Sunday, 9 September 2018

இளமையை மீட்ட இன்பப் பயணம்

   பத்து ஆண்டுகளுக்குப் பிறகு குற்றாலச் சிற்றுலா செல்லும் வாய்ப்புக் கிட்டியது. எங்கள் சம்பந்தி சரவணப்பெருமாள்- டாக்டர் காந்திமதி இணையருடன் சேர்ந்து சென்றது கூடுதல் மகிழ்ச்சியைத் தந்தது.

    குற்றாலம் செல்லும் வழியில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்குச் சென்று மனநிறைவுடன் வழிபட்டோம்.  ஆண்டாள் எழுதிய திருப்பாவையின்  முப்பது பாடல்களையும் மனப்பாடமாய்ச் சொல்லி வழிபட்டார் என் துணைவியார்.

   சம்பந்தியர் இருவரும் ஒத்த குரலில் ஓங்கி உலகளந்த உத்தமர் புகழ்பாடி மகிழ்ந்தனர்.

   தென்காசியில் எங்கள் சம்பந்தியரின்  நலம் விரும்பி ஒருவரின் இல்லத்தில் தங்கினோம்.

   முதன்மை அருவியில் கூட்டம் அதிகமாக இருந்ததால், சற்றே தள்ளி இருந்த ஐந்தருவியில் நீராடினோம். மூலிகை மணமும் மருத்துவ குணமும் நிறைந்த அருவி நீரில் குளித்தது நல்ல அனுபவமாய் அமைந்தது. பிளாஸ்டிக் குப்பைகள் இல்லாமல் குற்றால அருவியும் அதன் சுற்றுப்புறமும் தூய்மையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்தருவி

திருக்குற்றாலநாதர் கோவில்

சுவைமிகு பதநீர்

சுரண்டை கிராமத்துப் பள்ளி


  
முதன்மை அருவி
 குரங்குகளின் தொல்லை அதிகம். பைகளைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். கைப்பேசிகளைக் கூட  எடுத்துக்கொண்டு ஓடிவிடுமாம்!

    மறுநாள் காலை தொன்மையான தென்காசி உலகம்மை கோவிலுக்குச் சென்றோம். பிறகு குற்றாலம் முதன்மை அருவிக்கு அருகில் உள்ள திருக்குற்றாலநாதர் கோவிலுக்குச் சென்றோம். எங்கள் சம்பந்தி டாக்டர் காந்திமதி அவர்கள் பல்லாண்டுகள் குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியில் பேராசிரியராய்ப் பணியாற்றிய காலத்தில் நன்கு அறிமுகம் ஆகியிருந்த  கோவில் அர்ச்சகர் எங்களை அன்புடன் வரவேற்றுச் சிறப்பு வழிபாட்டுக்கு ஆவன செய்தார்.

      கோவிலைவிட்டு வெளியில் வந்ததும் பதநீர் விற்பவர் எங்கள் கவனத்தை ஈர்த்தார். பனை ஓலையில் ஊற்றிக்கொடுத்த நுங்குடன் கூடிய பதநீரைச் சுவைத்துப் பருகினோம்.

      குற்றாலத்திலிருந்து திரும்பும்போது தென்காசிக்கு அருகில் உள்ள சுரண்டை கிராமத்துப் பள்ளிக்குச் சென்றோம். டாக்டர் காந்திமதியின் வழிகாட்டுதலில் அவருடைய தலை மாணாக்கியரில் ஒருவரான சகோதரி சண்முக சுந்தரம் (பெயரே அப்படிதான்) நடத்தும் பள்ளியாகும் அது.

    சின்ன தெரசா என அன்புடன் அழைக்கப்படும் அவர் ஒரு மேனிலைப்பள்ளியை உருவாக்கி சேவை நோக்கில் பாங்குற நடத்துகிறார். ஆதரவற்ற நாற்பது குழந்தைகளுக்கு நாளும் அமுதூட்டி வளர்க்கும் அன்புத் தாயாகவும் விளங்குகிறார். அரசு ஆதரவு எதுவும் இன்றி முற்றிலும் கொடையாளர்தம் நிதி ஆதரவில்தான் பள்ளியும் குழந்தைகள் காப்பகமும் இயங்குகின்றன.

    அவர் அளித்த வரவேற்பில் நாங்கள் திக்குமுக்காடிப் போனோம். மாணவ மாணவியர் இசைக்கருவிகளை இனிதே முழக்கி வரவேற்றதும் ஆசிரியர் தினத்தையொட்டி அவர்கள் கலையழகுடன் கரகாட்டம் முதலான நடன நிகழ்ச்சிகளைத் திரையிசைக் கலப்படம் இல்லாமல் நிகழ்த்திக் காட்டியதும் இன்னும் நினைவில் நிற்கின்றன.

      பின்னர் இராஜபாளையத்தில்  நண்பர் விஜயராகவன் இல்லத்தில் தங்கி அவருடன் அளவளாவியதும், அவர் திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாடியதும் திரைப்படம்போல் மீண்டும் மீண்டும் மனத்தில் தோன்றி மறைகிறது.

   எங்கள் சம்பந்தி சரவணப்பெருமாள் அவர்கள் ஒரு சாதனை நிகழ்வாக அறுநூறு கிலோமீட்டர் தூரம் மகிழுந்தை மிகச் சிறப்பாக ஓட்டியது இப் பயணத்திற்கு மேலும் சிறப்புச் சேர்த்தது.

     இதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், இளமையை மீட்டெடுக்கும் இத்தகைய பயணங்களை அனைவரும் மேற்கொள்ள வேண்டும்  என்பதுதான்.
   

  

7 comments:

  1. One who is active,he/she remains young forever.
    That is the physical psychology.
    Best Wishes from Trichy Vasudevan

    ReplyDelete
  2. இதன் மூலம் இனியன் அண்ணனுக்குத் தெரிவிப்பது என்னவென்றால் அடுத்த முறை இளமையை மீட்க இன்பப் பயணம் செல்லும் போது எங்களையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும்.

    ReplyDelete
  3. வருடா வருடம் செல்வதுண்டு...

    ReplyDelete
  4. ஒவ்வொரு வருடமும் குற்றாலப் பயணம் செல்வது உண்டு ஐயா

    ReplyDelete
  5. அவ்வப்போது செல்வதுண்டு. இன்று உங்கள் பதிவு மூலமாகச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

    ReplyDelete
  6. உறவினர்களுடன் குற்றாலம் இன்பச் சுற்றுலா சென்று வந்த அனுபவங்களைச் சுவையாக எழுதிப் பரிமாரிக் கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  7. குற்றாலமும் அதனைச்சுற்றியுள்ள இடங்களும் அருமையான இடங்கள். பதிவு அருமை

    பயணம் என்பது மிக மிக புத்துணர்வு தரும் ஒன்றாலும் ஆதலால் பயணம் செய்வீர்...

    கீதா

    ReplyDelete