Friday, 5 October 2018

தீராத பழியேற்ற தீபக் மிஸ்ரா

  திருமணத்திற்குப் புறம்பான பாலியல் உறவு தொடர்பான பொதுநல வழக்கில் மரபை மீறிய தீர்ப்பை அளித்துப் பனை அளவு பழியைச் சுமந்தபடி பணிநிறைவு பெற்றுச் சென்றுள்ளார்  மாண்பமையா நீதிபதி தீபக் மிஸ்ரா.

   நம் நாட்டில்  குடும்பம் என்பது மிகவும் புனிதமான நிறுவனமாக இருந்தது. உச்ச நீதிமன்றம் அதைத் தகர்த்தெறிந்ததன் மூலம் வரலாற்றின் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது.

   பி.பி.சி செய்தி நிறுவனம் இத் தீர்ப்புக் குறித்து விலாவாரியாக எழுதியுள்ளது. இனி இந்தியாவில் கள்ள உறவு கொடிகட்டிப் பறக்கும் என்ற தொனியில் அச் செய்தி அமைந்ததால் உலக அரங்கில் ஒரே நாளில் இந்தியாவின் மதிப்புச் சரிந்து பாதாளத்தில் வீழ்ந்தது.

    தீர்ப்பு வெளியான அதே நாளில் சென்னையில் ஒருபெண்மணி தற்கொலை செய்து கொண்டார். பயந்து பயந்து கள்ள உறவில் ஈடுபட்ட அவரது கணவர், தீர்ப்பு வெளியான சற்று நேரத்தில், மனைவியைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு,”இப்ப என்ன பண்ணுவ?” என்று கேட்கவும், அடுத்த நொடியில் அவமானம் தாங்காமல் தற்கொலை முடிவை எடுத்துவிட்டார் அந்தப் பெண்.

    ஐந்து நீதிபதிகள் சேர்ந்து கொண்டு ஏதோ பெண்ணுரிமையை நிலை நிறுத்துவதற்கான தீர்ப்பு என்றார்கள். அது பெண்ணின் உயிருக்கு உலை வைக்கும் தீர்ப்பு என்பதற்கு மேற்காண் நிகழ்வே சான்று.

    இத் தீர்ப்பு ஒரு வரலாற்றுப்பிழை, இமாலயத் தவறு என்பதைச் சுட்டிக்காட்ட தமிழ்நாட்டில் ஒரு நாளேடும் உடனே முன்வரவில்லை என்பதில் எனக்கு வருத்தமே. ஆனால் நேற்றைய(4.10.18) தினமணியின் தலையங்கக் கட்டுரையை வாசித்ததும் அந்த வருத்தம் தீர்ந்தது. தினமணி இதழாசிரியர் நக்கீரத் துணிச்சலுடன் விரிவாக எழுதியுள்ளார்.

“இந்தியப் பெண்களையும் பாரதப் பண்பாட்டையும் நமது வாழ்வியல் ஒழுக்கத்தையும் இதைவிட மோசமாகக் கேவலப்படுத்திவிட முடியாது.” என்று குறிப்பிட்டுத் தம் வேதனையை வெளிப்படுத்துகிறார். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தலைமை நீதிபதியின் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்றால் தீபக் அளித்த அநியாய  தீர்ப்பினை மறு ஆய்வு செய்து தீர்ப்பினைத் திருத்தி வழங்கவும் செய்யலாம்.

    தீபக் மிஸ்ராவின் தீர்ப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும்  பாலியல் சுதந்திரம் நல்கும் தீர்ப்பு என சில அதிமேதாவிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இத் தீர்ப்பின் தாக்கத்தால்  குடும்பங்களில் கூடுதல் குழப்பங்களும், குடும்ப வன்முறைகளும் ஏற்படும் என்பதுதான் உண்மை.

    திருமண உறவுக்குக் களங்கம் சேர்க்கும் பாலியல் உறவு என்பது விபச்சாரமே ஆகும். அத்தகைய தகாத, அறம் சாராத, கற்பு நெறிக்குப் புறம்பான பாலியல் உறவு குறித்து உரக்கப் பேசுகிறார் திருவள்ளுவர். கணவன் அல்லாத ஒருவனுடன் கொள்ளும் உறவையும், மனைவி அல்லாத ஒருத்தியுடன் கொள்ளும் உறவையும் பொய்ம்மை முயக்கம் என்று சொல்கின்றார். மேலும் அனாதைப் பிணத்தைத் தழுவுவதற்குச் சமம் என்று சாடுகின்றார். “பொய்ம்மை முயக்கம் ஏதில் பிணம் தழீஇயற்று” என்பது குறள் தொடர். இந்தக் குறள் நெறியைக் குழிதோண்டிப் புதைத்தவர்களை என்னென்று சொல்வது?

   கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுநெறி என்று முழங்கிய பாரதியார் இப்போது மீண்டும் உயிர்த்தெழுந்து வந்தால் நச்சுத் தீர்ப்பு நல்கிய நடுவர்களை அறம்பாடிக் கொன்றிருப்பான்.

என் தீர்ப்புரை இதுதான்:

இம்மை மாறி மறுமை ஆயினும்
நீயாகியர் என் கணவனை
யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே

என்று அம்மூவனார் என்னும் சங்கப் புலவன் சுட்டிக் காட்டிய கணவன் மனைவி உறவைக் கொச்சைப் படுத்திய தீபக் மிஸ்ராவை நான் ஒருபோதும் மதிக்க மாட்டேன்; மன்னிக்க மாட்டேன்.

   மேலும், தவறான தீர்ப்புரை வழங்கிய நீதிபதிகள் ஐவரும் மதுரை இளங்குமரனார் எழுதியுள்ள திருக்குறள் வாழ்வியல் உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பை ஆறு மாதத்திற்குள் படித்து முடிக்க வேண்டும்.
  
    

      

4 comments:

  1. தங்களது சீற்றம் "அறத்தின் சீற்றம்". தங்களின் தீர்ப்பு "அறத்தின் தீர்ப்பு"

    ReplyDelete
  2. ”தீராத பழியேற்ற தீபக் மிஸ்ரா”. தலைப்பில் சுட்டபடும் முதல் எழுத்து ‘தீ’. மிஸ்ரா சமுதாயத்தை எரித்துவிட்டார். மரபுகளை காற்றில் பறக்க விட்டுவிட்டார். இந்திய மண்ணில் பிறந்தவரா என சந்தேகம் உள்ளது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற மரபை உடைத்தெரிந்துவிட்டார். சங்க காலத்தில் இருவகையான பெண்கள் இருந்தனர். அவர்களைக் குல மகளிர் மற்றும் பரத்தையர்கள் எனக் குறிப்பிடுவர். ஆண்கள் தங்கள் மனைவி தவிர்த்து பரத்தையருடன் புணரும் வழக்கம் இருந்துள்ளது. ஆனாலும் அந்நடைமுறை காலப்போகில் தவறு என அறியப்பட்டு சமுதாயத்தில் புறந்தள்ளப்பட்டது. அப்பொழுது கூட பெண்களைப் போற்றியே உரைத்துள்ளனர். தீபக் மிஸ்ரா நாளிதழ்களைப் படிப்பதில்லை போலும். ஏனென்றால் ஒரு குடும்பம் நிர்க்கதியாக விடப்படுவதற்கு பெரும்பாலும் கள்ள உறவுகளே காரணமாக உள்ளது. தற்போதய தீர்ப்புப்படி ஆணோ பெண்ணோ விரும்பும் ஒருவருடன் பாலியல் தொடர்பை வைத்துக்கொள்ளலாம் என்றால், தாய், அக்கா, தங்கை, மச்சினிச்சி, கொளுந்தியாள், நங்கையாள், நாத்தனார் போனற உறவுகள் எதற்கு? விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் வேறுபாடு இல்லாத வாழ்க்கைச் சூழலை நீதிபதி உருவாக்கி விட்டார். மனைவி விரும்பாத பாலியல் உறவு கூட கற்பழிப்பு தான் அதற்கு தண்டனை உண்டு என ஒருகாலத்தில் சட்டம் இயற்றப்பட்டிருந்தது. அதேசமயம் தீபக் மிஸ்ரா போன்றவர்களின் தீர்ப்பு பெண்களின் சுதந்திரத்தைக் குழிதோண்டி புதைக்கக் கூடியதாக உள்ளது. தங்களின் தீர்ப்பின்படி ”தவறான தீர்ப்புரை வழங்கிய நீதிபதிகள் ஐவரும் இளங்குமரனார் எழுதியுள்ள திருக்குறள் வாழ்வியல் உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பை ஆறு மாதத்திற்குள் படித்து முடிக்க வேண்டும்” எனக்குறிப்பிட்டுள்ளீர்கள். கண்டிப்பாக அவர்கள் படிக்கப் போவதில்லை. மாறாக அவர்கள் படிக்கும் காலத்தில் ஒழுக்கம், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பண்பாடு ஆகியவைகளால் கட்டமைக்கப்பட்டது தான் இந்தியா என அறிந்திருந்தால் இந்த வரலாற்றுப்பிழையைச் செய்திருக்கமாட்டார்கள்.
    முனைவர் ரா.லட்சுமணசிங்
    கரூர்

    ReplyDelete
  3. நியாயமான தார்மீக கோபம். ரௌத்திரம் பழகு என்று சொன்னது இதனால்தானோ?

    ReplyDelete
  4. தீர்ப்பு மிக மிக மோசமான தீர்ப்பு என்பதை மறுப்பதற்கில்லை. தங்களது பதிவு நம் எல்லோரது உணர்வுகளையும் வெளிப்படுத்திவிட்டது.

    துளசிதரன், கீதா

    ReplyDelete