ளியம்மையை நினைவு கூர்ந்தார்; அவள் குறித்து ஊர் மக்களிடம் உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.

   இந்த நல்ல நாளில் வள்ளியம்மையின் வரலாற்றை இங்கே எழுதுவதற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு. சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தலைதூக்கும்போது பெண்கள் ஒன்று திரண்டு வள்ளியம்மையைப் போல போராட முன்வர வேண்டும் என்பதுதான் அது.

  முற்பிறவிகளில் செய்த மா தவப்பயன் காரணமாக, இப் பிறவியில் பெண்ணாகப் பிறந்து, பெருமை சேர்க்கும் அனைவருக்கும் எனது இனிய மகளிர் நாள் மனம் நிறை வாழ்த்துகள்.

முனைவர் .கோவிந்தராஜூ,
அமெரிக்காவிலிருந்து.

    

7 comments:

  1. அழகான எழுத்து. மகளீர் தினத்துக்கு ஏற்ற நல்ல செய்தி.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. போற்றுதலுக்கும் வணங்குதலுக்கும் உரியவர்
    மகளிர் தின நல் வாழ்த்துகள்

    ReplyDelete
  3. அங்கிருக்கும்போது இங்கு நினைப்பு. இங்கிருக்கும்போது அங்கு நினைப்பு. அனைவருக்கும் வருவதுதானே ஐயா. மகளிர் தினத்தில் போற்றுதற்குரியவரைப் பற்றிய பகிர்வு அருமை.

    ReplyDelete
  4. காந்தியடிகளுக்கே விடுதலை உணர்வை ஊட்டியவள் நம் தமிழச்சி என்பது தான் உண்மை வரலாறு.இது தெரியாமல் தமிழனின் வரலாற்றை மண் மூடி மறைக்கப் பார்க்கிறது ஒரு மூடர் கூட்டம்.

    ReplyDelete
  5. "அதை எழுத்தெண்ணிப் படித்தேன்" மிகப் புதுமையான மொழிநடை.

    ReplyDelete
  6. மகளிர் தினத்தன்று தில்லையாடி வள்ளியம்மை பற்றிய விரிவான அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  7. "எழுத்தெண்ணிப் படித்தேன்"!!!!! இதுதான் முதன் முறையாக இப்படியான ஒரு வரி வாசிக்கிறேன் ஐயா...ரசித்த வரி...

    வள்ளியம்மை பற்றி அறிந்திருந்தாலும் தங்கள் எழுத்தின் மூலம் மீண்டும் இங்கு வாசிக்க முடிந்தமைக்கு மிக்க நன்றி ஐயா நல்ல பதிவு வித்தியாசமான பதிவும்....

    கீதா

    ReplyDelete