Saturday, 3 March 2018

மெல்ல இனி வாழும்

   பண்டைத் தமிழரின் கவி மரபு வியப்புக்குரியது. ஆடவர்க்கு இணையாக மகளிரும் யாப்பிலக்கணம் அறிந்திருந்தனர் என்பதற்குச் சங்கப் பாக்களைப் பாடியுள்ள பெண்பாற் புலவர்களே சான்றாக அமைவர். மேலும் சமூகத்தில் வாழ்ந்த பல்வகைத் தொழில் செய்தாரும் பாங்குற பாவியற்றும் ஆற்றல் பெற்றிருந்தனர். மருத்துவன் இளநாகனார், கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், கணியன் பூங்குன்றனார் ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

    அப்படி அவர்கள் இயற்றிய பாவகைகளில் ஒன்று சித்திரக் கவி என்பதாகும். சித்திரக் கவிகளை இயற்றுவதற்கு மட்டுமல்ல இத்தகு பாக்களைப் படிப்பதற்கும் தனித்திறன் வேண்டும்.

  பாம்புகள் பிணைந்து நிற்பதாகப் படம் வரைந்து அவற்றின் மீது கவிதை வரியை அமைத்தார்கள். இதற்கு நாக பந்தம் என்று பெயர். இறைவன் உலாவரும் தேர் போன்ற படத்தில் பா அமைத்து இரதபந்தம் என்று அழைத்தார்கள். இப்படி இச் சித்திரக் கவி பலவகைப்படும்.

     சென்ற நூற்றாண்டுவரை இச் சித்திரக் கவிமரபு தமிழ்நாட்டில் பரவலாக இருந்தது. இப்போது அத்தி பூத்தாற்போல் சிலரே முயல்கின்றனர். இவ்வகைக் கவிதைகளைப் படித்துப் பாராட்டுவோரும் இல்லை. கொள்வோர் இல்லையேல் கொடுப்போரும் இல்லாமல் போவர் என்பது உண்மை.

   நான் கடந்த ஒரு மாதமாக என் தூக்கத்தைத் தொலைத்துவிட்டுப் பல சித்திரக் கவிகளை இயற்றினேன். அவற்றில் சிலவற்றை வலைப்பூ வாசகரிடையே அரங்கேற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அருள்தரும் பால்மனம்சேர் நம்பிமுரு காநீ 
       வருகுதிசீர் தந்திடுவாய் வேண்டுவோர் கண்பார்க்க 
   மீதிறத்தோய் போக்கிலார் போற்ற வருகுதியே 
நீதிறக்க வேகும் மருள்.

(எழுத்துகள்:பாடலில் 73, படத்தில் 66)
     பொருள்: அடியார்க்கு அருள் தரும் பால்மனம் கொண்ட நம்பியே! முருகா! நீ வருக. எமக்குச் சீர் தருக. மீ திறம் உடையானே! உன்னை வேண்டி நிற்கும் அடியார்கள் பார்க்கும் வண்ணம் என்னைப் போன்ற போக்கிடம் இல்லாதோர் போற்றிட வருக. வந்து நீ உன் கண் திறந்து எம்மை நோக்கினால் எம்மிடத்தில் உள்ள மயக்கம் வெந்து சாம்பலாகும்.







4 comments:

  1. ரொம்பஅருமையாக இருக்கு ஐயா!!! தமிழ்த்தாய்க்கு மாலையாக ரொம்ப ரசித்தோம் ஐயா...

    கீதா

    ReplyDelete
  2. போற்றுதலுக்கு உரிய முயற்சி ஐயா

    ReplyDelete
  3. சிறப்பான, அரிய முயற்சிக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  4. "சித்திரக் கவிகளை இயற்றுவதற்கு மட்டுமல்ல இத்தகு பாக்களைப் படிப்பதற்கும் தனித்திறன் வேண்டும்." உங்கள் சித்திரக் கவிகளே வியப்பாக உள்ளது. இதில் கரைகண்டவர்கள் என்னென்ன விதமாய்த் தங்கள் திறனை வெளிப்படுத்தி இருப்பார்கள்!

    ReplyDelete