இதுவரை பல நூல்களுக்கு நூல் மதிப்புரை
எழுதியுள்ளேன். பல திரைப் படங்களுக்கு விமர்சனம் எழுதியுள்ளேன். ஆனால் முதல்
முறையாக என் மனைவி தயாரித்த புதுமையான புதுவகையான
இட்லிக்கு விமர்சனம் ஒன்றை எழுதுகிறேன்.
பொதுவாகவே உணவு உண்ணும்போது நான்
ரசித்து ருசித்து உண்பேன். “ஆற்றுக்குள்ளே இறங்கி ஹரிகரா என்றாலும் சோற்றுக்குள்ளே
இருக்குதடா சொக்கலிங்கம்” என்று நம் முன்னோர் சொன்னதை முழுவதுமாக நம்புபவன் நான்.
உறவினர் நண்பர் வீட்டில்
சாப்பிடும்போது உணவின் சுவை குறித்துப் பேசுவேன்; பாராட்டுவேன்; மதிப்பெண்
தருவேன். அடிப்படையில் நான் ஓர் ஆசிரியனாயிற்றே!
உணவகங்களில் சாப்பிடும்போது நன்றாக
இருந்தால் பணத்துடன் பாராட்டையும் சேர்த்துக் கொடுப்பேன். சரியில்லை என்றால்
அதையும் மனம் நோகாமல் சொல்லுவேன். சென்ற முறை சாப்பிட்டபோது நன்றாக இருந்ததே என்று
சொல்லும்போதே கடைக்காரர் புரிந்துகொள்வார்.
வீட்டிலும் அப்படித்தான்.
சுவைத்துச் சாப்பிட்டவுடன் என் மதிப்பீட்டைத் துணைவியாரிடம் சொல்வேன்.
மதிப்பெண்ணும் போடுவேன். மதிப்பெண் குறைந்தால் அதை எளிதில் ஏற்றுக்கொள்ளமாட்டாள்.
சுவையான வாத விவாதம் தொடரும். ஆனால் ஒருபோதும் அந்த விவாதம் சண்டையில் முடியாது.
எங்களுக்குத் திருமணம் ஆன புதிதில்
இரண்டுவாரம் அவளுடைய பாட்டி வந்திருந்து சமையலில் உதவி செய்தார்கள். அவர்
புறப்பட்டு ஊருக்குச் சென்றதும் முதன்முறையாக என் இல்லத்தரசி தனியாக மதிய உணவு தயாரித்து
வாழை இலையில் பரிமாறினாள். நான் என்ன
சொல்வேனோ என்று எதிர்பார்த்து நின்றாள். நான் வேண்டுமென்றே எதுவும் சொல்லாமல்
உண்பதில் குறியாக இருந்தேன். பொறுமையிழந்து, “ஏங்க சாப்பாடு எப்படி இருக்கு?”
என்று கேட்டாள். “இந்தச் சாப்பாட்டை மனுஷனா
சாப்பிடுவான்?” என்றேன். அதைக்கேட்டு சற்றே அதிர்ந்து போனாள். ஆனால் சற்றும்
தாமதிக்காமல் அடுத்து நான் சொன்னதைக்கேட்டு மகிழ்ச்சியில் முகம் மலர்ந்தாள். என்ன சொன்னேன் என்றுதானே
கேட்கிறீர்கள்? : “இது மனுஷனுக்கான சாப்பாடு அல்ல; தேவர்களுக்கானது!” என்று
சொன்னேன்.
திருமணமாகி முப்பத்திரண்டு
ஆண்டுகளுக்குப் பிறகு இன்று உண்மையில் தேவர்கள் உண்ணத்தக்க வகையில் வித்தியாசமான இட்லியைச் சுட்டு அசத்திவிட்டாள். இருவகை சட்னியுடன்
சுவைத்து உண்டேன். மூக்கைப் பிடிக்க உண்டேன். கண்பட்டுவிடும் என்பதால் எத்தனை இட்லி
உண்டேன் என்பதை இங்கே வெளியிட முடியாது.
இட்லி எப்படி இருக்கிறது என்று
கேட்டாள். “இந்த இட்லியைச் செய்து கொடுப்பதற்காகவே அடுத்தப் பிறவியிலும் நீ என்
மனைவியாக வரக்கடவாய்” என்று சொல்லிப் பாராட்டினேன். அப்புறம் என்ன இராமனுடன்
தொடர்புபடுத்தி எனக்கு ஒரு விருது கொடுத்தாள்.
அவள் செய்த இட்லி இலவம் பஞ்சில் செய்த
இட்லிபோல அவ்வளவு மெதுவாக இருந்தது. காஞ்சிபுரம் இட்லி என்பது அதன் பெயராம். இட்லியின்
மேற்பரப்பில் சீரகம் பதிந்து அழகாகக் காணப்பட்டது. இஞ்சிச் சுவையுடன் அளவான
மிளகாய், மிளகு காரத்துடன் மிகவும் சுவையாக இருந்தது. நெய்யில் வறுபட்ட முந்திரிப்
பருப்பு வாய்க்கு வாய் தட்டுப்பட்டுக் கூடுதல் சுவை சேர்த்தது.
இரவில் ஒரு வாழைப்பழம் ஒரு இட்லி மட்டும்
உண்ணும் வழக்கமுடைய என் மாமனார் இந்தக் காஞ்சிபுரம் இட்லியின் சுவையில் மயங்கி
இரண்டு மடங்காக உண்டார். மகளை வெகுவாகப் பாராட்டினார்.
எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் அவளைச் சற்றுக் கூடுதலாகவே பாராட்டிவிட்டு
(அப்போதுதான் அடிக்கடி காஞ்சிபுரம் இட்லி கிடைக்கும்), காஞ்சிபுரம் இட்லி செய்யும்
முறையைக் கேட்டேன். வலைப்பூ வாசகர்களின் நல்லூழ் என நினைக்கிறேன். உடனே முன்வந்து
ஆர்வமுடன் செய்யும் முறையைச் சொன்னாள்.
“இட்லி அரிசி, பச்சரிசி, வெள்ளை உளுத்தம்பருப்பு
இவை மூன்றையும் சம அளவில் எடுத்து, ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து மூன்று மணி நேரம் தண்ணீரில்
ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். மறக்காமல் சரியான அளவில் உப்பைப் போடுங்கள்.
வாணலியை அளவாக எரியும் அடுப்பில் வைத்து,
கொஞ்சம் நெய்யையும் நல்லெண்ணெயையும் சேர்த்து ஊற்றுங்கள். அதில் இஞ்சி, மிளகு,
சீரகம், பச்சைமிளகாய்த் துண்டுகள், கடலைப்பருப்பு, உடைத்த முந்திரிப் பருப்பு,
கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வறுத்து அரைத்த மாவுடன் சேர்த்துக் கலக்க
வேண்டும்.
பிறகு ஒரே அளவான கிண்ணங்களில் ஒரே அளவில் மாவை
ஊற்றி, நீருடன் கூடிய இட்லிப் பானையில் இட்லித் தட்டின்மேல் வைத்து மூடியை இறுக
மூடி பத்து நிமிடம் வேகவைத்து எடுக்க வேண்டும். தேங்காய் சட்னி, தக்காளிச் சட்னி,
கடலைக்காய் சட்னியுடன் சேர்த்துண்ண மிகவும் சுவையாக இருக்கும்.”
காஞ்சிபுரம் இட்லி உண்டால் கணக்கு
நன்றாக வரும் என்று ஒரு பொய்யைச் சொல்லி உங்கள் சுட்டிக் குழந்தைகளுக்கும்
கொடுங்கள்.
என்ன நாளை உங்கள் வீட்டிலும்
காஞ்சிபுரம் இட்லிதானே? எதற்கும் கவலைப் படாதீர்கள். நன்றாக வந்தால் காஞ்சிபுரம்
இட்லி. இல்லாவிட்டால் உங்கள் ஊர் இட்லி.
அவ்வளவுதான்.
குறிப்பு: இட்லியை நம் நாட்டினர் கண்டுபிடிக்கவில்லை. இராஜராஜ சோழன் மகன் இராஜேந்திர
சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் இந்தோனேஷியா நாட்டின் மீது படை எடுத்து வாகை சூடி
வந்தபோது அந்த நாட்டின் புகழ்பெற்ற உணவு வகையான இட்லி செய்யும் முறையை
அறிந்துவந்து இந்தியாவில் அறிமுகப்படுத்தினான் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த
இரகசியம்!
இட்டு + அளி = இட்டளி என்ற உணவு பற்றிய சிறந்த பதிவு.
ReplyDeleteஆகா...! ஆகா...!
ReplyDeleteநன்று
ReplyDeleteகாஞ்சிபுரம் இட்டளியின் சுவை(கூ)காட்டும் பதிவு - விமர்சனம். உண்ட உணவின் சுவையைப் பாராட்டுவது நல்ல பண்பாடு என்று அணைவருக்கும் மறைமுகமாக உணர்த்தியுள்ளது பாராட்டுக்குரியது. இட்டளி செய்முறைச் (Recipe) சுருக்கம் பயனுள்ள தகவல். நன்றி.
ReplyDeleteதுளசி: எப்போதோ சுவைத்ததுண்டு. ஹோட்டலில்
ReplyDeleteகீதா: வீட்டில் அடிக்கடி செய்யும் இட்லி. இதே அளவு முறைதான். உங்கள் மனைவி சொல்லியிருப்பார்கள் ஒன்றே ஒன்றை மட்டும் விட்டுவிட்டீர்கள். மாவு புளித்திருக்கணுமே! இன்று மாலை அரைத்தால் நாளை காலைதான் செய்ய முடியும் செய்யும்முன் வறுத்துச் சேர்ப்பதைச் சேர்க்க வேண்டும். மற்றபடி நானும் இதே தான் இஞ்சிக்குப் பதில் சுக்குப் பொடியும் சேர்ப்பதுண்டு. எங்கள் வீட்டில் இப்ப்டிச் சின்ன கப்பில் ஊற்றி அவிப்பதுண்டு அதே போல திருவள்ளூர் கோயிலில் செய்வது போலவும் ஒரு பெரிய குக்கர் பாத்திரத்தில் தேவையான அளவு மாவை ஊற்றி இட்லி அவிந்ததும் அதைக் கேக் போலக் கட் செய்தும் பரிமாறுவதுண்டு.
நாளை என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் இங்கு கொடுத்ததும் நாளைய காலைச்சிற்றுண்டி கா இ தான்!!
Very nice
ReplyDeleteவிமர்சனம் ர(ரு)சிக்கும்படி இருந்தது.
ReplyDelete