Friday, 13 July 2018

ஒரு குருவி நடத்திய பாடம்

   மூன்று நாள்களுக்கு முன்னால் அதிகாலை நேரத்தில் விழித்து எழுந்து வெளியில் வந்தபோது ஒரு சாம்பல் வண்ண குறுங் குருவியைப் பார்த்தேன். எங்கள் வீட்டுத் தோட்டத்திற்குச் செல்லும் வழியில் ஓரத்தில் அது உட்கார்ந்திருந்தது. நான் அருகில் சென்றபோதும் அது பறந்து செல்லவில்லை.






   போதிய மழை இன்றி எங்கும் வறட்சியாக இருப்பதால் பறவைகளுக்குத் தண்ணீர் கிடைப்பதில்லை. இதைக் கருத்தில் கொண்டு எங்கள் வீட்டுக்கும் தோட்டத்துக்கும் வரும் பறவைகளுக்கு தட்டுகளில் தண்ணீர் நிரப்பி வைக்கிறேன். இது என் அன்றாட செயல்களில் ஒன்று. எனவே இங்கு வரும் பறவைகளுக்கு என்னிடத்தில் அச்சம் இல்லை. மாறாக ஒருவித நட்புணர்வுடன் அவை இருப்பதாக எனக்குத் தோன்றும். இப்போதெல்லாம் நான் அருகில் சென்று என் கேமராவில் படம் எடுத்தாலும் அவை அஞ்சிப் பறந்தோடுவதில்லை. ஆகவே அந்தக் குருவி என்னைக் கண்டும் பறந்து செல்லாதது என்னுள் வியப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் இரண்டு மணி நேரம் சென்றபின்னும் அது அப்படியே அமர்ந்திருந்ததால் வியப்புடன் அருகில் சென்று பார்த்தேன்.

     பறக்கும் பருவம் எய்தும் முன்னே அதற்கு ஒரு சோதனை வந்தது போலும். கூட்டிலிருந்து தவறி விழுந்ததோ என்னவோ, தத்தித் தத்தி, நடந்து வந்த சோர்வில் இருந்தது. ஒரு சிறிய தட்டில் தண்ணீர் எடுத்து அதன் அலகுக்குக் கீழே வைத்தேன். ஆனால் நான் அங்கு இருந்தவரை அது குடிக்கவில்லை. பிறகு உடைத்த பாசிப்பருப்பை எடுத்து அதன் அருகில் பரப்பினேன். “மனிதர்கள் ஏதாவது தின்னக் கொடுத்தால் தின்றுவிடாதே” என்று அதன் தாய்க்குருவி சொல்லியிருக்குமோ தெரியவில்லை, போட்ட பருப்புகள் அப்படியே கிடந்தன. தாய்ப் பறவை வரும் எனக் காத்திருந்தேன். காலை எட்டுமணி வாக்கில் வந்தது. அருகில் சென்று என்னவோ சொன்னது. குட்டிக் குருவி தன் சிறகுகளை விரித்து முதலில் முயற்சியும் பின்னர் பறப்பதற்குப் பயிற்சியும் செய்தது. சற்று நேரத்தில் தாய்க் குருவி பறந்து சென்று விட்டது.

    என் பணி நிமித்தமாக வெளியூர் சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பினேன். மறுநாள் காலை எழுந்ததும் அக் குட்டிக் குருவியைத் தேடிச் சென்றேன். சிறகை விரித்துத் தாவிக்கொண்டிருந்தது. நான் வைத்திருந்த நீரும் பருப்பும் அப்படியே இருந்தன. பசி நோக்காமல் கண் துஞ்சாமல் பறப்பதற்குப் பயிற்சி செய்து கொண்டிருக்க வேண்டும். சிறிது நேரத்தில் தாய்க் குருவி பறந்து வந்தது. இரண்டும் சற்றுக் கொஞ்சிக் குலாவின. நான் ஓடிப்போய் கொஞ்சம் அரிசி கொண்டுவந்து வீசினேன். தாய்க்குருவி அவற்றைத் தன் அலகால் கொத்தித் தின்றது. குட்டிக் குருவி சும்மாவே நின்றது. பிறகு அந்த அதிசயம் நிகழ்ந்தது பாருங்கள். தாய்க் குருவி அரிசியைத் தன் அலகால் கொத்தி எடுத்துக் குட்டிக் குருவிக்கு ஊட்டியது. சற்று நேரம் கழித்துப் பார்த்தால் தாய்க் குருவியைக் காணவில்லை. பிறகு என் பணிகளில் மூழ்கினேன்.

   மறுநாள் ஆவலோடு சென்று பார்த்தேன். நான்கடி உயரமுள்ள சுற்றுச் சுவரில் பறந்து ஏறிடப் பயிற்சி செய்து கொண்டிருந்தது. சற்று நேரத்தில் தாய்ப்பறவை வந்தது; கூடவே இன்னொன்றும் வந்தது. இரண்டும் சேர்ந்து பயிற்சி அளித்தன.

  நடைப்பயிற்சிக்குச் சென்று வந்து பார்த்தபோது அக் குட்டிக்குருவியைக் காணவில்லை. பறந்து சென்று விட்டதாக என் துணைவியார் சொன்னார்.

    அந்தச் சின்னக் குருவி முயற்சி திருவினையாக்கும் என்னும் பாடத்தை எனக்குக் கற்றுக் கொடுத்தது. அதே சமயம் பிள்ளைகள் பிரச்சனையில் இருக்கும்போது பெற்றோர் பக்கபலமாக இருக்கவேண்டும் என்பதை அந்தத் தாய்க்குருவியிடம் கற்றுக் கொண்டேன்.

   இப்படி எண்ணிக்கொண்டே எங்கள் வீட்டுத் திண்ணையைப் பார்த்தேன். திருவள்ளுவர் அமர்ந்திருந்தார். குருவிக் கதையைச் சொன்னேன். அந்தக் குட்டிக் குருவிக்கு  தலைவிதியும் நன்றாக இருந்ததால்தான் முயன்றது முயன்று வெற்றி பெற்றது என்றார். என் தலையைச் சொறிந்தேன். 371 ஆவது குறளைப் படிக்கச் சொன்னார்.

 
ஆம் அவர் சொன்னதும் சரிதான். அடிக்கடி எங்கள் தோட்டத்திற்கு நாள்தோறும் வந்து செல்லும் ஒரு கருப்புப் பூனை அந்த மூன்று நாள்களிலும் வரவில்லையே! வந்திருந்தால் அந்த இயலாக் குருவியை இனிதே தின்று ஏப்பம் விட்டிருக்குமே.

  

9 comments:

  1. Keen and deep observation ; hence you are taller than the others!

    ReplyDelete
  2. அருமை...

    இரண்டு நாளாக திருவள்ளுவரை காணவில்லையே என்றிருந்தேன்... இப்போது புரிகிறது...!

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. எளிமையாக திருக்குறள் கற்றுத் தருவதில் தங்களுக்கு நிகர் தாங்கள் தான் ஐயா

    ReplyDelete
  5. அருமையான அனுபவம் ஐயா. உற்று நோக்கி நல்லதொரு பாடம் எங்களுக்கும் பகிர்ந்தீர்கள். பொதுவாகவே இயற்கை நமக்குப் பல பாடங்களைப் புகட்டுகிறதுதான். நாம் தான் அதை உற்று நோக்கிக் கற்பதில்லையோ என்று தோன்றும். அருமை..

    துளசிதரன், கீதா

    கீதா: என்னடா பூனை எதுவும் இல்லை போலும் என்று நினைத்தேன்...இருந்தும் அந்த நாட்களில் மட்டும் வராமல் போனது ஆச்சரியமே குருவிக்கு நல்ல தலைவிதி போலும்! அன்று!

    ReplyDelete
  6. திருக்குறளையும் சொல்லியது அருமை ஐயா

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  7. அருமையான பதிவு ஐயா. இன்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுத்தராமல் காசைக் கொட்டி அடுத்தவரிடம் கற்கவைக்கும் அவலம் மானுடர்களுடையது என்பதை உங்கள் மூலம் உலகிற்குத் தெரிவிக்க அந்தக் குருவியையும், அந்த குஞ்சுக் குருவியையும் இறைவனே அனுப்பியதாக நான் கருதுகிறேன் ஐயா.

    ReplyDelete
  8. உற்றுநோக்கிப் பகிர்ந்த விதம் அருமை.

    ReplyDelete