வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தற்கொலை எண்ணத்துடன் திரிந்த ஒருவரை, “யாமிருக்கப்
பயமேன்?” என்று சொன்னதுடன் நில்லாமல் அவரை கோடீஸ்வரனாகவும் ஆக்கிக் காட்டியவை
மரங்கள் என்றால் நீங்கள் நம்புவீர்களா?
மரம் தங்கசாமி (ஒளிப்படம்: இந்து தமிழ்) |
கொஞ்சம் நேரம் ஒதுக்கி, புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தங்குடி கிராமத்திற்குச் செல்லுங்கள். ‘மரம் தங்கசாமி
வீடு எது?” என்று ஒரு பால்குடிக்கும் குழந்தையிடம் கேட்டாலும் சற்றும் தயங்காமல்
வழிசொல்லும்.
விவசாயப் படிப்பில் பட்டயமும்
பயிற்சியும் முடித்த தங்கசாமிக்கு அரசு வேலை தர தயாராய் இருந்தும், தந்தையின்
வேண்டுகோளை ஏற்றுத் தன் பரம்பரைத் தொழிலான விவசாயத்தில் ஈடுபட்டார். ஆயிரத்துத்
தொள்ளாயிரத்து அறுபதுகள் வயல்வெளிகளில் இராசயன உரங்கள் பயன்பாட்டுக்கு வந்த காலம்.
தம்மிடம் இருந்த பத்து ஏக்கர் வானம் பார்த்த பூமியில் கிடைத்தத வெள்ளாமை வருமானம் உரம்
பூச்சிமருந்துக் கடனை அடைப்பதற்குக்கூட போதுமானதாய் இல்லை. ஒரு கட்டத்தில் முப்பது
ஆயிரம் ரூபாய் கடனாளியாக ஆகிவிட்டார்.
ஒருநாள் முன்னிரவில் ஒரு தாளை எடுத்துத்
தற்கொலை சாசனம் எழுதத் தொடங்கினார். அப்போது திருச்சி வானொலியில் வேளாண் நிகழ்ச்சி
ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த நேரம். ”மரம் வளர்ப்பீர் மனக்கவலையைப் போக்குவீர்”
என்று காற்றில் வந்த அந்தச் சொற்கள் அவரை நிமிர்ந்து உட்கார வைத்தன. தொடர்ந்து
நிகழ்ச்சியைக் கேட்டார்.
தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டுக் களத்தில்
இறங்கினார்.
மறுநாள் வயலுக்குச் சென்றார்.
வேட்டியை மடித்துக் கட்டி கடப்பாரையை எடுத்தார். ஒரே மாதத்தில் பத்து ஏக்கரிலும்
தேக்குச் செடிகளை நட்டு தலைமீது தண்ணீர் சுமந்து ஊற்றினார். ஊரார் நகைத்தனர்; பைத்தியம்
என்றனர். அவர் கருமமே கண்ணாக இருந்தார். ஐந்தாண்டுகளில் நன்கு வளர்ந்த மரங்களை
மட்டும் வெட்டி விற்றார். கடனும் தீர்ந்தது. காசும் சேர்ந்தது. காலப்போக்கில் அக்கம்பக்கதுக்
காடுகழனிகளையும் வாங்கி சந்தன மரங்களை நட்டார். அப்புறம் என்ன? வீடு, வாகனம் என
வசதியானார். வளர்ந்த ஒரு செஞ்சந்தன மரத்தின் விலை மூன்று இலட்சம் ரூபாய். இன்றைய
தேதியில் ஆயிரம் மரங்கள் வளர்ந்து நிற்கின்றன.
மரம் வளர்க்கும் மகத்துவத்தை மற்றவருக்கும்
மனமுவந்து சொல்லிக் கொடுத்தார்.
திருமணத் தாம்பூலப்பையில் முதன்முதல்
மரக்கன்று போட்டுக் கொடுத்த மாமனிதர் இவர்தான். ஐம்பது ஆண்டுகளுக்குமுன் தன் மகன்
திருமணத்தின் போது பத்தாயிரம் மரக்கன்றுகளை வழங்கினார்.
தொடர்ந்து இயற்கை வேளாண்மையை மீட்டெடுத்த நம்மாழ்வாருடன்
இணைந்து பணியாற்றினார் பல்கலைக்கழகங்கள் அவர் வளர்த்த குறுங்காட்டை நோக்கிச்
சென்றன. வெளிநாட்டிலிருந்து வந்த விவசாய அதிகாரிகள் தங்கசாமியிடம் தஞ்சம் புகுந்து
பாடம் படித்தனர்.
ஒவ்வொரு விவசாயியும் தம் விவசாய
நிலத்தில் மூன்றில் ஒருபகுதியில் குறுங்காடு வளர்க்க வேண்டும் என்பது தங்கசாமி
மரக்கோட்பாடாகும்.
மரம் தங்கசாமிக்கான விருதுகளும் விழாக்களும் நாளேடுகளில் அடிக்கடி
வரும் தலைப்புச் செய்திகளாக ஆன நிலையில், அண்மையில் முதுமையினால் நிகழ்ந்த அவரது
மரணமும் தலைப்புச் செய்திகளாக வந்து மர ஆர்வலர்களிடையே மாபெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியது.
இரங்கல் தெரிவிக்க வந்தவர்கள்
பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர். அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன என்பது
புதிய செய்தியாகும்.
நானும் அவருக்கு அஞ்சலி செலுத்தும்
வகையில் ஒரு தேக்கு மரக்கன்றை நட்டு அவரது நினைவாக அதற்கு, தங்கத்தேக்கு என்று பெயர்
சூட்டி கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறேன்.
ஒவ்வொரு விவசாயியும் தம் விவசாய நிலத்தில் மூன்றில் ஒருபகுதியில் குறுங்காடு வளர்க்க வேண்டும் என்பது தங்கசாமி மரக்கோட்பாடாகும்.
ReplyDeleteஒவ்வொரு விவசாயியும் பின்பற்றத் தகுந்த மரக் கோட்பாட்டை முன்வைத்த, மறத்தமிழர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா
"மரம் தங்கசாமி" நம்மோடு இல்லை என்பதையே மனம் ஏற்க மறுக்கிறது.தங்கள் பதிவில் இட்டிருந்த ஒளிப்படம் ஒரு ஜெர்மன் மொழிப் புத்தகத்தின் அட்டைப் படம் என்று நினைவு. நாமெல்லாம் வீட்டு விலங்குகளைப் பெயர் சூட்டி அழைக்கும் காலத்தில் மரங்களுக்கு செல்லப் பெயர் வைத்து மகிழ்ந்தவர் "மரம் தங்கசாமி". மரம் வளர்ப்பின் ஆகச்சிறந்த ஆளுமை என்றால் அது மிகை இல்லை.
ReplyDeleteசிறப்பான மனிதர்...
ReplyDeleteஅவரின் மறைவு மிகவும் வருத்தப்பட வைக்கிறது...
மரம் தங்கசாமி போற்றத்தகுந்த சேவை செய்தவர். இன்றைய காலகட்டத்தில் இது போன்று மனிதர்கள் தேவை.
ReplyDeleteதன்னைச் சுற்றி வாழ்ந்தவர்களை நற்செயல் செய்யும்படி தூண்டிய ஒரு முன் மாதிரியான வாழ்க்கை. இவ்வுலகை விட்டு மறைந்தாலும் இன்றும் அநேகருடைய நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பகிர்வுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஅருமையான கட்டுரை. ”மரப்பயிரும் பணப்பயிரே”. தானும் உயர்ந்து தன்னை உருவாக்கியவர்களையும் உயரவைப்பது மரம் மட்டுமே. ”மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்” என வார்த்தைகளைக் கோர்த்து வாக்கியம் ஆக்கினால் மழை வராது. தங்கச்சாமி போன்ற தங்க மனிதர்களும் உருவானால் தான் மரமும் உருவாகும் மழையும் பெய்யும். என் வீட்டிற்கருகில் குடியிருப்பவரிடம் மரக்கன்றுகள்(வேப்பமரம்) இரண்டை நடுமாறு கொடுத்தேன், அதற்கு அவ் வீட்டுப்பெண்மணி மரக்கன்றை நட்டால் நிழல் உருவாகும், அந்நிழலில் ஆட்கள் வந்து நின்றுவிடுவார்கள், வண்டி வாகனங்களை நிறுத்துவார்கள் எனக் கூறினார். அப்பெண்மணியின் கணவரோ இது காட்டுமரம் பருத்து வளரும் வீட்டில் வைக்கக் கூடாது என்றார்.அவர்கள் கூறிய வார்த்தைகள் இன்றும் அவ்வப்போது என் நினைவில் வந்து செல்கின்றன. இத்தனைக்கும் அவர்கள் நகரவாசிகள் அல்ல. படிபறிவற்ற கிராமத்தில் பிறந்து படிப்பறிவில்லாமல் வளர்ந்தவர்கள். மரங்களின் அருமை புலப்படவில்லை என நினைக்கிறேன். ஆனாலும் நாங்கள் நட்டுப் பராமரித்துவரும் மரநிழலில் தங்களது இரு சக்கர வாகனத்தை நிறுத்திப் பாதுகாக்கின்றனர். இதை அனுதினமும் பார்க்கும் அம்மரம் ”அடிப்பாவி! ஒரு குடம் நீர் உற்றிக்கூட என்னைப் பாதுகாக்கவுமில்லை, பராமரிக்கவும் இல்லை. நான் வெப்பத்தைச் சுமந்து உனக்கு நிழல் தருகிறேனே! உனக்கு வெக்கமாக இல்லையா?” என மரம் கேட்பதைப் போன்று உணர்கிறேன். மரத்தைப் போற்றாதவர்களுக்கும், பாதுகாக்கத் தவறியவர்களுக்கும் இது பொருந்தும் என நினைக்கிறேன். நான் பணியாற்றும் அரசு கலைக் கல்லூரியில் மருத்துவ குணங்கள் நிறைந்த பல மரங்களை நட்டுப் ப்ராமரிது வருகிறோம். கடந்த 2018 ஆகஸ்டு 15- ஆம் நாளில் 500 தேக்கு மரக்கன்றுகளை இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் வாங்கி ஒவ்வொரு பேராசிரியருக்கும் இரு தேக்குமரக்கன்றுகள் வழங்கி உங்களுக்கு விருப்பமான இடத்தைத் தேர்வு செய்து நடுமாறு கூறினோம். அனைவரும் நட்டுப் பராமரிக்கின்றனர். முனைவர் கோவிந்தராஜூ அவர்களுக்கும் வழங்கினேன் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டார். நட்டுப் பராமரிக்கிறார். மகிழ்ச்சி. எங்களைப் போன்றவர்கள் அரசு கலைக் கல்லூரியில் நட்ட மரங்களால் கல்லூரி வளாகம் வேப்பந்தோப்பாக மாறியுள்ளது. ஆலமரம், அரசமரம், மகிழமரம், தேக்குமரம், புன்னைமரம், சொர்க்கம், இலுப்பை என பலவகையான மரங்கள் உள்ளன. மரங்கள் மண்ணின் சீதனங்கள். மரங்கள் நடுங்கள், மனித நேயத்தை உருவாக்குங்கள். மற்றொரு தங்கச்சாமியாக உருவாக முயற்சி மேற்கொள்வோம். மரங்களை நட்டு வரங்களைப் பெறுவோம்.
ReplyDeleteமுனைவர் ரா.லட்சுமணசிங், கரூர்.
நல்ல பதிவு ஐயா.
ReplyDelete//ஒவ்வொரு விவசாயியும் தம் விவசாய நிலத்தில் மூன்றில் ஒருபகுதியில் குறுங்காடு வளர்க்க வேண்டும் என்பது தங்கசாமி மரக்கோட்பாடாகும்.//
அருமை அருமை...
அவரது மறைவு மிகப் பெரிய நட்டமே.
கீதா