Monday, 10 December 2018

பாரதியாரை நேரில் பார்த்தேன்


    பாரதியாரை நேரில் பார்த்தேன் என்று சொன்னால் நீங்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்கக் கூடும். ஆனால் சென்னையில் நேற்று அவருடன் இரண்டு மணி நேரம் கூடவே இருந்தேன் என்பது உண்மை.

     பாரதியார் பாடல்களை தேர்வுக்காகப் படித்திருக்கிறேன். பின்னர் ஒரு தேடலுக்காகப் படித்திருக்கிறேன். ஆனால் அப் பாடல்களில் ஆழ்ந்திருக்கும் பாரதியைக் கண்டது நேற்றுதான்.

 கண்ணிலான் யானையத் தொட்டுப் பார்த்துத் தப்புத் தப்பாய் உணர்ந்ததைப் போல, பாரதியின் படைப்பைத் தெரிந்து வைத்திருந்த நான் நேற்றுதான் கண்ணிரண்டும் பெற்ற ஒருவன் யானையைப் பார்த்து வியந்து நிற்பதைப் போல பாரதியின் பாடல்களை, அவற்றின் முழுமைத் தன்மையை 360 டிகிரியில் உணர்ந்த ஓர் அனுபவத்தைப் பெற்றேன்.

     "என்னதான் சொல்ல வருகிறீர்கள்?” என்று நீங்கள் கேட்கத் தொடங்குமுன் விவரத்தைச் சொல்லிவிடுகிறேன்.

   சென்னையில் தொடர்ந்து தொய்வின்றி இயங்கும் வானவில் பண்பாட்டு மையம் என்னும் அமைப்பு இருபத்தைந்து ஆண்டுகால நிறைவினை வெள்ளிவிழாவாக அதையும் பாரதித் திருவிழாவாகக் கொண்டாடுகிறது. அதன் ஒரு பகுதியாகச் சென்னைக் கலைவாணர் அரங்கில் எஸ்.பி.கிரியேஷன்ஸ் உருவாக்கிய  ‘பாரதி யார்?’ என்ற நாடகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

    இரண்டாயிரம் இருக்கைகள் கொண்ட அவ் வரங்கு நாடகம் தொடங்குமுன்னே நிரம்பிவிட்டது. மேடை அமைப்பு, எல்.இ.டி திரை, துல்லியமான ஒலி, ஒளி எல்லாம் வியக்கத்தக்க வகையில் அமைந்திருந்தது, அரசு நினைத்தால் எதையும் நல்லவிதமாகச் செய்ய முடியும் என்பதற்குச் சான்றாக கலைவாணர் அரங்கம் உள்ளது.

      வழக்கமாகப் பின்புலக் காட்சிகளை திரைச் சீலையில் அச்சிட்டுக் காட்சிக்கு ஏற்றவாறு தொங்கவிடுவார்கள். பாரதி யார் நாடகத்தில் எல்.இ.டி திரையில் காட்சிக்குக் காட்சி வீடு, தெரு, வயல்வெளி என அமைத்துக் காட்டி அசத்தினார்கள்.

    பாரதியின் உடலைத் தகனம் செய்யும் காட்சியோடு தொடங்கி அப்படியே முடித்தார்கள். ஃபிளாஷ் பேக் என்ற முறையில் பாரதியாரின் வாழ்வைக் காட்சிப்படுத்திய விதத்தைச் சொல்லில் வருணிக்க முடியாது. கண்டுதான் உணர முடியும்.


      பாராதியாராக நடித்த இரமணன் நடித்தார் என்று சொல்வதைவிட பாரதியாக வாழ்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். செல்லம்மாவாக நடித்த பெண்மணியும் அப்படித்தான், யதுகிரியாக நடித்த ஏழாம் வகுப்புப் படிக்கும் பள்ளி மாணவி, பாரதிதாசனாக நடித்த கல்லூரி மாணவர் விவேக் பாரதி, பாரதியின் பாடலுக்கு குழு நடனம் ஆடிய குழந்தைகள் எல்லோரும் கண்களைவிட்டு அகலாமல் நிற்கிறார்கள். மேடையில் தோன்றிய ஒவ்வொருவரும் பாரதி வேள்வியில் பங்கேற்றதாகவே உணர்ந்தேன்.

   நாடக நிறைவில் நான்காயிரம் கண்களும் கண்ணீரால் கனத்தன. நோக்கர்கள் அனைவரும் எழுந்து நின்று கலைஞர்களை வாழ்த்தி நீண்ட  கரவொலி எழுப்பினார்கள். பாரதி யார்? என்ற வினாவுக்கு விடை கிடைத்த நிறைவுடன் கலைந்து சென்றார்கள்; நின்றார்கள்; சென்றார்கள். வானவில் பண்பாட்டு மையத்தினர் வென்றார்கள்!

    நெருப்புக் கவிஞனுக்குப் பொறுப்புடன் புகழ் சேர்த்துள்ளார்கள் என்பதில் மறுப்பில்லை.

 நாடகத்தின் தொடக்கத்தில், “நாடகம் இரண்டுமணி நேரம் நடக்கும். நடுவில் இடைவேளை இல்லை. அதற்குத் தேவையில்லாமல் பார்த்துக் கொள்வோம்” என்று அறிவித்தனர். அவ்வாறே சாதித்துக் காட்டினார்கள்.

     இந்த நாடகத்தைக் குறுந்தகட்டில் பதிவுசெய்து ரேஷன் கடை மூலமாக அனைவருக்கும் அரசு வழங்கவேண்டும் என என் அருகில் நின்றவரிடம் சொன்னேன். அவர் உடனே ஆமோதித்துக் கைகுலுக்கினார்.

9 comments:

  1. தங்கள் பதிவை படித்த பின் வாய்ப்பை தவற விட்டேன் என்ற வருத்தம் மேலோங்குகிறது .
    பதிவிற்கு நன்றி

    ReplyDelete
  2. உங்களுடன் நாங்களும் பார்த்த உணர்வு ஏற்பட்டது.

    ReplyDelete
  3. எப்போதுமே ஒரு செய்தியை (சாதாரண செய்தியை) சுவையுடன் மெருகூட்டி சரித்திரமாய் வடிப்பதில் அண்ணன் இனியன் வல்லவர் என்பதை யாம் அனைவரும் அறிவோம். "பாரதி யார்" என்கிற சகாப்தமே கிடைத்தால் சும்மா விடுவாரா? சும்மா "மரண மாஸ்" தான்! (திரைத் தமிழ்த் சொல்லைக் கையாண்டதற்கு மன்னிக்கவும்).

    ReplyDelete
  4. ஐயா உங்கள் கட்டுரை எப்போதும் ஒரு காட்சியை கண் முன்னே நிறுத்தும்.இதை படித்த எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காமல் போனதே என்ற வருத்தம் ஐயா.

    ReplyDelete
  5. A great & a lifetime opportunity to you to witness the drama and for me to enjoy your write up !

    ReplyDelete
  6. உண்மைதான் ஐயா இதுபோன்ற நாடகங்களை குறுந்தகட்டில் விற்பனைக்கு விடுவது அவசியம் ஐயா

    ReplyDelete
  7. குறுந்தகடு கிடைத்தால் மகிழ்ச்சி ஐயா...

    ReplyDelete
  8. இசைக்கவி இரமணர் ஆட்டவா வந்தார் ஒரு முறை

    ReplyDelete
  9. மிக்க நன்று.
    நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete